[ஜுலை 1ம் தேதி
நமதாண்டவருடைய விலைமதியாத மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தின் திருநாள்
நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய மகா விலையுயர்ந்த திவ்ய திரு இரத்தத்தின் வேதபோதக துறவற சபையை ஸ்தாபித்தவரான அர்ச்.கஸ்பார், அவருடைய துறவற சபையில் இம்மகா உன்னதத் திருநாளைக் கொண்டாடுவதற்கான அனுமதியை திருச்சபையின் தலைமைப் பீடத்திலிருந்து, 1815ம் வருடம் பெற்றார்.
1848ம் வருடம், நவம்பர் 15ம் தேதியன்று,பாப்பரசருடைய அரசாங்கத்தின் நீதித்துறை அமைச்சரான பெல்லகிரினோ ரோஸ்ஸி என்பவர் கொல்லப்பட்டார். அடுத்த நாள், பசாசின் இரகசிய சபையினரின் தூண்டுதலால், உரோம் நகர மக்களில் சில கலகக்காரர்கள், முடியாட்சி நீங்கி குடியாட்சி வரவேண்டும், சமூக சீர்திருத்தம் வேண்டும், பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியமான ஆஸ்திரிய சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராகப் போரை அறிவிக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளை, முன்வைத்து, கலவரத்திலும், ஆர்ப்பாட்டத்திலும், நாசகார வேலையிலும், ஈடுபட்டனர்.
நவம்பர் மாதம் 24ம் தேதி பாப்பரசர் 9ம் பத்திநாதர், ஒரு சாதாரண குருவானவருடைய மாறுவேடத்தில், உரோமையை விட்டுத் தப்பிச் சென்றார். சிசிலி நாட்டின் கோட்டையான கயேட்டாவிற்குச் சென்றார். கத்தோலிக்க நாடுகளின் உதவியை நாடினார். பிரான்ஸ் நாட்டின் 3ம் நெப்போலியன் தன் படையை அனுப்பி பாப்பரசரரை மறுபடியும் உரோமையில் ஸ்தாபிக்க தீர்மானித்தான்.
கயேட்டாவில், பாப்பரசருடன், மகா விலையுயர்ந்த திவ்ய திரு இரத்தத்தின் வேதபோதக துறவற சபையின் மூன்றாம் தலைமை அதிபரான சங்.ஜியோவான்னி மெரிலினி என்ற குருவானவரும் கூட தங்கியிருந்தார். இக்குருவானர், பாப்பரசரிடம், பாப்பரசருடைய நாடுகள் மறுபடியும் மீட்கப்பட்டால், நமதாண்டவருடைய மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தின் திருநாளை அகில உலகமெங்கிலும் கொண்டாடுவதற்கான அனுமதி வழங்குவதற்கான வார்த்தைப்பாட்டை அளிக்கும்படி ஆலோசனை அளித்தார்.
பாப்பரசரும் இக்காரியத்தைக் கருத்தில் கொண்டிருந்தார்.சில நாட்களுக்குப் பின், 1849ம் வருடம், ஜுன் 30ம் தேதியன்று, பிரெஞ்சுப் படை உரோமையில் நுழைந்து, கலகக்காரர்களான உரோமைக் குடியரசு கட்சியினரின் படையை முறியடித்தது.
பாப்பரசர் 9ம் பத்திநாதர் தமது உள்ளரங்க காரியதரிசியான வந்.ஜோசப் ஸ்டெல்லா ஆண்டகையை சங்.ஜியோவான்னி மெர்லினியிடம் பின்வரும் ஒரு செய்தியுடன், அனுப்பி வைத்தார்:
“பாப்பரசர் தம்மையே ஒரு வார்த்தைப்பாட்டினால் கட்டுப்படுத்திக் கொள்வது சாதகமான காரியம் என்று கருதவில்லை! அதற்கு பதிலாக, இம்மகா உன்னதமான திருநாளை உடனடியாக அகில திருச்சபை முழுவதும் கொண்டாடும்படி நீட்டிப்பதற்கு அனுமதியளிப்பதில் மகிழ்வடைகிறார்!”.
அதே வருடம் ஆகஸ்டு 10ம் தேதியன்று, கலகக்காரர்களிடமிருந்து உரோமை விடுவிக்கப்பட்ட வருடாந்திர நாளான ஜுன் 30ம் தேதிக்குப் பின் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று, வருடந்தோறும், நமதாண்டவரின் மகா விலையுயர்ந்த திவ்ய திரு இரத்தத்தின் திருநாளைக் கொண்டாடவேண்டும் என்று, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் குறிக்கப்பட்டிருந்த திருநாட்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்நோக்கத்துடன் அர்ச்.பத்தாம் பத்திநாதர் பாப்பரசர், இந்த திருநாளை ஜுலை 1ம் தேதிக்கு மாற்றினார். 1933ம் வருடம், 11ம் பத்திநாதர் பாப்பரசர், இத்திருநாளை, நமதாண்டவர் சிலுவையில் அறையுண்ட 1900ம் வருடாந்திர கொண்டாட்டத்தின் ஞாபகார்த்தமாக, முதல் தரத்தினுடைய இரட்டிப்புத் திருநாளாக உயர்த்தினார்.
“அழிவுள்ள பொன்னினாலும், வெள்ளியாலும், இரட்சிக்கப்படாமல், நீங்கள், கிறீஸ்துநாதருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்”
(1 இராய 1:18-19)
“நித்திய பிதாவே! சேசுகிறீஸ்துநாதருடைய விலைமதியாத திரு இரத்தத்தை என் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், திருச்சபையின் அவசரங்களுக்காகவும், தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிறேன்” -100 நாள் பலன்
நமதாண்டவரின் மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தின் வணக்க மாதத்திற்கான தியானம்
நமதாண்டவரின் திவ்ய திரு இரத்தம் விலைமதியாத திவ்ய திரு இரத்தம் என்று அழைக்கப்படுவதற்கான காரணம்:
நமதாண்டவரின் மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தம் விலைமதியாத திவ்ய திரு இரத்தம் என்று அழைக்கப்படுகிறது! ஏனெனில், அது, மனுவுருவில் மறைக்கப்பட்டிருக்கிற திவ்ய சுதனாகிய சர்வேசுரனுடைய திவ்ய திரு இரத்தமாகவே இருக்கிறது! ஆதலால், அவருடைய பரிசுத்த நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கிறதும், அவருடைய திவ்ய திரு இரத்தத்தினுடைய ஒவ்வொரு துளியும், அவருடைய தேவத்துவத்துடன் ஒன்றிணைந்திருக்கிறபடியால், நமது உச்சிதமான ஸ்துதி ஸ்தோத்திர புகழ்ச்சிகளுக்குத் தகுதியானவையாயிருக்கின்றது! ஆகவே, நமதாண்டவராகிய திவ்ய சேசுநாதருடைய மகா பரிசுத்த திவ்ய திரு இருதயத்தை , நாம் ஆராதிப்பதைப்போல், அவருடைய விலைமதியாத மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தையும் , நாம் ஆராதிக்கிறோம்! மேலும், இன்னும் ஆண்டவருடைய பரிசுத்த மனிதத்துவத்திற்குரிய சகலத்திற்கும், சர்வேசுரனுக்கு மட்டுமே செலுத்தக்கூடிய உச்சிதமான வணக்க ஸ்தோத்திர ஸ்துதி புகழ்ச்சிகளுடன் கூட ஆராதனை செலுத்துகிறோம்!
மேலும், ஆண்டவருடைய மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தை அவ்வாறு அழைப்பதற்கான காரணம், அது, தேவ வரப்பிரசாதத்தால் பூரணமாக நிறைந்திருக்கிறவருடைய திவ்ய திரு இரத்தமாக இருப்பதுடன் கூட, சகல தேவ வரப்பிரசாதங்களுக்கும் ஆதியும் மூலகாரணமாகவும் விளங்குகிற திவ்ய கர்த்தருடைய திவ்ய திரு இரத்தமாக இருக்கிறது! அவருடன் கூட குடிகொண்டிருக்கிற தேவ வரப்பிரசாதம் அளவில்லாததாகத் திகழ்கிறது! ஆண்டவருடைய தேவ வரப்பிரசாதமானது, மனித சுபாவத்தினால் அவர் கொண்டிருந்த தேவ வரப்பிரசாதம் நீங்கலாக, அவருடைய திருச்சரீரம் என்கிற திரைச்சீலையின் மறைவை ஊடுருவி, தன்னையே வெளிப்படுத்தியிருந்தது! அதற்கு எந்த வரையரையும் கட்டுப்பாடும் இல்லை! அர்ச்சிஷ்டவர்கள் சிந்திய திரு இரத்தமானது, மகா விலைமதியாத திரு இரத்தம் என்றும், அவர்களுடைய திரு இரத்தத்தில் நனைந்தெடுக்கப்பட்ட துணிகளை அருளிக்கங்கள் என்றும் நாம் போற்றிப் பாதுகாத்து அவற்றிற்கு வணக்க மேரை செலுத்தி வருகிறோம். அப்படியென்றால், சகல அர்ச்சிஷ்டவர்களுக்கும் இராஜாவாக இருக்கிற நமதாண்டவரின் திவ்ய திரு இரத்தம் எவ்வளவு அதிகமாக விலைமதிப்பில்லாத திரு இரத்தமாகவும், விலைக்குரிய எல்லா அளவிற்கும் மேற்பட்டதாக விளங்க வேண்டும்?
நமதாண்டவரின் விலைமதியாத மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தம் அதன் மகா உன்னதமான நன்மையான விளைவுகளின் காரணத்தினாலேயும், விலைமதியாத திவ்ய திரு இரத்தமாகத் திகழ்கிறது! அதனுடைய ஒரு துளியாது, அகில உலகத்தையும் அதன் சகல பாவாக்கிரமத்திலிருந்தும் சுத்திகரித்துத் தூய்மைப்படுத்தப் போதுமான வல்லமையுடன் திகழ்வதுடன் கூட, இதுவரை பூமியில் ஜீவித்த பல்லாயிரக் கோடிக்கணக்கான சகல மனிதர்களுக்கும் தேவையான தேவ வரப்பிரசாதங்களைப் பெற்றுத் தரக்கூடிய வல்லமையுடனும் திகழ்கிறது! அப்படியென்றால், அதனுடைய விலைமதிப்பில்லாத மதிப்பு எவ்வளவு அளவில்லாததாக இருக்கிறது! அது, மனிதர்களுக்காக என்ன செய்யாமல் போனது? ஆண்டவருடைய விலைமதியாத மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தம் எனக்காக என்ன செய்யாமல் போனது? நான் எல்லா பாவங்களையும் கட்டிக்கொண்டபோதிலும், அது, என்னைக் கழுவி சுத்திகரித்துத் தூய்மைப்படுத்தியது! ஓ! என் நேச இரட்சகரே! திவ்ய சேசுவே! தேவரீருடைய விலைமதிப்பில்லாத மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தின் மீது எப்போதும் அதிகரித்துக் கொண்டிருக்கும் பக்திபற்றுதலை எனக்கருளும்!
“நித்திய பிதாவே! என் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பரிசுத்த திருச்சபையின் தேவைகளுக்காகவும், உமது திவ்ய குமாரனுடைய விலைமதியாத திவ்ய திரு இரத்தத்தை ஒப்புக்கொடுக்கிறேன்!” 100 நாள் பலன்
அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக