Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 2 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 2-ம் தேதி

*ஜனவரி மாதம் 2-ம் தேதி*
*St.Macarius, A.*
*அர்ச்.மக்காரியுஸ் - மடாதிபதி*
*(கி.பி.394)*

அலெக்சாந்திரியா என்னும் பட்டணத்தில் பிறந்து, பழம் வியாபாரம் செய்து வந்த மக்காரியுஸ் உலக வாழ்வில் கசப்புற்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்ய தீர்மாணித்து, நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று அவ்விடத்தில் கடும் ஜெப தபங்களை நடத்தி வந்தார். அவருக்கு சீஷர்களான அநேகர் அக்காட்டில் சிறு குடிசைகளில் வசித்து, தங்கள் சிரேஷ்டரான மக்காரியுஸின் தர்ம செயல்களைப் பின்பற்றி, புண்ணியவாளராய் வாழ்ந்தார்கள்.

மக்காரியுஸ் இடைவிடாமல் ஜெபம் செய்வார். கூடைகளை முடைவார்.  கனி, கிழங்கு, கீரை முதலியவற்றை ஒரு நாளைக்கு ஒரு தடைவ மாத்திரம் புசிப்பார். பல முறை இரவில் நித்திரை செய்யாமல் சங்கீதங்களைப் பாடி ஜெபிப்பார். ஒருநாள் இவருக்கு அனுப்பப்பட்ட ஒரு திராட்சைக் குழையைப் புசிக்காமல் தமது சன்னியாசிகளுக்கு அனுப்பினார். அவர்களும் அதை புசிக்காமல் மக்காரியுசுக்கு அனுப்பி விட்டார்கள். அவரும் தமது சன்னியாசிகள் மட்டசனம் என்னும் புண்ணியத்தைக் கண்டிப்பாய் அனுசரிப்பதை அறிந்து சந்தோஷமடைந்தார். வனவாசிகளுக்குள் ஒருவர் தான் முடைந்த பாய் கூடைகளை விற்றதினால் வந்த பணத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு இறந்ததினால், அப்பணத்தை அவருடைய பிரேதக் குழியில் அவரோடு போட்டுப் புதைக்கும்படி அர்ச்.மக்காரியுஸ் கட்டளையிட்டார். இவர் இவ்வளவு கடின தவம் செய்துவந்தும், இவருக்குப் பல சோதனைகளுண்டாக, அவைகளை ஜெபத்தால் ஜெயித்தார். ஆரிய பதிதர் வயோதிகரான அர்ச்.மக்காரியுஸை பல விதத்தில் துன்பப்படுத்தினார்கள். இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து கி.பி.394-ம் வருடம் மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார்.

*யோசனை*

நாமும் இந்தப் பரிசுத்த வனவாசிகளைப் பின்பற்றி போசனப்பிரியத்துக்கு இடம் கொடாமல், மட்டசனமென்னும் புண்ணியத்தை கடைபிடிப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக