அர்ச்.க்ளமென்ட்,
பாப்பாண்டவர், வேதசாட்சி (கி.பி.100)
சாந்தப்பர் என்று அழைக்கப்படும் க்ளமென்ட் என்பவர் உரோமையர். இவர் பிரதான அப்போஸ்தலர்களான அர்ச்.இராயப்பர் சின்னப்பருடைய பிரசங்கங்களைக் கேட்டு ஞானஸ்நானம் பெற்று, தூரதேசங்களில் வேதம் போதிக்கச் போன அர்ச்.சின்னப்பருக்கு துணையாகச் சென்றார். அதன் பின் க்ளமென்ட் உரோமைக்குத் திரும்பி வந்து அர்ச்.இராயப்பருக்கு சீஷனாகி, அவரால் மேற்றிராணியாராக அபிஷேகம் பெற்று, அந்நகர மக்களைக் கவனித்து வந்தார். கி.பி.91-ல் க்ளமென்ட் பாப்பாண்டவராக அர்ச்.இராயப்பர் சிம்மாசனத்தில் ஏறி திருச்சபையைத் திறமையுடன் நடத்தினார். கொருந்தியருக்குள் ஒற்றுமையின்றி குழப்பமுண்டானதைக் க்ளமென்ட் கேள்விப்பட்டு ஒரு அதிசயத்திற்குரிய நிரூபம் அனுப்பி, கலகத்தை தீர்த்து ஒற்றுமையை உண்டாக்கினார். இவருடைய புண்ணியங்களையும் அற்புதங்களையும் கண்ட திரளான அஞ்ஞானிகள் ஞானஸ்நானம் பெற்றதை இராயன் கேள்விப்பட்டு, க்ளமென்டை 2000 கீறிஸ்துவர்களுடன் பரதேசத்திற்கு அனுப்பி, சுரங்கங்களில் கடின வேலை செய்யும்படி கட்டளையிட்டான். சுரங்கங்களில் வேலை செய்யும் கிறீஸ்துவர்கள் ஒருநாள் தாகத்தால் வருந்துகையில், க்ளமென்டின் வேண்டுதலாலுண்டான சுனை ஜலத்தால் தாகத்தைத் தீர்த்துக்கொண்டார்கள். அவ்விடத்திலும் இவருடைய பிரசங்கத்தால் அநேகர் மனந்திரும்பினதினால் அவருடைய கழுத்தில் பாரமான கல்லைக் கட்டி கடலில் அமிழ்த்திப் போடும்படி கட்டளையிட்டான். அப்போது கடலோரத்தில் கிறீஸ்துவர்கள் துக்கத்துடன் வேண்டிக்கொண்டிருக்கையில் கடல் ஜலம் 2 மைல் தூரம் உள்ளுக்குள் இழுத்துக்கொண்டபோது, வேதசாட்சியின் சரீரம் ஒரு பீடத்திலிருப்பதை கிறீஸ்துவர்கள் கண்டு, அதை பக்தியாய் எடுத்துக்கொண்டு போனார்கள். இந்த புதுமையைக் கண்ட திரளான ஜனங்கள் கிறீஸ்துவர்களானார்கள்.
யோசனை
நாமும் பிடிவாத குணத்தை விட்டுவிட்டு, நமது ஞானப் போதகர்களுடைய நற்புத்திகளுக்கு காது கொடுப்போமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக