Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

download catholic songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
download catholic songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ஸ்பீரித்து சாந்துவே வாரும் -Tamil Catholic Song Lyrics



ஸ்பீரித்து சாந்துவே வாரும் - 2 

அன்பான தேவனே

அடியோர் உள்ளத்தே இறங்கும் 



உமது ஞானம் இல்லாதாகில் 

தவறிப்போவோம் பாருமே

 எமதஞ்ஞானத்தை நீக்கவே 

எழுந்தருளும் மெய் ஜோதியே 

வாரும் ஞான ஜோதியே (2) 


நரக மோடுலகு சேர்ந்தே 

நம்மை ஐயோ கெடுக்குதே 

விரைவாய் வாரும் தேவனே 

நீர் வேதனையார் எம்மை மீட்கவே 

வாரும் எம்மை மீட்கவே (2) 


திருப்ரசாதம் தரவாரும் 

தீங்கில்லாமல் நாமிருப்போம் 

தேவனே நீர் காவல் செய்வோர்க்கு 

ஆனந்தமே தூயானந்தமே

வாரும் காவல் தாருமே (2)


வியாழன், 1 ஏப்ரல், 2021

அன்னையே எங்கள் செல்வநாடு - Tamil Catholic Songs lyrics


பல்லவி 


அன்னையே எங்கள் செல்வதாடு 

அஞ்ஞானம் நீங்கி உன் நாடாகிய 

விண்ணவனாம் உன் சுதன் சேசுவையே 

வேண்டி மன்றாடிடாய் 

வேண்டி மன்றாடிடாய் - தாயே தாயே


சரணம் 


மானிட தேவன் இவ்வுலோகத்தில்

 வந்தித்தனை நாளாயிற்றே 

ஈனப் பிசாசை எங்கள் நல் நாடோ 

இன்னும் விடாமற் போயிற்றே 


தன்னை உருவாக்கிய தாதாவை 

சற்றும் தேடாமல் விட்டதே 

கண்ணில்லாத் தேவதைகள் தம்மையே 

எம் நாடு நம்பிக் கெட்டதே ‘


சூரியன் சந்திரன் முதலான 

சோதிகளைப் பணிந்ததே வீரர் 

அரசர்கள் தம்மையுமே வீழ்ந்து 

தொழத் துணிந்ததே


 கண்ணிலே கண்ட தெல்லாம் 

சேவித்து கர்த்தனையே மறந்ததே 

எண்ணியிந் நாட்டையே உன் 

நாடாக்கல் யாவற்றினுஞ் சிறந்ததே



செவ்வாய், 18 செப்டம்பர், 2018

நமது அர்ச்சிப்பில் தேவமாதாவின் பங்கு!


மாதாவின் பிள்ளைகளே, நேயர்களே!
நமது மீட்பு - அர்ச்சியசிஷ்டதனம் உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமான சேசு கிறீஸ்துவை அடைவதிலே - அவரோடு கொள்ளும் ஐக்கியத்திலேதான் அடங்கியுள்ளது. ஏனெனில் அவரே “ஆல்பாவும், ஒமேகாவுமாக - எல்லாவற்றின் துவக்கமும் முடிவுமாயிருக்கிறார். அவரே புனிதத்தின் ஊற்று! தெய்வீகத்தின் முழுமையும், மற்றெல்லா வரப்பிரசாதங்கள், புண்ணியங்கள், உத்தமதனங்கள் இவற்றின் நிறைவும் அவரிடம் மட்டுமே குடிகொண்டுள்ளன. இதனால் அர்ச். சின்னப்பர், எல்லா மானிடரையும் சேசுகிறீஸ்துவில் உத்தமராக்குவதற் கன்றி வேறு எதற்காகவும் தாம் உழைக்கவில்லை என்கிறார்.
மாதா வழியாக சேசுவிடம்! நாலாயிரம் ஆண்டுகளாக மீட்பருக்காகக் காத்துக் கிடந்த உலகிற்குப் பிதாவாகிய சர்வேசுரன் தம் ஏக திருக்குமாரனை மாதா வழியாகவே கொடுத்தார். எத்தனையோ தீர்க்கதரிசிகளும், பழைய ஏற்பாட்டின் அர்ச்சியசிஷ்டவர்களும் அந்தத் திரவியத்தைப் (மீட்பரை) பெற எவ்வளவோ மன்றாட்டுக்களைச் செய்திருக்கலாம். ஆனால் மகா பரிசுத்த கன்னிமாமரி மட்டுமே தன் வேண்டுகோள்களின் வலிமையாலும், தன் புண்ணியங் களின் உயர்வாலும் அதைப் பெறக் கூடிய தகுதியையும், தேவ வரப்பிரசாதத்தையும் பெற்றிருந் தார்கள். அர்ச். அகுஸ்தினார், "சர்வேசுரன் தம் குமாரனை மரியாயிடம் கொடுத்து, அவர்கள் வழி யாகவே உலகம் அவரைப் பெற்றுக் கொள்ளச் செய்தார்” என்று உரைக்கிறார். தேவ-மனித சேசுகிறீஸ்து என்னும் தமது உன்னத சிருஷ்டியை திவ்ய இஸ்பிரீத்துசாந்துவானவர் மரியாயிடத்தில் உருவாக்கினார். இதனால் வார்த்தையான சர்வேசுரன் "மாம்சமாகி, இஷ்டப் பிரசாதமும், சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார்" (அரு.1:14). அவர்
யாருக்குள்ளே வாசமாயிருந்தார்? மகா பரிசுத்த கன்னிமரியாயிடமே! இதனாலேயே அவர்கள் கடவுளின் தாயானார்கள் (Theotokos). கடவுள் தமது பிறப்பிக்கும் வல்லமையைப் பரிசுத்த கன்னித்தாயாருக்குத் தந்தார். சிருஷ்டி என்ற வகையில் மாமரி எந்த அளவுக்கு அதைப் பெற்றுக் கொள்ள முடியுமோ, அந்த அளவுக்குத் தந்தார். தம் திருக்குமாரனைக் கருத்தாங்கி தேவ-மனிதனாக அவரைப் பெற்றெடுக்கவும், அவருடைய ஞான சரீரத்தின் (திருச்சபையின்) * உறுப்பினர்கள் (ஞானஸ்நானம் பெற்ற கத்தோலிக்கர்கள்) அனைவரையும் வரப்பிரசாத ஜீவியத் திற்குப் பிறப்பிக்கவும் தேவையான வல்லமையைப் பெறுவதில் அவர்களுக்கு உதவும்படியாக அப்படிச் செய்தார். இதன்படி கன்னி மாமரி சகல மனிதர்களுக்கும் வரப்பிரசாத ரீதியில் தாயானார்கள். இதனால்தான் கல்வாரியில் சேசுநாதர் தமது தாயாரை, "இதோ உன் தாய்'' (அரு.20:27) என்று தமது பிரிய சீடர் வழியாக மனுக்குலம் முழுவதற்கும் தாயாகக் கொடுத்தார்.

ஆக. நாம் இரட்சகரைப் பெற்றுக்கொள்ள மாமரியிடம்தான் செல்ல வேண்டும். இதற்கு, தேவ தாயாரான பரிசுத்த கன்னிகையை நாம் நமது தாயாகக் கொண்டிருக்க வேண்டும்.
இதனைத்தான பாசுத்த தாயத் திருச்சபை "Ad Jesus per Mariam" என்று சுருங்கக் கூறுகிறது. “மரியாயின் வழியாக சேசுவிடம்” செல்ல நம்மைத் தூண்டுகிறது. இதுவே சர்வேசுரனுடைய திருச்சித்தம்!
தேவமாதா மீதான பக்தி நமது இரட்சணயத்துக்கு அவசியம் அர்ச். தமாஸின் அருளப்பர்: "ஓ ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையே! சர்வேசுரன் யார் யாரை இரட்சிக்க விரும்புகிறாரோ, அவர்களுக்குக் கொடுக்கும் மீட்பின் படைக்கலமே உம் மீது கொள்ளும் பக்தி!” என்று வியந்து போற்றுகிறார். மாதா மீது அன்பு பாராட்டுவது நமது மீட்பை உறுதி செய்வதாக இருக்கிறது. மனிதர்கள் தங்களது இறுதிக் கதியை - நித்திய இரட்சணியத்தை - அடைய மாதா தேவைப்படுகிறார்கள். திருச்சபையின் வேதபாரகர்களும் இதனையேதான் போதிக்கிறார்கள். இதில், அர்ச். அகுஸ்தீனார், அர்ச். எப்ரேம், அர்ச். ஆன்செல்ம், அர்ச். பெர்னார்டு, அர்ச். பெர்னார்டீன், அர்ச். தாமஸ் அக்வினாஸ் முதலியோரைக் குறிப்பிடலாம். மாதா மீது மரியாதையும், அன்பும் இல்லாதிருப்பது தண்டனைத் தீர்ப்பிடப்படுவதன் நிச்சயமான அடையாளமென்றும், மாதா மீது உண்மையாகவும், முழுமையாகவும் பக்தி கொண்டிருப்பது முன்குறிக்கப்படுவதன் நிச்சயமான அடையாளம் என்றும் இந்த அர்ச்சியசிஷ்ட வர்கள் ஒருவாய்ப்பட அறிவிக்கிறார்கள். இதன் தாற்பரியம் என்னவென்றால் தேவமாதாவின் மீது பக்தி நேசம் கொண்டிருப்பவர்களை இந்தத் தாய் பராமரிக்கிறார்கள்; அவர்களுக்குக் கடவுளிடமிருந்து கிருபையைப் பெற்றுத் தருகிறார்கள்; தனது திருக்குமாரன் சம்பாதித்த இரட்சணியப் பேறுபலன்களையும், வரப்பிரசாதங்களையும் தான் விரும்புகிறபோது அவர் களுக்கு வழங்கி, புண்ணியத்தில் வளரச் செய்கிறார்கள் என்பதே!
அர்ச்சிப்பின் உயர்ந்த நிலையில் தான் விரும்பும் எவரையும் மேம்படச் செய்யவும், தான் விரும்பும் யாரையும் பரலோகத்திற்குச் செல்லும் ஒடுக்கமான பாதையில் வைக்கவும், தன் விருப்பப்படி எவரையும் அந்த ஒடுக்கமான ஜீவிய வாசல் வழியாகக் கொண்டு வந்து அரச சிம்மாசனத்தையும் மகுடத்தையும், செங்கோலையும் அவர்களுக்குக் கொடுக்கவும் சர்வேசுரன் தேவமாதாவை நியமித்தார். சேசுநாதர் எங்கும், எப்பொழுதும் மரியாயின் குமாரனும், கனியுமாகவே இருக்கிறார். அதே போல மாமரியும், ஜீவியக் கனியைத் தரும் உண்மையான மரமாகவும், அக்கனியை உற்பத்தி செய்யும் உண்மையான அன்னையாகவும் இருக்கிறார்கள். ஆகவேதான் மாமரியின் மீது பக்தி கொண்டவர்களுக்கு அர்ச்சிப்பு எளிதாகிறது. சுருக்கமாகச் சொல்வோமானால், சர்வேசுரன் தேவ அன்பின் (மீட்பின் கனிகளின்) பொக்கிஷ சாலையின் திறவுகோலை மாதாவிடமே கொடுத்துள்ளார். ஆகையால் மாதா தான் விரும்புகிறவர்களுக்கு, விரும்பும்போது, விரும்பும் அளவுக்கு தேவ வரப்பிரசாதத்தை வழங்கி, அவர்களை அர்ச்சிய சிஷ்டவர்களாக்குகிறார்கள். அநேகர் இத்தாயின் பரிந்துரையால் தங்கள் வாழ்நாளிலேயே மோட்சம் வாக்களிக்கப்பட்டு அர்ச்சியசிஷ்டவர்கள் ஆனார்கள். எடுத்துக்காட்டாக, அர்ச். அசிசியார் மற்றும் சமீபகாலத்தில் அர்ச். மாக்ஸிமிலியன்கோல்பே போன்றோரைக் குறிப்பிடலாம்.
தேவமாதா பக்தி சேசுவை அடைவதற்கான மிகச் சிறந்த வழி | "கிறீஸ்தவ உத்தமதனம் நமதாண்டவருடன் ஐக்கியமாவதில் அடங்கியுள்ளது. மாதாவின் மீதான பக்தியானது அதனை அடையும் இலகுவான வழி, கிட்டத்து வழி, உத்தம் வழி, பாதுகாப்பான வழி” என்று அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் கூறுகிறார்.
தேவமாதா தனது பிள்ளைகளை மிக இலகுவாக சேசுகிறீஸ்துவிடம் அழைத்துச் செல்கிறார்கள். மற்ற வழிகளிலும் சென்று கடவுளுடன் ஐக்கியம் கொள்ள முடியும் என்பது உண்மையே. ஆனால் இந்த வழிகளிலும் கூட, மாமரியை அறிந்தும் நேசியாதவன், அல்லது அவர்களை வெறுப்பவன் ஒருபோதும் கடவுளுடன் ஐக்கியம் கொள்ள சாத்தியமேயில்லை ஏனெனில் மனிதர்களை வரப்பிரசாத ஜீவியத்திற்குப் பெற்றெடுப்பவர்களும், சகல வரப்பிரசாதங் களின் மத்தியஸ்தியுமான மாமரியின் வழியாக அன்றி எவனும் தன் இரட்சணிய வரப்பிரசாதத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது. மேலும் மற்ற வழிகளில் இனம் புரியாத மரணங்களும், பல சிலுவைகளும், எளிதில் வெல்ல முடியாத பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகே அது கைகூடும். ஆனால் மாதா என்ற பாதையின் வழியாக நாம் எளிதாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கடந்து செல்கிறோம். இந்தப் பாதையிலும் கடும் போராட்டங்களும், பெரிய கஷ்டங்களும், துன்பங்களும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அச்சமயங்களில் இந்த அன்புத் தாய் தனது மக்களைப் பாதுகாக்கிறார்கள், கைதூக்கி விடுகிறார்கள். திடப்படுத்திப் பிரகாசிப்பிக்கிறார்கள். ஆகையால் இப்பாதையில் பயணம் இலகுவாகிறது, எளிதில் கடவுளை அடைய முடிகிறது.
இதனை அர்ச். பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி மூலம் விளக்கலாம். ஒரு சமயம் அர்ச். பிரான்சிஸ் ஒரு பரவச நிலையின் போது மோட்சத்தை எட்டும் அளவுக்கு உயரமாயிருந்த இரு ஏணிகளைக் கண்டார். அவற்றில் ஒன்று செந்நிறமாகவும், மற்றொன்று வெண்ணிறமாகவும் இருந்தன. செந்நிற ஏணியின் மேலே கிறீஸ்து அரசரும், அருகில் உள்ள வெண்ணிற ஏணியின் உச்சியில் மாமரியும் வீற்றிருந்தார்கள். அர்ச். பிரான்சிஸம், அவரது சக துறவிகளும் செந்நிற ஏணியில் ஏறுகிறார்கள். அர்ச். பிரான்சிஸால் அதில் எளிதில் ஏற முடிந்தாலும், அவரது துறவிகளால் அதில் ஏற முடியாமல், பாதியிலே தவறிக் கீழே விழுந்து துயரப்படுகிறார்கள். அதனைக் கண்ட அர்ச். பிரான்சிஸ் ஒரு கணம் சிந்தித்தவராக செந்நிற ஏணியிலிருந்து இறங்கி, அருகிலிருந்த வெள்ளை நிற ஏணியில் மளமளவென ஏறி, தமது சகோதர துறவிகளிடம், “இந்த இரக்கத்தின் ஏணியில் ஏறி வாருங்கள்” என்று அழைக்க, அதில் அனைவரும் இலகுவாக, சிரமம் இல்லாமல் ஏறி மாதாவிடம் செல்கிறார்கள். மாதா சேசுகிறீஸ்து அரசரிடம் அவர்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.
ஆம்! மாமரி என்னும் பாதை சேசு கிறீஸ்துவை அடைய இலகுவான, பாதுகாப்பான, கிட்டத்து வழியாக இருக்கிறது.
கரிசனை உள்ள அன்புத் தாய்! தேவதாய் உலக மக்களுக்கெல்லாம் வரப்பிரசாத ரீதியில் தாயாக இருக்கிறார்கள் என்பதை முன்பு கண்டோம். உலகம் மற்றும் திருச்சபையின் வரலாற்றில் தனது பிள்ளைகளுக்கு ஆபத்தும் தீங்கும் நேரிடும் காலங்களிலெல்லாம் மாமரி மோட்சத்திலிருந்து இறங்கி வந்து, காட்சி தந்து, எச்சரித்து, சர்வேசுரனுடைய திட்டங்களைக் கூறி, அவர்களை மோட்ச பாதைக்கு அழைத்துச் செல்லத் தவறுவதில்லை என்பதை இங்கே நினைவுகூருவோம். இந்தப் பிந்திய காலங்களில் ஆன்ம கேடுகள் அதிகம் நேரிடும்போதெல்லாம் காட்சி தந்து எச்சரிப்பது அதிகரித்துள்ளதையும் நாம்
அறிவோம். இவற்றில் மெக்ஸிகோகுவாடலூப்பே மாதா காட்சி, அற்புத சுரூபக் காட்சி, சலேத், லூர்துபதி, பாத்திமா காட்சிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் கேந்திரமாக பாத்திமாவில் திவ்விய கன்னிகை தனது மாசற்ற இருதயப் பரிகார முதல் சனி பக்தியை வெளிப்படுத்தி, அதனை பக்தியோடு அனுசரிப்பவர்களுக்கு இரட்சணிய உதவியை வழங்கி வருவதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இது தவிர, பல்வேறு கால கட்டங்களில் பல அர்ச்சியசிஷ்டவர்களுக்குத் தோன்றி, தனது விசேஷ பாதுகாப்பையும், வல்லமையையும் வழங்கும் வரப்பிரசாதக் கருவிகளையும் அவர்களுக்குக் கொடுத்து, தனது மக்களின் ஆன்மாக்களைப் பசாசின் தந்திரங்களிலிருந்து காத்து அர்ச்சிப்பதையும் திருச்சபையின் வரலாற்றில் நாம் காண்கிறோம். அர்ச். சாமிநாதர் வழியாக ஜெபமாலை பக்தியையும், அர்ச். சைமன் ஸ்டாக் மூலமாக கார்மெல் உத்தரியத்தையும், அர்ச். காத்தரீன் லாபோரே வழியாக அற்புதச் சுரூபத்தையும் மாமரி நமக்கு வழங்கியுள்ளதை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

நமது கடமை
மது கடமை கத்தோலிக்க விசுவாசிகளுக்கு அர்ச்சியசிஷ்டதனம் ஒன்றும் எட்டாக் கனியல்ல. ஏனெனில் - அவர்களே மெய்யங்கடவுளின் சுவீகார மக்களாக இருக்கிறார்கள். அவர்களை மீட்டு இரட்சிக்க சேசுநாதர் சம்பாதித்த மீட்பின் பேறுபலன்களை அடைந்து அர்ச்சியசிஷ்டவர்களாகி இரட்சணியம் அடைய உரிமை பெற்றவர்கள். மற்ற மக்களையும் தேவ இரக்கம், உதவி வரப்பிரசாதங்களைக் கொண்டு பரிசுத்த சத்திய விசுவாசத்திற்குக் கொண்டு வந்து இரட்சிக்கிறது என்பதும் சரியே! அதே போல், தேவதாய் சகல
மனிதர்களுக்கும் தாயாக இருப்பதால் அவர்களையும் விசுவாசத்துக்கு மனந்திருப்பிக் காக்கிறார்கள். எனவே மாமரியின் மீதான பக்தியைக் கைக்கொண்டு, அவர்களை நேசித்து, அவர்களிடம் தங்களை அர்ப்பணித்து, அவர்கள் காட்டும் பாதையில் நடப்போமானால், வெகு இலகுவாகவும், சீக்கிரமாகவும், பாதுகாப்பாகவும், தேவ ஞானமாகிய சேசுகிறீஸ்துவை அடைந்து அர்ச்சிக்கப்படுவோம். அதனால் அவர் வழங்கும் இரட்சணியத்தை மாமரித் தாய் வழியாகப் பெற்றுக் கொள்வோமாக!

சகல அர்ச்சியசிஷ்டவர்களின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

தேவமாதாவுக்கு ஓர் புகழ்மாலை -2

(2) சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ர்ச். கன்னிமரியம்மாள் சர்வேசுரனுடைய மாதா! இது எத்தகைய பாக்கியம்! மகிமை!! மாதாவின் எல்லா மகிமைப் பெருமைகளிலெல்லாம் “இரத்தினமாக” பிரகாசிக்கும் இது ஒரு வேத சத்தியம்!
ஆம்! மகா பரிசுத்தவதியான கன்னிமரியாய் “கடவுளின் தாய்” என்பது பரம இரகசியம் - மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனின் மனிதாவதார பரம இரகசியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விசுவாச சத்தியம்! சேசுகிறீஸ்து மனுவுருவெடுத்த சுதனாகிய சர்வேசுரன்; எனவே அவளை ஈன்றெடுத்தவள் “சர்வேசுரனின் தாய்” என்றழைக்கப் படுவது முற்றிலும் சரியே. அதற்கு மாறானவைகள் தப்பறையென்று திருச்சபை கண்டித்து ஒதுக்குகிறது. எபேசியுஸ் பொதுச்சங்கம் கி.பி.431-ல் கூடி, இந்தச் சத்தியத்திற்கு விரோதமான போதனைகளைச் சபித்து “மகா பரிசுத்த கன்னிமரியம்மாள் சர்வேசுரனின் தாய்” என்று பிரகடனம் செய்துள்ளது.
வேதாகமச் சான்றுகள்:
பரிசுத்த கன்னிமரியம்மாள் சர்வேசுரனுடைய தாயாக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வேதாகம வசனங்கள் அநேகமுள்ளன. அவற்றில்: (1) “... இஸ்பிரீத்துசாந்து உமது மேல் எழுந்தருளி வருவார்; உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும்; ஆகையால் உம்மிடத்தில் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் என்னப்படுவார்” (லூக். 1:35). (2) “... என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக்குக் கிடைத்ததெப்படி...” (லூக். 1:43). (3) “... காலம் நிறைவேறியபோது ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும்... தம்முடைய சுதனை சர்வேசுரன் அனுப்பினார்...” (கலாத்தி. 4:5).
புனிதர்களின் போதனைகள்:
பரிசுத்த கன்னிமரியாய் சர்வேசுரனின் தாயார் என திருச்சபையின் பிதாப்பிதாக்களும், புனிதர்களும் ஏற்றுப் போதித்து வந்துள்ளனர். “தேவதாய்” - “Theotokos” என்ற வார்த்தையை திருச்சபையின் பிதாப்பிதாவான ஒரிஜன் என்பவர் முதன் முதலில் பயன்படுத்தி மாதாவை அழைத்தார்.
அர்ச். இரேணிமுஸ் “சர்வேசுரன் மரியன்னையால் நமக்கு கொடுக்கப்பட்டார்” என்கிறார். அர்ச். நாஸியான் கிரகோரியாரோ “மரியம்மாள் கடவுளின் தாய் என்று ஏற்றுக்கொள்ளாத எவனும் சர்வேசுரனிடமிருந்து புறம்பாக்கக் கடவான்” என்று கூறுகிறார். கத்தோலிக்கத் திருச்சபையும் மாதாவை மன்றாடும் ‘அருள்நிறைந்த மந்திரத்தில் “அர்ச். மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்” என்று மன்றாடுகிறது.
தொன்றுதொட்டு கத்தோலிக்கக் கிறீஸ்தவனின் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் தேவதாயைப் போற்றுவது என்பது கூடாத ஒன்றா? இல்லை! ஆகவே பரிசுத்த கன்னிகையை “சேசுவின் தாய் - தேவதாய், என்னுடைய தாய்” என்று தமது வாழ்நாளில் எப்போதும் அழைத்து வந்த அர்ச். ஸ்தனிஸ்லாஸ் கோஸ்காவோடு சேர்ந்து நாமும் மரியன்னையை “சர்வேசுரனுடைய தாய், என்னுடைய தாய்” என்று கூறி மகிழ்வோமாக. அதுவே நமது நாவில் என்றும் ஒலிப்பதாக!
சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

ஞாயிறு, 13 மே, 2018

*மே மாதம் 12-ம் தேதி* *St. Domitilla, V. M.* *அர்ச். தொமிதில்லம்மாள்* *கன்னிகை, வேதசாட்சி - (6-ம் யுகம்.*

*மே மாதம் 12-ம் தேதி*

*St. Domitilla, V. M.*         
*அர்ச். தொமிதில்லம்மாள்*
*கன்னிகை, வேதசாட்சி - (6-ம் யுகம்.* 

ப்ளாவியா தொமிதில்லா என்பவள் இராஜ வம்சத்தில் பிறந்து, சக்கரவர்த்தியான தொமிசியானுக்கு நெருங்கிய உறவினளாயிருந்தாள்.  தொமிசியான் சக்கரவர்த்தி தொமிதில்லாவையும் அவளுடைய மாமனாகிய கிளமென்ஸ் என்பவரையும் வேதத்தினிமித்தம் சிறைப்படுத்தி, கிளமென்ஸைக் கொலைசெய்து தொமிதில்லாவை நாடுகடத்தினான். தொமிதில்லா தனது அரசு அதிகாரிகளான நெறயஸ், அக்கிலேயஸ் என்பவர்களுடன் அவ்விடத்தில் புண்ணியங்களையும் தர்மச் செயல்களையும் செய்து, ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தாள். தொமிதில்லாவும் இரு அதிகாரிகளும் தனித்தனி அறைகளில் வசித்து, ஜெப தபங்களைச் செய்து வெகு கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வந்தபடியால், அவ்விடம் அவர்களுக்கு ஒருவித வேதனைக்குரிய ஸ்தலமாயிருந்தது. தொமிசியான் இறந்தபின் திராஜான் உரோமை இராச்சியங்களுக்கு சக்கரவர்த்தியாகத் தெரிந்துகொள்ளப்பட்டான். அச்சமயத்தில், வேதத்தினிமித்தம் நாடுகடத்தப்பட்ட கிறீஸ்தவர்களை அவன் விடுவிக்கக் கட்டளையிட்டு, தொமிசியானுடைய உறவினர்களைக் கொலை செய்தான். தொமிதில்லா பொய்த் தேவர்களை வணங்காததினால் அவளை நெருப்பில் சுட்டெரிக்கும்படி அவன் கட்டளையிட்டான். தொமிதில்லா மரித்து வேதசாட்சி முடி பெற்றாள்.  

*யோசனை*

இந்த இராஜக் கன்னிகையை நாமும் கண்டுபாவித்து, சுகபோகம் முதலியவைகள் மாயையென்றும், புண்ணியமார்க்கமே நித்திய சம்பாவனைக்கு அழைத்துச் செல்லுமென்று அறிந்துகொள்வோமாக.

சனி, 28 ஏப்ரல், 2018

*SS. Didymus & Theodora, MM.* *அர்ச். திதிமுசும்* *தெயதோரம்மாளும்*

*ஏப்ரல் மாதம் 28-ம் தேதி*

*SS. Didymus & Theodora, MM.*              
*அர்ச். திதிமுசும்*
*தெயதோரம்மாளும்*
*வேதசாட்சி - (கி.பி. 304).*   

தெயதோரா கிறீஸ்தவளாயிருந்ததினால் பிடிபட்டு அதிகாரிக்குமுன் கொண்டுவந்து விடப்பட்டபோது, அவன் இவளுக்கு நயபயத்தைக் காட்டி வேதத்தை மறுதலிக்கும்படி கட்டளையிட்டும், இவள் அதற்கு சம்மதிக்க வில்லை. அதிபதி இவளுடைய சிறந்த வம்சத்தையும், இவளுடைய அழகையும் இவளுக்கு எடுத்துக் கூறி, கிறீஸ்தவ வேதத்தை விடும்படி கட்டாயப்படுத்தினான். அப்படியிருந்தும் இவள் வேதத்தில் உறுதியாயிருப்பதைக் கண்டு இவளைச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான். சிறையில் துஷ்டரால் தன்னுடைய கற்புக்குப் பழுது உண்டாகாதபடி ஆண்டவரை இவள் உருக்கத்துடன் மன்றாடினாள். அச்சமயத்தில், ஒரு சேவகன் சிறையில் பிரவேசிப்பதைக் கண்டு இவள் கலங்கினாள். அப்போது சேவகனுடைய உடையை அணிந்து வந்த திதிமுஸ் இவளுக்குத் தைரியமளித்து, தன் உடுப்பை அணிந்துகொண்டு தப்பித்துக்கொள்ளும்படி கூறவே, இவளும் அவ்வாறே வெளியே தப்பிச் சென்றாள். சிறையில் நடந்த சம்பவத்தை அதிபதி கேள்விப்பட்டு, திதிமுஸின் தலையை வெட்டும்படி கட்டளையிட்டான். திதிமுஸ் கொலைக்களத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிரச்சேதம் செய்யப்படும் தருவாயில், தெயதோரா அங்கு சென்று, நான்தான் சிறையினின்று என் கற்புக்கு பழுதுண்டாகாதபடி ஓடிப்போனவள். என்னைச் சிறையிலிருந்து காப்பாற்றிய இந்தப் புண்ணியவானுடன் வேதசாட்சி முடி பெற ஆசையாயிருக்கிறேன் என்று கூறி, அன்றே அவளும் தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றாள்.          

*யோசனை*
நமது கற்புக்குப் பழுதுண்டாகக்கூடிய மனிதர், இடம் முதலியவற்றைக் கண்ணிமைக்கும் நேரத்தில் விட்டு விரைந்தோடுவாமாக.

St. Therese Daily Thought 3

துன்பத்தை தவிர வேறு எதையும் நாம் எதிர்பார்க்காமல் இருக்கும் பொது மிக சிறிய சந்தோசம் வந்தாலும் நாம் அதைக் கண்டு வியப்படைகிறோம்.  ஆனால் அந்நேரத்தில், துன்பத்தை விலை மதிப்பு மிக்க ஒரு பொக்கிஷமாக நாம் தேடும்போது, அந்த துன்பமே நமக்கு எல்லாவற்றிலும் பெரிய மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.


Download Tamil Catholic Songs

ஞாயிறு, 3 மே, 2015

தேவதாய் மீதான பக்தி முயற்சிகள் (Devotion to Mother Mary)

 திருச்சபை சொல்லி தருகிற இரண்டு பாடம் என்னவென்றால்
         1. கடவுள் மட்டும் தான்,தொடக்கமும் முடிவும் இல்லாதவர்.
அவர் மட்டுமே ஆராதனைக்கு உரியவர்.  அவரால் படைக்கப் பட்ட ஒன்றை ஆராதிப்பவன் ஒன்றாம் கற்பனைக்கு எதிராக பாவம் செய்கிறான். கத்தோலிக்கர்கள் தேவமாதாவை ஆராதிக்கவில்லை.   அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.
              அவர் கடவுளின் தாய்.  பரிசுத்த தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சேசுவினுடைய தாய்.  எப்படி நாம் இந்த உலகில் நம் பெற்றோரை மதிக்கிறோம். அப்பிடி இருக்க கடவுள் தம் தாயாரை எப்படி உயர்த்துவார்.  தம்மை பெற்று 30 வருடங்கள் வளர்த்த அந்த தாயை எவ்வளவு உயர்த்துவார்.  சேசுநாதர் 30 வருடம் இந்த உலகில் தேவமாதாவிற்கு கிழ்படிந்து இருந்தார்.  காணா ஊர் திருமணத்திலே அவர்களுக்கு ரசம் தீர்ந்து போக தேவதாய் சேசுநாதரை அவர்களுக்கு உதவுமாறு சொல்லுகிறார்.  அவரும் தன் தாயின் கட்டளைக்கு கீழ்படிகிறார்.(அரு. 2. 3-8) சேசுநாதர் தம்மை பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்திற்கு இரங்கி தமது காலம் வரும் முன்னே தண்ணிரை திராட்சை ரசமாக மாற்றின புதுமையை செய்த படியால், அவர் அந்த தாயின் மீது எவ்வளவு மரியாதை வைத்து இருந்தார் என்பதை நமக்கு காட்டுகிறது.
Annunciation
         கபிரியேல் தேவதூதன் மூலமாக ஆண்டவர் மாதாவை இவ்வாறாக வாழ்த்துகிறார். (லூக் . 1. 28) "பிரிய தத்ததினாலே பூரணமானவளே வாழ்க.  கர்த்தர் உம்முடனே. ஸ்திரிகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே." இவ்வாறாக தேவதூதன் மாதாவை வாழ்த்துகிறார்.  இந்த உலகில் உள்ள எல்லா பெண்களையும் விட தேவதாயை ஆண்டவர் உயர்த்தினார்.
Visitation
         மற்றொரு இடத்தில் அர்ச். லூக்காஸ்  தனது சுவிசேஷத்தில் (லூக். 1. 41-45) எலிசெபத்தமாளும் இஸ்பிரித்து சாந்துவினால் நிரப்பபட்டு உரத்த சத்தமாய் கூப்பிட்டு சொன்னதாவது, : ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய ஆண்டவருடைய தாயார் என்னிடம் எழுந்தருளிவர எனக்குக் கிடைத்ததெப்படி? இதோ, நீர் வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றில் உள்ள பிள்ளை அக்களிப்பால் துள்ளிற்று. அன்றியும் விசுவசிதவளாகிய நீரே பாக்கியவதி: ஏனெனில் ஆண்டவரால் உமக்கு வசனிக்கப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
வயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்ப்ட்டதாமே. என்
இவ்வாறாக தேவதாயை குறித்து பல உதாரணங்களை சொல்லலாம். நாம் தேவமாதாவை ஆராதிக்கவில்லை .  மாறாக அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.  ஏனெனில் அவர் நமது இரட்சகருடைய தாயார் என்பதனால்.

      2.  சேசுநாதர் ஒருவரே இரட்சகர். அவர் மட்டுமே தமது பாடுகளின் மூலம் மனுக்குலத்தை இரட்சிக்கிறார்.  தேவதாய் மனுக்குலத்தை இரட்சிக்கிறவர் அல்ல.  மாறாக மனுகுல இரட்சணியத்தில் சேசுநாதருக்கு ஒரு துணை இரட்சகராக(Co -Redeemer) இருக்கிறார்.
ஆண்டவர் மாதாவுக்கு மனுகுல இரட்சணியத்தில் பல சலுகைகளை
வழங்கியுள்ளார்.  மாதா பல நாடுகளில் காட்சி அளித்து மக்களை மோட்ச பாதைகளில் சேர்கிறார்.  தம்மிடத்தில் அன்பு கொண்டுள்ள பிள்ளைகளை மோட்சத்தில் அவர்களை வரவேற்கிறார்கள்.  ஏனென்றால் தேவதாய்  ஆண்டவருடைய தாய்.  அவர் சொல்லுவதை சேசுநாதர் ஒருபோதும் மறுக்கமாட்டார்.

பாரீஸ் பட்டணத்திலே அர்ச். ஞானபிரகசியார் என்னும் அரசரால் ஒரு அழகான கோவில் உண்டு.  அந்த கோவில் முன்பு சலவை கல்லால் ஆன  ஒரு அழகிய மாதா சுருபம் உண்டு. ஒரு நாள் ஒரு சிறுவன் தன் வீட்டுத் தோட்டத்தில் பூக்களால் ஒரு மாலை செய்து மாதாவின் கழுத்திலே அணிய வேண்டும் என்று சென்றான்.  அந்த சுருபத்தின் அருகில் சென்ற போதுதான் தன்னால் அந்த மாலையை சுருபத்தின் கழுத்தில் இடமுடியாது என கண்டான்.  ஆனாலும் பல முயற்சி செய்து பார்த்தான்.  அவனால் முடியவில்லை.  எனவே மிகவும் மனம் சோர்ந்தான். உடனே அந்த தாய் அந்த சிறுவன் மனம் சோர்ந்ததை கண்டு, அந்த சிறுவனை சமாதனம் செய்ய ஆவல் கொண்டார்.  அந்த கற்சுருபமானது அற்புதமாக தன் உடலை வளைத்து அந்த சிறுவனின் இரு கரங்களுக்கு எட்டும்படி தன் திரு சிரசை சாய்த்ததாம்.  அந்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் அது நிமிராமலே இருப்பதை நாம் காணலாம்.
   தேவமாதா தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவரையும் கைவிடுவதில்லை.  மாதா இந்த உலகில் இருக்கும் போதே பிறருக்கு உதவும் குணம் இருந்தது.  அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் ( 1. 40-56)  கப்ரியல் தூதன் எலிசபெத் அம்மாள் கர்பந்த்தரித்து இருக்கிறாள் என்று சொன்னதும் அவளுக்கு உதவி செய்ய செல்கிறாள்.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (11. 27) "ஜனக் கூட்டத்தில் இருந்து ஒரு ஸ்திரியானவள் தன் சத்தத்தை உயர்த்தி : உம்மை சுமந்த உதரமும், நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவையே என்றாள்." இப்படி அந்த பெண் புகழ காரணம் தேவமாதா சேசுநாதரை எவ்வளவு உத்தமமான முறையில் அவரை வளர்த்து வந்தாள் என்பதை நமக்கு காட்டுகிறது.

தேவமாதா சேசுநாதரை கல்வாரி மலையில் சிலுவையில் அறையும் மட்டும் அவரை பின் சென்றார்.  சேசுநாதர்  இந்த உலகில் அவள் பெற்ற நாள் முதல் அவர் சிலுவையில் மரிக்கும் வரை அவரை பின் சென்றார்.  சுவிசேஷத்தில் ஆண்டவர் ஒரு இடத்தில் சொல்லுகிறார் "தன் சிலுவைகளை (துன்பங்களை ) சுமந்து கொண்டு என்னை பின் செல்லாதவன் எனக்கு சீடனாயிருக்க முடியாது." தேவதாய் தன்னுடைய துன்பங்களை எல்லாம் சுமது கொண்டு சேசுநாதரை பின் சென்றார்.

நல்ல கள்ளன்

நல்ல கள்ளன் தன்னுடைய கடைசி நேரத்திலே தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, மனம் திரும்பினான்.  அவனுக்கு ஆண்டவர் மோட்ச பாக்கியத்தை கொடுக்கிறார்.  அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (23. 40-43) "மற்றவனோ மறுமொழியாக அவனைக் கண்டித்து, நீயும் இந்த ஆக்கினித் தீர்ப்புக்குள்ளாயிருந்தும் சர்வேசுனுக்கு பயப்படுகிறதில்லையா?   நமக்கு இது நியாயம் தான்.  நம்முடைய செய்கைகளுக்கு தக்க சம்பாவணையை பெறுகிறோம். ஒரு பொல்லாப்பும் செய்தவரல்ல என்று சொல்லி, சேசுநாதரை நோக்கி: சுவாமி தேவரீர் உம்முடைய இராச்சியத்தில் சேரும்போது அடியேனை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான்.  சேசுநாதர் அவனை நோக்கி: இன்றே நீ என்னோடு கூட பரகதியில் இருப்பாயென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்."
தன் சாவில் நுணியில் மனம் திரும்பிய நல்ல கள்ளனுக்கே மோட்சம் என்றால், தன்னை பெற்று , வளர்த்து, தன்னுடைய சிலுவை மரணம் மட்டும் தன்னை பின் சென்ற அன்னைக்கு என்ன வரங்கள் எல்லாம் கொடுப்பார் என்று யோசித்து பாருங்கள்.
இந்த உலக மக்கள் மீது உள்ள பாசத்தால் தன் அன்னையை நமக்கும் தாயாக அவர் கொடுத்தார். அர்ச் . அருளப்பர் சுவிசேஷத்தில் சேசுநாதர் தம் தாயாரை இந்த உலகத்தின் தாயாராக தம்மால் நேசிக்கப்பட்ட சிஷனிடம் ஒப்படைத்தார்.

பிரிவினைகாரர்களின் ஏமாற்றுதல் 

பிரிவினைகாரர்கள் தங்கள் எண்ணம் போல் பைபிளில் உள்ள கருத்துக்களை மாற்றுகிறார்கள்.  அவர்கள் நாம் ஏன் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். மரியாள் ஒரு சாதாரண பெண் அவளை ஏன் நாம்  ஆராதிக்க வேண்டும் என்று எல்லாம் நம் அன்னையை அவர்கள் மிகவும் கேவலமாக பேசுகிறார்கள்.  

பைபளில் உள்ள வசனங்களுக்கு தங்களுக்கு வேண்டியது போல அவர்களே ஒரு கதை கட்டுகிறார்கள். உதாரணமாக அரு. 2. 4. ஸ்திரியே எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய காலம் இன்னும் வரவில்லையே என்று அவளுக்கு(தேவதாய்) திருவுளம் பற்றினார்.

விளக்கம் 
        எனக்கும் உமக்கும் என்ன?" என்னும் இந்த வாக்கியத்தை "என்னோடு உனக்கு காரியமென்ன" என்பதாக சிலர் அர்த்தம் பண்ணி இவ்விதமாய் சேசுநாதர் தம்முடைய தாயாரை இகழ்ந்த்தாக சொல்லிக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த வாக்கியத்தை மூல பாஷையாகிய எபிரேய பாஷையில் பார்க்குமிடத்தில் கலியானக்காரர் விஷயத்தில் கலந்து கொள்வது "நம்மிருவருக்கும் காரியமில்லையே" என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டதாக நிச்சயமாகிறது.  
        அன்றியும் தாயை நோக்கி: ஸ்திரியே என்பது கிரேக்கர்களுக்கும் கீழ்திசைகளிலும் மரியாதையான வார்த்தையேயொழிய தாழ்மையான வார்த்தை அல்ல. மேலும் சேசுநாதர் தம்மை பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்துக்கு இரங்கி தமது காலம் வரும் முன்னே தண்ணீரை ரசமாக மாற்றின புதுமையை செய்தபடியால் அவர் அந்த ஆண்டவளை  சங்கித்து கனம்பண்ணினார்ரென்று சொல்ல வேணுமேயொழிய அவளுக்கு கனகுறை செய்தாரென்று எவரும் நினைப்பதற்கு இடமில்லை.
கள்ள தீர்க்கதரிசிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.  தமிழ் நாட்டிலே அனேக கள்ள போதகர்கள் தோன்றியுள்ளனர்..  அவர்களின் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் ஒன்று கூட நடப்பது கிடையாது. அவர்கள் ஒரு குத்து மதிப்பாக சொல்கிறார்கள்.
அவர்கள் பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு உள்ளனர்.
https://www.youtube.com/watch?v=eVDAPJuhLtQ

https://www.youtube.com/watch?v=lmZoqSsgI1s

False prophets 
இவர்கள் தங்களை எப்போதும் உயர்த்தி பேசுகிறார்கள்.  இவர்கள் ப
ர்சேயர்கள்.

நாம் சுவிஷேசத்தில் வாசிக்கிற பரிசேயன், ஆயக்காரன் கதை தான் இவர்களது.இவர்கள் தங்களை தான் ஆண்டவர் முன் உயர்த்தி பேசுகிறார்கள். நாங்கள் இதை செய்தோம், அதை செய்தோம், நாங்கள் நோன்பு இருக்கிறோம், நாங்கள் ஆண்டவரை கண்டோம், அவர் எங்கள் மேல் இருக்கிறார், பரிசுத்த ஆவி எங்கள் மேல் இருக்கிறது. என்றெல்லாம் கதைகளை சொல்லுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் ஆண்டவர் முன் பரிசேயர்கள்.  தன்னைத் தான் உயர்த்துகிறவர்கள் எல்லாம் தாழ்த்தப்படுவார்கள்.

நாம் நம் அன்னையிடம் மன்றாடுவோம்.  தாயே எங்களை நல்ல வழியில் நடத்தியருளும் என்று மன்றாடுவோம்.

ஜென்ம பாவமின்றி உற்பவித்த மரியாயே, உம்மிடம் தஞ்சம் அடையும் எங்களுக்காகவும் மற்ற அனைவருக்காகவும், விசேஷமாய் சாத்தானின் இரகசிய சபையினருக்காகவும், உம் பாதுகாவலில் ஒப்படைக்கப்படுபவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளும்.


Download.....
Download about Catholic Tamil Sermons about Our Lady