Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 20 செப்டம்பர், 2023

Statuitt - மேற்றிராணியரான துதியர் ஒருவர் பெயரால் - பொது

 மேற்றிராணியரான துதியர் ஒருவர் பெயரால் - பொது

Statuitt . .

பிரவேசம்: சங். 45. 30

ஆண்டவர் அவருடன் சமாதான உடன்படிக்கையைச் செய்து கொண்டு குருத்துவத்தின் மகிமை அவருக்கு நித்தியமாய் இருக்கும்படி அவரைத் தலை வராக நியமித்தார். (பா. கா. அல்லேலுய்யா, அல்லேலுய்யா) (சங். 131. 1) ஆண்டவரே, தாவீதையும் அவருடைய மகா  சாந்தகுணத்தையும் நினைத்தருளும். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, தேவரீருடைய துதியரும், மேற்றிராணியாருமான முத்திப்பேறு பெற்ற (இன்னாருடைய) வணக்கத்துக்குரிய திருநாள் எங்கள் பக்தியைப் பெருக்கி, எங்கள் இரட்சணியத்துக்கு உதவியாயிருக்க செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம் (சர். 44. 16-27, 45. 3-20)

இதோ! பெரிய குரு தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார் ; நீதிமானாகக் காணப்பட்டார்; கோப காலத்தில் சமாதான பந்தனமானார்.  உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்குச் சரி யொத்தவர் எவரும் காணப்படவில்லை. ஆனதால், ஆண்டவர் சத்தியஞ் செய்து, இவருடைய கோத்திரத்தின் நடுவே இவரை அதிகரிக்கச் செய்தார். சகல சாதிகளுடைய ஆசிர்வாதத்தையும்  இவருக்குக் கொடுத்து, இவர் சிரசின் மேல் தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார். தம்முடைய ஆசிர்வாதத்தைக் கொண்டு ஆண்டவர் இவரை அங்கீகரித்துக்கொண்டார்; தமது இரக்கத்தை இவருக்காக வைத்திருந்தார்; இவரும் ஆண்டவருடைய சமூகத்தில் கருணையைக் கண்டடைந்தார். அரசர்கள் முன்பாக ஆண்டவர் இவரை மகிமைப்படுத்தி, மகிமையின் கிரீடத்தைச் சூட்டினார். நித்திய உடன் படிக்கையை இவருக்கு நியமித்தார்; இவருக்கு மகா குருத்துவத்தைக் கொடுத்தார்; மகிமையில் இவரைப் பாக்கியவானாக்கினார். குருத்துவத் தொழிலை நிறைவேற்றவும், அவருடைய நாமத்தினால் புகழ் பெறவும், நல்ல சுகந்தமுள்ள தூபத்தைத் தக்கவிதமாய் அவருக்கு ஒப்புக் கொடுக்கும் படியாகவே.

படிக்கீதம்: (சர். 44: 16)

இதோ! பெரிய குரு, இவர் தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார். – (சர். 20) உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்கு சரியொத்தவர் ஒருவரும் காணப்படவில்லை.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 109. 4) நீர் மெல்கிசெதேக்கின் முறைப் படி நித்தியத்திற்கும் குருவாயிருக்கிறார். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 111. 1-3)

ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் பாக்கியவான். – அவனுடைய சந்ததி பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மையானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும். – மகிமையும் செல்வமும் அவன் வீட்டிலிருக்கும். அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலை நிற்கின்றது. .

பாஸ்குகாலத்தில் படிக்கீதம் முதலியவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ளதை சொல்ல வேண்டும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 109: 4) நீர் மெல்கிசெதேக்கின் முறைப்படி நித்தியத்திற்கும் குருவாயிருக்கிறீர், அல்லேலுய்யா. – ஆண்டவர் முடிசூட்டிய குரு இவர்தான், அல்லேலுய்யா.

சுவிஷேசம் (மத். 25. 14-23)

அக்காலத்தில் சேசுநாதர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரலோக இராச்சியமானது புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போன ஒரு மனிதன் தன் ஊழியரை அழைத்து அவர்களிடத்தில் தன் திரவியங்களை ஒப்புவித்தது போலாகும். அவன் ஒருவனுக்கு ஐந்து தலேந்தும், வேறொருவனுக்கு இரண்டு தலேந்தும், இன்னொருவனுக்கு ஒன்றுமாக, அவனவனுடைய சக்திக்குத் தக்கபடி கொடுத்து, உடனே பிரயாண மாய்ப் போனான். ஐந்து தலேந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு உழைத்து, வேறு ஐந்தைச் சம்பாதித்தான். அவ்வண்ணமே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வேறு இரண்டைச் சம்பாதித்தான். ஒன்றை வாங்கினவனோ போய், பூமியைத் தோண்டித் தன் எஜமானனுடைய பணத்தைப் புதைத்து வைத்தான். வெகுகாலத்துக்குப்பின் அந்த ஊழியருடைய எஜமான் வந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து தலேந்தைப் பெற்றுக் கொண்டவன் அணுகி வேறே ஐந்து தாலந்தை ஒப்புக் கொடுத்து: ஆண்டவனே! ஐந்து தலேந்தை என் வசத்தில் ஒப்புவித்தீரே, இதோ வேறைந்தை ஆதாயமாகச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே! நீ சொற்பக் காரியங்களில் பிரமாணிக்கனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரி யாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.  அப்படியே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே! என் வசத்தில் இரண்டு தலேந்தை ஒப்புவித்தீரே, இதோ வேறிரண்டைச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே நீ கொஞ்சத்தில் பிரமாணிக்க முள்ளவனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரியாக ஸ்தாபிப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

நாம் நமது தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, நமது பரிசுத்த தைலத்தால் அவனை அபிஷேகஞ் செய்தோம். ஏனெனில் நமது கரம் அவனுக்கு உதவிபுரியும். நமது புஜம் அவனை உறுதிபடுத்தும்.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத்தவான்கள் எங்களை எப்பொழுதும் மகிழச் செய்வார்களாக. அதனால் அவர்களுடைய பேறுபலன்களைக் கொண்டாடுகிற நாங்கள் ஆதரவையும் பெற்றுக்கொள்ளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 12)

எஜமான் தன் பணிவிடைகாரருக்கு தக்க காலத்தில் படியளக்க அவர்களுக்கு மேல் அதிகாரியாக்கத்தக்க உண்மையும் விவேகியுமான செயலாளர் இவரே.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, பெற்றுக்கொண்ட கொடைகளுக்காக நன்றி செலுத்தும் அடியோர்கள் தேவரீருடைய துதியரும் மேற்றிராணியாருமான முத்திபேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலினால், இன்னும் அதிக நன்மைகளை அடைந்துகொள்ள எங்களுக்குத் திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு …


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக