Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 3 மே, 2018

மே மாதம் 3-ம் தேதி - திருச்சிலுவை கண்டெடுக்கப்பட்ட திருநாள் (Invention of the Holy Cross)

*மே மாதம் 3-ம் தேதி*
*Invention of the Holy Cross*           
*திருச்சிலுவை கண்டெடுக்கப்பட்ட*
*திருநாள் - (கி.பி. 326).*



உரோமை இராச்சியங்களை பிற மதத்தைச் சார்ந்த அரசர்கள் சில நூற்றாண்டுகளாக அரசாண்டு வந்தபோது அவர்களுக்குள் கான்ஸ்டான்டைன் என்னும் தைரியமுள்ள இராயர் திருச்சிலுவையால் அதிசயமான ஜெயங்கொண்டபின், அவர் சத்திய வேதத்தில் சேர்ந்து தமது பிரஜைகளும் அதே வேதத்தை அனுசரிக்கும்படி உத்தரவளித்தார். அவர் திருச்சிலுவையின் பேரால் ஓர் அழகிய தேவாலயத்தைக் கட்டத் தீர்மானித்தார். அவருடைய தாயாரான  அர்ச். ஹெலனம்மாள் ஜெருசலேம் நகருக்குச் சென்று திருச்சிலுவையைக் கண்டெடுக்க முயற்சித்தாள். பிற மதத்தினர் நமது கர்த்தர் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையின்மேல் கற்களையும் மண்ணையும் போட்டு, பெரிய மேடாக்கி அதன்மேல் ஒரு பொய்த் தேவதையின் கோவிலையும் கட்டியிருந்தார்கள். அர்ச்.ஹெலனம்மாள் மிகுதியான பணத்தைச் செலவுசெய்து, அக்கோயிலை இடித்து, மேட்டை வெட்டியெடுத்தபோது, மூன்று சிலுவைகளும், ஆணி, முள் முடி முதலியவைகளும் காணப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் நமது கர்த்தர் மரணமடைந்த சிலுவை எதுவென்று அறியமுடியாததால், மக்காரியுஸ் ஆயருடைய ஆலோசனைப்படி அவ்வூரில் சாகக்கிடந்த ஒரு ஸ்திரீயின்மேல் அந்த மூன்று சிலுவைகளும் ஒன்றன்பின் ஒன்றாய் வைக்கப்பட்டன. மூன்றாவது சிலுவை அவள்மேல் வைக்கப்படவே, அவள் பூரண சுகமடைந்ததால், அதுவே நமது கர்த்தர் அறையப்பட்ட சிலுவையென்று நிச்சயிக்கப்பட்டது. பிறகு அந்தப் புண்ணிய அரசியால் அவ்விடத்தில் ஒரு சிறந்த அழகான தேவாலயம் கட்டப்பட்டு, அதில் பரிசுத்த சிலுவை மிகுந்த வணக்கத்துடனும் பயபக்தியுடனும் ஸ்தாபிக்கப்பட்டது. இன்றுவரையிலும் கிறீஸ்தவர்கள் அதை வணங்கி வருவதுமட்டுமன்றி அங்கு அநேக புதுமைகளும் நடந்து வருகின்றன. 

*யோசனை*

அவமானத்திற்குரிய சிலுவை மரத்தை நமது கர்த்தர் பொறுமையுடன் அங்கீகரித்ததினால், அது மகிமைப்படுத்தப்பட்டது போல, நமது சிலுவையாகிய துன்பதுரிதம், வியாதி முதலியவைகளை நாம் பொறுமையுடன் சகிப்போமாகில் அவை நமக்கு நித்திய மகிமைக்குக் காரணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக