*ஜனவரி மாதம் 4-ம் தேதி*
*St. Titus, B.*
அஞ்ஞானியாயிருந்த இவர் அர்ச்.சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று அவருக்கு சீஷனாகி அவர் வேதம் போதிக்கச் சென்ற ஊர்களுக்கெல்லாம் அவருடனே சென்றார். பிறகு இவர் விசுவாசிகளை விசாரித்து வரும்படி அர்ச். சின்னப்பரால் பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டார். வேதத்தில் தத்தளித்து துர்மாதிரிகையாய் வாழ்ந்த கொரிந்தியரை திருத்தும் பொருட்டு தீத்துஸ் அவர்களிடம் அனுப்பப்பட்டபோது, அவர் அவர்களுக்கு அன்போடு புத்திமதி சொல்லி அவர்களை நல்வழிக்கு கொண்டுவந்தார். இந்த நல்ல செய்தியைக் கேள்விப்பட்ட அர்ச். சின்னப்பர் சந்தோஷத்தால் பூரித்து ஆறுதல் அடைந்தார். தீத்துஸ் அர்ச். சின்னப்பரின் உத்தரவின்படி ஆங்காங்கு தர்மம் எடுத்து ஜெருசலேமிலுள்ள ஏழைகளுக்கு அனுப்பிவந்தார். சில காலத்துக்குப்பின் அர்ச். சின்னப்பர் தீத்துசுக்கு ஆயர் பட்டம் கொடுத்து கிரேத் என்னும் தீவில் வேதம் போதிக்கும்படி அனுப்பினார். ஆயர்களின் மேலான கடமைகளைக் குறித்தும், விசுவாசிகளை நடத்திச்செல்ல வேண்டிய ஒழுங்கு திட்டங்களைக் குறித்தும் ஒரு நிருபத்தை அர்ச். சின்னப்பர் எழுதி இவருக்கு அனுப்பினார். தம் குருவும் ஆசிரியருமான அர்ச். சின்னப்பர் போதனைக்குத் தீத்துஸ் இணங்கி புண்ணிய வழியில் நடந்து, மிக்க ஊக்கத்துடன் வேதம் போதித்து, நல்ல மரணமடைந்து, மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார்.
*யோசனை*
நாம் செய்யும் தவறுகளை அறியும் நமது ஞானப் போதகர்கள், நமக்கு அறிவுரை கூறும்போது, நமது தவறுகளை விட்டொழித்து அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக