Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 28 ஏப்ரல், 2018

St. Zita, V *அர்ச். ஜீத்தம்மாள்*

*ஏப்ரல் மாதம் 27-ம் தேதி*

*St. Zita, V.*              
*அர்ச். ஜீத்தம்மாள்*
*கன்னிகை - (கி.பி. 1272).*   

ஜீத்தம்மாள் தேவ பயமும் பக்தியுமுள்ள தன் தாயாரால்              வளர்க்கப்பட்டதால், சிறுவயதிலேயே புண்ணிய வழியில் சிறந்து வளர்ந்தாள். வெகு நேரம் ஜெபத்தியானத்தில் செலவழிப்பாள். இவளுடைய தாயார் ஏழையானதால், ஜீத்தம்மாளுக்கு 12 வயது நடக்கும்போது இவள் ஒரு செல்வந்தர் வீட்டில் வேலைக்காரியாக விடப்பட்டாள். இச்சிறுமி முனங்காமல் தனக்கு அளித்த வேலையை சுறுசுறுப்புடன் செய்வாள். தன் எஜமானர்களால் அநியாயமாய்க் கோபித்துத் தண்டிக்கப்படும்போதும், அவ்வீட்டில் வேலை செய்யும் உடன் வேலைக்காரர்களால் தூஷிக்கப்படும்போதும், ஜீத்தம்மாள் அவை எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்து, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்பாள். அதிகாலையில் எழுந்து ஜெபங்களை முடித்துக்கொண்டு திவ்விய பலிபூசை கண்டு தன் வேலையைத் தொடங்குவாள். வாரத்தில் சில நாட்கள் ஒருசந்தி பிடிப்பாள். அடிக்கடி நன்மை வாங்குவாள். இடைவிடாமல் மனவல்ய ஜெபங்களை ஜெபித்து ஒறுத்தல் முயற்சி செய்வாள். தன் சம்பளத்தை ஏழைகளுக்கு கொடுப்பாள். பொய், திருட்டு முதலியவற்றை அறியாதவள். இவளுடைய புண்ணியத்தையறிந்து இவள் எஜமானி அதிசயித்து, இவள் மூலமாய்த் தன் வீடு ஆசீர்வதிக்கப்பட்டதென்று கண்டு, இவளை உயர்வாக எண்ணி, தன் பிள்ளைகளையும் குடும்பப் பொறுப்புகளையும் இவள் கையில் ஒப்புவித்தாள். ஒருநாள் இவள் கோவிலுக்குப் போய்விட்டு சற்று தாமதமாக வீட்டுக்கு வந்தபோது, இவள் சுட வேண்டிய அப்பங்கள் சம்மனசுகளால் சுடப்பட்டிருப்பதைக் கண்டு அதிசயித்தாள். இப்புண்ணியவதி 60 வயது வரை ஊழியம் செய்து அர்ச்சியசிஷ்டவளாகக் காலஞ் சென்றாள்.  இவள் மரித்தபின் இவள் மூலமாய் 150 புதுமைகள் நடந்தன.  இவள் இறந்த 300 வருஷங்களுக்குப்பின் இவள் கல்லறையைத் திறந்து பார்த்தபோது இவள் சரீரம் அழியாமலிருந்தது.         

*யோசனை*

நாமும் இந்தப் புண்ணியவதியைக் கண்டுபாவித்து எதார்த்தம், பிரமாணிக்கம், சுறுசுறுப்பு முதலிய புண்ணியங்களை அனுசரித்து, எவ்வித வேலையிலிருந்த போதிலும் வேதக் கடமைகளை ஒருபோதும் அசட்டை செய்யாமலிருப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக