நார்பெர்ட் இராஜ வம்சத்தினின்று உதித்து, அரிதான புத்தி சாமர்த்தியமுடையவராயும் தெய்வ பக்தியுள்ளவராயும் நடந்து குருப்பட்டம் பெற ஆசையாயிருந்தார்.
ஆனால் இராஜ அரண்மனையில் பிரபுக்கள், வங்கி உரிமையாளர்களுடன் பழகுவதாலும் ஆடல் பாடல் முதலிய உலக சுகபோகங்களை அனுபவிப்பதாலும் அநேக குற்றங்களுக்குள்ளாகி, மற்றவர்களுக்குத் துன்மாதிரிகையானார்.
ஒரு நாள் இவர் வேடிக்கை விநோதத்தின் நிமித்தம் குதிரையில் ஏறி வேறு ஊருக்குச் செல்லுகையில், திடீரென புயல் காற்றடித்து, இடி மின்னல் உண்டானபோது இவருக்குமுன் இடி விழுந்து, குதிரை மிரண்டு அவரைக் கீழே தள்ளிவிட்டது.
உடனே இவர் அர்ச். சின்னப்பரைப் போல மனந்திரும்பி தேவ ஊழியத்தில் தன் ஜீவிய காலத்தைச் செலவிட தீர்மானித்து, சாஸ்திரங்களைக் கற்று, குருப்பட்டம் பெற்றார்.
பின்பு தன் சொத்துக்களையெல்லாம் விற்று ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்து அரண்மனையை விட்டு வெளியேறி கடுந்தவம் புரிந்துவந்தார்.
ஒரு நாளைக்கு ஒரு தடவை புசித்து, இடைவிடாமல் ஜெபம் செய்து மகா அர்ச்சியசிஷ்டவராய் வாழ்ந்து வந்தார்.
மேலும் தேவ ஏவுதலால் ஒரு புது சந்நியாச சபையை உண்டாக்கினார். அந்த மடத்தால் திருச்சபைக்கு ஏராளமான நன்மையுண்டானது.
நார்பெர்டின் புண்ணியங்களின் நிமித்தம் அவர் மேற்றிராணியார் பட்டத்திற்கு உயர்த்தப்பட்டபோது, அவர் தமது கிறிஸ்தவர்களை வெகு கவனத்துடன் விசாரித்து வந்தார்.
இவர் பாவிகளுக்குப் புத்தி சொல்லி, ஒழுங்கீனமாய் நடப்பவர்களை ஒழுங்குபடுத்தி, துர்மாதிரிகைகளைத் திருத்தி, சண்டை சச்சரவுகளை அடக்கி, வர்மம், மனஸ்தாபத்தை தீர்த்து, எவ்வளவு உற்சாகத்துடன் ஆத்துமங்களுக்காக உழைத்தாரெனில், துஷ்டர் பலமுறை அவரைக் கொல்ல முயற்சித்தும் அவர் புதுமையாகத் தப்பித்துக் கொண்டு, தேவ ஊழியத்தில் கவனமாய் நடந்து, தமது 53-ம் வயதில் மோட்ச சம்பாவனையைப் பெற்றார்.
யோசனை
நமக்கு அருளப்படும் சர்வேசுரனுடைய ஏவுதலைத் தடை செய்யாமல் அங்கீகரிப்போமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக