அர்ச்சிஷ்டவர்கள் சரித்திரம்
மகா பரிசுத்த திவ்ய இரட்சகர்சபையை உண்டாக்கின அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார்
(கி.பி.1696-1787) திருநாள் ஆகஸ்ட் 2ம் தேதி
இத்தாலி நாட்டிலுள்ள நேப்பிள்ஸ் நகரத்தில் அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார் பூர்வீக உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 1696ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் நாள் பிறந்தார். அவருடைய தாய் பக்தியில் அவரை வளர்த்தாள். இளமையிலேயே அர்ச்சிஷ்டதனத்தின் அடையாளக் குறிப்புகள் அவரிடத்தில் காணப்பட்டன. அவர் குழந்தையாயிருக்கும்போது, மகாத்துமாவான ஒரு அர்ச்சிஷ்டவர் அவரை ஆசீர்வதித்துவிட்டு, இவர் 91வயது வரை ஜிவிப்பாரென்றும் மேற்றிராணியாராகி திருச்சபைக்கு மிகப்பெரிய மகிமையாக விளங்குவாரென்றும் திர்க்கதரிசனம் உரைத்தார். சிறுவயதுமுதல் லிகோரியார் தேவஇஷ்டபிரசாதத்தின் ஏவுதலை அனுசரித்து அத்தியந்த பக்தியும் சம்மனசுக்குரிய பரிசுத்ததனமும் தேவமாதாவின் பேரில் மிகுந்த பக்தியும் கொண்டு திகழ்ந்தார். அவர் தன் புண்ணிய நன்மாதிரிகையினால் உத்தம கிறிஸ்துவ ஜீவியத்துக்கு உட்படும்படி தன் நண்பர்களைத் தூண்டுவார். இளைஞரானபோது பக்தியுள்ள சபைகளில் உட்பட்டு நோயாளிகளை மடங்களில் சந்தித்து அவர்களுக்கு ஊழியம் செய்வார்.
தேவாலயங்களில் நடக்கும் திவ்ய பலிபூசை, பிரார்த்தனை முதலிய தேவாராதனை சடங்குகளில் தவறாமல் பங்கேற்பார். வாரந்தோறும் திவ்ய நன்மை உட்கொண்டு அனுதினமும் தேவநற்கருணை சந்திப்பார். பக்திகிருத்தியங்களுடன்கூட கல்விகற்பதிலும் கவனத்துடன் ஈடுபடுவார். மேன்மைமிக்க புத்திகூர்மையும் அபாரமான ஞாபகசக்தியும் கொண்டிருந்ததனால், லிகோரியார், தனது 16வது வயதிலேயே இருவேறு உயர்கல்வி பட்டங்களைப் பெற்றார். பிறகு, தந்தையின் விருப்பப்படி சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரானார். அவருக்கு திருமணம் செய்ய அவருடைய பெற்றோர் ஏற்பாடு செய்ததை அறிந்தவுடன் தன் மூத்தமகனுக்குரிய உரிமையையும், தனது வக்கீல் தொழிலையும் துறந்துவிட்டு தேவமாதாவின் தேவாலயத்தை நோக்கிச் சென்றார். அங்கு தேவமாதாவி;ன் பீடத்தில் தன் உயர்குடிமகனுக்குரிய போர்வாளை தொங்கவிட்டார். தேவமாதாவிடம் குருத்துவத்திற்கான தேவஊழியத்திற்காக தன்னையே ஒப்புக்கொடுத்தார். இதனால் தமது குடும்பத்தினரிடமிருந்து வந்த பல இடையூறுகளை லிகோரியார் மிக திடமனதுடன் வெற்றி கொண்டு இறுதியில் குருப்பட்டம் பெற்றார்.
பிறகு, மற்ற சில குருக்களுடன் சேர்ந்து நாட்டுபுறத்திலுள்ள கிராமங்கள் முதலிய சிற்றூர்களிலுள்ள மக்களுக்கு ஞானபிரசங்கங்களை போதித்து ஆங்காங்கே ஆன்ம இரட்சணிய அலுவலை செய்துகொண்டுவந்தார். அதனால் விளைந்த மிகுதியான ஞானநன்மைகளைக் கண்ட லிகோரியார் “மகா பரிசுத்த திவ்ய இரட்சகர் சபை” என்ற குருக்களின் சந்நியாச சபையை ஏற்படுத்தினார். அச்சபை குருக்கள் திவ்ய இரட்சகரின் மேலான புண்ணியங்களை அனுசரித்துக் கொண்டு திவ்ய இரட்சகர் பாவனையாக நாட்டுபுறத்தில் சஞ்சரிக்கும் தரித்திர மக்களுக்கு ஞானபிரசங்கங்கள் நிகழ்த்தவும், ஆத்துமநன்மை விசாரிக்கவும் நியமிக்கப்பட்டனர். துவக்கத்தில் சபையில் சிலர் மட்டுமே இருந்தபோதிலும், அவர்கள் அனைவருக்கும் உத்தம புண்ணிய மாதிரிகையானதால் அவர்களுடைய சபை விரைவிலேயே வளர்ந்து விருத்தியடைந்தது. தன் ஞானபிரசங்கங்களினால் அம்மக்களுக்கு ஏராளமான ஞான நன்மைகள் விளையும்படி லிகோரியார் அயராமல் உழைத்தார். ஆன்மஈடேற்றத்திற்காக ஞான நன்மைகள் பயக்கக்கூடிய ஏராளமான பக்திநறைந்த புத்தகங்களை எழுதினார்.
சகல பதிதங்களிலிருந்தும் அஞ்ஞானத்திலிருந்தும் குறிப்பாக அப்போது தோன்றியிருந்த ஜான்சனிச தப்பறையினின்றும் மக்களைப் பாதுகாக்கும் படியும் அவர்களை உத்தம கத்தோலிக்க புண்ணிய ஜிவியத்திற்கு திருப்புவதற்காகவும் எண்ணற்ற அரிய நுரல்களை எழுதினார்0 ஞானபிரசங்க போதனைகளை செய்தார். மனுக்குலத்தின்மீதான ஆண்டவருடைய அளவற்ற சிநேகத்தை மறைத்து, அவரை நடுத்தீர்ப்பவராக மட்டுமே மக்களிடம் போதித்துவந்த ஜான்சனிச பதிதத்தை அழிப்பதற்காக சேசுவின் திவ்ய திரு இருதயத்தின் மிதான பக்தியை எங்கும் பரப்பினார்.
“சேசுவின் திவ்ய திரு இருதயம்”, “மகா பரிசுத்த தேவ நற்கருணை” என்ற நுரல்களை எழுதினார். உத்தம கிறிஸ்துவ ஜீவியத்திற்கு எண்ணற்ற பாவிகளை மனந்திருப்பினார். தேவமாதாவின் மிது தான் கொண்டிருந்த பக்திபற்றுதலை வெளிப்படுத்தும்படியும், மக்களிடம் மாதா பக்தியை தூண்டி வளர்ப்பதற்காகவும் “அர்ச்.கன்னிமாமரியின் மகிமைகள்” என்ற உன்னதமான அரிய நுரலை எழுதினார். மேலும், “சேசுகிறிஸ்துநாதரின் பத்தினி”, “சேசுவின் பாடுகளும் மரணமும்” “சேசுவின் மனித அவதாரமும், பிறப்பும்,பாலத்துவமும்” “”நன்மரண ஆயத்தம்” போன்ற எண்ணற்ற உயரிய நுரல்கள் அவரால் எழுதப்பட்டன. தேவமாதாவைக்குறித்து மிக உருக்கமாக பக்தி நேசத்துடன் பிரசங்கங்கள் வைப்பார். தேவமாதாவிடம் அவர் கொண்டிருந்த உச்சிதமான பக்திபற்றுதலினால் லிகோரியார் அதிசயமான தேவவரங்களைப் பெற்றிருந்தார். ஒரு நாள் லிகோரியார் பிரசங்கம் செய்தபோது தேவமாதாவின் சுரூபம் முழுதும் பிரகாசித்தது. அதினி;ன்று புறப்பட்ட சில ஒளிக்கதிர்கள் லிகோரியாரின் முகத்திலேயும் பட்டன. மற்றொருநாள் அவர் பரவசமாகி அநேக அடி உயரத்திற்கு ஆகாயத்தில் நிற்கக் காணப்பட்டார். லிகோரியார் நம் ஆண்டவரின் திவ்ய பாடுகளின் மேல் பக்திகொண்டு தினமும் அவற்றை தியானிப்பார்.
தினமும் சிலுவைப்பாதையை பக்திபற்றுதலுடன் தியானித்து செய்வார். திவ்யநற்கருணை பேழைமுன்பாக ஜெபம் செய்யும்போதும், திவ்யபலிபூசை நிறைவேற்றும்போதும் தேவசிநேக அக்கினி மயமான அவருடைய ஆத்துமம் பக்திசுவாலகருக்குரிய ஞான சுவாலையால் உருகுகிறதுபோல காட்சியளிக்கும். அதிசயமான நடுக்கமுற்றுப் பரவசமாவார். எப்போதும் அதிசயமான சம்மனசுக்குரிய பரிசுத்ததனத்துடன் நடந்து பாவமின்றி இருப்பினும், கடின தபசு செய்வார். ஒருசந்தியாலும், இருப்புச்சங்கிலியாலும் மயிர் ஒட்டியானத்தினாலும் மற்ற தவமுயற்சிகளாலும் தன் சாPரத்தை ஒறுத்தார். இரத்தம் வரும்வரை அதை அடித்துக் கொள்வார். இத்தனைப் புண்ணியங்களால் தமக்குப் பிரியமான தம்முடைய ஊழியனுக்கு, ஆண்டவர், திர்க்கதரிசன வரமும், அற்புதங்களை செய்யும் வரமும், மனிதருடைய இருதய இரகசியங்களை கண்டுபிடிக்கும் வரமும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கிற வரமும் தந்தருளினார். தாழ்ச்சியினால் நிண்டகாலத்திற்கு மேற்றிராணியார் பதவியை விலக்கி வந்தார். இறுதியில் 13ம் சாந்தப்பர் பாப்பரசரின் ஆணைக்குக் கிழ்படிந்து நேப்பிள்ஸ் நகருக்கருகில் இருந்த அர்ச்.கொத்தர் ஆகத்தம்மாள் என்ற நகரத்தின் மேற்றிராணியாரானார்.
தொடர்ந்து மனதரித்திரமும், மட்டசனமும், சாPர ஒறுத்தலும், தன் மட்டில் கண்டிப்பும் அனுசரித்தார். மற்றவரிடம் மிகுந்த தயாளமும் இரக்கமும், விசேஷமாய் ஏழைகள் மட்டில் தர்ம உதாரத்தையும் அனுசரித்தார். ஒருதடவை நேப்பிள்ஸ் நகரமெங்கும் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் உடைமைகளை எல்லாம் விற்று அங்கிருநு;த எல்லா ஏழைகளுக்கும் பங்கிட்டளித்தார். 19 ஆண்டுகளாக மேற்றிராணியாராக அயராமால் உழைத்து தன் மேற்றிராசனத்தையும் பல துறவற சபை மடங்களையும் குருமடங்களையும் சிர்திருத்தினார். லிகோரியார் இவ்வாறு ஒரு நிமிடத்தை முதலாய் வீணாக்காமல எல்லோருக்கும் எங்கும் எப்போதும் அயராமல் நன்மை செய்து வந்தார். தனது குருக்கள்சபையைப் போன்றதொரு சன்னியாச சபையை கன்னியாஸ்திரிகளுக்கும் ஏற்படுத்தினார். தன் ஓய்வு நேரத்தில் லிகோரியார் வேதசாஸ்திர நுரல்களையும் அநேக பக்திக்குரிய நுரல்களையும் எழுதினார். வயதுமூப்பின் காரணமாவும் தனக்கிருந்த நோயின் காரணத்தினாலேயும் தன் மேற்றிராசனத்தை விட்டு விட்டு தன் சபையினருடன் தங்குவதற்கு பாப்பானவரிடம் அனுமதி கோரினார்.
கடைசியில் 6ம் பத்திநாதர் பாப்பரசருடைய அனுமதியின்பேரில் நொசெரா என்ற ஊரில் தமது சபை மடத்தில் வந்து சேர்ந்தார். அங்கு புத்தி தெளிவுடனும் திடத்துடனும் ஞானதியான பிரசங்கங்கள் செய்தார். குருத்துவத்துக்கரிய திருப்பணிகள் செய்துவந்தார். லிகோரியார் வயதுமுதிர்ந்த காலத்தில் ஒரு நாள் அவருடைய மடத்தின் அருகில் இருந்த வெசுவியஸ் எரிமலை திடீரென்று நெருப்பைக் கக்க துவங்கியது. இதைக்கண்ட மற்ற சந்நியாசிகள் அவரிடம் கூறியதும், அவர் உடனே வானளாவி நெருப்புடன் வந்த கரும்புகையைப் பார்த்தார். உடனே, அஞ்சி, “சேசுவே” என்று மூன்று முறை கூறினார். பிறகு, அந்த எரிமலையை நோக்கி மிகப்பெரிய சிலுவை அடையாளம் வரைந்தார். என்ன அதிசயம். உடனே அந்த மலை நெருப்பைக் கக்குவதை நிறுத்திற்று. இறுதியில் நோயினால் ஏற்பட்ட தளர்வினாலும் 91 வயது ஆனதாலும் வெகுவாய் சோர்ந்து 1787ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் நாளன்று பாக்கியமான மரணமடைந்து பேரின்ப மோட்ச இராஜ்யத்திலே சேர்ந்தார்.
பாப்பரசர் 16ம் கிரகோரியார் இவருக்கு 1839ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதியில் அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக