*St. Antony, A.*
*அர்ச். பெரிய அந்தோணியார்*
*மடாதிபதி - (கி.பி. 356).*
இவர் எஜிப்து தேசத்தில் செல்வந்தரான பெற்றோரிடமிருந்து பிறந்து புண்ணியவாளராய் வாழ்ந்துவந்தார். இவருடைய பெற்றோர் இறந்தபின் “நீ உத்தமனாக வேண்டுமானால் உனக்குள்ளதை விற்று கேட்பவருக்கு கொடுத்துவிட்டு என்னைப் பின்செல்” என்னும் சுவிசேஷ வாக்கியத்தைக் கேட்டு, தனக்கு இருந்த மிகுதியான செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, காட்டிற்குச் சென்று ஆண்டவருக்கு ஊழியம் செய்தார். கெட்ட எண்ணம் கொண்ட பசாசோவெனில், இவருடைய அரிதான புண்ணியங்களைக் கண்டு காய்மகாரப்பட்டு பலவிதத்திலும் இவரைத் துன்புறுத்தியது. பயங்கரமும் அவலட்சணமுமான தோற்றங்கள் எடுத்து இவரை அடிக்கடிப் பயமுறுத்தியது. பெண்போல் வடிவமெடுத்து இவரைப் பாவத்தில் விழத்தாட்ட முயன்றது. அந்தோணியார் ஜெபத்தாலும் ஒருசந்தியாலும், விசேஷமாய் சிலுவை அடையாளத்தாலும் துஷ்டப் பேயைத் துரத்தினார். இந்த சோதனைகளுக்கு இவர் உட்படாததைக் கண்ட பசாசு, இவரை ஒருநாள் கடுமையாக அடித்துவிட்டு ஓடிப்போனது. அப்போது நமதாண்டவர் இவருக்குத் தரிசனையாகி, இவருக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும் அளித்தார். அந்தோணியார் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கொஞ்சம் அப்பமும், தண்ணீரும் புசித்துவந்தார். ஆட்டுத்தோலை ஆடையாகத் தரித்துக்கொண்டு வெகு நேரம் ஜெபம் செய்வார். பலமுறை சாயங்காலம் தொடங்கி விடியற்காலம் வரை முழந்தாளிலிருந்து ஜெபிப்பார். இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்டுணர்ந்த அநேக மக்கள் இவரது ஆசீர்வாதத்தைப் பெறும்படி இவரிடம் போவார்கள். அர்ச். அந்தோணியார் சகல புண்ணியநெறிகளையும் ஒழுங்காய் அநுசரித்து, 105-ம் வயதில் உயிர் துறந்து மோட்ச சம்பாவனையை அடைந்தார்.
*யோசனை*
பசாசால் நமக்கு உண்டாகும் சோதனைகளை ஜெபத்தாலும், ஒறுத்தலாலும் ஜெயிப்போமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக