*மே மாதம் 11-ம் தேதி*
*St. Mammerthus, B.C.*
*அர்ச். மம்மேர்துஸ்*
*ஆயர், துதியர் - (கி.பி. 477).*
இவர் வியன்னா நகருக்கு பேராயராய் இருந்தார். இவர் சாஸ்திரத்தில் தேர்ந்து மகா புண்ணியவாளராக வாழ்ந்து அநேகப் புதுமைகளைச் செய்துவந்தார். உலகத்தில் மனிதருடையப் பாவத்தினிமித்தம் பஞ்சம், படை, கொள்ளை நோய் முதலிய துன்ப துரிதங்கள் உண்டாகுகிறதென்று இந்தப் பரிசுத்த ஆயர் தமது மறைமாவட்ட ஜனங்களுக்கு அறியச் செய்வார். இவர் காலத்தில் ஒரு நாள் வியன்னா நகர் நெருப்புப் பிடித்து வெந்தபோது அவ்வூரார் அதை அணைப்பதற்கு எடுத்த முயற்சிகளெல்லாம் வீணானதால், மம்மேர்துஸ் மகா பக்தியுடன் ஆண்டவரைப் பார்த்து மன்றாட, அந்தப் பெரும் நெருப்பு சடுதியில் அணைந்ததைக் கண்ட ஜனங்கள் தங்கள் பரிசுத்த ஆயருடைய வேண்டுதலால் இந்த அரியப் புதுமை நடந்த தென்று நிச்சயித்தார்கள். இந்தப் புதுமையின் ஞாபகார்த்தமாக கர்த்தர் மோட்ச ஆரோகணமான திருநாளுக்குமுன் வரும் மூன்று நாட்களில் விசேஷ ஜெபங்களை ஜெபித்து, ஆண்டவருடைய இரக்கத்தை மன்றாடும்படி கூறினார். அதுமுதல், இந்த வழக்கம் திருச்சபையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மம்மேர்துஸ் ஆயர் அநேக வருடங்கள் தமது மறைமாவட்டத்தை பரிபாலித்து, 477-ம் வருடம் பாக்கியமான மரணமடைந்து மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
*யோசனை*
நமக்குத் துன்ப துரிதங்களும் வியாதி நோவுகளும் உண்டாகும்போது அவை பசாசால் உண்டாகிறதென்று தவறாய் எண்ணி பேய்க்கு வேண்டியச் சடங்குகளை நடத்தாமல் நமது பாவங்களுக்கு ஆக்கினையாக ஆண்டவர் அவைகளை அனுப்புகிறார் என்று எண்ணி, ஜெப தபத்தாலும் ஒருசந்தி உபவாசத்தாலும் தேவ கோபத்தைத் தணிக்க முயற்சிப்போமாக.