*St. Raymund, C.*
*அர்ச். ரேய்மன்ட்*
*துதியர் - (கி.பி. 1275).*
இவர் ஸ்பெயின் தேசத்தில் உயர்ந்த குடும்பத்தில் பிறந்து மேலான சாஸ்திரங்களைத் திறமையுடன் கற்றார். தம்முடைய 20-ம் வயதில் கல்லூரியில் சேர்ந்து பல கலைகளைக் கற்றுப் பெயர் பெற்றார். இவர் குருப்பட்டம் பெற்று, தமது உத்தம அலுவலை அதிக ஊக்கத்துடன் செய்து வந்ததினால் சகலருக்கும் ஞானக் காரியங்களில் முன்மாதிரிகையாய் விளங்கினார். இவருடைய அரிதான ஞானத்தையும் பக்தியையும் அறிந்த பரிசுத்த பாப்பரசர் இவரை உரோமைக்கு அழைத்து, இவருக்கு உயர்ந்த பதவிகளைக் கொடுத்தார். தாழ்ச்சியை முன்னிட்டு, பாப்பரசரால் தமக்கு அளிக்கவிருந்த பேராயர் பட்டத்தைத் தடுக்க, இவர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக வியாதியில் விழுந்தார். இதைப் பாப்பரசர் அறிந்து, தமது விருப்பத்தை மாற்றி, ரேய்மன்ட் தம்முடைய சொந்த தேசத்துக்குப் போகலாம் என்று உத்தரவளித்தார். தம்முடைய தேசத்தில் இவர் பூரண சுகமடைந்து, வேதத்திற்காக வெகு ஆவலுடனும், உற்சாகத்துடனும் பிரயாசைப்பட்டதன் பலனாக, கணக்கற்றப் பாவிகள் மனந்திரும்பினார்கள். மேலும் 20,000 சரசேனருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இவர் அர்ச்.டொமினிக் சபையில் சேர்ந்து, உத்தம சந்நியாசியாய் வாழ்ந்ததால் அநேக அரசரும் பிரபுக்களும் இவரைத் தம் ஆன்ம குருவாக தெரிந்துகொண்டார்கள். அத்தேசத்து அரசன் இவரை மஜோர்க்கா என்னும் தீவுக்கு அனுப்பினபோது, அவ்விடத்தில் இவரால் அநேக ஞான நன்மைகள் உண்டாயின. ஆனால் அரசன் தன் பாவ நடத்தையை விடாததினால், இவர் அவ்விடத்தை விட்டுப் புறப்படத் தீர்மானித்தார். இதை அரசன் அறிந்து, எவரும் இவரைக் கப்பலில் ஏற்றக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தான். ரேய்மன்ட் தம்மேல் போர்த்தியிருந்த போர்வையைக் கடலில் விரித்து, அதில் ஏறி 150 மைல் தூரம் கடலில் பிரயாணம் செய்து, தமது மடம் போய்ச் சேர்ந்தார். இதையறிந்த அரசன் அதிசயித்து, தனது கெட்ட நடத்தையை முற்றிலும் ஒழித்துவிட்டு, சாகும் வரையில் புண்ணியவாளனாய் நடந்துவந்தான். ரேய்மன்ட் சகல புண்ணியங்களிலும் உத்தமமாய்ப் பிரகாசித்து, தமது 100-வது வயதில் மரித்து மோட்சமடைந்தார்.
*யோசனை*
யாரொருவர் தங்களைத் தாழ்த்தி, தங்களுக்கும் உலகத்திற்கும் மரித்தவர்கள் ஆகிறார்களோ அவர்களே அர்ச்சியசிஷ்டவர்கள் ஆவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக