*St. Genovieve, V.*
*அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் - கன்னிகை*
*(கி.பி. 422).*
அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் 422-ம் வருஷம் பிரான்சு தேசத்தில் பிறந்தாள். அவள் ஏழு வயதில் தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தாள். தன் 15-ம் வயதில் கன்னியர் உடுப்பு தரித்துக்கொண்டாள். நாளுக்கு நாள் புண்ணியத்தில் வளர்ந்து 50 வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சிறிது ரொட்டியும், பருப்பும் அருந்திவந்தாள். மயிர் ஒட்டியாணம் தரித்துக் கடுமையாக தவம் புரிவாள். மிகவும் பக்தி உருக்கத்துடன் இடைவிடாமல் ஜெபத் தியானம் செய்வாள். பிறர் சிநேகத்தை மனதில் கொண்டு பெரிய பட்டணங்களுக்குப் பயணமாய் போய் அநேக புதுமைகளைச் செய்து, தீர்க்கதரிசனங்களைக் கூறி, எல்லோராலும் வெகுவாய் மதிக்கப்பட்டாள். இந்தப் புண்ணியவதியின் மீது காய்மகாரம் கொண்டவர்கள் இவளைப் பலவிதத்திலும் துன்பப்படுத்தினபோதிலும், இந்த அர்ச்சியசிஷ்டவள் சற்றும் கலங்காமல் தன் நம்பிக்கையை ஆண்டவர் மீது வைத்து, ஜெப தபத்தால தன் பகைவர்களை வென்றாள். அச்சமயம் அத்தில்லா என்னும் கொடுங்கோலன் பாரிஸ் நகரைக் கொள்ளையடிக்க வந்தபோது அவள் உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி அந்தப் பெரும் பொல்லாப்பு நீங்கியது. ஜெனோவியேவ் அம்மாள் தன் 89-ம் வயதில் அர்ச்சியசிஷ்டவளாக மரித்தாள்.
*யோசனை*
நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவளைக் கண்டுபாவித்து, துன்ப துரிதத்தாலும் பொல்லாதவர்களுடைய தூற்றுதலாலும் மனம் சோர்ந்துபோகாமலும் உலக உதவியை விரும்பாமலும் ஜெபத்தால் தேவ உதவியை மன்றாடுவோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக