(கி.பி.764)
முடியப்பர் எனப்படும் ஸ்டீபென் கொன்ஸ்தாந்திநோபளின் புண்ணியவந்தரும் தனவந்தருமான தாய் தந்தையரிடத்தினின்று பிறந்து, சாஸ்திரங்களில் சிறந்து, புண்ணிய மார்க்கத்தில் நடந்து வந்தார். ஸ்டீபென் சாஸ்திரத்திலும் புண்ணியத்திலும் தேர்ந்து, ஒரு சன்னியாச மடத்திற்கு மடாதிபதியானார். இவர் அந்த மடத்தில் ஜெபத்தியானத்திலும் தவமுயற்சிகளிலும் வெகு நேரம் செலவழித்து கூடை முடைதல், வலை நெய்தல், புத்தகம் எழுதுதல் முதலிய கைவேலைகளைச் செய்து ஏழைகளுக்கு உதவி புரிந்து வந்தார். ஆட்டுத்தோலை ஆடையாக அணிந்து இரும்பு வளையத்தை இடைக் கச்சையாகக் கட்டிக்கொண்டார். அநேகர் இந்த புண்ணியவானுக்கு சீஷர்களானார்கள். அந்தக் காலத்தில் பதிதனான இராயன் திருச்சுரூபங்களை உடைக்க தலைப்பட்டு, சகலராலும் அர்ச்சியசிஷ்டவராக எண்ணப்படும் ஸ்டீபென் தன் கருத்துக்கு இணங்கினால் தான் துவக்கின தேவ துரோக வேலை சுலபமாய் அனுகூலமாகுமென்று நினைத்து, அர்ச்சியசிஷ்டவரிடம் தூதரை அனுப்பினான். ஆனால் அவர் தன் கருத்துக்கு இணங்காததினால் அவரைப் பரதேசத்திற்கு அனுப்பினான். அவ்விடத்தில் அவருடைய அற்புதங்களாலும் அரிதான புண்ணியங்களாலும் இவர் சகலராலும் ஸ்துதிக்கப்படுவதை இராயனறிந்து, அவர் மேல் பல குற்றங்களைச் சாட்டினான். ஆனால் அவர் மாசற்றவர் என்றறிந்த இராயன் அவரைத் தன்னிடம் வரவழைத்து, சிலுவைச் சுரூபத்தைக் காலால் மிதிப்பதால் என்ன தவறு என்று வினவ, ஸ்டீபென் ஒரு பொற்காசை கீழே போட்டு, தன் காலால் மிதித்ததைக் கண்டவர்கள் அவர் பெருந் தண்டனைக்குப் பாத்திரவானென்று ஆர்ப்பரித்தார்கள். இதை அவர் கேட்டு, மனித ரூபமடங்கிய ஒரு நாணயத்தை மிதிப்பது குற்றமானால் சேசுநாதருடைய சுரூபத்தை மிதிப்பது எப்பேர்ப்பட்ட பாதகம் என்று அவர் கூறியதைக் கேட்ட இராயன் சினந்து அவரைக் கொல்;லக் கட்டளையிட்டான்.
யோசனை
கர்த்தருடையவும் அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் சுரூபம், படம் முதலியவைகளை நாம் மரியாதையுடன் ஸ்தாபித்து, அவைகளைப் பக்தியுடன் கண்ணோக்கி, அவர்களுடைய புண்ணிய மாதிரிகையைப் பின்பற்றுவோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக