சாத்தானின்
தந்திர சோதனைகளை வெல்லும் விதம்
வேதபாரகர்களின்
கருத்துப்படி, பிதாவாகிய சர்வேசுரன் தமது பிரிய குமாரன் சேசுவாக மனித உருவில் இவ்வுலகில்
தோன்றப் போவதாக அறிவிக்கிறார். எல்லா அரூபிகளும் அவரை வழிபடவும், அவருக்கு ஊழியம் செய்யவும்
வேண்டும் என்றும் அவர் உத்தரவிடுகிறார். கடவுள் மனித னாவதால், "தேவ-மனிதருக்கும்,"அவரது
திருமாதாவுக்கும் தான் ஊழியம் செய்ய வேண்டியிருக்கும் என்பதையும், கடவுள் மனித சுபாவத்தை
எடுத்துக் கொள்வதால், அது மகிமை பெறும் என்பதையும் கண்டு சாத்தான் ஆங்கார முற்று, கடவுளின்
ஆணைக்கு அடிபணிய மறுத்தான். "எனக்கு ஒப்பானவன் எவன்? நான் ஏன் கடவுளுக்கு அடிபணிய
வேண்டும்?" என்று இறுமாந்து எழுந்தான்; அது, தான் என்ற ஆணவம்; தனக்கு நிகரானவர்
எவரும் இல்லை என்ற துணிவு; தானே தனக்குப் போதும் என்ற தற்பெருமை.
கடவுளின்
இந்தக் கட்டளையைக் கேட்டபோது, தீமையின் உணர்வு ஒன்று அவனுள் எழுந்தது என்று சில வேதபாரகர்கள்
கூறுகின்றனர். இதை அவன் உடனே அடக்கியொடுக்கி, அதன் மீது வெற்றிகொண்டிருப்பான் என்றால்,
பசாசுக்கள் என்ற இனமே இல்லாமல் போயிருக்கும். ஆனால் அவனோ, தனது இந்தப் புதிய “அறிவில்"
இன்பம் கண்டான். அது தரவிருந்த "சுதந்திரத்தில்" மூடத்தனமுள்ள அக்களிப் புக்
கொண்டான். அதன் காரணமாக, இந்த "அறிவாலும், சுதந்திரத்தாலும்” வஞ்சிக்கப்பட்டு, நரகத்தில் தள்ளப்பட்டான்.
சாத்தான்
எவற்றால் வீழ்ச்சியடைந்தானோ, அதே "அறிவையும், சுதந்திரத்தையும்" கொண்டு மனுக்குலத்தைப்
பாவத்தில் வீழ்த்த அவன் திட்டமிட்டான். சர்வேசுரன் ஆதிப் பெற்றோரைப் படைத்தபோது, அவர்கள்
"அறிந்து"கொள்ளத் தேவையில்லாத தீமையை அவர் அவர்களிடம் இருந்து மறைத்து வைக்கச்
சித்தங்கொண்டார். "நன்மையும் தின்மையும் அறிவிக்கும் மரத்தின் கனியை உண்ணாதிருப்பாயாக,
ஏனென்றால் அதை நீ புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்”
(ஆதி. 2:17) என்னும் வார்த்தைகளில் அவர் தமது இந்தத் திருச்சித்தத்தை வெளிப்படுத்துகிறார்.
ஆயினும், மனிதனின் சுயாதீன சித்தத்தை அவர் தடைசெய்யவில்லை. அதைப் பயன்படுத்தி, அவன்
தீமையைத் தள்ளி, நன்மையைத் தெரிந்துகொண்டு, அதன் மூலம் தம்மை மகிமைப்படுத்த வேண்டுமென்று
அவர் விரும்பினார்.
ஆனால்
பசாசு தீமையை அறியும் இந்த "அறிவை" ஏவாளுக்கும், அவள் வழியாக ஆதாமுக் கும்
அறிமுகப்படுத்தி, கடவுளின் அன்பின் நுகத்தடியைத் தள்ளிவிட்டு, தீமையின் "சுதந்திரத்தை” ஏற்றுக்கொள்ளும்படி அவளை வற்புறுத்தினான். அந்தக் கனியின்
"அழகையும், சுவையையும்" அவளுக்குக் காண்பித்தான். இவ்வாறு, தன்னை வஞ்சித்த
அதே அறிவாலும், சுதந்திரத்தாலும், அவன் மனிதனையும் வஞ்சித்துப் பாவத்தில் தள்ளினான்.
ஆனால்
மனிதனின் பாவத்திற்குப் பரிகாரம் செய்ய வந்த சர்வேசுரனுடைய திருச்சுதனும், அவருடைய
திருத்தாயாரும் பாவத்தை "அறியாதிருந்ததாலும்," தங்கள் "சுதந்திரத்தைக்"
கடவுளுக்கு அர்ப்பணித்ததாலும், மனிதன் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்தார்கள். சேசுநாதர்
தேவ சுதன் என்ற முறையில் பாவம் அணுக இயலாதவராக இருந்தார், தேவ அன்னை அவரது தாயாயிருக்கத்
தகுதி பெறும்படி "அமல உற்பவியாகப்" பாதுகாக்கப்பட்டார்கள். இவ்வாறு, இவர்கள்
இருவரும் பாவத்தை "அறியாதிருந்தார்கள்." அவ்வாறே தேவ திருச்சித்தத்திற்கு முழுவதுமாகப் பணிந்திருந்ததன் மூலம், "சுதந்தரத்தின்" ஆங்காரத்தின்மீதும் அவர்கள் வெற்றி கொண்டார்கள். "என் சித்தப்படியல்ல, உமது
சித்தப்படியே ஆகக்கடவது, " "உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது” என்னும் வார்த்தைகளில் கடவுளுக்கு அடிமைத்தனம் என்னும் உண்மையான சுதந்திரத்தை அவர்கள் தேர்ந்துகொண்டார்கள். இவ்வாறு, சேசுவும், அவரோடு இணைந்து மாமரியும், மனுக்குலம் இழந்திருந்த உண்மையான சுதந்திரமாகிய இரட்சணியத்தை அதற்குப் பெற்றுக்கொடுத்தார்கள்.
இன்றும்
மனிதர்களை வீழ்த்த இதே ஆயுதங்களைத்தான் சாத்தான்
பயன்படுத்துகிறான். விஞ்ஞான வளர்ச்சியை முழுவதுமாகத் தனக்கு அடிமையாக்கி, அவன் சகல அசுத்தங்களைப்
பற்றிய அறிவாலும் மனிதனை, குறிப்பாக, குழந்தைகளையும், இளம்பருவத்தினரையும் நிரப்புகிறான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கற்பனை கூட
செய்திருக்க முடியாத அளவில், இன்று அவன் பாவத் தைத்
தொலைக்காட்சி, வலைத்தளம், மிகக் குறிப்பாக, கைபேசி என்னும் பயங்கரங்களின் மூலம் வீட்டு வரவேற்பறைக்குள் மட்டுமின்றி, குழந்தைகளின் மனங்களுக்குள்ளும் மிக எளிதாக நுழையச்
செய்கிறான். குழந்தைகள் கைபேசியைப் (இதற்கு வேறு பெயர் கண்டுபிடிக்கப்பட
வேண்டும், ஏனெனில் இக்கருவி பேசுவதற்கல்ல, மாறாக, கேட்டல், பார்த்தல், "தீமையை அறிதல்" என்பவற் றிற்கே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.) பயன்படுத்துவதைப் பெற்றோர் தடுக்க இயலாத படி, வலைத்தளக் கல்வி
என்ற ஒரு பெரும் ஆபத்தை
அவன் கத்தோலிக்கப் பள்ளிகளிலும் கூட அறிமுகப்படுத்தி விட்டான்.
ஏக மெய்யான கடவுளையும், அவர் அனுப்பினவராகிய சேசுக்
கிறீஸ்துவையும் அறிந்துகொள்வதே நித்திய ஜீவியம் (அரு.17:3) என்ற சத்தியத்தை முழுவதுமாக
மனிதர்களிடமிருந்து மறைப்பதே அவனது முக்கிய அலுவலாக இருக்கிறது.
இதில்
இன்று அவன் பெருமளவு வெற்றியும்
பெற்றிருக்கிறான் என்பது தெளிவு. இன்று கிறீஸ் தவர்களிடம், குறிப்பாகக் குழந்தைகளிடம் கடவுளைப் பற்றிய அறிவு இல்லை. தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல்
இல்லை. இதற்கு நேர்மாறாக, தங்கள் சரீரத்தையும், உலகத்தையும் பற்றிய அறிவு அவர்களிடம் மிகுந்திருக்கிறது. இதைக் குறித்து அவர்கள் பெருமையும் கொள்கிறார்கள். பலர் பல ஒளிக்
காட்சிகளில் பாவம் ஏதுமில்லை என்று நம்புகிறார்கள். ஆனால், வெறுமனே “கண்களின் இச்சையும் விபச்சாரமே”
(மத். 5:28) என்பதையும், கண்கள் சாத்தான் ஆத்துமத்தின் நுழையப் பயன்படுத்தும் வாசல்கள் என்பதையும் அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
இந்த
நிலை மாற வேண்டும். மனிதர்கள்
மாமரியின் வழியாக சேசுவுக்குத் தங்களை முழு அர்ப்பணம் செய்ய வேண்டும். இதை வெறுமனே ஒரு
வாடிக்கையாகவோ, பக்தி முயற்சியாகவோ அவர்கள் செய்யக்கூடாது. மாறாக, முழு அர்ப்பணம் என்பது
ஜீவியத்தைத் திருத்திக்கொள்வதும், நம் ஜீவியத்தில் சேசுவையும்,
மாதாவையும் கண்டுபாவிப்பதும் ஆகும். இவ்வாறு அவர்கள் தங்கள் “சுதந்திரத்தை" விலக்கி, கடவுளின் அடிமைகளாகத் தங்களை ஆக்கிக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக,
பாவத்தை அறியாதிருக்கும் சுதந்திரத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இது இன்றைய உலகில்
மிகவும் கடினமானதாகத் தோன்றலாம். ஆனால் சர்வேசுரனால் ஆகாதது ஒன்றுமில்லை, அவராலன்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது, ஆனால் நம்மைப் பலப்படுத்து கிறவரைக் கொண்டு எதையும் செய்ய நம்மால் ஆகும் (லூக்.1:37; அரு. 15:5; பிலி. 4:13).
ஆகையால்,
சகோதரரே, அறிவையும், சுதந்திரத்தையும் கொண்டு மனுக்குலத்தை அழிக்க முயலும் பசாசை, பாவத்தைப் பற்றிய அச்சத்தாலும், தீமையை அறியாதிருக்கும் சுதந்திரத்தாலும் நாம் வெற்றி கொள்வோமாக.