செப்டம்பர் 21
அர்ச். மத்தேயு
அப்போஸ்தலர், சுவிசேஷகர்
பிரவேசம்: சங். 36. 30-31
நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைக்கும்: அவருடைய நாவு நியாயத்தைப் பேசும். அவருடைய சர்வேசுரனின் நியாயப் பிரமாணம் அவருடைய இருதயத்திலிருக்கிறது. (சங். 1) பொல்லாதவர்களைக் குறித்து அருவருப் படையாதே. அக்கிரமஞ் செய்கிறவர்கள்பேரில் வெறுப்பு கொள்ளாதே .- பிதாவுக்கும்.......
சபைச் செபம்
செபிப்போமாக: ஆண்டவரே, அப்போஸ்தலரும் சுவிசேஷகருமான முத்திபேறுபெற்ற மத்தேயு நாதருடைய மன்றாட்டுகள் எங்களுக்கு உதவியாய் வரக்கடவன, எங்கள் சொந்த பலம் பெற்று கொடுக்க முடியாததை, அவருடைய சலுகை வேண்டுதல் எங்களுக்கு அடைந்து கொடுப்பதாக. - தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்......
நிருபம் (எசே. 1: 10-14)
அந்த நான்கு மிருகங்களின் முகச் சாயல் ஏதெனில், நாலுக்கும் முன்னாலே மானிடமுகமிருந்தது. இதன் வலது புறத்தில் நாலுக்கும் சிங்க முகமும், அதன் இடது புறத்தில் நாலுக்கும் எருது முகமும், மேற்புறத்தில் நாலுக்கும் கழுகு முகமும் இருந்தன. அவைகளின் முகங்களும் இறக்கைகளும் உயர்ந்து விரிந்திருந்தன. ஒவ்வொன்றின் இரு இறக்கைகளும் ஒன்றோடொன்று கூடிச் சேர்ந்திருக்க, மற்றிரண்டும் அவைகளின் சரீரங்களை மூடிக்கொண்டிருந்தன. அவைகள் ஒவ்வொன்றுந் தனக்கு எதிரான திசையில் நடந்தது. எவ்விடத் திற்குப் போகவேண்டுமென்று ஆவி அவைகளை ஏவிவிடுமோ அவ்விடத் துக்குப் போகும்; போகையில் திரும்பி பார்க்கவேமாட்டா. அம்மிருகங்கள் பார்வைக்கு அக்கினிபற்றி எரியுங் கரியைப் போலும் கொளுத்தி விட்டெரியும் விளக்கைப் போலுந் தோன்றும்; அவைகளின் நடுவில் அக்கினிச் சுவாலை ஓடித் திரிய அதினின்று மின்னல் புறப்படும். அம்மிருகங்கள் மினுமினுப்பான மின்னலைப் போல் போகிறதும் திரும்பி வருகிறதுமாயிருந்தன.
படிக்கீதம்: (சங். 111. 1-2)
ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் மிகவும் பாக்கியவான். – அவனுடைய சந்ததி பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மையானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும்.
அல்லேலுய்யா கீதம்
அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஆண்டவரே, அப்போஸ்தலர்களின் மாட்சிமை பொருந்திய கூட்டம் உம்மைப் புகழ்கின்றது. அல்லேலுய்யா.
சுவிஷேசம் (மத்;. 9. 9-13)
அக்காலத்தில் சேசுநாதர் ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னப்பட்ட ஓர் மனிதனைக் கண்டு, அவனை நோக்கி: என் பிறகே வாவென்றார். அவனும் உடனே எழுந்து அவரைப் பின்சென்றான். பின்னும் சம்பவித்ததேதெனில், சேசுநாதர் அவன் வீட்டில் பந்தியமர்ந்திருக்கையிலே அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து அவரோடும் அவருடைய சீஷர் களோடுங்கூடப் பந்தி அமர்ந்தார்கள். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் குரு ஆயக்காரரோடும் பாவிகளோடும் அசனம் செய்வானேன் என்றார்கள். சேசுநாதர் அதைக் கேட்டுத் திருவுளம்பற்றினதாவது: சொஸ்தமுள்ளவர்களுக்கு வைத்தியன் வேண்டியதில்லை, நோயாளிகளுக்கே வேண்டும். பலியையல்ல, தயாளத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத் தென்ன வென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நீதிமான்களை யல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்றார்.
ஒப்புக்கொடுத்தல் (சங். 88: 25)
ஆண்டவரே, அவருடைய சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர். அவர் உம்மிடத்தில் சீவியத்தை கேட்டார். நீர் அவருக்கு அதை அளித்ததீர். அல்லேலுய்யா.
அமைதி மன்றாட்டு
ஆண்டவரே, அப்போஸ்தலரும் சுவிசேஷகருமான முத்திப்பேறுபெற்ற மத்தேயு நாதருடைய வேண்டுதல்களினால், உமது திருச்சபையின் காணிக்கை தேவரீருக்கு உகந்ததாயிருக்க உம்மை மன்றாடுகிறோம். அவருடைய மகிமையான பிரசங்கங்களினால் உமது திருச்சபை விளங்கப் பெற்றதே. – தேவரீரோடு ….
உட்கொள்ளுதல் (சங். 20. 6)
உமது இரட்சிப்பில் அவருடைய மகிமை மகத்தானது. ஆண்டவரே, மகிமையும் பெரும் அழகையும் அவருக்கு அளிப்பீர்.
உட்கொண்ட பின்
செபிப்போமாக: ஆண்டவரே, பரிசுத்த தேவதிரவிய அநுமானங்களைப் பெற்றுக் கொண்ட நாங்கள், உமது அப்போஸ்தலரும், சுவிசேஷகருமான முத்திப்பேறு பெற்ற மத்தேயுநாதருடைய வேண்டுதலைக் குறித்து மன்றாடுவதேதெனில், அவருடைய மகிமைக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட பலிகள் எங்கள் இரட்சணியத்துக்கு மருந்தாக உதவக்கடவன. - தேவரீரோடு . . .
. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக