(வாசகர்களே! தபசுகாலம்… அதிலும் அதன் பரிசுத்த வாரம் என்றாலே தமிழக கத்தோலிக்கர்களாகிய நமக்கு நினைவுக்கு வருவது “வியாகுலப் பிரசங்கங்களே”கத்தோலிக்க மக்கள் பக்தியார்வத்தோடு ஆலயங்களிலும், அதன் முற்றங்களிலும், தெரு சந்திப்புகளிலும் ஒருவர் உருக்கமாக வாசிக்க மற்றவர்கள் அதை கேட்டு நமதாண்டவரின் கொடிய பாடுகளில் ஒன்றித்து, கண்ணீர் சொரிந்த காட்சிகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்;. 2-ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு திருச்சபையில் காணாமல் போய்விட்ட அல்லது கைவிடப்பட்ட அநேகப் பொக்கிஷங்களில் வியாகுலப் பிரசங்கங்களும் ஒன்று! அண்மையில் அதனைப் பற்றி ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கம் – ஆ.ர்.)
ஜெரோம் கொன்சாலஸ் சுவாமியார் 1676-ம் ஆண்டு ஜூன் மாதம் கோவாவில் பிறந்தார். அவருடைய குடும்பம் இரண்டு அல்லது மூன்று தலைமுறையாகக் கத்தோலிக்கர்களாய் இருந்ததால் நல்லதோர் கத்தோலிக்க சூழ்நிலையில் வளர்ந்தார். வளரும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் சிறுவயதிலே இசை ஞானமும், பாடற் திறனும் கொண்டிருந்தார். பின்னர் கல்லூரியில் பயிலும்போது அக்கல்லூரியின் பாடகர் குழுவில் ஆர்கனிஸ்ட்டாக (ழுசபயnளைவ)இருந்தார். அங்கு தன்னுடைய திறமையை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். அச்சமயம் அவர் தற்செயலாய் வாசித்த ஒரு கத்தோலிக்க இதழில், இலங்கையில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க செயல்பாடுகளைப் பற்றி அறிந்தார். பின்னர் அச்செயலுக்காக தன்னையும் அர்ப்பணிக்க எண்ணி குருமடத்தில் சேர்ந்தார். 1700-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 2-ம் நாள் குருப்பட்டம் பெற்றார். ஆனால் இவருடைய பாதை சுமுகமாய் இல்லை. பெற்றோருடைய எதிர்ப்பை மீறி சர்வேசுரனுடைய பணிக்கு தன்னை பலியாக்கினார். பின்னர் சில ஆண்டுகள் மடத்திலே தங்கி மேற்படிப்பை மேற்கொண்டார். மெய்யியலில் இவருடைய திறனையும், ஆர்வத்தையும் கண்டு இவரை அம்மடத்திலே பேராசிரியராய் நியமித்தனர்.
ஒருநாள் குருமடத்திற்கு ஒரு சிறப்பு விருந்தினர் இலங்கையிலிருந்து வருகை தந்தார். அவரே பின்னாளில் முத்திப்பேறு பட்டம் பெற்ற சங். ஜோசப் வாஸ் என்ற குருவானவர். அவர் ஆற்றிய உரையினால் ஈர்க்கப்பட்டவர்கள் பலர். அவர்களில் ஒருவர் நம் ஜெரோம் கொன்சலஸ் சுவாமியார்.
பின்னர் சில மாதங்களில் இவர் இலங்கைக்கு பயணமானார். கரையேறியதும் அவர் உடனே அந்நாட்டு மொழியை கற்கத் தொடங்கினார். முதலில் தமிழும், பின்னர் சிங்களமும் வெகு விரைவில் கற்றுக்கொண்டார். கண்டி மாகாணத்திற்கு பொறுப்பாயிருந்த அவர், பல வகையில் கத்தோலிக்க மதம் பரவ காரணமாயிருந்தார். தன்னுடைய ஜெபத்தினாலும், தவத்தினாலும், பலருடைய மதமாற்றத்திற்கு காரணமாயிருந்தார். பதிதர்களுடனான வாக்குவாதத்தில் கத்தோலிக்க சத்தியத்தை தெளிவாகக் காண்பித்த அவர், பலருடைய மனதை வென்றார். மிகப்பெரிய மாகாணத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அவர்மேல் சுமத்தபட்டிருந்தாலும் அதனை மிக நேர்த்தியாக செய்தார்.
இத்தனை கடின உழைப்புக்கு மத்தியிலும் பல நூல்களை அவர் இயற்ற தவறவில்லை. சிங்கள மொழியில் 22 புத்தகங்களையும், தமிழில் 15 புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டார். அவைகள் வேதசாஸ்திரம், தேவ அன்னை, தேவ நற்கருணை, திருச்சபை கட்டளைகள் என பல்வேறு தலைப்புகளோடு பிரசுரமாயின. இவை அனைத்திலும் தலைசிறந்ததாய் புகழப்படுவது வியாகுல பிரசங்கங்கள். தன்னுடைய விசுவாசிகளுக்கு மட்டும் எழுதிய இப்படைப்பின் புகழ் தமிழ் உலகம் முழுவதும் பரவியது. அவருடைய நண்பர்கள் உதவியாய் 300 கையெழுத்து பிரதிகள் தயாரிக்கப்பட்டன. பின்பு 1844-ம் ஆண்டு கொழும்பில் மீண்டும் இப்புத்தகங்கள் அச்சிடப்பட்டது. பின்னர் 1871-ல் சென்னையிலும் அதற்குப்பின் யாழ்பாணத்திலும் பலமுறை அச்சிடப்பட்டது.
வியாகுல பிரசங்கங்கள் அமைப்பு:
தான் குருமாணவராக இருந்த காலத்தில் பெரிய வாரத்தில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் பாடப்படும் “வுநநெடிசயந” இவரை மிகவும் ஈர்த்தது. இன்றும் இத்தகைய பாடல்கள் பாரம்பரிய குருமடங்களில் பாடப்பட்டு வருகிறது. குருக்களின் கட்டளை ஜெபத்தில் முதல் இரண்டு பாகங்களான ‘ஆயவiளெ ரூ டுயரனநள’ என்னும் ஜெபங்கள் பரிசுத்த வாரத்தில் அதற்குரிய சிறப்பு இராகத்துடன் பாடும்போது கேட்போர் இதயங்களை உருக்கிவிடும்.
பின்னர் தன்னுடைய பங்கில் லத்தீன் வாசிக்கத் தெரியாத மக்களுக்காக இவர் அந்த பாணியில் இயற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயற்றப்பட்டதே “வியாகுலப் பிரசங்கங்கள்”. இதில் கீழ்க்கண்ட 9 பிரசங்கங்கள் அடங்கும் :
1. சேசுநாதர் ஜெத்சமெனித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்து அவதிப்பட்டது.
2. சேசுநாதர் ஜெத்சமெனித் தோட்டத்தில் கைது செய்யப்பட்டது.
3. சேசுநாதர் கல்தூணில் கட்டுண்டு அடிப்பட்டது.
4. சேசுநாதர் திருசிரசில் முள்முடி சூட்டப்பட்டது.
5. “இதோ மனிதன்!” என்று பிலாத்துவினால் அறிவிக்கப்பட்டது.
6. சேசுநாதர் சிலுவை சுமந்துகொண்டு சென்றது.
7. சேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது.
8. சேசுநாதர் சிலுவையில் மரித்தது.
9. சேசுநாதர் அவரது தாயார்மடியில் வளர்த்தப்பட்டது.
2. சேசுநாதர் ஜெத்சமெனித் தோட்டத்தில் கைது செய்யப்பட்டது.
3. சேசுநாதர் கல்தூணில் கட்டுண்டு அடிப்பட்டது.
4. சேசுநாதர் திருசிரசில் முள்முடி சூட்டப்பட்டது.
5. “இதோ மனிதன்!” என்று பிலாத்துவினால் அறிவிக்கப்பட்டது.
6. சேசுநாதர் சிலுவை சுமந்துகொண்டு சென்றது.
7. சேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது.
8. சேசுநாதர் சிலுவையில் மரித்தது.
9. சேசுநாதர் அவரது தாயார்மடியில் வளர்த்தப்பட்டது.
ஒவ்வொரு பிரசங்கத்தைப் பற்றியும் எழுதுவதாயின் பக்கங்கள் போதாது. ஆயினும் இந்த அழகிய பிரசங்கங்களின் சுவையை வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக ஒரேயொரு பிரசங்கத்தை, அதுவும் கடைசிப் பிரசங்கத்தை பற்றி மட்டுமே எழுதுகிறேன். காரணம், மாமரி பட்ட வியாகுலங்களையும் இப்பிரசங்கம் அழகாக விவரிக்கிறது.
9-ம் பிரசங்கம் : சேசுநாதர் அவரது தாயார் மடியில் வளர்த்தப்பட்டது.
இந்தப் பிரசங்கத்தின் தொடக்கப் பகுதியில் சேசுநாதரின் திருவிலா குத்தித் திறக்கப்படுவதும், அதைக் குத்தித் திறந்த போர்வீரனின் குருட்டுத்தன்மைகுணமானதுமாகிய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. திறக்கப்பட்ட திருவிலாவிலிருந்து சிந்திய திரு இரத்தம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை விசேஷமாகக் குறிப்பிடுவதில் இந்தப் பிரசங்கத்தின் ஆசிரியர் விசேஷ கவனம் எடுத்துக் கொள்கிறார். இந்தத் திரவத்தின் ஒரு துளி அந்த வீரனைக் குணப்படுத்தப் போதுமானதாயிருந்தது. இந்தக் குணப்படுத்துதல், சேசுநாதரின் திருமரணத்திற்குப் பிறகும் தொடர்ந்த அவருடைய இரக்கத்தின் வெளிப்பாடாக அடையாளம் காணப்படுகிறது. இந்த இரக்கம் சரீரமும், ஆத்துமமுமான முழு மனிதனுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இந்தக் குத்தி ஊடுருவப்பட்ட செயலை நன்மைத்தனத்தின் ஆதாரத்தையே திறக்கும் சந்தர்ப்பமாக அவர் காண்கிறார்.
ஆசிரியர் தேவமாதாவின் நெகிழ்ச்சியூட்டுகிற வியாகுலப் புலம்பலை வெளிக் கொணருகிறார். அவர்கள் சர்வேசுரனை நோக்கித் திரும்பி, தனது கைவிடப்பட்ட நிலையையும், முழுமையான தனிமையையும் பற்றி தைரியமாக மனந்திறந்து பேசுகிறார்கள். சர்வேசுரனுடைய பரிசுத்த திருச்சுதனை அடக்கம் செய்யக்கூட தனக்கு எந்த வழியும் இல்லாதிருக்கும் பரிதாப நிலையை எடுத்துரைக்கிறார்கள்.
அன்பினால் அவர்கள் திருச்சிலுவையிடம் தொடர்ந்து பேசுகிறார்கள். அந்தச் சிலுவைதன்னை நோக்கிக் குனிந்து, தன் ஒளியும், தன் பொக்கிஷமும், தன் உடைமையும், தன் சகலமுமாக இருந்த தன் திருவுதரத்தின் கனியைத் தனக்குத் திருப்பித் தரும்படி கேட்கிறார்கள்.
தன் திருக்குமாரனிடம் பேசுகிற அவர்கள், அவருடைய பிறப்பின்போது, குளிரில் இருந்து அவரைப் பாதுகாக்கும்படி குறைந்தது ஒரு சில கந்தைகளாவது தன்னிடம் இருந்த நிலையோடு, இப்பொழுது சிலுவையின் மீது உயிரற்றவராக அவர் இருக்கையில், அவருடைய திருச்சரீரத்தை மூட தன்னிடம் எதுவுமில்லாத தன்னுடைய இயலாத நிர்ப்பாக்கிய நிலையை ஒப்பிட்டுப் பார்த்துப் புலம்பியழுகிறார்கள்.
பரலோகமோ, அல்லது பூலோகமோ, அல்லது பரலோகத்தில் வாசம் செய்யும் யாருமோ தனக்கு ஆறுதல் தரும்படி வர மாட்டார்களா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அவர்கள் தொடர்ந்து புலம்பும்போது, சற்று தூரத்திலிருந்து சிலுவையை நோக்கி வருகிற ஒரு கூட்டத்தைக் காண்கிறார்கள். இதைக் கண்டு, ஏற்கெனவே, இறந்துவிட்ட தன் மகனை இன்னும் அதிகமாக வாதிக்கும்படி வருகிற மனிதர்களாக அவர்கள் இருக்கக்கூடுமோ என்ற தேவமாதா வியக்கிறார்கள்.
இந்த இடத்தில், அவர்களோடு இருக்கிற அருளப்பர், அந்தக் கூட்டம் தங்களுக்கு உதவி செய்ய வந்து கொண்டிருப்பதைக் கண்டுகொள்கிறார். அந்தக்கூட்டத்தினிடையே, இரகசியமாக என்றாலும் சேசுநாதரில் விசுவாசம் கொண்டிருந்த சூசையையும், நிக்கோதேமுஸையும் அவர் அடையாளம் காண்கிறார். அவர்கள் சேசுநாதரின் திருச்சரீரத்தைச் சிலுவையில் இருந்து இறக்கி, ஒரு கல்லறையில் அடக்கம் செய்வதற்கு ஆயத்தமாக, ஏணிகள், வாசனைத் திரவியங்கள், அடக்கச் சடங்குகளுக்குரிய துணிகள் ஆகியவை போன்ற பொருட்களோடு வருகிறார்கள்.
அடக்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு அவர்கள் வியாகுலமாதாவிடம் அனுமதி கேட்டபோது, அவர்கள் நிம்மதிப்பெருமூச்செறிந்து, தன்னை இரக்கத்தோடு கண்ணோக்கிய சர்வேசுரனுக்குத் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
சூசையும், நிக்கோதேமுஸம் ஏணிகளைப் பயன்படுத்தி திருச்சரீரத்தை இறக்கி, அதை வியாகுல மாமரியின் திருமடிமீது அதை வளர்த்துகிறார்கள். தன் திருக்குமாரனை அனைவரிலும் அதிகப் பிரியத்தோடு நேசித்த மாதாவின் திரு இருதயத்திலிருந்து வெடித்துக் கிளம்புகிற பெரும் வியாகுலமுள்ள கதறலை ஆசிரியர் விவரிக்கிறார். அதன்பின் அவர்கள் அவருடைய ஜீவனற்ற திருச்சரீரத்தை முத்தமிட்டு, அவர் மீது விழுந்து புலம்புகிற விதத்தின் விவரங்களை அவர் தருகிறார். மற்ற காரியங்களுக்கு மத்தியில், சேசுவின் ஜீவிய காலத்தின்போது, அவரால் உதவி பெற்ற எண்ணிலடங்காத மனிதர்களின் நன்மைக்காக பயன்படுத்தப்பட்டு இப்போது உயிரற்றுப் போயிருக்கிற அவருடைய திருக்கரங்களையும், பாதங்களையும், உதடுகளையும் பற்றி அவர்கள் நினைக்கிறார்கள்.
தன் நேச மகனின் மரணத்தால் உண்டான இத்தகைய தாங்க முடியாத நிர்ப்பாக்கியத்தை எதிர்கொள்ளும்படி தான் இன்னும் உயிரோடு இருப்பதை எண்ணி அவர்கள் வியக்கிறார்கள். அதன் பிறகு, திருச்சரீரத்தை அடக்கத்திற்காக சூசையிடமும், நிக்கோதேமுஸிடமும் தான் தர வேண்டிய நேரம் வரும்போது, தன் மகனோடு தானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அவர்கள் விரும்புவதை ஆசிரியர் காண்கிறார்.
அடக்கத்திற்கான தயாரிப்பை விவரிக்கும்போது, வாசனைத் திரவியங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி திருச்சரீரம் ஆயத்தம் செய்யப்படுவதையும், புது அடக்கத் துணிகளில் திருச்சரீரம் சுற்றப்படுவதையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் அந்த அடக்கத் துகிலில் சேசுநாதரின் திருச்சரீரத்தின் பதிவு அழிக்கப்பட முடியாத விதத்தில் அதன்மீது பதிக்கப்பட்ட புதுமையை ஆசிரியர் குறித்துக் காட்டுகிறார். அவர் தொடர்ந்து, இந்தப்பரிசுத்த அடக்கத் துகில் இன்று வரை இத்தாலியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று அறிவிக்கிறார்.
அடக்கப் பவனியை விவரிக்கும்போது, சிலுவையில் அறையுண்ட திருச்சரீரத்திலிருந்து அகற்றப்பட்ட ஆணிகள், முண்முடி போன்ற பரிசுத்த பண்டங்களைச் சுமந்து கொண்டிருந்தவர்களை ஆசிரியர் குறித்துக் காட்டுகிறார். பூலோகத்தை சிருஷ்டித்தவராகிய ஆண்டவர், அதே பூலோகத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார் என்ற வார்த்தைகளோடு அவர் இந்த விவரணத்தை முடிக்கிறார். இந்தக் கடைசி தியானத்தில், சேசுநாதரின் மரணத்தினால் ஆகாயவெளியின் வௌ; ;வேறு ஐம்பூதங்கள் அனுபவித்ததும் வெளிப்படுத்தியதுமான பெரும் துயரத்தை கிறீஸ்தவர்களாகிய வாசகர்களுக்கு ஆசிரியர் நினைவுபடுத்துகிறார். இப்பொழுது, சேசுநாதரின் அடக்கத்தின்போது ஆசிரியர் சகல கிறீஸ்தவர்களின் கவனத்தையும் ஈர்த்து, அவர்கள் துக்கப்படுவதற்கு அவர்களுக்கு முழுமையான காரணம் இருக்கிறது என்று கூறுகிறார். நம்முடைய துக்கம் நம் வாழ்வுகளிலிருந்து பாவத்தின் எல்லாச் சுவடுகளையும் அழித்து விடும் அளவுக்கு நாம் மனஸ்தாபப்பட வேண்டும் என்று அவர் சொல்கிறார்.