Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 11 நவம்பர், 2017

St.Stanislas, நவம்பர் 13-ம் தேதி



                    அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், துதியர் 

                                                       (கி.பி.1567)

                இவர் பக்தியுள்ள தாய் தந்தையரிடத்தினின்று பிறந்து, புண்ணிய வழியில் கவனத்துடன் வளர்க்கப்பட்டார்.  இதனால் அவர் சிறு வயதிலேயே ஒரு அர்ச்சியசிஷ்டவரைப் போலக் காணப்பட்டார்.  கல்விப் பயிற்சி பெறும்படி தன் சகோதரனுடன் ஒரு பட்டணத்திற்கு அனுப்பப்பட்டார்.  அவ்விடத்தில் ஸ்தனிஸ்லாஸ்  புண்ணியத்தில் அதிகரித்து வந்தார். 
நாள்தோறும் திவ்விய பூசை காண்பார்.  வாரந்தோறும் தேவநற்கருணை உட்கொள்வார்.  கல்விச்சாலைக்குச் செல்வதற்கு முன்னும் பின்னும் தேவநற்கருணை சந்திப்பார்.  கெட்ட தோழருடன் சேர மாட்டார்.  யாதொருவன் தகாத வார்த்தைப் பேசக் கேட்டால், ஸ்தனிஸ்லாஸ் அவ்விடத்தை விட்டு அகன்று போவார்.  இரவு வேளையில் விழித்து ஜெபஞ் செய்வார்.  முள்ளொட்டியாணம் முதலிய தபயத்தனங்களை உபயோகிப்பார். உலக புத்தியுள்ள இவருடைய தமயன் ஸ்தனிஸ்லாஸ் தன்னைப் போல ஆடல் பாடலுக்கு வராமலும் கெட்ட சிநேகிதருடன் சகவாசம் செய்யாமலும் இருப்பதைப் பற்றிப் பல முறை அவரைத் திட்டி அடித்து உபாதித்தும், அவர் அவைகளை எல்லாம் பொறுமையுடன்  அனுபவிப்பார்.  அவர் கடிய வியாதியாய் விழுந்தபோது தேவநற்கருணை வாங்க ஆசித்தும் அவர் இருந்த பதித வீட்டுக்காரன் அவ்விடத்திற்குக் குருவானவர் வரச் சம்மதிக்கவில்லை.  அப்போது அவர் விசுவாசத்துடன் வேண்டிக் கொண்டபோது இரு சம்மனசுகள் அவருக்கு தேவநற்கருணை கொண்டு வந்து கொடுத்தார்கள்.  தேவமாதா ஸ்தனிஸ்லாஸ{க்குத் தோன்றி சேசு சபையில் சேரும்படி அறிவித்ததின் பேரில், ஸ்தனிஸ்லாஸ் உரோமைக்குச் சென்று மேற்கூறிய சபையில் சேர்ந்தார்.  அவர் நவ சன்னியாசியாயிருந்த ஒன்பதரை மாதங்களுக்குள் சகல புண்ணியங்களையும் உத்தமமாக அனுசரித்து இவர் விரும்பியபடி மோட்ச இராக்கினி மாதா திருவிழாவன்று மரித்து மோட்ச ஆனந்தத்திற்குள்ளானார். 

யோசனை
                கல்விச்சாலைகளில் கற்கும் வாலிபர் அர்ச்.ஸ்தனிஸ்லாஸின் மாதிரிகையைப் பின்பற்றக் கடவார்களாக.

St. Martin, நவம்பர்  12


அர்ச்.மார்ட்டின், பாப்பாண்டவர், வேதசாட்சி

                                                       (கி.பி.655)

                மார்ட்டினுடைய சிறந்த புண்ணியத்தையும் கல்வியையும் பார்த்து அர்ச்.இராயப்பருடைய சிம்மாசனத்திற்கு நியமிக்கப்பட்டார்.  கான்ஸ்டாண்டிநோபிளில் ஒரு புது பதித மதம் முளைத்து அதில் அநேகர் சேர்ந்ததுடன் அந்நகரின் மேற்றிராணியாரான பவுல் என்பவரும் அதற்கு ஆதரவாக இருந்ததை மார்ட்டின் பாப்பாண்டவர் அறிந்து, ஸ்தானாதிபதிகளை அவ்விடத்திற்கு அனுப்பி, காரியத்தை ஒழுங்குபடுத்தும்படிச் செய்தார்.  பதிதனான மேற்றிராணியார் அந்த ஸ்தானாதிபதிகளை பரதேசத்திற்கு அனுப்பி விட்டார்.  இதற்குப் பின் அர்ச்.பாப்பாண்டவர் அநேக மேற்றிராணிமாரை திருச்;சங்கமாகக் கூட்டி பவுல் மேற்றிராணியார் பேரிலும் அந்த பதித மதத்தைச் சேர்ந்தவர்கள் பேரிலும் திருச்சபை சாபம் போட்டார். பதித மதத்தானான கன்ஸ்தான்ஸ் இராயன் சினங்கொண்டு, தன் மந்திரிகளில் ஒருவனை உரோமைக்கு அனுப்பி பாப்பாண்டவரைக் கொல்லும்படி கட்டளையிட்டான்.  திவ்விய பூசை செய்யும் பாப்பாண்டவரைக் கொல்லும்படி மேற்கூறிய மந்திரியின் சேவகன் அவரை அணுகியபோது புதுமையாக அவன் குருடனானான்.  கொடுங்கோலனான இராயனுடைய கட்டளைப்படி ஒரு படைத்தலைவன் பெரும் படையுடன் உரோமைக்குச் சென்று கபடமாய் பாப்பாண்டவரைச் சிறைப்படுத்தி, இராயனிடன் கூட்டிக்கொண்டு வந்தான்.  இராயன் அவரைப் பலவாறாய் உபாதித்து அவரைக் கொலை செய்ய முயற்சித்தபோது, பதித மேற்றிராணியார் கடின வியாதியாய் விழுந்து இறந்தார்.  தனக்கும் மற்ற பதிதருக்கும் போட்ட சாபத்தை எடுக்கும்படி இராயன் மார்ட்டின் பாப்பாண்டவருக்கு கட்டளையிட்டு, அவரை உபாதித்தபோதிலும் அவர் அதற்குச் சம்மதியாததால் அவரை பரதேசத்திற்கு அனுப்பினான்.  அவர் பரதேசத்தில் சொல்ல முடியாத வாதைகளை அனுபவித்து வேதத்திற்காக தமது உயிரைக் கொடுத்தார். 



யோசனை
                நாம் எந்த காரணத்தைக் கொண்டும் இதர மதத்தாருடைய தேவாரதனையில் பங்கு பெறக் கூடாது.

St.Martin of Tours, B. நவம்பர் 11


மிகவும் கீர்த்தி பெற்ற மார்ட்டின் என்பவர் பிரான்ஸ் தேசத்திற்குச் சிறந்த ஆபரணமாய் ஜொலித்தார்.  அஞ்ஞானியான இவர் கல்விப் பயிற்சி பெறும்போது, சத்திய வேதத்தையறிந்து ஞானோபதேசங் கற்கையில், அவர் தகப்பனார் அவரைப் படையில் சேர்த்துக்கொண்டார்.  ஒரு நாள் மார்ட்டின் மற்றச் சேவகருடன் பயணம் போகையில், குளிரால் நடுங்கும் ஒரு ஏழை, சேசுநாதர் பெயரால் தருமங் கேட்டான்.  தமது கையில் ஒன்றுமில்;லாததினால் தமது மேற்போர்வையைக் கழற்றி இரண்டாகக் கிழித்து பாதியை அவனுக்குக் கொடுத்தார்.  அன்றிரவு சேசுநாதர் மேற்கூரிய போர்வையை போர்த்தியவராய் அநேக சம்மனுசுக்களுடன் அவருக்குத் தோன்றி ~~இது மார்ட்டின் எனக்குக்கொடுத்த போர்வை|| என்றார்.  இதற்குப் பின் மார்ட்டின் பட்டாளத்தை விட்டு விலகி, ஞானஸ்நானம் பெற்று, அர்ச்.இலாரி என்பவருக்கு சீஷனாகி, வேத சாஸ்திரங்களைக் கற்று, குருப்பட்டம் பெற்று, ஒரு சன்னியாச மடத்தைக் கட்டி, 400 சன்னியாசிகளுடன் ஜெபதபத்தால் சர்வேசுவரனுக்கு ஊழியஞ் செய்து வந்தார்.  இவருடைய புண்ணியங்களினிமித்தம் இவருக்கு மேற்றிராணியார் பட்டங் கொடுக்கப்பட்டது.  மார்ட்டின் சில சன்னியாசிமாருடன் ஊரூராய்ப் போய் வேதம் போதித்தார்.  இவர் புதுமை வரம் பெற்று இறந்தவர்களுக்கு உயிரும் குருடருக்குப் பார்வையும் கொடுத்து பசாசை விரட்டியதைக் கண்ட கணக்கில்லாத அஞ்ஞானிகள் ஞானதீட்சை பெற்றார்கள்.  இவர் அவர் நாட்டிலுள்ள பேய்க் கோவில்களை இடித்து, சோலைகளை அழித்து, சத்திய வேதக் கோவில்களைக் கட்டினார்.  இவரால் செய்யப்பட்ட புதுமைகளுக்குக் கணக்கில்லை.  இவருடைய விடாமுயற்சியாலும் ஜெபதபத்தாலும் அநேக அஞ்ஞான நாடுகளை கிறீஸ்துவ நாடுகளாக்கி, தமது ஞானப் பிரசங்கத்தால் அவர்களை சத்திய வேதத்தில் உறுதிப்படுத்தி, பிரான்ஸ் தேசத்தின் அப்போஸ்தலரென்றும் பெயர் பெற்று அர்ச்சியசிஷ்டவராய்க் காலஞ்சென்றார். 




யோசனை


                நாம் தர்மம் புரியும்போது முகத்தாட்சண்யத்தையும் வீண் பெருமையையும் பாராமல் சர்வேசுவரனைக் குறித்து அதைச் செய்ய வேண்டும்.      

வியாழன், 29 ஜூன், 2017

திரிதெந்தின் திவ்விய பலி பூசை - Traditional Latin Mass

திவ்விய பலி g+சையின் சாதாரண பாகம்

முதல் பாகம்

ஆயத்தப் g+சை : உபதேச பாகம்
பலியோடு சேராத பாகம்
முதல் பிரிவு
ஆயத்தம்: தீர்த்தம் தெளித்தலிருந்து சபை செபம் வரையில்
குரு g+சை உடுப்புகளை அணிந்து கொண்டு பாத்திரத்தை கையிலேந்தி பீடத்தின் முன் நடுவே தரையில் முழந்தாட்படியிட்டுப் பீடத்திலேறிப் பாத்திரத்தை மத்தியில் வைத்த பின், g+சைப்புத்தகத்தினிடம் போய், அன்றைய பாகத்தைத் திறந்த வைத்தபின், நடுவில் வந்து மேல ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாடுபட்ட சுரூபத்தை நோக்கி சிரம் பணிந்து கீழே வருகிறார்.










செவ்வாய், 18 அக்டோபர், 2016

அக்டோபர் மாதம் 18-ம் தேதி (St. Luke)

அக்டோபர் மாதம் 18-ம் தேதி
         

                அர்ச்.லூக்காஸ் - சுவிசேஷகர்   

இவர் பல தேசங்களில் சுற்றித் திரிந்து உயர்ந்த கல்வியையும், வைத்திய சாஸ்திரங்களையும், ஓவியக் கலையையும் கற்றுத் தேர்ந்தார்.  அர்ச்.சின்னப்பருடைய பிரசங்கத்தைக் கேட்டு கிறீஸ்தவ வேதமே சத்திய வேதமென்று கண்டுணர்ந்து, அதை அப்போஸ்தலரால் ஞானதீட்சை பெற்று, அவருக்கு சீஷனாகி வேதம் போதிப்பதில் அவருக்குத் துணையாக இருந்தார்.  இவர் சேசுநாதரைக் காணப் பாக்கியம் பெறாவிடினும் இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலால் ஒரு சுவிசேஷத்தையும் அப்போஸ்தலர் நடபடி என்னும் புத்தகத் தையும் எழுதி வைத்தார். இவர் தேவமாதாவை அடிக்கடி கண்டு பேசி, அவர்கள் மட்டில் அதிக நேசமும் பக்தியும் வைத்தார். தேவதாயாரைப்பற்றி மற்ற சுவிசேஷகர்கள் எழுதாத விஷயங்களை லூக்காஸ் எழுதி வைத்ததுடன் அந்த பரமநாயகியின் சாயலையும் சித்தரித்தார். இவர் வரைந்த தேவமாதாவின் அநேக படங்களில் ஒன்று இன்றும் உரோமாபுரி கோவிலில் பக்தியுடன் வணங்கப்பட்டு வருகிறது. அர்ச்.சின்னப்பர் வேதசாட்சி முடி பெற்றபின் லூக்காஸ் இத்தாலியா, கால், எஜிப்து முதலிய தேசங்களில் சுற்றித்திரிந்து, வேதம் போதித்து தமது அரிய புண்ணியங்களாலும் புதுமைகளாலும் அநேகரை சத்திய வேதத்தில் மனந்திருப்பி, வேதத்திற்காக இரத்தஞ் சிந்தி மரித்து, மோட்ச சம்பாவனையைச் சுதந்தரித்துக்கொண்டார்.      

யோசனை
பதிதருடைய படிப்பினையை நாம் அருவருத்து, அப்போஸ்தலர்களின் வழக்கத்தைப் பின்பற்றி, கர்த்தருடையவும் தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்ட வர்களுடையவும் திருச்சுரூபம் படம் முதலியவைகளை வீடுகளில் ஸ்தாபித்து, அவைகளைப் பார்க்கும் போது அவர்களுடைய நன்மாதிரிகளைப் பின்பற்ற முயற்சிப்போமாக.          

புதன், 7 செப்டம்பர், 2016

செப்டம்பர் மாதம் 9-ம் தேதி


 St. Omer, Bishop        
அர்ச்.ஓமெர் - மேற்றிராணியார் (கி.பி.670)  

               இவர் உத்தம கோத்திரத்தாரும் தனவந்தருமான தாய் தந்தையிட மிருந்து பிறந்து, உலக சாஸ்திரங்களையும் வேதசாஸ்திரங்களையும் கற்று, தர்ம வழியில் நடந்து வந்தார். சிறு வயதிலேயே இவர் தெய்வ பக்தியுள்ளவராய் நடந்து, தேவ பணிவிடையில் பிரவேசிக்க ஆசையாயிருப்பதைக் கண்ட அவருடைய தந்தை சந்தோஷப்பட்டு அதற்கான நல்ல ஆலோசனையும் அவருக்குச் சொல்லி வந்தார்.  தன் தாய் இறந்தபின் ஓமெர் துறவியாகப் போக இருப்பதையறிந்த அவர் தகப்பனும் தமது சொத்துக்களையெல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு தன் குமாரனுடன் ஒரு சன்னியாச மடத்தில் சேர்ந்தார். ஓமெர் துறவற மடத்தைப் பூலோக மோட்சமாகப் பாவித்து சகல புண்ணியங்களிலும் மேற்கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்தார்.  வாரத்தில் மூன்று நாள் ஒருசந்தி பிடித்து இரத்தம் வரத் தமது சரீரத்தைத் தண்டித்து, வெகு நேரம் ஜெபத்தியானஞ் செய்து தரையில் படுத்து, அரிதான தவம் புரிந்து வந்தார். இவருடைய மேலான ஞானத்தையும் கல்வியையும் குறித்து மேற்றிராணியாராகக் கட்டாயப்படுத்தப்பட்டார். 
                    இந்த மேலான  அந்தஸ்திற்கு ஓமெர் உயர்த்தப்பட்டபின் முன்னிலும் அதிக புண்ணியங்களைச் செய்து, தம்மை நீசனாகக் தாழ்த்தி, தமது கிறீஸ்தவர்களுக்காக ஜெபித்து ஒருசந்தி பிடித்து, தவம் புரிந்து இடைவிடா பிரசங்கத்தால் அஞ்ஞானிகளை சத்திய வேதத்தில் திருப்பி, சிலைகளையும் பள்ளிவாசல்களையும் தகர்த்து, அசமந்தரை விசுவாசத்தில் திடப்படுத்தி, தமது மேற்றிராசன கிறீஸ்தவர்         களை உத்தம விசுவாசிகளாக்கினார். தமது உழைப்புக்குச் சம்பாவனையான மோட்சத்தைப்பற்றி நினைத்துப் பாக்கியமான மரணமடைந்து அதில் மகிமை யுடன் பிரவேசித்தார்.    

யோசனை
பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் தேவ ஊழியத்தில் சேர மனதாயிருப்பதாக நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு தடங்கல் செய்யாதேயுங்கள். 

செப்டம்பர் மாதம் 8-ம் தேதி : The Nativity of B.V.M.

செப்டம்பர் மாதம் 8-ம் தேதி
 The Nativity of B.V.M.
அர்ச்.தேவமாதாபிறந்ததிருநாள்  
          யாதொரு தேசத்தில் பட்டத்துக் குழந்தை பிறக்கும் நாளில் வெகு சந்தோஷமும் கொண்டாட்டமும் உண்டாகும். ஜென்மப் பாவமின்றி உற்பவித்து, சுதனாகிய சர்வேசுரனுக்கு மாதாவாக சர்வேசுரனால் நியமிக்கப்பட்ட திருக்குழந்தை பிறந்த நாளில் பூலோகத்தில் மாத்திரமல்ல பரலோகத்திலும் சந்தோஷக் களிப்பு உண்டானது.தங்களுக்கு இராக்கினியானவள் பிறந்ததினால் சம்மனசுக்கள் சந்தோஷித்து மகிழ்ந்தார்கள். தங்களை மீட்டு இரட்சிக்கும் கர்த்தருடைய தாயாரின் பிறப்பைப்பற்றி பூவுலகிலுள்ள பிதாப் பிதாக்களும் புண்ணியவாளரும் சந்தோஷித்து ஆறுதல் கொண்டார்கள்.  ஆனால் தன் தலையை நசுக்கித் திரளான ஆத்துமங்கள் மோட்சத்திற்குப் போவதிற்கு காரணமான ஸ்திரீயின் பிறப்பால் நரகம் பயந்து நடுங்கியது.
          மேலும் இன்றையத் தினம் ஆரோக்கியமாதா திருவிழாவென்று கூறப்படுகிறது.  அதெப்படியெனில் பாவமாகிற நித்திய மரணத்திற்கு உள்ளான நர ஜென்மத்தை மீட்டு இரட்சித்தவர் சுதனாகிய சர்வேசுரனே.  ஆகையால் பாவ வியாதிக்கு அவரே ஞான ஆரோக்கியம். இப்படிப்பட்ட ஆரோக்கியத்தை உடையவரைப் பெற்றெடுத்தவளை ஆரோக்கிய மாதா என்று கூற நியாயம் உண்டல்லவா? ஆகையால் இப்பேர்ப்பட்ட மகாநாளில் நாமும் ஞான சந்தோஷங் கொண்டு நம்முடைய ஆத்தும சரீர வியாதியைப் போக்கி ஆரோக்கியம் அடைந்தருளும்படி ஆரோக்கிய மாதாவை நோக்கி மன்றாடுவோமாக    
யோசனை
சர்வேசுரன் தேவமாதாவை நமக்குத் தாயாராகக் கொடுக்கச் சித்தமான இந்த மகா நாளில் அவருக்கு நன்றி கூறி துதிக்கக் கடவோம்.  

செப்டம்பர் மாதம் 7-ம் தேதி

செப்டம்பர் மாதம் 7-ம் தேதி
 St. Regina, V.M.
அர்ச்.ரெஜினாஅம்மாள் - கன்னிகை, வேதசாட்சி (கி.பி.256) 


         ரெஜினா அம்மாள் பிரான்ஸ் தேசத்தில் அஞ்ஞானிகளான பெற்றோரிட மிருந்து பிறந்தாள். அவள் பிறந்த சில நாட்களுக்குள் அவளுடைய தாய் இறந்தபடியால், அவளுக்கு பாலூட்டி வளர்க்கும்படி அக்குழந்தையை நற்குணசீலியான ஒரு கிறீஸ்தவளிடம் அவள் தகப்பன் கொடுத்தான். அந்த ஸ்திரீ குழந்தையை கவனத்துடன் வளர்த்து, அவளுக்கு வயது வந்தபோது, சத்திய வேதத்தை அவளுக்கு உணர்த்தினதினால், ரெஜினா அம்மாள் ஞானஸ்நானம் பெற்று, சத்திய வேதக் கடமைகளை சரிவர அனுசரித்து, தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தாள். இந்த செய்தியை அறியாத அவள் தகப்பன் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டான். 

    கபடற்ற ரெஜினா அடிக்கடி தனியாக வெளியே போய் உலாவி வரும்போது அவளுடைய அழகைக் கண்ட அநேக வாலிபர் அவளை மணமுடித்துக்கொள்ள ஆசித்து, அவளுடைய தகப்பனுக்குக் தங்கள் கருத்தை வெளியிட்டார்கள். தகப்பன் திருமணத்தைப்பற்றி மகளோடு பேசியபோது, அவள் அதற்குச் சம்மதியாத தையும் அவள் கிறீஸ்தவளாயிருப்பதையும் அவனறிந்து அவளைத் தன் வீட்டினின்று துரத்தி விட்டான்.  ரெஜினா தன்னை வளர்த்த தாயினிடம் போய்ச் சேர்ந்தாள். இதையறிந்த அதிகாரி அவளை வரவழைத்து கிறிஸ்தவ வேதத்தை விட்டுவிட்டு தன்னைக் திருமணம் செய்துகொள்ளும்படியாக பயமுறுத்தினான்.  அதற்கு அவள் சம்மதியாததை அவன் கண்டு இவளை கொடூரமாய் அடித்து உபாதித்தபோது, அங்கு கூடியிருந்த திரளான அஞ்ஞானிகளுக்கு சத்திய வேதத்தின் மகிமையைப்பற்றி பேசினாள். அப்போது ஒரு மாடப்புறா ஒரு முடியை மூக்கால் கவ்விக்கொண்டு வந்து அவள் தலைமேல் வைத்தது.  இதைக் கண்ட அஞ்ஞானிகளில் 751 பேர் கிறீஸ்தவர்களானார்கள். இதனால் அதிகாரி சினங் கொண்டு வேதசாட்சியின் தலையை வெட்டுவித்தான்.

யோசனை
வாலிபப் பெண்கள் தக்க துணையின்றி வெளியிடங்களுக்குச் செல்வது ஒழுங்கல்ல.

செப்டம்பர் மாதம் 6-ம் தேதி

செப்டம்பர் மாதம் 6-ம் தேதி
St. Pambo, A.   
அர்ச்.பாம்போ - மடாதிபதி (கி.பி.385) 

         அர்ச்.பெரிய அந்தோணியார் வனவாசஞ் செய்த காலத்தில் பாம்போ அவரிடஞ் சென்று அவரைத் தமது ஞான குருவாகப் பாவித்து அவருக்குச் சீஷரானார்.  அந்தப் பயங்கரமான காட்டில் பாம்போ சகல புண்ணியங்களிலும், சிறந்து ஜெபத்தியானஞ் செய்வதிலும், கடின தபஞ் செய்வதி;லும், கை வேலை செய்வதிலும் தமது ஆயுள் காலத்தைச் செலவழித்தார். ஒரு நாள் இவர் வேறொரு தபோதனரை அணுகி தனக்கு யாதொரு நல்ல ஆலோசனை தரும்படி மன்றாடினார். அதற்கு அவர் 38-ம் சங்கீதத்தில் உள்ளபடி நாவைக் காக்கும்படி புத்தி புகட்டினார். அது முதல் பாம்போ அவசியமின்றி பேசாமல் மவுனமாயிருந்து, விசேஷமாக பிறர் சிநேகத்திற்கு விரோதமான அற்ப வார்த்தையுஞ் சொல்லாமல் பரிசுத்தராய் நடந்து வந்தார். 

               எஜிப்து தேசத்தில் ஆரிய   பதிதர்  சேசு கிறீஸ்துநாதருடைய தெய்வீகத்திற்கு விரோதமாய் போதிக்கும் பதித படிப்பினையைத் தாக்குவதற்காக அர்ச்.அத்தனாசியார் பாம்போவை அலெக்சாந்திரியாவுக்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறே பாம்போ அவ்விடத்திற்குச் சென்று வேதத்திற்காக உழைக்கும்போது, ஒரு ஸ்திரீ அலங்காரமாய் உடுத்திகொண்டு நடப்பதைக் கண்ட அவர் பேரொலியிட்டு அழத் தொடங்கினார். அவர் அழுகையின் காரணத்தைக் கேட்டபோது இந்த ஸ்திரீ மனிதருக்குப் பிரியப்படும்படி இவ்வளவாக பிரயாசைப்படுகையில் நான் என் கர்த்தருக்குப் பிரியப்பட முயற்சிக்கவில்லையே! என்றார். கடைசியாக இவர் சகல புண்ணியங்களையுஞ் செய்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார். 

யோசனை
நாவால் அநேக பாவம் உண்டாகிறதென்று வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. நாமும் பிறர் மேலே கோள் குண்டணி கூறாமலிருந்து அவர்களுடைய நடத்தையைப்பற்றி வீண் தீர்மானம் செய்யாமல் இருப்போமாக.     

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

செப்டம்பர் மாதம் 5-ம் தேதி

செப்டம்பர் மாதம் 5-ம் தேதி
         St. Laurence Justinian, B.        
அர்ச்.லாரென்ஸ் ஜுஸ்டினியன் - மேற்றிராணியார் (கி.பி.1455)  

        ஜுஸ்டினியன் வெனிஸ் நகரத்தில் சிறந்த கோத்திரத்தில் பிறந்து, குழந்தையாயிருக்கும் போதே அர்ச்சியசிஷ்டதனத்தைக் காட்டினார். ஒரு தரிசனையில் தேவ ஞானஸ்நானத்தைப் பற்றிக்கொள்ளும்படி ஏவப்பட்டார்.  தமது 19-ம் வயதில் ஒரு அந்தஸ்தை தெரிந்துக்கொள்ள விரும்பி இதற்காக ஜெப தபத்தால் சர்வேசுரனை மன்றாடி வந்தார்.  அவருடைய தாயார் அவருக்கு விவாகத்திற்கு ஏற்;;பாடு செய்வதைக் கண்ட ஜுஸ்டினியன் ஒரு நாள் இரவு  தேவ ஏவுதலால் தமது வீட்டை விட்டு ஒரு சன்னியாச மடத்திற்கு ஓடிப்      போய் அவ்விடத்தில் அவருடைய புண்ணியங்களால் சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கினார். அவருடைய சிநேகிதனான ஒரு பிரபு அவரிடம் போய், துறவற அந்தஸ்தின் கஷ்டத்தை அவருக்கு அறிவித்து, அதை விட்டு உலகத்திற்கு திரும்பும்படி துர்புத்தி சொன்னபோது, ஜுஸ்டினியன் மனிதருடைய குறுகிய வாழ்நாளையும், இவ்வுலக நன்மையின் விழலையும்பற்றி எவ்வளவு உற்சாகத்துடன் பேசினாரெனில், மேற்கூறப்பட்ட பிரபுவும் உலகத் தைத் துறந்து சன்னியாசியானார். 

         ஜுஸ்டினியன் தாழ்ச்சி, பொறுமை முதலிய புண்ணியங்களை அனுசரித்து, தமது மடத்தின் பெரிய சிரேஷ்டராகவும், பிறகு வெனிஸ் நகரின் மேற்றிராணியாராகவும் நியமிக்கப்பட்டார். இவர் இந்த  உயர்ந்த அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்ட போதிலும், முன்பு அவர் செய்து       வந்த புண்ணியங்களை இரு மடங்காக்கி, பிரசங்கத்தாலும், நற்புத்தியாலும், சன்மார்க்கத்தாலும் கிறீஸ்தவர்களுடைய நடத்தையைத் திருத்தி, ஏழைகளை அன்புடன் விசாரித்து, உதவி புரிந்து, பாவிகளைத் திருத்தி திக்கற்றவர்களைக் காப்பாற்றி ஆடம்பரமாய் உடைகளையும் ஆபரணங்களையும் அணியும் பெண்களைக் கண்டித்து, சகலராலும் அன்புடன் நேசிக்கப்பட்டு, நல்ல ஆயத்தத்துடன் மரணமடைந்து, நித்திய சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார். அவருடைய சரீரம் இரண்டு மாதத்திற்குமேல் அழியாதிருந்ததுடன் அதினின்று பரிமள வாசனை புறப்பட்டது.  
யோசனை
ஆடை அணிவதில் ஆடம்பரம் காட்டாமல் மேரை மரியாதையும் அடக்க ஒடுக்கமும் காட்ட வேண்டும்.

செப்டம்பர் மாதம் 4-ம் தேதி : St. Rosa of Viterbo, V


       St. Rosa of Viterbo, V.   
அர்ச்.விற்றர்போரோசம்மாள் - கன்னிகை (கி.பி.1258)  

           ரோசம்மாள் இத்தாலியா தேசத்திலுள்ள விற்றர்போ நகரில் பிறந்து, குழந்தையாய் இருக்கும்போதே தேவ கிருபையால் அநேக புதுமைகளைச் செய்துவந்தாள்.  அக்காலத்தில் பிரேடெரி என்னும் இராயன் கர்வங்கொண்டு, திருச்சபைக்குப் பல துன்பங்களைச் செய்து மேற்றிராணிமாரை அவசங்கைப் படுத்தி, பாப்பாண்டவரையும் பலவாறாய் நிர்பந்தப்படுத்தினான்.  மூன்று வயது குழந்தையான ரோசம்மாள் மௌள மௌள நகர்ந்து கோவிலுக்குப் போய், தேவநற்கருணை பெட்டிக்கு முன் வெகு நேரம் என்னமோ கேட்பது போல கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள்.

            10-ம் வயதில் விற்றர்போ நகரிலுள்ள பெரிய மைதானத்தில் அவ்வூர் ஜனங்களுக்குமுன் ஒரு பிரமாண்டமான பாறையின்மேல் ஏறி, சகல கிறீஸ்தவர்களும் சத்திய திருச்சபையில் ஒற்றுமை யாயிருந்து சேசுநாதருடைய பதிலாளியான அர்ச்.பாப்பாண்டவர் சொற்படி  கேட்டு நடக்க வேண்டுமென்று பிரசங்கிக்கும்போது, அவள் நின்ற பாறை மேலே உயர்ந்து, அவள் பேசி முடித்தபின் அது முன்போல தாழ இறங்கினது. இவ்வாச்சரியத்தைக் கண்ட ஜனங்கள் அதிசயித்து திருச்சபைக்குப் பிரமாணிக் கமான பிள்ளைகளானார்கள். இராயன் இதைப்பற்றி கேள்விப்பட்டு, ரோசம்மா ளைப் பரதேசத்திற்கு அனுப்பி விட்டான்.  அவ்விடத்தில் அவள் திருச்சபைக் காகப் பிரயாசைப்பட்டதினால், சீக்கிரத்தில் திருச்சபைக்கு சமாதானமுண்டாகி, கொடுங்கோலன் இராச்சியபாரத்தை இழந்தான்.  ரோசம்மாள் ஒரு குகையில் வசித்து, ஜெப தபத்தில் ஈடுபட்டு 18-ம் வயதில் மரித்துப் பரகதி சேர்ந்தாள்.  

யோசனை
திருச்சபையை அல்லது அதன் போதகர்களை விரோதிக்கும் மனிதருடன் நட்பு வைக்கலாகாது.  

செப்டம்பர் மாதம் 3-ம் தேதி: - St. Simeon Stylites the Younger

செப்டம்பர் மாதம் 3-ம் தேதி
                  St. Simeon Stylites the Younger        
 அர்ச்.சின்னசிமியோன் (கி.பி.592) 

                 இவர் அந்தியோக்கியா பட்டணத்தில் பிறந்து சிறுவயதிலேயே அருகில் இருந்த ஒரு சன்னியாச மடத்தில் சேர்ந்து, சகல புண்ணியங்களிலும் அதிகரித்து வந்தார். அந்த மடத்தைச் சேர்ந்த ஒரு வனவாசிக்கு இவர் சீஷனாகி, அவரது தர்ம படிப்பினையைப் பினபற்றி வந்தார். கபடமற்றவரான சிமியோன் ஒரு நாள் காட்டில் ஒரு சிறு சிறுத்தைப் புலியைக் கண்டு, அதன் கழுத்தைக் கயிற்றால் கட்டி அதை தன் குருவிடம் கொண்டு போய் சுவாமி, இது எவ்வளவு பெரிய பூனை! என்றார்.  இதைக் கண்ட வனவாசி, அந்த மிருகம் அவருக்குத் தீமை செய்யாததினால் அதிசயித்தார். பிறகு தன் குருவின் உத்தரவுப்படி இரண்டு தூண்களை எழுப்பி, மாறி மாறி அவைகள் மேலேறி, 68 வருடம் கடுந்தவம் புரிந்து வந்தார்.

              இவருடைய புண்ணியத்தால் சர்வேசுரன் இவருக்குப் புதுமை வரம் கட்டளையிட்டபடியால், கணக்கற்ற ஜனங்கள் இவருடைய தூண்களைச் சுற்றி நிற்பார்கள். தம்மைச் சூழ்ந்திருக்கும் திரளான ஜனக்கூட்டத்திற்கு தேவையான நல்ல புத்திமதிகளைச் சொல்லி, அவர்கள் கூட்டிக்கொண்டு வந்திருக்கும் சகல வியாதியஸ்தரையும் சுகப்படுத்துவார்.  இவர் தீர்க்கதரிசன வரம் பெற்றதுடன் மனிதருடைய மனதிலுள்ள  எண்ணங்களையும் வெளிப் படுத்துவார்.  இதனால் அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தி பிரசித்தமானதால் அரசரும் பிரபுக்களும் பிரஜைகளும் அவரைக் கனப்படுத்தி மரியாதை செலுத்தினார்கள். திருச்சுரூபங்களை உடைக்கும்படி துஷ்டர் முயற்சி செய்கை யில் சிமியோன் சுரூப வணக்கத்தாலுண்டாகும் பிரயோஜனத்தைப்பற்றி ஒரு நிருபம் எழுதி இராயனுக்கு அனுப்பினார். இவ்வாறு கடுந் தவஞ் செய்து சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து, தமது 80-ம் வயதில் சிமியோன் மண்ணுலகை விட்டு விண்ணுலகில் பிரவேசித்தார்.

யோசனை
நாம் சிமியோனைப் போல கடுந் தவம் செய்யாவிடினும், ஐம்புலன் களையும் அடக்கி ஒறுத்தலை அனுசரிப்போமாக.