(2) சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். கன்னிமரியம்மாள் சர்வேசுரனுடைய மாதா! இது எத்தகைய பாக்கியம்! மகிமை!! மாதாவின் எல்லா மகிமைப் பெருமைகளிலெல்லாம் “இரத்தினமாக” பிரகாசிக்கும் இது ஒரு வேத சத்தியம்!
ஆம்! மகா பரிசுத்தவதியான கன்னிமரியாய் “கடவுளின் தாய்” என்பது பரம இரகசியம் - மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனின் மனிதாவதார பரம இரகசியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விசுவாச சத்தியம்! சேசுகிறீஸ்து மனுவுருவெடுத்த சுதனாகிய சர்வேசுரன்; எனவே அவளை ஈன்றெடுத்தவள் “சர்வேசுரனின் தாய்” என்றழைக்கப் படுவது முற்றிலும் சரியே. அதற்கு மாறானவைகள் தப்பறையென்று திருச்சபை கண்டித்து ஒதுக்குகிறது. எபேசியுஸ் பொதுச்சங்கம் கி.பி.431-ல் கூடி, இந்தச் சத்தியத்திற்கு விரோதமான போதனைகளைச் சபித்து “மகா பரிசுத்த கன்னிமரியம்மாள் சர்வேசுரனின் தாய்” என்று பிரகடனம் செய்துள்ளது.
வேதாகமச் சான்றுகள்:
பரிசுத்த கன்னிமரியம்மாள் சர்வேசுரனுடைய தாயாக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வேதாகம வசனங்கள் அநேகமுள்ளன. அவற்றில்: (1) “... இஸ்பிரீத்துசாந்து உமது மேல் எழுந்தருளி வருவார்; உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும்; ஆகையால் உம்மிடத்தில் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் என்னப்படுவார்” (லூக். 1:35). (2) “... என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக்குக் கிடைத்ததெப்படி...” (லூக். 1:43). (3) “... காலம் நிறைவேறியபோது ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும்... தம்முடைய சுதனை சர்வேசுரன் அனுப்பினார்...” (கலாத்தி. 4:5).
புனிதர்களின் போதனைகள்:
பரிசுத்த கன்னிமரியாய் சர்வேசுரனின் தாயார் என திருச்சபையின் பிதாப்பிதாக்களும், புனிதர்களும் ஏற்றுப் போதித்து வந்துள்ளனர். “தேவதாய்” - “Theotokos” என்ற வார்த்தையை திருச்சபையின் பிதாப்பிதாவான ஒரிஜன் என்பவர் முதன் முதலில் பயன்படுத்தி மாதாவை அழைத்தார்.
அர்ச். இரேணிமுஸ் “சர்வேசுரன் மரியன்னையால் நமக்கு கொடுக்கப்பட்டார்” என்கிறார். அர்ச். நாஸியான் கிரகோரியாரோ “மரியம்மாள் கடவுளின் தாய் என்று ஏற்றுக்கொள்ளாத எவனும் சர்வேசுரனிடமிருந்து புறம்பாக்கக் கடவான்” என்று கூறுகிறார். கத்தோலிக்கத் திருச்சபையும் மாதாவை மன்றாடும் ‘அருள்நிறைந்த மந்திரத்தில் “அர்ச். மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்” என்று மன்றாடுகிறது.
தொன்றுதொட்டு கத்தோலிக்கக் கிறீஸ்தவனின் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் தேவதாயைப் போற்றுவது என்பது கூடாத ஒன்றா? இல்லை! ஆகவே பரிசுத்த கன்னிகையை “சேசுவின் தாய் - தேவதாய், என்னுடைய தாய்” என்று தமது வாழ்நாளில் எப்போதும் அழைத்து வந்த அர்ச். ஸ்தனிஸ்லாஸ் கோஸ்காவோடு சேர்ந்து நாமும் மரியன்னையை “சர்வேசுரனுடைய தாய், என்னுடைய தாய்” என்று கூறி மகிழ்வோமாக. அதுவே நமது நாவில் என்றும் ஒலிப்பதாக!
சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக