Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

July 16- OUr Lady of Mount Carmel, மகா பரிசுத்த கார்மெல் மாதா

 

ஜுலை 1️6️ம் தேதி

 

மகா பரிசுத்த கார்மெல் மாதா திருநாள்



 

                1726ம் வருடம் முதல், இந்த திருநாள் அகில திருச்சபை எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் என்ற இடத்தில் மகா பரிசுத்த தேவமாதா அளித்த காட்சிக்கும் இஸ்ரேலிலுள்ள கார்மெல் மலைக்கும் எவ்வாறு தொடர்பு இருக்கக் கூடும்? என்று அநேகர் ஆச்சரியப்பட்டுத் திகைக்கின்றனர்!

                கார்மெல் மலை, ஒரு புண்ணிய ஷேத்திரமாகத் திகழ்வதற்கான பின்னணி சரித்திரம் பழைய ஏற்பாட்டின் மாபெரும் தீர்க்கதரிசியான எலியாசின் காலத்தில், அதாவது, கி.மு.860ம் வருடம் துவங்குகிறது! இந்த காலத்தில் தான் இஸ்ரேலின் அரசனான ஆகாப் என்பவன், ஜெசபேல் என்ற ஒரு அஞ்ஞானப் பெண்ணை திருமணம் செய்திருந்தான். இவள்,  பேல் என்ற அஞ்ஞான  விக்கிரகத்தை வழிபட்டாள். எனவே, அரசன் அந்த அஞ்ஞான விக்கிரகத்திற்கு ஒரு கோவிலைக் கட்டி, அங்கு சென்று அதை வழிபடாதவர்கள் ஒன்றில் நாட்டை விட்டு துரத்தப்படவும் அல்லது கொல்லப்படவும் வேண்டுமென்று கட்டளையிட்டான். ஆனால், அரச கட்டளைக்கு எதிராக எலியாஸ் தீர்க்கதரிசி உறுதியாக நின்றார்;. அவர், சர்வேசுரனை நோக்கி செய்த பக்திபற்றுதலுள்ள ஜெபங்களின் மூலமாக,  மூன்று வருட காலமாக மழைபெய்யாமல் தடுத்து வைத்திருந்தார்.

            பிறகு , ஆகாபின் முன்பாக அஞ்ஞான விக்கிரகமான  பாகாலின் தீர்க்கதரிசிகளிடம், மெய்யங்கடவுளின் தீர்க்கதரிசியான எலியாஸ்,  அவர்களுடைய தெய்வத்திற்கு முன்பாக ஒரு காளை மாட்டை சர்வாங்க தகனப் பலியாக ஒப்புக்கொடுக்கும்படி கூறினார்.  அதாவது பலி செலுத்தப்படும் மிருகத்தைக் கொன்று, அதை நெருப்பினால் சுட்டெரிக்காமல், அவர்களுடைய தெய்வம் உண்மையான தெய்வமா யிருந்தால், அதனிடமிருந்து வருகிற அக்கினியினால் அந்த பலிப் பொருள், தகனப்பலியாக முழுமையாக சுட்டெரிக்கப் படவேணடும்! என்று கூறினார். அதற்கேற்ப திரளான எண்ணிக்கையிலிருந்த பாகாலின் தீர்க்கதரிசிகள், காலையிலிருந்து மாலை வரை அவர்களுடைய பாகால் என்ற அஞ்ஞான விக்கிரகத்தை நோக்கி கத்தியபடி இருந்தனர்.

                இறுதியில் அவர்கள் தங்களையே குத்திக்கொண்டும், வெட்டிக் கொண்டும், பாகாலை நோக்கி அழைத்துக் கொண்டிருந்தனர்.  அவர்களுடைய பலிப்பொருளான காளைமாடு அப்படியே இருந்தது. ஆனால், எலியாஸ் தீர்க்கதரிசி, பக்தி பற்றுதலுள்ள தன் ஜெபத்தின் மூலம், பரலோகத்திலிருந்து ஒரு அக்கினியை  வரவழைத்து, பலிப்பொருளாக வைக்கப்பட்டிருந்த காளைமாட்டை, சர்வாங்கத் தகனப் பலியாக சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தார். (3 அரசர் 18:19-40).  பின்னர், பொய் தேவதையான பாகாலின் எல்லா தீர்க்கதரிசிகளையும் கொன்று போட்டார். அதன் பின், இதற்காக, ஜெசபேல் தன்னைப் பழிவாங்குவாள் என்று அஞ்சிய எலியாஸ் தீர்க்கதரிசி, கார்மெல் மலைக்குச் சென்று ஒளிந்து கொண்டார்.அச்சமயம், இவருடன் அநேக பரிசுத்தவாளர்களும் சேர்ந்து ஜீவிக்கலாயினர். இவ்விதமாக தபோதனர்களுடைய சின்னஞ்சிறு துறவற சபைகள் கார்மெல் மலைக் குகைகளில்,  ஜெபத்திலும், தபசிலும், சர்வேசுரனுடன் ஐக்கியமான ஏகாந்த ஜீவியம் ஜீவிக்கும்படி தோன்றின!

                இதற்கு 800 வருடங்களுக்குப் பிறகு, இப்பரிசுத்த கார்மெல் மலையின் அடிவாரத்திலிருந்து, கிழக்கே 9 மைல் தொலைவிலிருந்த ஒரு சிறிய  நகரமான நாசரேத்தில் மகா பரிசுத்த தேவமாதா ஜீவித்தார்கள். இவர்களிடம் தான், மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் தேவ ஆளான சுதனாகிய சர்வேசுரனுடைய பரிசுத்த மனிதவதாரத்தை எடுத்து, மனுக்குலத்தின் இரட்சணிய அலுவலை நிறைவேற்றும்படியாக மனிதன் ஆனார்!

                எகிப்திலிருந்து நாசரேத்திற்குத் திரும்பியபோது, மகா பரிசுத்தத்திருக்குடும்பம், வழியில் கார்மெல் மலையில் ஜீவித்த இந்த பரிசுத்த தபோதனர்களை, சந்தித்து அவர்களை ஆச்சரியமிக்க பேரானந்த மகிழ்ச்சியில் மூழ்கடித்தனர்! என்று பரிசுத்தப் பாரம்பரியம் கூறுகின்றது. இந்த சந்திப்பின் விளைவாகவே, கார்மெல் மலைக்குகைகளில் ஜீவித்த இந்த தபோதனர்கள், அவர்கள் கொண்டிருந்த குழந்தைக்குரிய விசுவாசத்தின் காரணமாக, வெகு காலமாக காத்திருந்த மெசியாவான நமதாண்டவர் மீது, முதன் முதலாக விசுவாச உச்சாரணம் செய்யும் பாக்கியத்தை அடைந்தனர்: பெந்தேகோஸ்தே ஞாயிறன்று, அப்போஸ்தலர்களால் ஞானஸ்நானம் பெற்ற மக்கள் கூட்டத்தில், கார்மெல் துறவற சபையின் தபோதனர்களும் இருந்தனர்!

                இதேபோல், இந்த தபோதனர்கள், கார்மெல் மலையின் மீது, மகா பரிசுத்த தேவமாதாவிற்குத் தோத்திமாக முதல் தேவாலயத்தைக் கட்டினர். இதற்கு வெகுமதியாக,  மகா பரிசுத்த தேவமாதா பரலோகத்திற்கு ஆரோபனமான பிறகு, நாசரேத்தில், மகா பரிசுத்த திருக்குடும்பம் ஜீவித்த பரிசுத்த இல்லத்தின் பாதுகாவலர்களாக கார்மெல்  துறவியர் முதலில் நியமிக்கப்பட்டனர்.

                ஆகாப் அரசன், எலியாஸ் தீர்க்கதரிசியை சந்திப்பதற்காக கார்மெல் மலைக்குச் சென்றதைப் போலவே, அவனுக்குப் பின், இரண்டாயிரத்து நூற்று பத்து வருடங்களுக்குப் பின்,  மற்றொரு அரசர் அதே கார்மெல் மலையின்  மேல் ஏறிச் சென்றார். இந்த அரசருடைய படைக்கருவிகளும், கேடயமும், மார்புக் கவசமும் மின்னலெனப் பளிச்சிடும் பிரகாசத்துடன் ஒளிரும் பெரிய சிலுவை அடையாளத்தினால் பதியப்பெற்றிருந்தன! அவர் தான், பிரான்ஸ் நாட்டின் அரசரும் சிலுவைப்போரின் அரசருமான அர்ச். 9ம் லூயிஸ் அரசர்! கார்மெல் மலைக் குகைகளில் வசித்த  கார்மெல் சபைத் தபோதனர்களைச் சந்திப்பதற்காக அர்ச். லூயிஸ் அரசர் சென்றார். இந்த தபோதனர்கள், “கார்மெல் மலையின் மகா பரிசுத்த தேவமாதாவின் துறவியர்என்று பாப்பரசரின் ஆணை மடல்களில் அழைக்கப்பட்டனர். அவர்களில் சில துறவியரை அர்ச். லூயிஸ் அரசர், தன்னுடன் பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்துச் சென்றார்.



                 இதற்கு 30 வருடங்களுக்கு முன்னதாகவே,  அர்ச். லூயிஸ் அரசர், கார்மெல் மலைக்கு சென்றபோது, அவருடன் ஜான் வெர்சாய் மற்றும் ரிச்சர்டு டே கிரே என்ற இரு ஆங்கிலேய மாவீரர்களும் சென்றனர். அச்சமயம், சிலுவைப்போர் முடிந்தபிறகு, சில கார்மெல் துறவியரை இந்த இரண்டு ஆங்கிலேய மாவீரர்கள், தங்களுடன் இங்கிலாந்திற்குக் கூட்டிச் சென்று, அவர்களுக்கு மடத்தைக் கட்டுவதற்காக, கென்ட்டிலுள்ள ஆல்யெஸ்ஃபோர்டுவில் கட்டிடங்களையும், நிலங்களையும் அளித்தனர்.

                இங்கிலாந்தில் தான், அர்ச். சைமன் ஸ்தோக்கிடம் மகா பரிசுத்த தேவமாதா காட்சியளித்து, கார்மெல் துறவியருடன் சேர்ந்து கொள்ளும்படி கூறினார்கள். அச்சமயம், இவர், இங்கிலாந்திலுள்ள ஒரு காட்டில் தனிமையில் ஜீவித்து வந்தார்.

                பாலஸ்தீனத்தை மகமதியர் ஆக்கிரமித்தபோது, அநேக கார்மெல் துறவியர் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்! இதன் காரணமாக ஐரோப்பியாவிலிருந்த கார்மெல் துறவற மடங்களிலிருந்த துறவியருக்கென்று சபையின் ஒரு உபதலைவரை நியமிக்க வேண்டியிருந்தது! இவ்விதமாக அர்ச். சைமன் ஸ்தோக், 1215ம் வருடம், உதவி தலைமை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அர்ச். சைமன், பரிசுத்த பூமியான பாலஸ்தீனத்தில் 1237ம் வருடம் நிகழ்ந்த பொதுசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்; 1245ம் வருடம்  கார்மெல் சபையின் பொது தலைமை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                அச்சமயம் கார்மெல் துறவற சபை, ஐரோப்பாவில் பல இன்னல்களுக்கு ஆளானது. 1251ம் வருடம், அர்ச். சைமன் ஸ்தோக்கிற்கு 90 வயதாயிருந்தது. மகா பரிசுத்த தேவமாதா மீது மட்டுமே நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தவராக, அர்ச். சைமன், ஏகாந்த ஜெப தபத்தில் இளைப்பாறும்படியாக, கேம்பிரிட்ஜிலிருந்த கார்மெல் சபை மடத்தில் தங்கினார்.இங்கு தான்,மகா பரிசுத்த தேவமாதா இவருக்குக்  கார்மெல் உத்தரியத்தை அளித்து,  இந்த உத்தரியத்தை எடுத்துக்கொள்! இது, இரட்சணியத்தின் அடையாளமாயிருக்கிறது! ஆபத்தின்போது, பாதுகாவலும், சமாதானத்தின் உறுதிப்பிணையுமாக இருக்கிறது! இந்த உத்தரியத்தை அணிந்தபடி இறக்கிற எவனும், நித்திய நெருப்பை அடைய மாட்டான்!” என்று வாக்குறுதி அளித்தார்கள்.

இதன்பிறகு, உடனடியாக, கார்மெல் துறவற சபையில் புதுமையான நல்ல மாற்றம் ஏற்பட்டது! பல ஆபத்துக்களிலிருந்தும் கார்மெல் துறவற சபைக் காப்பாற்றப்பட்டது. மகா பரிசுத்த தேவமாதாவின் விசேஷ பாதுகாவல் இத்துறவற சபைக்கு இருக்கிறது, என்பது உறுதிசெய்யப்பட்டது!

                துவக்கத்தில் கார்மெல் சபைத் துறவியர் மட்டுமே கார்மெல் உத்தரியத்தை அணிந்திருந்தனர். ஆனால், 14ம் நூற்றாண்டில் கார்மெல் துறவற சபைக்கு வெளி்யிலுள்ளவர்களும் கார்மெல் உத்தரியத்தை அணிவதற்கான அனுமதி நீட்டிக்கப்பட்டது!

                1321ம் வருடம் மகா பரிசுத்த தேவமாதா அர்ச். பீட்டர் தாமஸிடம்கார்மெல் துறவற சபை, உலக முடிவு வரை நிலைத்திருக்கும்படியாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது!” என்று அறிவித்தார்கள்.

 

மகா பரிசுத்த கார்மெல் மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

July 15- St. Hentry the 2nd - அர்ச். 2ம்ஹென்றி

 


 

ஜுலை 1️5️ம் தேதி

 

சக்கரவர்த்தியும் ஸ்துதியருமான அர்ச். 2ம்ஹென்றி திருநாள்

 


                2ம் ஹென்றி, 973ம் வருடம், மே 6ம் தேதியன்று பவேரிய நாட்டின் அரசனுடைய மகனாகவும், ஜெர்மனி நாட்டு அரசரான முதலாம் ஹென்றியின் கொள்ளுப்பேரனாகவும் பிறந்தார்.இரண்டு முந்தின சக்கரவர்த்திகள் ஆண்ட சமயத்தில், இவருடைய தந்தை அந்த சக்கரவர்த்திகளை எதிர்த்து நின்றதால், அடிக்கடி நாடுகடத்தப்பட்டார். சின்ன 2ம் ஹென்றியும் தந்தையுடன் அடிக்கடி நாடுகடத்தப்பட்ட நிலையில் ஜீவிக்க நேர்ந்தது. இச்சூழ்நிலை தான், இவரை சிறுவயதிலேயே, சர்வேசுரனையும், திருச்சபையையும் அண்டிப் போகும்படி தூண்டுவதற்குக் காரணமாயிற்று.. 995ம் வருடம், இவருடைய தந்தையின் மறைவிற்குப் பிறகு, இவர் பவேரியா நாட்டின் சிற்றரசரானார்.

         இவருடைய ஒன்றுவிட்ட சகோதரனும், பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியுமான 3ம் ஓட்டோ, , ஜெர்மனியின் படைவீரர்களின் துணையுடன், இத்தாலியில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறுகிற புரட்சியை ஒடுக்கி அடக்கும்படியாக, 1002ம் வருடம், இவரை தன்னிடம் வரும்படி, அழைத்தார்.

                ஆனால், இவர் சக்கரவர்த்தியின் அரண்மனையை அடைவதற்குள் 3ம் ஓட்டோ சக்கரவர்த்தி காய்ச்சலினால் இறந்தார். அவருக்கு வாரிசு யாருமில்லாததால், 2ம்ஹென்றி, ஜெர்மனியின் அரசராக 1002ம் வருடம் ஜுலை 9ம் தேதியன்று முடிசூட்டப்பட்டார். 2ம் ஹென்றி, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக மட்டுமே, இந்த உலகத்தை, அரசராள வேண்டும் என்கிற ஒரே உன்னத நோக்கத்துடன், அரசருடைய  பத்திராசனத்தில் ஏறி அமர்ந்தார்.

                வட ஐரோப்பாவிலிருந்து தாக்குதல் நடத்திய அஞ்ஞானிகளும் காட்டுமிராண்டிகளும், உரோமை சாம்ராஜ்ஜியத்தை கொள்ளை யடித்துக்  கொண்டிருந்தனர். மிகப்பெரிய அவர்களுடைய படைகளுக்கு முன்பாக அர்ச். 2ம் ஹென்றி தனது சிறிய படையுடன் சென்று அவர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால், இவருடைய படையணிகளை, சம்மனசுகளும், அர்ச்சிஷ்டவர்களும், புதுமையாகத் தோன்றி, வழிநடத்தினர்! ஆதலால், அஞ்ஞானிகளுடைய படைகள், அவநம்பிக்கைக்கும் குழப்பத்திற்கும் உட்பட்டவர்களாக, பல்வேறு திசைகளில் சிதறி ஓடினர். இவ்விதமாக காட்டுமிராண்டிகளின் தொல்லைகளிலிருந்து, பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தை, அர்ச். 2ம் ஹென்றி காப்பாற்றினார். போலந்து, பொஹேமியா, மொராவியா, பர்கண்டி ஆகிய நாடுகளை வென்று, தனது உரோமை சாம்ராஜ்ஜியத்துடன் சேர்த்துக் கொண்டார். பன்னோனியா, ஹங்கேரி நாடுகளை, சத்திய கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்த்தார்.

                ஜெர்மனியில் சத்திய கத்தோலிக்க வேத விசுவாசத்தை ஸ்திரமாக ஸ்தாபித்தபிறகு, அர்ச். 2ம் ஹெனறி அரசர், இத்தாலிக்குள் அணிவகுத்துச் சென்றார். கிரகோரி என்ற எதிர்பாப்புவை அகற்றி விட்டு, 8ம் பெனடிக்ட் பாப்பரசரை, வரவழைத்து, மறுபடியும், பாப்பரசரின் பத்திராசனத்தில் அமர்த்தினார். 8ம் பெனடிக்ட் பாப்பரசர், அர்ச். 2ம் ஹென்றி அரசருக்கு, 1014ம் வருடம் பிப்ரவரி 14ம் தேதியன்று, பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியின் மகுடத்தைச் சூட்டினார்.

                சக்கரவர்த்தி 2ம் ஹென்றி, எந்த நகரத்திற்குச் சென்றாலும், அங்கு அந்நகரிலுள்ள  மகா பரிசுத்த தேவமாதாவின் ஒரு தேவாலயத்திற்குச் சென்று, ஜெபிப்பதில் தன் முதல் இரவைக் கழிப்பதைத் தன் பக்தியுள்ள வழக்கமாகக் கொண்டிருந்தார். அர்ச். ஹென்றி, உரோமாபுரிக்குச் சென்றபோது, அங்கிருந்த மகா பரிசுத்த தேவமாதாவின் தலைமை தேவாலயமான மேரி மேஜர்  பசிலிக்காவில் தனது முதல் இரவைக் கழிக்கும்படியாக,  ஜெபித்துக் கொண்டிருந்தபோது,  உன்னதரும் நித்திய குருவுமான நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதர் சுவாமி, திவ்ய பலிபூசை நிகழ்த்துவதற்காக தேவாலயத்தினுள் நுழைவதைக் கண்டார். அர்ச். லாரன்ஸும், அர்ச். வின்சென்டும், தியாக்கோன் மற்றும் உபதியாக்கோன்களாக முறையே, திவ்யபலிபூசைக்கு உதவி செய்ய  அங்கு வந்ததையும் கண்டார். தேவாலயம் முழுவதும் எண்ணற்ற அர்ச்சிஷ்டவர்களால் நிரம்பியது. சம்மனசுகள் பாடற்குழுவினரின் அறையில் இருந்தபடி, மகா இனிமையான பரலோக இசையில் பாடினர். மகா பரிசுத்த தேவமாதாவும் திவ்யபலிபூசையைக் காணும்படி தேவாலயத்தினுள் மிகுந்த பக்திபற்றுதலுடன் முழங்காலிலிருந்தார்கள்.  நடுப்பூசையிலும், திவ்ய நன்மை நேரத்திலும், தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஆண்டவரை ஆராதித்தார்கள்!

                சுவிசேஷம் வாசித்தபிறகு, மகா பரிசுத்த தேவமாதா அனுப்பிய ஒரு சம்மனசானவர், சுவிசேஷத்தை முத்தமிடும்படியாக, அர்ச். ஹென்றியிடம் கொண்டு வந்தார். அச்சமயம், யாக்கோபுவிற்குச் செய்ததைப் போல, அந்த சம்மனசானவர், இவருடைய தொடையை மெதுவாகத் தொட்டு, “நீ அனுசரிக்கிற பரிசுத்த கற்பின் விரத்தத்துவத்தின் பேரிலும், நீதியின் பேரிலும், சர்வேசுரன் காண்பிக்கிற சிநேகத்தின் அடையாளத்தை ஏற்றுக்கொள்!” என்று கூறினார். அந்நேரமுதல், பரிசுத்த உரோமைச் சக்கரவர்த்தி 2 ஹென்றி,  தன் எஞ்சிய வாழ்நாள் காலத்தில் எப்போதும் நொண்டியாக இருந்தார்.

                தாவீதரசரைப்போல், அர்ச். 2ம் ஹென்றி தனது போர்களில் அடைந்த சகல வெற்றிகளின் பலன்களையெல்லாம், திருச்சபையின் ஊழியத்திற்குப் பயன்படுத்தினார். உரோமை சாம்ராஜ்ஜியத்திலிருந்த காடுகள், சுரங்கங்கள், மேலும், தனது திரவியசாலை அளிக்கக்கூடிய மிகச் சிறந்த கனிகள் யாவற்றையும்,                  சர்வேசுரனுடைய தேவாலயங் களின் மகா பரிசுத்த சன்னிதானங்களுக்காக அர்ப்பணித்தார்: தனது சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த நாடுகளின் அரசாங்கங்களின் உயர்ரக கதீட்ரல் தேவாலயங்கள், உன்னதமான துறவற மடங்கள், எண்ணிக்கையில்லாத தேவாலயங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு, தன் சாம்ராஜ்ஜியத்தின் திரவியங்கள் எல்லாவற்றையும் பயன் படுத்தினார். ஒரு காலத்தில் அஞ்ஞான இருளினுடைய ஐரோப்பியப் பகுதியாக இருந்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் ஜெர்மனி மற்றும் அதைக் சேர்ந்த வடக்குப் பகுதியை அர்ச். 2ம் ஹென்றி, இவ்வளவான தேவாலயங்கள், துறவற மடங்களால் ஒளிர்வித்து அர்ச்சித்துப் பரிசுத்தப்படுத்தினார்.

                1024ம் வருடம், ஜுலை 15ம் தேதி, அர்ச். 2ம் ஹென்றி சக்கரவரதேவாலயங்கள், ெர்ஸ்டாடு அருகிலுள்ள குரோன் கோட்டையில் பாக்கியமாய் மரித்தார்.  சர்வேசுரனுடைய பரலோக இராஜ்ஜியத்தையே எப்போதும் தன் கண்முன் கொண்டவராக, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக மட்டுமே, தன்னுடைய உலக இராஜ்ஜியத்தை  மிகுந்த பொறுப்புடன் ஆண்டு நடத்திய உன்னத அர்ச்சிஷ்ட அரசரான 2ம் ஹென்றியின் மரணத்தை, நாட்டு மக்களும், திருச்சபை அதிகாரிகளும்  உகந்த விதத்தில் அனுசரித்தனர். 1146ம் வருடம், 3ம் யூஜின், பாப்பரசர் அர்ச். 2ம்ஹென்றிக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.

 

பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியும் ஸ்துதியருமான அர்ச். 2ம் ஹென்றியே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!