செப்டம்பர் 29
அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவரின்
ஆலய அபிஷேக திருநாள்
பிரவேசம் (சங். 102. 20)
ஆண்டவருடைய சம்மனசுக்களே, அவருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய சொற்படி நடக்கும் பலமும் வல்லபமும் உள்ள நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள். (சங். க்ஷை : 1) என் ஆத்துமமே, ஆண்டவரை வாழ்த்தித் துதிப்பாயாக் என்னுள் இருக்கும் சகல தத்துவங்களே, அவருடைய திருநாமத்தை வாழ்த்துங்கள்.- பிதாவுக்கும்.....
சபைச் செபம்
செபிப்போமாக: சர்வேசுரா, தேவரீர் சம்மனசுக்களுடையவும், மனிதர்களுடை யவும் பணிவிடைகளை ஆச்சரியமான ஒழுங்கோடு நடத்திக் கொண்டு வருகிறீரே பரலோகத்தில் தேவரீருக்கு இடைவிடாமல் ஊழியஞ்செய்து, வருகிற வர்களால் இப்பூலோகத்திலும் எங்களுடைய சீவியம் ஆதரித்துக் காப்பாற்றப் படும்படி தயவாய்க் கிருபை செய்தருளும்.- தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில் ...
நிருபம் (காட்சி. 1. 1-5)
அந்நாட்களில் சீக்கிரத்தில் நடக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியர் களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, சர்வேசுரன் சேசுக்கிறீஸ்துவுக்கு ஒப்புவித் ததும், அவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியனாகிய அருளப்பருக்கு அறிவித்ததுமாகிய காட்சி: இவர் சர்வேசுரனுடைய வாக்கியத் துக்குச் சாட்சியஞ் சொல்லி, தாம் கண்ட யாவற்றையும் சேசுக்கிறீஸ்து நாதருடைய சாட்சியாக வெளிப்படுத்தினார். இந்தத் தீர்க்கதரிசனத்திலுள்ள வாக்கியங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவனும், இதிலே எழுதியிருக் கிறவைகளை அநுசரிக்கிறவனும் பாக்கியவான். ஏனெனில் காலம் சமீபித்திருக் கின்றது. அருளப்பன் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுவதாவது: இருக்கிறவரும், இருந்தவரும், இனி வருபவருமானவராலும், அவருடைய சிங்கா சனத்துக்கு முன்பாக நிற்கிற ஏழு அரூபிகளாலும், சேசுக்கிறீஸ்து நாதராலும் உங்களுக்கு இஷ்டப்பிரசாதமும் சமாதானமும் உண்டாவதாக. இவர் உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதல் பேறானவரும், பூமியின் இராஜாக்களுக்கு அதிபதியுமாயிருக்கிறார். இவர் நம்மைச் சிநேகித்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களினின்று நம்மை கழுவினார்.
படிக்கீதம்: (சங். 102. 20, 1)
ஆண்டவருடைய சம்மனசுக்களே, அவருடைய வார்த்தையைக் கேட்டு அவருடைய சொற்படி நடக்கும் பலமும் வல்லபமும் உள்ள நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள். - என் ஆத்துமமே, ஆண்டவரை வாழ்த்தித் துதிப்பாயாக் என் உள்ளங்கள் யாவும் அவருடைய திருநாமத்தை வாழ்த்துங்கள்.
அல்லேலுய்யா கீதம்
அல்லேலுய்யா, அல்லேலுய்யா அதிதூதரான அர்ச். மிக்கேலே, பயங்கரமான தீர்வையில் நாங்கள் நாசமடையாதிருக்கும்படி எங்களை யுத்தவேளையில் காப்பாற்றியருளும். அல்லேலுய்யா
சுவிஷேசம் (மத். 10. 34-42)
அக்காலத்தில் சீஷர்கள் சேசுநாதரிடத்தில் வந்து: பரலோக இராச்சியத்திலே அதிகப் பெரியவன் யாரென்று நினைக்கிறீர்? என்றார்கள். அப்பொழுது சேசு நாதர் ஓர் பாலனை அழைத்து, அவனை அவர்கள் நடுவில் நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பி, பாலர்களைப் போல் ஆகாவிட்டால், பரலோக இராச்சியத்திலே பிரவேசிக்கமாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பாலனைப் போல தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக இராச்சியத்தில் அதிகப் பெரியவனாயிருக்கிறான். இப்படிப பட்ட பாலன் ஒருவனை என் பெயராலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். ஆனால் என்பேரில் விசுவாசமுள்ள இச்சிறியோரில் ஒருவனுக்கு இடறலாயிருப்பவன் எவனோ, அவன் கழுத்திலே கழுதை சுழற்றும் ஏந்திரக் கல்லைக்கட்டி ஆழ்ந்த சமுத்திரத்தில் அவன் அமிழ்த்தப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். இடறலினிமித்தம் உலகத்துக்கு ஐயோ கேடு! ஏனெனில் இடறல்கள் கட்டாயம் வந்துதான் தீரும்: ஆயினும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ கேடு! ஆகையால் உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலாயிருந்தால், அதைத் தறித்து உனக்குத் தூரமாய் எறிந்து போடு. நீ இருகைகளை அல்லது இரு கால்களை உடையவனாய் நித்திய அக்கினியில் தள்ளப்படுவதைவிட, முடவனாய் அல்லது நொண்டியாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். உன் கண்ணானது உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி உனக்குத் தூரமாய் எறிந்துபோடு. இரு கண்ணுள்ளவனாய் அக்கினிச் சூளையில் தள்ளப் படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். இந்தச் சிறுவர்களில் ஒருவனையும் புறக்கணியாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் மோட்சத்திலே அவர்களுடைய சம்மனசுகள் பரமண்டலங்களிலேயிருக்கிற என் பிதாவின் சமுகத்தை இடைவிடாமல் தரிசிக்கிறார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், திருவுளம் பற்றினார்.
ஒப்புக்கொடுத்தல் (காட்சி. 8. 3-4)
ஓர் சம்மனசு பொன் தூபகலசத்தைக் கையிலேந்திக்கொண்டு, ஆலயத்தின் பலி பீடத்தினருகில் நிற்க, அவருக்கு ஏராளமான தூபம் அளிக்கப்பட்டது. தூபவர்க்கப் புகை சர்வேசுரனுடைய சமூகத்தில் எழும்பிற்று, அல்லேலுய்யா.
அமைதி மன்றாட்டு
ஆண்டவரே, இப்புகழ்ச்சி பலியை நாங்கள் தேவரீருக்கு ஒப்புக் கொடுத்து, எங்களுக்காக பரிந்து பேசும் சம்மனசுக்களுடைய மன்றாட்டின் பெயரால் தேவரீர் அதைத் தயவாய் ஏற்றுக்கொள்ளவும், அது எங்களுடைய இரட்சணியத்துக்கு உதவியாயிருக்கும்படி அருள் செய்யவும் தேவரீரை தாழ்மையாய் கெஞ்சி மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….
உட்கொள்ளுதல் (தானி. 3. 58)
ஆண்டவருடைய சம்மனசுக்களே நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த் துங்கள். அவருக்கு தோத்திரம் பாடி, அவரை சதாகாலமும் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்துங்கள்.
உட்கொண்ட பின்
செபிப்போமாக: ஆண்டவரே, தேவரீருடைய அதிதூதரான முத்திப்பேறு பெற்ற மிக்கேலின் சலுகையில் நம்பிக்கையுள்ள நாங்கள், வாயினால் கேட்பதை ஆத்துமத்தில் பெற்றுக்கொள்ளும்படி தேவரீரை இரந்து மன்றாடுகிறோம். – தேவரீரோடு …