Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 30 ஜூன், 2013

விசுவாசம் என்னும் கொடை


விசுவாச ஆண்டு – இந்த நல்லதொரு தருணம் கத்தோலிக்க திருச்சபை முழுவதுமே விசுவாசத்தை தியானிப்பதற்கும், அதனைத் திரும்ப கண்டடைவதற்கும் உகந்ததொரு சந்தர்ப்பமாக இருக்கும்.” – Pope Benedict XVI, Porta Fide §4 (நல்லாயன் பதிப்பகம், சென்னை, 2013 பக்கம். 8)

சர்வ வல்லபரான சர்வேசுரன் பரலோகத்தையும் பூலோகத்தையும் அவற்றிலுள்ள சகல வஸ்துக்களையும் படைத்துக் காத்து ஆண்டு நடத்தி வருகிறார். அவரால் படைக்கப்பட்ட சிருஷ்டிகளுள் சம்மனசுக்களுக்குப் பிறகு மனுஷனே மிக்க மேன்மை பெற்ற சிருஷ்டி. இவ்வுலகத்திலுள்ள மற்ற சிருஷ்டிகளெல்லாம் மனுஷனுடைய உபயோகத்திற்காக உண்டாக்கப்பட்டவை. இவையாவும் இவ்வுலகில் தங்களுக்கு சர்வேசுரானல் நியமிக்கப்பட்ட வேலையைச் செய்து முடித்தவுடன் உலகத்தோடு அழிந்து போக வேண்டுமென்பது தேவ சித்தம். ஆனால், அனந்த ஞானச் சுரூபியும், அளவில்லாத அன்புள்ளவருமாகிய நல்ல சர்வேசுரன் மனுஷனுக்கு மாத்திரம் புத்தி, மனது என்னும் தத்துவங்களை அளித்து அவனைச் சபாவத்திற்கு மேலான உந்நத அந்தஸ்திற்கு உயர்த்தி அருளினார்.
மனிதன் இவ்வுலகத்தில் தம்மை அறிந்து நேசித்து சேவித்து தம்முடன் மோட்ச பேரின்பப் பாக்கியத்தில் நித்திய காலமும் சந்தோஷமாய் வாழ வேண்டுமென்பதே அவனுக்கு சர்வேசுரனால் குறிக்கப்பட்ட கதி. மனுஷன் இவ்வுலகில் தனக்கு இடப்பட்ட வேலையைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி மேற்கூறிய பரம பாக்கியத்தை அடையும் பொருட்டு சர்வேசுரன் தமது தெய்வீக வரங்களை தாராளமாய் அவனுக்குக் கொடுத்தருளுகிறார். ஆனால் அவன் இந்தத் தேவ உதவியைக் கொண்டு தன் சொந்த முயற்சியினால் இவ்வுந்நத பாக்கியத்திற்குப் பாத்திரவானாக வேண்டுமென்பது நமது பரம பிதாவின் திருச்சித்தம். இதினிமித்தமே மனுஷன் இவ்வுலகில் அறிந்திருக்க வேண்டிய சத்தியங்கள் எவையென்றும், அநுசரிக்க வேண்டிய கடமை இன்னதென்றும் தாமே அவனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
சர்வேசுரன் நமது ஆதித்தாய் தந்தையரோடு நேராகப் பேசினார். அவர்களுக்குப் பின் வந்த பிதாப்பிதாக்களோடும் தேவப் பிரஜைகளாகிய இஸ்ராயேல் ஜனங்களோடும் நேராகவும், சம்மனசுகள், தீர்க்கதரிகள் மூலமாயும் சம்பாஷித்து, அநேக சத்தியங்களை அறிவித்தார். தமது திவ்ய சுதனை இவ்வுலகத்திற்கு அனுப்பி உந்நத வேத சத்தியங்களைப் போதித்தார். தேவ சுதன் மனிதன் விசுவசிக்க வேண்டிய வேத சத்தியங்களைக் கற்பித்து, புதுமைகளினால் உறுதிப்படுத்தி, இவைகளை உலகம் முடியுமட்டும் மனுக்குலம் முழுவதற்கும் போதிக்கும்படி தவறாத வரமுள்ள தமது திருச்சபையை ஸ்தாபித்தார். அவர் மோட்சத்திற்கு ஆரோகணமான பிறகு திவ்விய இஸ்பிரீத்துசாந்துவின் மூலம் அநேக சத்தியங்களைத் தமது அப்போஸ்தலர்களுக்குப் படிப்பித்தருளினார். இப்படியாக உலக சிருஷ்டிப்புமுதல் அப்போஸ்தலர் மரணம் வரையில் சர்வேசுரனால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களின் தொகுதிக்கு விசவாசப் பொக்கிஷம் என்று பெயர். இந்த விசுவாசப் பொக்கிஷம், தேவ நியமகப்படி, நமது இரட்சகரினால் மனுக்குல இரட்சண்யத்திற்கென்று ஸ்தாபிக்கப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் வசம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. திருச்சபை இந்த வேத சத்தியங்களை யாதொரு தவறின்றி, கலப்பின்றி, சர்வேசுரனால் தன் வசம் அளிக்கப்பட்டவாறே சுத்த சுயமாய்க் காப்பாற்றி, உலகத்திலுள்ள சகல ஜாதி ஜனங்களுக்கும் போதிக்க வேண்டுமென்பது தேவக் கட்டளை. இக்கட்டளையைத் திருச்சபை பிரமாணிக்கமாய் நிறைவேற்றும்படி திவ்விய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் அதனோடு எப்போதும் இருக்கிறார். உலகம் முடியுமட்டும் இருப்பார். ஆதலால் நாம் சர்வேசுரனை அறிந்து நேசித்து சேவித்து மோட்சப்பாக்கியம் அடைய வேண்டுமானால் சர்வேசுரனால் வெளிப்படுத்தப்பட்டதும் திருச்சபை சர்வேசுரன் பேரால் போதித்து வருவதுமாகிய சத்தியங்களனைத்தையும் தேவ வரப்பிரசாதத்தின் உதவியால் நாம் விசுவசிக்க வேண்டியது அத்தியாவசியம்.
நாம் ஞானஸ்நானம் பெறும்போது வசுவாசம் என்னும் தெய்வீக நன்கொடையை சர்வேசுரனுடைய அதிமிக இரக்கத்தினால் இலவசமாய்ப் பெற்றுக் கொள்கிறோம். நாம் புத்தி விபரம் அறிந்த பின், ஏவுதலும் ஒத்தாசையும் கொடுக்கிற தேவ வரப்பிரசாதத்தைக் கொண்டு, சர்வேசுரன் வெளிப்படுத்தி அருளிய சகல வேத சத்தியங்களையும் உண்மையென்று நம்பி பொதுவில் ஏற்றுக் கொள்கிறோம். நமது நம்பிக்கைக்குக் காரணமும் அஸ்திவாரமுமாயிருப்பது சர்வ ஞானமுள்ள சர்வேசுரன் இச்சத்தியங்களையெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்னும் நிச்சயமேயொழிய வேறில்லை. சர்வேசுரன் ஏமாந்துப் போகக்கூடியவரல்ல, நம்மை ஏமாற்றக்கூடியவருமல்ல. ஆதலால் அவர் வெளிப்படுத்தியருளிய சகலமும் சத்திய பிரமாணிக்கமாயிருக்க வேண்டுமென்று தேவ உதவியைக் கொண்டு உறுதியான மனதோடு நம்பி, அவர் பெயரால் கத்தோலிக்கத் திருச்சபை போதிக்கும் சத்தியங்கள் யாவையும் யாதொரு அச்சமின்றி சந்தேகமின்றி நாம் ஏற்றுக்கொள்வதே விசுவாசம் என்னும் புண்ணியமாம்.
விசுவாசத்தின் அவசியம்
விசுவாசம், வேதத்தின் அஸ்திவாரம். ஞான ஜீவியத்தின் மூலாதாரம். ஆத்தும இரட்சண்யத்திற்கு இன்றியமையாத சாதனம். விசவாசமின்றி நித்திய பேரின்பப் பாக்கியத்தை அடைய முடியாது. ஏனெனில், மனுஷன் மறுவுலகில் சர்வேசுரனோடு சதாகாலமும் பாக்கியமாய் வாழ வேண்டுமாகில், இவ்வுலகில் அவரை அறிந்து நேசித்து சேவிப்பது அவசியம். ஆனால் சர்வேசுரன் உண்டென்றும், அவருக்கும் மனுஷனுக்குமுள்ள சம்பந்தம் என்னவென்றும், அவர் படிப்பித்தருளிய சத்தியங்கள் இன்னவையென்றும் மனிதன் தெரிந்துகொள்ளாவிடில், அவரை எப்படி அறிந்து நேசிக்கக்கூடும்? அவர் கற்பித்திருக்கும் கற்பனைகள் எவையென்றும் மனுஷன் அறிந்து கொள்ளாவிடில், பாவத்தை விலக்கி புண்ணியக் கிரிகைகளைப் புரிந்து, அவருக்கு ஊழியம் செய்வது எங்ஙனம்?
நமது திவ்விய இரட்சகர் போதித்தருளிய போதகங்களும், செய்தருளிய புதுமைகளும், அப்போஸ்தலர் படிப்பித்த படிப்பினைகளும் விசுவாசம் இரட்சண்யத்திற்கு எவ்வளவு அவசியமென தெளிவாய்க் காண்பிக்கின்றன.
1. ‘எனது வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவசிக்கிறவனுக்கு நித்திய ஜீவியமுண்டு. என்னை விசுவசிப்பவர் தாகமடையார். நான் பிதாதவிலும்;, பிதா என்னிலும் இருக்கிறதாக நீங்கள் விசுவசிக்கமாட்டீர்களோ? இல்லாவிட்டால் நான் செய்யும் கிரிகைகளினிமித்தமாகிலும் விசுவசியுங்கள். விசுவாசத்தோடு ஜெபத்தில் எது கேட்டாலும் பெற்றுக் கொள்வீர்கள்” என்று நமது திவ்விய இரட்சகர் போதித்தருளியிருக்கிறார்.
2. செந்தூரியனின் விசவாசத்i;தப் புகழ்ந்து கொண்டார். பன்னிரண்டு வருடம் வியாதியாயிருந்த ஒரு பெண்ணை நோக்கி, ‘உன் விசுவாசம் உன்னைக் குணப்படுத்தினது” என்கிறார்.
3. இதற்கு விரோதமாய், விசுவாசமின்றி இரட்சண்யமில்லையென்று தெளிவாய்க் கூறுகிறார்: ‘உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை எல்லோருக்கும் போதியுங்கள். விசுவசித்து ஞானஸ்நானம் பெறுகிறவன் இரட்சண்யமடைவான்; விசுவசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாவான்” என்று தமது அப்போஸ்தலர்களுக்குத் தெரிவித்தார். விசுவாசக்குறையுள்ளவர்களைக் கண்டித்திருக்கிறார்.
4. கடும் புயலுக்குப் பயந்து நடுங்கிய அப்போஸ்தலர்களை நோக்கி ‘ அற்ப விசுவாசமுள்ளவர்களே, ஏன் பயப்படுகிறீர்கள்? ” என்று கடிந்து கொள்கிறார்.
5. ‘தோமாஸ், நீ என்னைக் கண்டதினாலல்லவா விசுவசித்தாய்; காணாதிருந்தும் விசுவசித்தவர்களே பாக்கியவான்கள்” என்கிறார்.
‘விசுவாசமின்றி சர்வேசுரனுக்குப் பிரியப்படுவது கூடாத காரியம். விசுவாசம் மானிட இரட்சண்யத்தின் அஸ்திவாரம். நீதிமான் விசுவாசத்தினால் ஜீவிக்கிறான். மனுஷனுக்கு விசுவாசம் அவசியம். ஏனெனில் விசுவாசமின்றி இரட்சண்யமில்லை. விசுவாசமுள்ளவர்களுக்கு சகலமும் அநுகூலமாயிருக்கும். உனக்கு விசுவாசமிருந்தால் சர்வேசுரனுடைய மகிமையைக் காண்பாய். நமது விசுவாசமே உலகத்தை வெல்லும் ஜெயவிருது” என்று அப்போஸ்தலர்கள் விசுவாசத்தின் மேன்மையையும் அவசியத்தையும் பற்றி தங்கள் நிருபங்களில் எழுதிப் போதித்தார்கள்.
விசுவாசத்தின் குணாதிசயங்கள்
நமது விசுவாசமானது பூரணமானதாயிருக்க வேண்டும். அதாவது, திருச்சபை சர்வேசுரன் பேரால் போதிக்கும் சகல சத்தியங்களையும் விசுவசிக்க நாம் தயாராயிருக்க வேண்டும். இந்த சத்தியங்களில் எதையாவது ஒன்றைப் பற்றி சந்தேகப்பட்டு, அதை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அளவில்லாத சர்வேசுரனையே நம்பாமல் அவரை அவமதிப்பதற்கு சமமாகும்.
1. நமது விசுவாசம் திடமுள்ள விசுவாசமாயிருக்க வேண்டும். அதாவது நாம் மெய்யான திருச்சபையின் பிள்ளைகளென்று யாதொரு அச்சம் கூச்சமின்றி இதர மதத்தினர்முன் காண்பிக்கத் தயாராயிருக்க வேண்டும். நமது வேதக்கடமைகளைப் பகிரங்கமாய் நிறைவேற்றவும், மத ஆச்சாரங்களைப் பயமின்றி அநுசரிக்கவும் கத்தோலிக்க திருச்சபையை வேத விரோதிகள் எதிர்க்கும்போது அதன் முன்னணியில் நின்று போர்புரிந்து அதைக் காக்கவும் மனோதிடனுள்ளவர்களாயிருக்க வேண்டும்.
2. நமது விசுவாசம் உயிருள்ள விசுவாசமாயிருக்க வேண்டும். அதாவது நமது நினைவு, வாக்கு, கிரிகை யாவும் விசுவாசத்தினால் ஏவப்பட்டு விசுவாசத்தின் மீது வேரூன்றியவைகளாயிருக்க வேண்டும். உயிருள்ள விசுவாசம் நாம் செய்யும் புண்ணியங்களினால் வெளிப்படும் தேவ சிநேகம், பிறர்சிநேகம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல், துன்பத்தில் பொறுமை, ஞானக்கடமைகளை நிறைவேற்றுவதில் பிரமாணிக்கம் முதலிய புண்ணியங்ககை; கொண்டிருக்கும் விசுவாசம் உயிருள்ள விசுவாசமாம்.
- ‘என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே என்ற சொல்லுகிறவர்கள் எல்லோரும் மோட்ச இராச்சியத்திற்குள் பிரவேசிப்பதில்லை. ஆனால் பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறவனே மோட்ச இராச்சியத்தில் பிரவேசிப்பான்.” (மத். 7:21)
- ‘ஏனெனில் சேசு கிறீஸ்து நாதரிடத்தில் சிநேகத்தினால் கிரியைகளைச் செய்யும் விசுவாசமேயன்றி, விருத்தசேதமும் விருத்த சேதனமில்லாமையும் பிரயோசனப்படாது” (கலா.5:6)
- ‘ நான் தீர்க்கதரிசன வரத்தைக் கொண்டிருந்தாலும், எல்லா இரகசியங்களையும் எல்லாக் கல்விகளையும் அறிந்தவனாயிருந்தாலும் மலைகளைப் பெயர்க்கத்தக்க எவ்வித விசுவாசத்தையுமுடையவனாயிருந்தாலும் என்னிடத்திலே தேவ சிநேகமில்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1கொரி.13:2)
- ‘என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதிருந்தால், அவனுக்குப் பிரயோசனம் என்ன? விசுவாசம் அவனை இரட்சிக்கக்கூடுமோ? … அப்படிப்போல விசுவாசமும் கிரியைகளைக் கொண்டிராவிட்டால்ää தன்னிலே செத்த விசுவாசமாயிருக்கின்றது.” (யாக.2:14,17)
3. நமது விசுவாசம் நிலைமையுள்ள விசுவாசமாயிருக்க வேண்டும். அதாவது நமது உடலில் உயிருள்ளளவும்ää எப்போதும் எவ்விடத்திலும் துலங்க வேண்டும்.
4. கடைசியாக விசுவாசம் சுபாவத்திற்கு மேற்பட்டதாயிருக்க வேண்டும். அதாவது, சர்வேசுரனையே ஆதியும் அந்தமும்ää நமது ஏக கதியுமாக உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவரை நேசித்து அவர் நிமித்தம் நமது கிரிகைகள் யாவற்றையும் ஒழுங்குப்படுத்த வேண்டும்.
நமது கடமை
விசுவாசமானது சர்வேசுரன் நமக்குத் தயவாய் அளித்திருக்கும் உந்நத நன்கொடை. அவரது அளவற்ற அன்பின் அடையாளம். அவர் நமக்குக் கிருபையாய் அளித்திருக்கும் இவ்வுத்தம திரவியத்தை உலக செல்வ சம்பத்துக்களைவிட ஆயிரம் மடங்கு அதிகமாய் மதித்துக் காப்பாற்ற வேண்டும். விசுவாசம் மிக்க அவசியம். கிறீஸ்தவர்களின் இருதயத்தில் வேரூன்றியிருக்கும் விசுவாசத்தை பிடுங்கியெறிய வேத விரோதிகள் பற்பல உபாயங்களை உபயோகித்து வருகிறார்கள். பிள்ளைகளின் விசுவாசத்தை அழிக்கும்படி கடவுள் நாமமே உச்சரியாத பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். விஷம் நிறைந்த நாஸ்தீகப் போதனைகளையும், புத்தகம், பத்திரிகை, சினிமா, முதலிய தற்கால சாதனங்கள் மூலமாய் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆதலால் விசுவாசிகளாகிய கிறீஸ்;தவர்கள் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் இந்த ஆபத்துக்களினின்று காப்பாற்றிக் கொளள்க் கடமைப்பட்டிருக்கின்றனர்.
நமது இருதயத்தில் பதிந்திருக்கும் விசுவாசத்தைக் காப்பாற்றிக் கொள்வது மாத்திரம் போதாது. அதை விருத்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும். விசுவாசமானது தெய்வீக நன்கொடையாயிருப்பதால், அதைக் காப்பாற்றவும் அபிவிருத்தி செய்யவும் ஜெபம் அவசியம். ‘சர்வேசுரா சுவாமி, எனது விசுவாசத்தை காத்து விருத்தி செய்யும்” என்று நமதாண்டவரை நோக்கி நாம் அடிக்கடி இரந்து மன்றாட வேண்டும். குடும்பங்களில் தினந்தோறும் பொது ஜெபம் செய்வதும், ஞானவாசகம் வாசிப்பதும், பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றுசேர்ந்து கடன்பூசை கண்டு, திவ்விய நன்மை உட்கொண்டு, பிரசங்கம் ஞானோபதேசம் கேட்பதும் விசுவாசத்தை தங்கள் குடும்பத்தில் காப்பாற்றவும் விருத்தி செய்யவும் ஏற்ற வழிகள். பெரியோரும் சிறியோருமாகிய கத்தோலிக்கக் கிறீஸ்தவர்கள் தங்களிடத்திலும் பிறரிடத்திலும் திடமும் உறுதியுமுள்ள விசுவாசத்தை அதிகரிக்கச் செய்தருள வேண்டுமென்று தேவ பாலனின் திவ்விய இருதயத்தை நோக்கி மன்றாட வேண்டும். இறுதியாக நம் விசுவாசத்தை தைரியமாக பிரகடனப்படுத்த வேண்டும். இது நம்முடைய கடமையும் கூட. நம்முடைய விசுவாசத்தை நாம் மறுதலிக்கக்கூடாது. ‘மனிதர் முன்பாக என்னை மறுதலிப்பவன் எவனோ, அவனை நானும் பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்” (மத்.10:33) இதைத்தான் நாம் ஒவ்வொரு வேதசாட்சியின் வாழ்க்கையிலும் வாசிக்கிறோம். எனவே இந்த விசுவாச ஆண்டில் விசேஷமாக நமது நாட்டில் விசுவாசத்திற்காக தங்கள் உயிரைக் கொடுத்த வேதசாட்சிகளிடம் மன்றாடுவோமாக.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக