Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 5 ஜூன், 2020

ஜூன் 6. அர்ச் நார்பெர்ட்(June 6)

நார்பெர்ட் இராஜ வம்சத்தினின்று உதித்து, அரிதான புத்தி சாமர்த்தியமுடையவராயும் தெய்வ பக்தியுள்ளவராயும் நடந்து குருப்பட்டம் பெற ஆசையாயிருந்தார்.

ஆனால் இராஜ அரண்மனையில் பிரபுக்கள், வங்கி உரிமையாளர்களுடன் பழகுவதாலும் ஆடல் பாடல் முதலிய உலக சுகபோகங்களை அனுபவிப்பதாலும் அநேக குற்றங்களுக்குள்ளாகி, மற்றவர்களுக்குத் துன்மாதிரிகையானார்.

ஒரு நாள் இவர் வேடிக்கை விநோதத்தின் நிமித்தம் குதிரையில் ஏறி வேறு ஊருக்குச் செல்லுகையில், திடீரென புயல் காற்றடித்து, இடி மின்னல் உண்டானபோது இவருக்குமுன் இடி விழுந்து, குதிரை மிரண்டு அவரைக் கீழே தள்ளிவிட்டது.

உடனே இவர் அர்ச். சின்னப்பரைப் போல மனந்திரும்பி தேவ ஊழியத்தில் தன் ஜீவிய காலத்தைச் செலவிட தீர்மானித்து, சாஸ்திரங்களைக் கற்று, குருப்பட்டம் பெற்றார்.

பின்பு தன் சொத்துக்களையெல்லாம் விற்று ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்து அரண்மனையை விட்டு வெளியேறி கடுந்தவம் புரிந்துவந்தார்.

ஒரு நாளைக்கு ஒரு தடவை புசித்து, இடைவிடாமல் ஜெபம் செய்து மகா அர்ச்சியசிஷ்டவராய் வாழ்ந்து வந்தார்.

மேலும் தேவ ஏவுதலால் ஒரு புது சந்நியாச சபையை உண்டாக்கினார். அந்த மடத்தால் திருச்சபைக்கு ஏராளமான நன்மையுண்டானது.

நார்பெர்டின் புண்ணியங்களின் நிமித்தம் அவர் மேற்றிராணியார் பட்டத்திற்கு உயர்த்தப்பட்டபோது, அவர் தமது கிறிஸ்தவர்களை வெகு கவனத்துடன் விசாரித்து வந்தார்.

இவர் பாவிகளுக்குப் புத்தி சொல்லி, ஒழுங்கீனமாய் நடப்பவர்களை ஒழுங்குபடுத்தி, துர்மாதிரிகைகளைத் திருத்தி, சண்டை சச்சரவுகளை அடக்கி, வர்மம், மனஸ்தாபத்தை தீர்த்து, எவ்வளவு உற்சாகத்துடன் ஆத்துமங்களுக்காக உழைத்தாரெனில், துஷ்டர் பலமுறை அவரைக் கொல்ல முயற்சித்தும் அவர் புதுமையாகத் தப்பித்துக் கொண்டு, தேவ ஊழியத்தில் கவனமாய் நடந்து, தமது 53-ம் வயதில் மோட்ச சம்பாவனையைப் பெற்றார்.


யோசனை


நமக்கு அருளப்படும் சர்வேசுரனுடைய ஏவுதலைத் தடை செய்யாமல் அங்கீகரிப்போமாக.


சனி, 18 ஏப்ரல், 2020

தேவமாதாவில் அன்றி, கிறீஸ்துவை வேறு எங்கும் பெற்றுக்கொள்ள முடியாது!


சேசுநாதர் தம் திருமாதாவின் மாம்சத்தின் மாம்சமும், அவர்களது இரத்தத்தின் இரத்தமுமாக இருக்கிறார். ஏவாளைப் பற்றி ஆதாம், "இவள் என் எலும்பின் எலும்பும், என் மாம்சத்தின் மாம்சமுமாக இருக்கிறாள்" (ஆதி. 2:23) என்று சொல்ல முடியுமென்றால், மாமரி இன்னும் எவ்வளவோ அதிக உரிமையோடு சேசுவை, "என் மாம்சத்தின் மாம்சமும், என் இரத்தத்தின் இரத்தமுமானவர்' என்று அழைக்க முடியும். "மாசு மறுவற்ற கன்னிகையிடமிருந்து" எடுக்கப்பட்டு, சேசுவின் மாம்சம் மரியாயின் தாய்மையுள்ள மாம்சமாகவும், அவருடைய திரு இரத்தம் மாமரியின் தாய்மையின் இரத்த மாகவும் இருக்கிறது என்று அர்ச். அக்குயினாஸ் தோமையார் கூறுகிறார். ஆகவே சேசுவை மாமரியிடமிருந்து பிரிப்பது என்பதற்கு சாத்தியமே இல்லை.

அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் கூறுவதாவது: "நாம் நம் எல்லாச் செயல்களையும் அதிக உத்தம் விதமாய், சேசுவின் வழியாக, சேசுவுடன், சேசுவுக்காகச் செய்வதற்கு ஏதுவாக,

அவற்றை நாம் மரியாயின் வழியாக, மரியாயுடன், மரியாயிடம், மரியாயிக்காகச் செய்ய வேண்டும்.

மரியாயின் உணர்வால் நடத்தப்பட விரும்பும் ஆன்மா செய்ய வேண்டியவை: (1) தன் சொந்த உணர்வை விட்டு விட வேண்டும். தன் சொந்தக் கருத்துக்களை விட வேண்டும். ஏதாவது ஒன்றைச் செய்யத் துவக்குமுன் அதில் தன் சொந்த விருப்பத்தை ஒதுக்கிவிட வேண்டும். உதாரணமாக, தியானம் செய்யுமுன் திவ்ய பலிபூசை செய்யுமுன், அல்லது பூசை காணுமுன், நற்கருணை அருந்துமுன், நம் சொந்த விருப்பத்தை விட்டுவிட வேண்டும். ஏனென்றால், நம்முடைய உணர்வின் இருண்ட தன்மையும், நம் விருப்பம், நம் செயல் இவற்றின் தீமையும், நமக்கு நன்மையானவை போலத் தோன்றினாலும் நாம் அவற்றின்படி நடந்தால், மரியாயின் உணர்வைத் தடை செய்து விடுவோம்.

(2) மாதா எப்படி விரும்புவார்களோ அவ்வாறு நடத்தப்படும்படி நாம் அவர்களின் விருப்பங் களுக்கு விட்டுக் கொடுத்துவிட வேண்டும். மரியாயின் கன்னிமை பொருந்திய கரங்களில் நம்மைக் கொடுத்து அங்கேயே நம்மை நாம் விட்டுவிட வேண்டும். எவ்வாறெனில், ஒரு தொழிலாளியின் கையில் விடப்பட்ட கருவியைப் போலவும், அல்லது ஒரு இசைவல்லுனன் கையில் இசைக்கருவி போலவும் அவ்வாறு விட்டுவிட வேண்டும். கடலில் எறியப்பட்ட கல்லைப் போல் நாம் நம்மை மாதாவிடம் இழந்து, கையளித்து விட்டுவிட வேண்டும். இதை ஒரு வினாடியில், ஒரு நினைவால், நம் சித்தத்தின் ஒரு சிறு அசைவால் செய்து விடலாம். அல்லது சில வார்த்தைகளில் பின்வருமாறு அது செய்யப்படலாம் : "என் நல்ல தாயே, என்னை நான் உங்கள் கரங்களில் விட்டு விடுகிறேன்.''


புதன், 26 பிப்ரவரி, 2020

*பெப்ருவரி மாதம் 26-ம் தேதி*



*St. Porphyrius, B.*
*அர்ச். போர்பீரியுஸ்*
*ஆயர் - (கி.பி. 420)*

பெரும் செல்வந்தரான இவருக்கு 21 வயதானபோது உலகத்தைத் துறந்து காட்டிற்குச் சென்று தவம் புரிந்தார். சிரேஷ்டருடைய உத்தரவின்படி இவர் ஜெருசலேமுக்குச் சென்று, திருத்தலங்களைச் சந்தித்து, கர்த்தருடைய பாடுகளைப்பற்றி தியானித்து புண்ணிய வழியில் வாழ்ந்துவந்தார். இவர் வியாதியுற்ற சமயத்தில் மெல்ல மெல்ல நகர்ந்து திருத்தலங்களில் வேண்டிக்கொள்கையில், கர்த்தர் நல்ல கள்வனுடன் இவருக்குத் தரிசனையாகி, கர்த்தருடைய கட்டளைப்படி நல்லக் கள்வன் இவரைக் குணப்படுத்தினார்.  சூரியன் அஸ்தமித்தபின் கொஞ்சம் உணவு அருந்துவார். தம்மிடமிருந்த பெரும் ஆஸ்தியை விற்றுத் தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு, கடுந்தபம் செய்து ஆண்டவருக்கு ஊழியஞ் செய்தார். இவர் காசா பட்டணத்திற்கு ஆயராக நியமிக்கப்பட்டபோது முன்னிலும் அதிக ஜெப தபங்களைப் புரிந்து, இடைவிடா பிரசங்கத்தாலும், புதுமைகளாலும் அஞ்ஞானத்தில் மூழ்கியிருந்த அப்பட்டணத்தாரை கிறீஸ்தவர்களாக்கினார். அங்கிருந்த அநேக பசாசின் கோவில்களை இடித்து, ஆண்டவர் பேரால் தேவாலயங்களைக் கட்டிவைத்தார்.  இவர் 43 வயது வரை மிகவும் கடினமாக உழைத்து, மோட்சம் பிரவேசித்தார்.

*யோசனை*

நமது கர்த்தரின் திருப்பாடுகள் மட்டில் அதிக பக்தி வைப்போமாக.

பெப்ருவரி மாதம் 25-ம் தேதி

**

*St. Tarasius, Pat.*
*அர்ச். தாராசியுஸ்*
*பிதா - (கி.பி. 806)*

இவர் உத்தம குடும்பத்திலிருந்து பிறந்து, அந்நகரத்து நீதிபதியான  தன் தந்தையாலும், தன் தாயாராலும் புண்ணிய நெறியில் வளர்க்கப்பட்டார்.  துஷ்டர் சகவாசத்தை விட்டுவிட்டு நன்னெறியாளர்களின் கூட்டத்தை தேடும்படி இவர் தாய் இவருக்குப் புத்தி புகட்டுவாள். இவர் கல்வி கற்றபின் இவருடைய சாமர்த்தியத்தினாலும், திறமையினாலும் இராஜ அரண்மனையில் அநேக உத்தியோகங்களைப் புரிந்துவந்தார். பின்பு அரசனுக்குப் பிரதான மந்திரியாக               நியமிக்கப்பட்டு, வெகு கவனத்துடன் அவ்வேலையைச் செய்துவந்தார்.  கொன்ஸ்தாந்தினோபிளின் பிதாப்பிதாவின் ஸ்தானம் இவருக்குக் கொடுக்கப்பட்டபோது, திருச்சுரூபம், படம் முதலியவைகளை அழிக்கும் பதிதர் அந்நகரில் ஏராளமாயிருந்தனர். ஆயர்களின் பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி, மேற்கூரிய பதிதர்களின் தப்பறையை விசாரித்தாலொழிய, அந்தப் பிதாப்பிதாப் பட்டத்தை அங்கீகரிப்பதில்லையென்று சொன்னார். இவருடைய மனதின்படி சகலமும் திருப்தியாய் நிறைவேறின பின்பு, தாராசியுஸ் பிதாப்பிதாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். இவர் அநேக ஆயர்களை சங்கமாகக் கூட்டி, திருச்சுரூபங்களை வணங்கக்கூடாது என்பது பதித படிப்பினையென்று தீர்ப்பிட்டு, இந்தத் தீர்ப்பை பாப்பானவருக்கு அனுப்பியபோது, அவரும் அதை அங்கீகரித்தார். தாராசியுஸ் தமது ஞான வேலையைப் பிரமாணிக்கத்துடன் புரிந்து தமது ஜெப தபத்தாலும் புண்ணியங்களாலும் கிறீஸ்தவர்களுக்கு ஞானக் கண்ணாடியாய் விளங்கினார். அத்தேசத்து அரசன் தன் மனைவியை நீக்கிவிட்டு வேறொருத்தியை மணமுடித்துக்கொள்ள இருப்பதை இவர் அறிந்து, அதற்கு மறுப்பு தெரிவித்ததினால் அரசனுடைய கோபத்திற்கு உள்ளானார். இருந்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் ஆண்டவருக்கு மாத்திரம் பிரியப்பட்டு நடந்தார். பதித அரசன் மறுபடியும் சுரூபங்களைத் தகர்க்கத் தலைபட்டபோது இவர் ஒரு சம்மனசுடன் பதித அரசனுக்குக் கனவில் தோன்றி பதித மதத்தை விடும்படி பயமுறுத்தியும், அதை அவன் விடாததினால் ஆறு நாட்களுக்குப்பின் தன் தேசத்தையும் உயிரையும் இழந்தான். அர்ச். தாராசியுஸ் ஆத்தும இரட்சண்யத்திற்காக அநேக வருடங்கள் உழைத்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார். 

*யோசனை*

நாமும் துஷ்டர் சகவாசத்தை விலக்கி நேர்மையுள்ளவர்களாக வாழ்வோமாக.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

*பெப்ருவரி மாதம் 9-ம் தேதி*



*St. Apollonia, V.M.*
*அர்ச். அப்பொல்லோனியா*
*கன்னிகை, வேதசாட்சி (கி.பி. 1027)*


அலெக்சாந்திரியா நகரில் அநேகர் சத்திய வேதத்திற்கு மனந்திரும்புவதைக் கண்ட பிற மதத்தினர், கிறீஸ்தவர்களை விரோதித்து வந்தார்கள். அவர்களுக்குள் ஒரு புலவன், கிறீஸ்தவ வேதத்தால் அப்பட்டணத்தாருக்குப் பல தீமைகள் உண்டாகுமென்று கூறியதை அவர்கள் நம்பி, கிறீஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். இதையறிந்த கிறீஸ்தவர்கள் தங்கள் சொத்துக்களையும், வீடுகளையும் விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு ஓடிப்போனார்கள். அந்தக் கொடியவர்கள், தங்கள் கைக்கு அகப்பட்ட கிறீஸ்தவர்களைக் குரூரமாய் வதைத்துக் கொன்றார்கள்.  அச்சமயம் சகல புண்ணியங்களையும் அனுசரித்து, சகலராலும் புகழப்பட்டுவந்த அப்பொல்லோனியா என்னும் தளர்ந்த வயதானக் கன்னிகையை அவர்கள் பிடித்து, கிறீஸ்தவ வேதத்தை கைவிடும்படி பயமுறுத்தினர். ஆனால் இவள் வேதத்தில் தளராமல் தைரியமாயிருந்தபடியால், இவளது மூக்கின் எலும்புகளை உடைத்துப் பற்களைப் பிடுங்கினார்கள். அவ்வளவு வேதனைப்படுத்தியும் இவள் பொய்த்தேவர்களை வணங்காததை அவர்கள் கண்டு, பெரும் நெருப்பு வளர்த்து, அதில் இவளைப் போட்டுச் சுட்டெரித்தார்கள். அப்போது ஜனங்களுக்குள் குழப்பம் உண்டாகவே, கிறீஸ்தவர்களுக்கு விரோதமாய் நிலவிய வைராக்கியமும் பகையும் மறைந்துவிட்டது. இவ்வாறு நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்ட அப்பொல்லோனியா, மரித்து வேதசாட்சியானாள்.

*யோசனை*


அழிவுக்குரிய இவ்வுலக நன்மைகளைவிட நமது விசுவாசத்தை அரிதான பொக்கிஷமாகப் பாவித்துக் காப்பாற்றுவோமாக.

*பெப்ருவரி மாதம் 8-ம் தேதி*


*St. John of Matha, C.*
*அர்ச். மாத்தா அருளப்பர்*
*துதியர் - (கி.பி. 1213)*


ஒரு பிரபுவின் மகனான இவர், சிறு வயதில் அன்னிய தேசங்களில் படிக்கும்போதும்கூட ஏழைகள் மீது எவ்வளவு அன்பு செலுத்தினாரெனில், தமக்கு அனுப்பப்பட்ட பணத்தை எளியவர்களுக்கு பகிர்ந்துக் கொடுத்தார்.  பிறருக்கு நன்மை செய்யும் பொருட்டு அருளப்பர் தமது மகிமையையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு குருப்பட்டம் பெற்றார். இவர் முதல் பலிபூசை நிறைவேற்றும்போது, வெள்ளை உடை அணிந்து, சிகப்பும், நீல வர்ணத்திலுமான சிலுவையை மார்பில் தரித்த வண்ணமாக ஒரு சம்மனசு கிறீஸ்தவனான ஒரு அடிமையின் தலைமேல் தமது கையை வைத்த பிரகாரம் அருளப்பருக்குத் தோன்றினார். இதன் அர்த்தத்தை அறிந்துகொள்ள அருகாமையிலிருந்த பெலிக்ஸ் என்னும் வனவாசியிடம் சென்று, தாம் கண்ட தரிசனத்தை அவருக்கு அறிவித்தார். இதைக் கேட்ட வனவாசி, இது அடிமைகளை மீட்பதைப்பற்றிய காட்சியென்று அவருக்கு அறிவித்தார். பின்பு இருவரும் உரோமைக்குப் போய், அடிமைகளை மீட்பதற்கான சபையை ஸ்தாபிக்க பரிசுத்த பாப்பரசரிடம் உத்தரவு கேட்டார்கள். அவருடைய அனுமதியுடன், தமதிரித்துவத்தின் சபையை ஸ்தாபித்து, அருளப்பர் அதற்கு முதல் அதிசிரேஷ்டரானார். இந்த சபையில் சேர்ந்தவர்கள் அரிதான புண்ணியங்களையும் தவங்களையும் புரிந்து, தர்மம் எடுத்து அடிமைகளை மீட்டார்கள். அருளப்பர் ஒரு நாள் 120 அடிமைகளை மீட்டு, கப்பலில் பயணம் செய்கையில், முகமதியர் அந்த கப்பலின் சுக்கானையும் பாயையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போனார்கள். அருளப்பர் தமது மேல்போர்வையைக் கப்பலுக்குப் பாயாக விரித்து, தமது பாடுபட்ட சுரூபத்தைக் கையில் பிடித்து விசுவாசத்துடன், வேண்டிக்கொண்டார். கப்பல் ஆபத்தின்றி துறைமுகம் போய் சேரவே, சகலரும் காப்பாற்றப்பட்டார்கள். இந்தச் சபை சீக்கிரத்தில் சகல தேசங்களிலும் பரவியது. அருளப்பர் பல இடையூறுகளால் துன்பப்பட்டு, தமது சபைக்காக உழைத்தபின் பாக்கியமான மரணமடைந்தார்.


*யோசனை*


அவசர நேரத்தில் நாமும் நமது அயலாருக்கு உதவி செய்வோமாக.

Download Tamil Catholic Songs



சனி, 8 பிப்ரவரி, 2020

*பெப்ருவரி மாதம் 7-ம் தேதி*


*St. Romuald, A.*
*அர்ச். ரோமுவால்ட்*
*மடாதிபதி - (கி.பி. 1027)* 




உயர்ந்த குடும்பத்தில் பிறந்த ரோமுவால்ட் என்பவர் வாலிப வயதில் ஆடல் பாடல்களிலும், வேடிக்கை விநோதங்களிலும், வேட்டையாடுவதிலும் காலத்தைச் செலவழித்து தன் ஆசாபாசத்துக்கு அடிமையாய் ஜீவித்து வந்தார்.  ஒரு வழக்கின் நிமித்தம் ரோமுவால்டின் தந்தை வேறொருவனைக் கொலை செய்துவிட்டார். இறந்தவனுடைய ஆன்ம இளைப்பாற்றிக்காக ரோமுவால்ட் ஒரு மடத்தில் சேர்ந்து, 40 நாள் கடின தபம் புரிந்துவந்தார். அதற்குப்பின் இவர் அச்சபையில் சேர்ந்து சந்நியாசியாகி சில காலத்துக்குப்பின் வேறொரு துறவியிடம் போய், புண்ணிய வாழ்வைக் கடைபிடித்து அதில் பூரண தேர்ச்சியடைந்தார். பசாசால் இவருக்கு வந்த தந்திர சோதனைகளை ஜெபத்தாலும் ஒருசந்தியாலும் ஜெயித்தார். இவர் இராயப்பர் என்னும் வேறொரு பிரபுவுடன் சேர்ந்து, கடின தபங்களைச் செய்து அநேக சந்நியாச மடங்களை ஸ்தாபித்து, அவைகளுக்கு அதிசிரேஷ்டரானார். இம்மடத்திலிருந்தவர்களில் அநேகர் சிறந்த புண்ணியவாளரும், வேதசாட்சிகளுமானார்கள். இவர் ஏழு வருட காலம் ஒரு காட்டில் தனிமையாய் ஒதுங்கிப், புண்ணிய வழியில் தவச் செயல்களை கடைப்பிடித்து, தாம் தீர்க்கதரிசனமாகக் கூறிய நாளிலே பாக்கியமான மரணமடைந்து, நித்திய இளைப்பாற்றியை அடைந்தார்.

*யோசனை*

நமது துர்மாதிரிகையால் கெட்டுப்போனவர்களுக்காக நாம் வேண்டிக்கொள்ள மறக்கலாகாது.


Download Tamil Catholic Christian Songs


வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

சூடான் நாட்டில் மூன்று கத்தோலிக்க தேவாலயம் எரிக்கப்பட்டன

சூடான் நாட்டில் கத்தோலிக்க தேவாலயம் உட்பட மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் 2020 ஜனவரி 16 அன்று போட் நகரில் எரிக்கப்பட்டன. சூடானின் பிரதானமாக முஸ்லீம் பெரும்பான்மையைக் கொண்ட நாடு. சில வாரங்களில் இரண்டாவது முறையாக, போட் தேவாலயங்கள் மூன்று எரிக்கப்பட்டன. மீண்டும், மூன்று வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் தீ தொடங்கியது. சேதத்தின் குற்றவியல் தோற்றம் சந்தேகத்திற்கு இடமில்லை. உகாண்டாவின் கம்பாலாவை தளமாகக் கொண்ட சூடான் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அமைப்பு (HUDO), சேதத்தைக் காண காவல்துறை கூட வரவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. தென் சூடான் குடியரசின் எல்லையில் சுமார் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் ப்ளூ நைல் மாநிலத்தில் போட் நகரம் அமைந்துள்ளது. சூடானின் கிறிஸ்தவர்கள் - ஒரு முஸ்லீம் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு நாடு - பல மாதங்களாக உறவினர் ஓய்வு நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது இந்த மூன்று நெருப்பு வருகிறது. கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கத்தோலிக்கர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோரியது, அவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களின் மதத்திற்கு எதிராக, ஒமர் எல் பஷீரின் வெளியேற்றப்பட்ட ஆட்சியால், 2019 ஏப்ரலில் தள்ளுபடி செய்யப்பட்டது. "துன்புறுத்தல்" பற்றி பேச மிகவும் துல்லியமாக இருந்தன. அதே நேரத்தில், ஜனவரி 12, 2020 அன்று, கத்தோலிக்க திருச்சபையின் அனுசரணையில், அண்டை நாடான தெற்கு சூடானில் அதிகாரத்திற்காக போட்டியிடும் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே, "அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு" ரோமில் கையெழுத்தானது. நீல நைலில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமாதானத்தை நோக்கிய ஒரு சுமாரான நடவடிக்கை, அதில் மக்களில் ஒரு பகுதியினர், குறிப்பாக கிறிஸ்தவர்கள் மற்றும் ஆனிமிஸ்டுகள் - இளம் சூடானின் இளம் மாநிலத்தில் சேர ஆசைப்படுகிறார்கள். Source : Vatican News/Dabanga - FSSPX.Actualités -29/01/2020
              For English Article please click here

*பெப்ருவரி மாதம் 6-ம் தேதி*



*St. Dorothy, V.M.*
*அர்ச். டொரோத்தி*
*கன்னிகை, வேதசாட்சி* 
*(கி.பி. 208)* 

இக்கன்னிகையின் தாய் தந்தையர் சேசுநாதருக்காக வேதசாட்சிகளாக மரித்தபின், டொரோத்தி சகல புண்ணியங்களையும் விசேஷமாக கற்பென்னும் புண்ணியத்தையும் பிரமாணிக்கமாக அனுசரித்துவந்தாள். இவள் வேதத்திற்காகப் பிடிபட்டு, பயங்கரமான ஆயுதங்களால் துன்புறுத்தப்பட்டும், இவள் அஞ்சாததினால், வேதத்தை ஏற்கனவே மறுதலித்த இரு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டாள். டொரோத்தி தன் நற்புத்திமதியால் அவ்விரு துஷ்ட பெண்களையும் மனந்திருப்பினாள். பின்பு மனந்திரும்பின அப்பெண்கள் இருவரும் நெருப்பில் போட்டு சுட்டெரிக்கப்பட்டார்கள். டொரோத்தி மறுபடியும் அதிபதியின் உத்தரவுப்படி சித்திரவதை செய்யப்பட்டும், இவள் வேதத்தில் உறுதியாயிருப்பதைக் கொடுங்கோலன் அறிந்து, சினங்கொண்டு, இவளைச் சிரச்சேதம் செய்யும்படி தீர்ப்பளித்தான். சேவகர் டொரோத்தியைக் கொலைக் களத்திற்கு நடத்திக் கொண்டுபோகையில், வேத விரோதியான தெயோபிலிஸ் என்பவன் அப்புண்ணிய மாதைப் பார்த்து, “நீ பிதற்றும் வேத பத்தாவினிடத்தினின்று இந்தக் குளிர்காலத்தில் காணமுடியாத நேர்த்தியான புஷ்பங்களையும், கனிகளையும் எனக்கு அனுப்பு” என்று பரிகாசமாகச் சொன்னான். டொரோத்தியும் அப்படியே ஆகட்டுமென்று சொல்லி, கொலைக்களம் போய்ச் சேரவே, ஒரு சம்மனசு ஒரு சிறு பிள்ளையாகக் காணப்பட்டு, நேர்த்தியான புஷ்பங்களையும், கனிகளையும் இவளுக்குக் கொடுத்தது.  டொரோத்தி அவைகளைத் தெயோபிலிசுக்குக் கொடுக்கும்படி  சொல்லிவிட்டு, தலை வெட்டுண்டு மரித்தாள். இவள் சொன்னது போல சம்மனசு அவனுக்கு அவைகளைக் கொடுத்தது. இதை அவன் கண்டு, அதிசயித்து கிறீஸ்தவனாகி வேதசாட்சி முடி பெற்றான்.

*யோசனை*

நமது நல்ல ஒழுக்கத்தால் பிறரை மனந்திருப்புவோமாக.


வியாழன், 6 பிப்ரவரி, 2020

*பெப்ருவரி மாதம் 5-ம் தேதி*



*St. Agatha, V.M.*
*அர்ச். ஆகதா*
*கன்னிகை, வேதசாட்சி*  
*(கி.பி. 251)* 


செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஆகதா, தன்னுடைய பெற்றோரால் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டாள். இப்பெண் பசாசினாலும், துஷ்டராலும் ஏற்பட்ட தந்திர சோதனைகளை ஜெயித்து, தன் ஆத்துமமும் சரீரமும் பாவத்தால் கறைப்படாதபடிக்கு வெகு கவனமாய் இருந்தாள். ஆகதாவின் உத்தம குடும்பத்தையும், அழகையும், பெரும் சொத்துக்களையும்பற்றி கேள்விப்பட்ட குயிந்தானுஸ் என்னும் அதிகாரி, இவளை மணமுடித்துக்கொள்ள செய்த முயற்சிகளெல்லாம் வீணானதால், இவள் கிறீஸ்தவளென்று  குற்றஞ்சாட்டி, இவளது கற்பைப் பறிக்கும்படி ஒரு விபச்சார ஸ்திரீயிடம்  கையளித்தான். இப்புண்ணியவதி பாவத்திற்கு சம்மதியாததை அறிந்த அதிகாரி, இவளைக் கொடூரமாய் அடித்தும், நயமாகப் பேசியும், பயமுறுத்தியும் பார்த்தான். எதற்கும் இவள் அஞ்சாததினால், இவளுடைய மார்பை அறுத்து சிறையிலடைக்கும்படி கட்டளையிட்டான். அன்று இரவு அப்போஸ்தலரான    அர்ச். இராயப்பர் ஆகதாவுக்குத் தோன்றி, அவளைத் தைரியப்படுத்தி, அவள் காயம் முழுவதையும் குணமாக்கினார். இதைக் கேள்விப்பட்ட அதிகாரி கோபத்தால் பொங்கியெழுந்து, தரையில் பரப்பியிருந்த நெருப்பில் அவளைப் புரட்டச் சொன்னான். அந்நேரத்தில் அந்நகரம் அதிர்ந்ததைக் கண்ட அதிபதி, ஜனங்கள் தன்னை எதிர்த்துக் குழப்பம் செய்வார்களென்று பயந்து, அப்புண்ணியவதியை சிறைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். ஆகதா தான் பட்ட காயங்களினால் வேதனையை அனுபவித்து, சிறையில் உயிர் துறந்து வேதசாட்சியானாள்.

*யோசனை*

கற்பென்னும் புண்ணியம் ஒரு தேவ கொடை. அதை கவனமாக ஜெபத்தாலும் ஐம்புலன்களின் அடக்கத்தாலும் பழுதின்றிக் காப்பாற்றுவோமாக.

*பெப்ருவரி மாதம் 4-ம் தேதி*



*St. John de Britto, M.*
*அர்ச். அருளானந்தர்*
*வேதசாட்சி - (கி.பி. 1663)* 

பிரபு வம்சத்தைச் சேர்ந்த அருளானந்தர் சிறு வயதில் போர்ச்சுகல் தேசத்து இராஜாவின் குமாரனுக்குத் தோழனாக நியமிக்கப்பட்டு, இராஜ அரண்மனையில் வளர்ந்துவந்தார். அவ்விடத்தில் இவருக்கு பசாசினால் உண்டான தந்திர சோதனைகளை ஜெயித்து புண்ணியவாளராய் நடந்துவந்தார். இவர் கடினமான வியாதியில் விழுந்து,   அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் வேண்டுதலால் குணமடைந்து, அவருடைய மாதிரிகையைப் பின்பற்றி, சேசு சபையில் சேர்ந்தார். பிற மதத்தினரை மனந்திருப்ப ஆவல்கொண்டு, அதற்குத் தன் உறவினர்களாலும் விசேஷமாய்த் தன் தாயாராலும் ஏற்பட்ட தடைகளையெல்லாம் வெற்றிகொண்டு, இந்திய தேசத்திற்கு பயணம் செய்தார். பல இடங்களில் வேதம் போதித்து, மதுரையில் வேதத்திற்காக உழைத்தார்.  அவ்விடத்தில் பிற மதத்தினரால் உண்டான துன்பதுரிதங்களுக்கு அஞ்சாமல், அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். கடின வியாதியால் துன்பப்பட்ட ஒரு இராஜ பிரபு, அருளானந்தருடைய வேண்டுதலால் குணமடைந்து, ஞானஸ்நானம் பெற்றான். இவனுக்கிருந்த ஐந்து மனைவிகளில் ஒருத்தியை மாத்திரம் வைத்துக்கொண்டு மற்றவர்களை நீக்கிவிட்டான். மீதமிருந்த நான்கு ஸ்திரீகளில், அரசனுடைய பேத்தியான ஒருத்தி, அருளானந்தர்மேல் அதிக கோபாவேசங்கொண்டு அவரைக் கொல்லக் கட்டளையிடும்படி அரசனை மன்றாடினாள். அரசன் தன் பேத்தியின் பேச்சை மறுக்க முடியாதவனாய், அருளானந்தரைச் சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டான். அவ்வாறே அர்ச். அருளானந்தர் ஓரியூரில் வேதசாட்சியாக மரணமடைந்தார். 

*யோசனை*

தேவ பணிவிடைக்கு ஆண்டவரால் அழைக்கப்படுகிறவர்களுக்கு உண்டாகும் தடைகளை தைரியத்துடன் வெல்லவேண்டும்.

*பெப்ருவரி மாதம் 3-ம் தேதி*



*St. Blaise, B.M.*
*அர்ச். பிளேய்ஸியார்*
*ஆயர், வேதசாட்சி -  (கி.பி. 316)* 
இவருடைய அரிதான புண்ணியங்களினிமித்தம் செபாஸ்த் என்னும் நகருக்கு ஆயரானார். அக்காலத்தில் உண்டான பயங்கரமான வேத கலாபனையின் காரணமாக, இவர் ஒரு மலைக்குகைக்குச் சென்று அவ்விடத்தில் ஜெபதபம் புரிந்துவந்தார். பல பிணிகளால் வருந்திய சிங்கம், புலி முதலிய காட்டு மிருகங்கள் அக்குகைக்குள் சென்று, இவரால் குணமடைந்து வந்தன. ஒரு நாள் அந்நாட்டு அதிபதியின் ஊழியர் அந்தக் காட்டில் வேட்டையாடுகையில், காட்டு மிருகங்கள் மேற்கூறிய குகையில் ஜெபம் செய்யும் பிளேய்ஸியாருக்காகக் காத்திருப்பதைக் கண்டு, அதைத் தங்கள் எஜமானுக்கு அறிவித்தார்கள். அதிகாரியின் உத்தரவுப்படி சேவகர் பிளேய்ஸியாரைப் பிடித்துக்கொண்டு வருகையில், இறந்துபோன ஒரு குழந்தையை உயிர்ப்பித்ததைக் கண்ட சேவகரில் சிலர் கிறீஸ்தவர்களானார்கள். வேதத்தை மறுதலித்துப் பொய் தேவர்களை வணங்கும்படி பிளேய்ஸியாருக்கு அதிகாரி கட்டளையிட்டான். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பிளேய்ஸியாரை அதிகாரி கொடூரமாய் அடித்து, சிறையிலடைத்தான்.  சிறையிலும் அநேக நோயாளிகள் அவரால் குணப்படுத்தப்பட்டார்கள். இவரது காயங்களிலிருந்து வடியும் இரத்தத்தை சில ஸ்திரீகள் பக்தியோடு தொட்டு தங்கள்மேல் பூசிக்கொண்டதினால், அதிபதி அவர்களை நெருப்பில் போட்டு சுட்டெரிக்கும்படி உத்தரவிட்டான். ஆனால் நெருப்பு அவர்களைச் சுடாததினால் சிரச்சேதம் செய்வித்தான். பிளேய்ஸியாரை அதிபதியின் கட்டளைப்படி ஆழமான நீரில் அமிழ்த்தியும், இவர் இறக்காமல் இருந்ததினால், இவர் தலை வெட்டப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்.

*யோசனை*

நாம் பக்தியோடு ஜெபிப்பதுடன், பக்திமான்களைப் பழித்துப் பரிகாசம் செய்யாமலும் இருப்போமாக.

புதன், 5 பிப்ரவரி, 2020

பெப்ருவரி மாதம் 2-ம் தேதி*

*The Purification*
*அர்ச். கன்னிமரியாயின் சுத்திகரத் திருநாள்* 

அக்காலத்தில் யூதர்களின் வழக்கப்படி, குழந்தை பெற்ற தாயானவள் அசுத்தமுள்ளவளாகக் கருதப்பட்டு, சில காலம் வீட்டில் தங்கி, குறிக்கப்பட்ட நாளில் தேவாலயத்திற்குச் சென்று, மோயீசனால் ஏற்படுத்தப்பட்ட காணிக்கையைச் செலுத்தி, தன் குழந்தையை மீட்டுக்கொள்வாள். ஆனால் அர்ச். கன்னிமரியாய் இஸ்பிரீத்துசாந்துவின் அனுக்கிரகத்தால் கர்ப்பந்தரித்து சேசுநாதரை அற்புதமாய்ப் பெற்றெடுத்ததினால், முன் கூறப்பட்ட சடங்கை அனுசரிக்க அவர்களுக்கு கடமையில்லை. ஆயினும் தேவதாய் தாழ்ச்சியினிமித்தமும், மற்றவர்களுக்கு நன்மாதிரிகையைப் படிப்பிக்கவும் தாழ்ச்சிக்குரிய இச்சடங்கை நிறைவேற்றினார்கள்.  ஏழைகளுக்கு நியமிக்கப்பட்ட காணிக்கையாகிய இரண்டு மாடப்புறாக்களை ஒப்புக்கொடுத்து, தமது தேவ பாலனை மீட்டுக்கொண்டார்கள். அச்சமயம் தேவாலயத்தில் நீதிமானுமாய், பயபக்தியுடையவருமாய், இஸ்ராயேலரின் தேற்றரவுக்கு எதிர்பார்த்திருந்த   சிமையோன் என்பவர், இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலினால் அவ்விடம் வந்தார். அவர் திருப்பாலனான சேசுநாதரைத் தமது கரங்களில் ஏந்தியவுடனே, இவர்தான் உலக இரட்சகர் என்று சர்வேசுரனால் அறிந்து, அவரை ஆராதித்து, “ஆண்டவரே நீர் வாக்குத்தத்தம் செய்த உலக இரட்சகரை நான் பார்க்கப் பாக்கியம் பெற்றதால் இக்கணமே அடியேனை உம்மிடத்தில் அழைத்துக்கொள்ளும்” என்னும் கீர்த்தனையைப் பாடினார். பிறகு குழந்தையின் தாயின் பக்கம் திரும்பி, “இப்பாலன் இனி படவிருக்கும் பாடுகளால் உமது இருதயம் வியாகுல வாளால் ஊடுருவப்படும்” என்றார். கிறீஸ்தவப் பெண்கள் தேவமாதாவின் மாதிரிகையைப் பின்பற்றி, குழந்தையைப் பெற்ற 40-ம் நாள் கோவிலுக்குச் சென்று குருவானவரால் மந்திரிக்கப்பட்டு, ஒரு மெழுகுவர்த்தியைக் காணிக்கையாகக் கொடுப்பது நல்ல வழக்கம்.

*யோசனை*

தேவ கற்பனையை அனுசரிப்பதில் வீண் சாக்குபோக்குகளைத் தேடாது இருப்பாயாக