அர்ச்.எட்மண்ட்., அதிமேற்றிராணியார் (கி.பி.1242)
இங்கிலீஷ்காரரான எட்மண்டின் தகப்பனார் உலகத்தை வெறுத்துத் துறவியாகி புண்ணியவாளராய் வாழ்ந்து மரணமானார். எட்மண்டின் தாயார் புண்ணிய வாழ்வின் மீது ஆசை வைத்து புண்ணிய வழியில் வாழ்ந்தாள். இரவு வேளையில் வெகு நேரம் விழித்து ஜெபஞ் செய்து மயிர்ச் சட்டை முள்ளொட்டியானம் முதலிய தவக்கருவிகளை உபயோகித்துப் புண்ணிய வழியில் நடந்து தன் பிள்ளைகளையும் அதே வழியில் நடத்தி வந்தாள். எட்மண்ட் தன் தாயின் புத்தி, ஆலோசனைக்குக் காது கொடுத்து ஜெப தபத்தில் காலத்தை செலவு செய்தார். பெரிய கல்விச்சாலைக்கு இவருடைய தாயார் இவரை அனுப்பும்போது ஒரு மயிர்ச் சட்டையை அவருக்குக் கொடுத்து அதை அடிக்கடி உபயோகிக்கும்படி சொன்னதுடன், அவ்வப்போது தவக்கருவிகளை அவருக்கு அனுப்புவாள். இவருடைய நல்ல தாயார் மரணமான பின் எட்மண்ட் படிப்பை முடித்து, குருப்பட்டம் பெற்று, பிறருடைய ஆத்தும வேலைக்காக மகா சிரத்தையுடன் உழைத்து வந்தார். இவருடைய புண்ணியத்தையும் சாஸ்திரங்களையும் குறித்து கான்ற்றர்பரி நகருக்கு அதிமேற்றிராணியாரானார். இந்த உன்னத பட்டம் பெற்ற பின் அரிதான புண்ணியங்களையும் கடின தவத்தையுஞ் செய்து தமது பிரசங்கத்தாலும் புத்திமதியாலும் விசுவாசிகளை சத்திய வேதத்தில் நிலைநிறுத்தினார். ஒரு நாள் இவர் வெளி மைதானத்தில் பிரசங்கம் செய்த சமயத்தில் பெரும் மழை பெய்தபோத இவருடைய ஜெபத்தால் இவர் மேலும் அங்கு கூடியிருந்த திரளான ஜனங்கள் மேலும் ஒரு துளி மழையும் பெய்யவில்லை. அன்று அநேக பெரும் பாவிகள் மனந்திரும்பினார்கள். அத்தேசத்தின் அரசன் கோவில் மானியங்களை அநியாயமாய் அபகரித்ததினால் எட்மண்ட் அவனுக்குச் சொன்ன புத்திமதியைக் கேளாததின் நிமித்தம் அவர் அத்தேசத்தை விட்டு பிரான்ஸ் தேசத்திற்குச் சென்று ஒரு சன்னியாச மடத்தில் சகல புண்ணியங்களையும் உத்தமமாய் அனுசரித்து மோட்ச பதவி அடைந்தார்.
யோசனை
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே ஞானப் படிப்பை பயிற்றுவிப்பார்களாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக