Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

*பெப்ருவரி மாதம் 9-ம் தேதி*



*St. Apollonia, V.M.*
*அர்ச். அப்பொல்லோனியா*
*கன்னிகை, வேதசாட்சி (கி.பி. 1027)*


அலெக்சாந்திரியா நகரில் அநேகர் சத்திய வேதத்திற்கு மனந்திரும்புவதைக் கண்ட பிற மதத்தினர், கிறீஸ்தவர்களை விரோதித்து வந்தார்கள். அவர்களுக்குள் ஒரு புலவன், கிறீஸ்தவ வேதத்தால் அப்பட்டணத்தாருக்குப் பல தீமைகள் உண்டாகுமென்று கூறியதை அவர்கள் நம்பி, கிறீஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். இதையறிந்த கிறீஸ்தவர்கள் தங்கள் சொத்துக்களையும், வீடுகளையும் விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு ஓடிப்போனார்கள். அந்தக் கொடியவர்கள், தங்கள் கைக்கு அகப்பட்ட கிறீஸ்தவர்களைக் குரூரமாய் வதைத்துக் கொன்றார்கள்.  அச்சமயம் சகல புண்ணியங்களையும் அனுசரித்து, சகலராலும் புகழப்பட்டுவந்த அப்பொல்லோனியா என்னும் தளர்ந்த வயதானக் கன்னிகையை அவர்கள் பிடித்து, கிறீஸ்தவ வேதத்தை கைவிடும்படி பயமுறுத்தினர். ஆனால் இவள் வேதத்தில் தளராமல் தைரியமாயிருந்தபடியால், இவளது மூக்கின் எலும்புகளை உடைத்துப் பற்களைப் பிடுங்கினார்கள். அவ்வளவு வேதனைப்படுத்தியும் இவள் பொய்த்தேவர்களை வணங்காததை அவர்கள் கண்டு, பெரும் நெருப்பு வளர்த்து, அதில் இவளைப் போட்டுச் சுட்டெரித்தார்கள். அப்போது ஜனங்களுக்குள் குழப்பம் உண்டாகவே, கிறீஸ்தவர்களுக்கு விரோதமாய் நிலவிய வைராக்கியமும் பகையும் மறைந்துவிட்டது. இவ்வாறு நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்ட அப்பொல்லோனியா, மரித்து வேதசாட்சியானாள்.

*யோசனை*


அழிவுக்குரிய இவ்வுலக நன்மைகளைவிட நமது விசுவாசத்தை அரிதான பொக்கிஷமாகப் பாவித்துக் காப்பாற்றுவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக