Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

January - 3 - ST. GENEVIEVE அர்ச்‌. ஜெனவியேவ்‌

 ஜனவரி 03ம்‌ தேதி  

அர்ச்‌. ஜெனவியேவ்‌ 

அர்ச்‌.ஜெனவியேவ்‌, கி.பி.422ம்‌ வருடம்‌ பாரீஸ்‌ நகருக்கருகிலுள்ள நான்டெரே என்ற இடத்தில்‌ பிறந்தாள்‌. இவள்‌ 7 வயதானபோது, அர்ச்‌. ஆக்சரே ஜெர்மேயின்‌, பெலாஜியுஸ்‌ பதிதத் தப்பறையை எதிர்த்து, அதை அழிக்கும்படியாக தனது தாய்‌ நாடான பிரான்சிலும்‌, இங்கிலாந்திலும்‌ பிரசங்கிக்கும்படியாக பல நகரங்களுக்குச்சென்ற போது, வழியில்‌, இவளுடைய கிராமத்திற்கும்‌ வந்தார்‌. அச்சமயம்‌, பரிசுத்த மேற்றிராணியாரான அர்ச்‌. ஜெர்மேயினைக்‌ காணும் படியாக, ஊர்‌ மக்கள்‌ கூடியிருந்தபோது, கூட்டத்தின்‌ நடுவில்‌, ஜெனவியேவ்‌ நின்றிருந்தாள்‌; அவளைத்‌ தனியாகக்‌ கூப்பிட்டு, அர்ச்‌.ஜெர்மேயின்‌, அவள்‌ எதிர்காலத்தில்‌ பெரிய அர்ச்சிஷ்டவளாவாள்‌, என்று தீர்க்கதரிசனமாகக்‌ கூறினார்‌; அவளுடைய விருப்பத்தின்படி, பரிசுத்த மேற்றிராணியார்‌, அவளை,சகல கூட்டத்தினருடனும்‌  தேவாலயத்திற்கு நடத்திச்‌ சென்று, அவளுடைய கன்னிமையை சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து ஒப்புக்கொடுத்தார்‌.  

கி.பி.451ம்‌ வருடம்‌, அட்டிலா என்ற கொள்ளையன்‌, கொள்ளைக்‌ கூட்டத்தினருடன்‌, பாரீஸ்‌ நகரத்திற்குள்‌ நுழைய திட்டமிட்டிருந்தான்‌. மக்கள்‌ அந்நகரத்தை விட்டு வெளியேற ஆயத்தமாயிருந்தபோது, “அவர்களுடைய நகரத்தைக் கொள்ளையிட வருகிற அட்டிலா என்பவன்‌ அந்நகரத்திற்கு தேவ சாபத்தின்‌ தண்டனையாக இருக்கிறான்!”‌ என்று கூறிய ஜெனவியேவ்‌, இத்தண்டனையிலிருந்து தப்பிக்கவும்‌, பரலோக உதவியை நிச்சயிக்கவும்‌, நகர மக்கள்‌ எல்லோரையும்‌, ஜெபத்திலும்‌, உபவாசத்திலும்‌ ஈடுபடும்படிச்‌ செய்தாள்‌. அர்ச்‌.ஜெனவியேவின்‌ தூண்‌டுதலின்படி பாரீஸ் நகர மக்கள்‌ செய்த ஜெப தப மன்றாட்டுகளுக்கு பரலோகம்‌ செவிசாய்த்தது! காட்டுமிராண்டியான அட்டிலாவின்‌ கொள்ளைக்‌ கூட்டம்‌, பாரீஸ்‌ நகரத்தைத்‌ தொடாமலே, ஆர்லியன்ஸ்‌ நகரத்திற்குச்‌ சென்றது.  

சில வருடங்களுக்குப்‌ பிறகு,மெரோவிக்‌ பாரீஸ்‌ நகரத்தை  ஆக்ரமித்தான்‌; இவனையும்‌, இவனுக்குப்‌ பின்‌ வந்த சில்டெ ரிக்‌,குளோவிஸ்‌ ஆகியவர்களிடம்‌, ஜெனவியேவ்‌ வேண்டி மன்றாடி,பாரீஸ்நகர மக்களை, அவர்கள் ‌இரக்கத்துடன்‌ நடத்தும்படிச்‌ செய்தாள்‌. 

அர்ச்‌.ஜெனவியேவின்‌ ஜீவியம்‌ முழுவதும்‌ மாபெரும்‌ தபசும்‌, இடைவிடாத ஜெபமும்‌ , தேவசிநேகத்திற்கடுத்த பிறர்சிநேக அலுவல்களும்‌ நிறைந்திருந்தது! கி.பி.512ம்‌ வருடம்‌, இவள்‌ பாக்கியமாய்‌ மரித்தாள்‌; முதலாம்‌ குளோவிஸ்‌ அரசனுடைய கல்லறைக்கு அருகில்‌ புகைக்கப்பட்டாள்‌.

 இவள்‌ பாரீஸ்‌ நகரத்தின்‌ பாதுகாவலியாக வணங்கப்படுகிறாள்‌;கண்‌ நோய்க்கும்‌, காய்ச்சலுக்கும்‌ இவளிடம்‌ வேண்டிக்‌ கொண்டால்‌, அந்த நோய்கள்‌ புதுமையாகக்‌ குணமடையும்‌. 

கி.பி.1129ம்‌ வருடம்‌, மால்‌டெஸ்‌ ஆர்டென்ட்ஸ்‌ என்ற ஒருகொடிய கொள்ளை நோய்‌ பாரீஸ்‌ நகரைத்‌ தாக்கியபோது, 14000 பேர்‌ மாண்டனர்‌; அர்ச்‌.ஜெனவியேவின்‌ பரிசுத்த அருளிக்கங்கள்‌, பக்தி பற்றுதலுடன்‌ பாரீஸ்நகரம்‌ முழுவதும்‌ சுற்றுப்‌ பிரகாரமாக எடுத்துச்‌ செல்லப்பட்டவுடன்‌, இந்த கொள்ளை நோய்‌, புதுமையாக நின்றுபோனது; நகரத்தை விட்டு அகன்று போனது! 

கி.பி. 1130ம்‌ வருடம்‌, 2ம்‌ இன்னசன்ட்‌ பாப்பரசர்‌, எதிர்‌ பாப்பரசரான அனக்ளீடஸுக்கு எதிராக பிரான்ஸ்‌ அரசனிடம்‌ உதவி கேட்கும்படியாக, பாரீஸ்‌ நகரத்திற்கு வந்தபோது, அர்ச்‌.ஜெனவியேவின்‌ இப்புதுமையைப்‌ பற்றி தானே நேரில்‌ ஆய்வுசெய்து பார்த்தார்‌. அதில்‌ பெரிதும்‌, திருப்தியடைந்தவராக, நவம்பர்‌ 26ம்‌ தேதி , அர்ச்‌.ஜெனவியேவின்‌ திருநாளைக்‌  கொண்டாடும்படி கட்டளையிட்டார்‌.  1793ம்‌ வருடம்‌, நாசகார பிரஞ்சுப்‌ புரட்‌சிக்காரர்கள்‌, அர்ச்‌.  ஜெனவியேவின்‌ பரிசுத்த அருளிக்கங்களை அழித்துப்போட்டனர்‌.  

அர்ச்‌.ஜெனவியேவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 

January 2 - ST. DEFENDENTE (அர்ச். டெஃபென்டன்ட்)

 ஜனவரி 02

வேதசாட்சியான அர்ச். டெஃபென்டன்ட்

இவர்  ஒரு துணிவுமிக்க உரோமானிய படை வீரர். இவர் தீபன் பிராந்தியத்தின் உரோமானிய இராணுவ சேனையைச் சேர்ந்த கிறீஸ்துவ வேதசாட்சிகளில் ஒருவராயிருந்தார்; அர்ச்.மோரிஸியோ என்கிற இன்னொரு வேதசாட்சி, இவர்களையெல்லாம் கொலைக்களத்திற்கு உற்சாகமூட்டி வழி நடத்திச் சென்றார். தீபன் உரோம இராணுவ சேனை , முதலில் எகிப்து தேசத்தில்  முகாமிட்டிருந்தது! அதன் படைவீரர்களின் அசாதாரண வீரத்துவம் வாய்ந்த துணிச்சலினால் மிகவும் பிரபலமடைந்திருந்தனர். மேலும், இந்த சேனையின் பெரும்பாண்மையான வீரர்கள் ஞானஸ்நானம் பெற்று,  கத்தோலிக்க வேதத்தை பிரமாணிக்கத்துடன் அனுசரித்து வந்தனர்.

இந்த தீபன் உரோம படைவீரர்களின் சேனை, எகிப்தின் தீபன் பிராந்தியத்திலிருந்து வெளியேறி, உரோமை சாம்ராஜ்ஜியத்தின்  வடக்கு எல்லைப் பகுதியில் சக்கரவர்த்திக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த  பகோடே என்கிற இனத்தவர்களை அடக்குவதில், சக்கரவர்த்தியான மாக்ஸ்மியனுக்கு (250-310)  உதவும்படியாக, பிரான்ஸ் நாட்டின் கால் பிராந்தியத்திற்கு வர வேண்டும் என்று, உரோமை தலைமையகத்திலிருந்து கட்டளை வந்தது.

மார்சேல்ஸ் பிரதேசத்தில் ஓடுகிற ரோன் நதியின் கரையில் உரோமை இராணுவ சேனை முகாமிட்டு, போருக்காகக் காத்திருந்தனர்; அங்கே அஞ்ஞான தேவதைகளுக்கு ஒரு ஆரவாரமான பலி செலுத்தப்பட்டது; ஆனால், இராணுவ சேனையிலுள்ள கத்தோலிக்க வீரர்கள் இந்த அஞ்ஞான சடங்கில் பங்கேற்கவில்லை! 

இதைக் கேள்விப்பட்டு சீற்றமடைந்த மாக்ஸ்மியன், கிறீஸ்துவ வீரர்களை அடக்க முற்பட்டான்;  அவர்களை சாட்டையால் அடிப்பிக்கச் செய்து, அஞ்ஞான தேவதையை வழிபட மறுத்த பத்து கிறீஸ்துவ வீரர்களுக்கு ஒரு வீரர் என்கிற விகிதத்தில் கிறீஸ்து வீரர்களை தலைவெட்டிக் கொன்று போட்டான்; இவ்விதமாக, அர்ச்.டெஃபென்டன்ட் கிபி 286ம் வருடம் தலைவெட்டிக் கொல்லப்பட்டார்; பாக்கியமான வேதசாட்சிய கிரீடத்தைப் பெற்றுக் கொண்டார்!

கிபி 380ம் வருடம் வந்.தியோடோர் ஆண்டகை, மார்டிக்னியின் மேற்றிராணியாராக இருந்தபோது, அர்ச்.டெஃபென்டென்ட் மற்றும் அவருடைய சக வேதசாட்சிகளின் கல்லறை கண்டெடுக்கப்பட்டது! இந்த அர்ச்சிஷ்டவர்களுக்கு தோத்திரமாக தியோடோர் ஆண்டகை , ஒரு தேவாலயத்தைக் கட்டினார்.

சிவாஸ்ஸோ, காசாலே மொன்ஃபெராட்டோ, மெஸ்ஸியா, நோவாரா, லோடி என்கிற வட இத்தாலிய நகரங்களுக்கு,  அர்ச்.டெஃபென்டென்ட் பாதுகாவலராயிருக்கிறார்! உரோமானிய படை வீரருடைய உடையில் சித்தரிக்கப்பட்டிருக்கிற இந்த அர்ச்சிஷ்டவரிடம் ஓநாய்கள் மற்றும் நெருப்பினால் ஏற்படும் ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி, வேண்டிக் கொள்வது, பலனுள்ள பக்திமுயற்சியாக அனுசரிக்கப்படுகிறது!

தீபன் இராணுவ சேனை (இது, அகாவுனும் வேதசாட்சிகளுடைய சேனை என்றும் அழைக்கப்படுகிறது!) முழு இராணுவ சேனையாக 6666 படை வீரர்களைக் கொண்ட மிகப் பெரிய சேனையாகத் திகழ்ந்தது!. இவர்கள் அனைவரும் கொண்டிருந்த தளராத கத்தோலிக்க வேத விசுவாசத்திற்காக, கிபி286ம் வருடம், செப்டம்பர் 22ம் தேதியன்று வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். இவர்களுடைய பரிசுத்த சரீரங்களின் அருளிக்கங்கள், ஸ்விட்சர்லாந்திலுள்ள செயிண்ட் மோரிஸ் ந வாலெய்ஸ் என்கிற மடத்தின் தேவாலயத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன


வியாழன், 2 ஜனவரி, 2025

January 1 - FEAST OF CRCUMCISION OF OUR LORD


நமதாண்டவரின் விருத்த சேதனத்தின் திருநாள்

         விருத்த சேதனம் என்பது, பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணத்தினுடைய ஒரு தேவ திரவிய அனுமானமாக இருந்தது! மேலும், அது, அபிரகாமின் சந்ததியார்களுக்கான முதல்  சட்ட பூர்வமான அனுசரிப்பு முறையாக சர்வேசுரன் தாமே நியமனம் செய்திருந்த விதிமுறையாகத் திகழ்ந்தது! இது, தேவ ஊழியத்தின் துவக்க நிலையினுடைய ஒரு தேவ திரவிய அனுமானமாகவும், சர்வேசுரன் தாமே வெளிப்படுத்தி, வழிநடத்துவதை விசுவசித்து, அதன்படி நடக்கவும் தேவையான ஒரு வாக்குத்தத்தமாகவும், அதற்கான உறுதிபாட்டின் செயல்பாடாகவும்  திகழ்ந்தது! நமதாண்டவரின் மரணம் வரைக்கும், விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்கிற பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணம் செயல்பாட்டில் இருந்தது! சர்வேசுரனுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியவும், சகல நீதியின் விதிமுறைகளை நிறைவேற்றவும், அதற்கு தன்னையே கையளிக்கவும் வேண்டும் என்று மனுக்குலத்திற்குக் கற்பிப்பதற்காகவே, இவ்விதமாக  பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணத்தின் கீழ்  நமதாண்டவர்  பிறந்தார்! பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணத்தின் கீழ் இருக்கிறவர்களை இரட்சிப்பதற்காகவும், அதன் அடிமைத்தனத்தினின்று அவர்களை விடுவிப்பதற்காகவும், முந்தின ஊழியக்கார நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களுக்கு  சுயாதீனத்தை அளிக்கும்படியாகவும், புதிய ஏற்பாட்டின் விருத்த சேதனமாக, கிறீஸ்துநாதர் தாமே ஸ்தாபித்த  ஞானஸ்நானத்தின் மூலம் அவர்களை சர்வேசுரனுடைய  சுவீகார புத்திரர்களாக மாற்றும்படியாகவும், பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணத்தின் கீழ் நமதாண்டவருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டது! (கலா 4:5)

மகா பரிசுத்த தேவபாலனுக்கு விருத்த சேதனம்  செய்யப்பட்ட போது, அவருக்கு “சேசு” என்கிற மகா பரிசுத்த நாமம் சூட்டப்பட்டது! “இரட்சகர்” என்கிற அர்த்தமுள்ள இம்மகா பரிசுத்த நாமத்தைப் பிறக்க விருக்கிற தேவபாலனுக்கு சூட்ட வேண்டும் என்று அர்ச்.கபிரியேல் சம்மனசானவர் தாமே,  மங்கள வார்த்தைத் திருநிகழ்வன்று, மகா பரிசுத்த தேவமாதாவிடம், அறிவித்திருந்தார். இம்மகா பரிசுத்த நாமம், எவ்வளவு உன்னதமான அழகு வாய்ந்ததாகவும், எவ்வளவு மகிமை மிக்கதாகவும் திகழ்கின்றதென்றால், மகா பரிசுத்த திவ்ய குழந்தை சேசு, இத்திருநாமத்திற்கான அர்த்தத்தை ஒவ்வொரு மணித்துளி நேரமும் நிறைவேற்றுவதற்கு ஆசித்துக் கொண்டிருக்கிறார்! மகா பரிசுத்த தேவ பாலன்,  தமது விருத்த சேதனத்தின் சடங்கு நிறைவேற்றப்பட்ட அந்த மணித்துளி நேரத்தில் கூட, நமக்காக தமது திவ்ய திரு இரத்தத்தைச் சிந்தியதன் மூலமாக, தம்மையே நம்முடைய திவ்ய இரட்சகராகக் காண்பித்தார்!  ஏனெனில், அவர் சிந்திய திவ்ய திரு இரத்தத்தில், ஒரு துளி இரத்தமே, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து அகில உலகத்தையும் மீட்டு இரட்சிப்பதற்குப் போதுமானதாகவும், அதற்கு மேலானதாகவும் இருக்கிறது!

சிந்தனை: இப்புதிய வருடத்திற்கான சந்தர்ப்பத்தில்,இந்த திருநாளுக்கான மாபெரும் தேவ இரகசிய திருநிகழ்வு,  உலகத்திலும் மனித இருதயங்களிலும் தேவ ஊழியத்திற்கான பக்தி பற்றுதலும் தயாளமுள்ள தாராள குணமும் அதிகரிக்கும்படியாக  நிகழ்த்திய ஆச்சரியத்திற்குரியதும் உன்னதமானதுமான புதுப்பித்தலின் மூலமாக நாம் பயனடைவோமாக!  இந்த புதிய வருடம் பக்தி பற்றுதலுள்ளதும் ஞான ஜீவியத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறதுமான வருடமாக இருப்பதாக! இப்போது முடிவடைந்த முந்தின வருடத்தைப் போலவே, இந்த வருடமும் விரைவில் முடிந்து விடும்!  அது முடிவடைவதை நாம் காண்பதற்கு சர்வேசுரன் அனுமதிப்பாரானால்,  எவ்வளவு பாக்கிய சந்தோஷத்துடன், நாம் பரிசுத்தமான விதமாக இந்த வருட காலத்தை செலவிடுவோம்!


January 1 - FEAST OF CRCUMCISION OF OUR LORD


Life History of Saints in Tamil - Jan 1 வேதசாட்சியான அர்ச்‌. ஆல்மாகியுஸ்‌

ஜனவரி 1ம்‌ தேதி ‌ 

வேதசாட்சியான அர்ச்‌. ஆல்மாகியுஸ்‌       

கி.பி. 313ம்‌ வருடம்‌ மகா கான்ஸ்டன்டைன்‌ சட்டப்படி கிறீஸ்துவ வேதத்தை அங்கீகரித்து, ஏற்றுக் கொண்டு, அதற்கான அரச ஆணையை பிரகடனம்‌ செய்த பிறகு,காட்டு மிருகங்களிடம்‌, கிறீஸ்துவர்களை தள்ளிவிட்டு, உரோமையர்கள்‌ விளையாடும்‌ கொடூர விளையாட்டு நிறுத்தப்பட்டது. இருப்பினும்‌, ஆங்காங்கே, சில அஞ்ஞானிகளால்‌ ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில்‌, கிறீஸ்துவர்களை உபாதிக்கும்‌ அதே கொடூர விளையாட்டுகளைத் தொடர்ந்து‌ நடத்தி வந்தனர்! கிறீஸ்துவர்களை மிருகங்களுக்கு இரையாக போடும்‌ இக்கொடூர விளையாட்டு, மறுபடியும்‌ வேத விசுவாசத்தை இழந்தவனும்‌ வேத விரோதியுமான ஜூலியன்‌ ஆட்சிகாலத்தில்‌, அதிகார பூர்வமாக நாடெங்கிலும்‌ நடைபெறலாயிற்று. இச்சமயம்‌, கிளாடியேட்‌டர்ஸ்‌ என்ற யெரில்‌, தனிச்‌ சண்டையில்‌, கிறீஸ்துவர்கள்‌ இறக்கி விடப்பட்டனர்‌; மைதானத்தில்‌, கிறீஸ்துவர்கள்‌, இறக்கும்‌ வரை சண்டையிடும்‌ கொடூர விளையாட்டு நடைபெறலாயிற்று. 

அடுத்து வந்த ஹொனோரியுஸ்‌ சக்கரவர்த்தி, கி.பி.395ம்‌ வருடம்‌ முதல்‌, கி.பி.423ம்‌ வருடம்‌ வரை ஆட்சி செய்தார்‌; கத்தோலிக்கரான இவருடைய ஆட்‌சிகாலத்தில்‌, கிறீஸ்துவ வேதம்‌ நன்றாக வளர்ந்த போதிலும்‌, முந்தின அஞ்ஞானிகளுடைய ஆட்சியின்‌ காலத்திலிருந்த படியே, இரத்தவெறி கொண்ட கிளாடியேட்டர்ஸின்‌ கொடிய விளையாட்டு, இன்னும்‌ நிறுத்தப்படாமல்‌, விடப்பட்டிருந்தது. 

இருப்பினும்‌, கி.பி.404ம்‌ வருடம்‌, உரோமை சாம்ராஜ்ஜியத்தின்‌ கிழக்குப்‌ பகுதியிலிருந்து அர்ச்‌.ஆல்மாகியுஸ்‌,உரோமாபுரிக்கு வந்தார்‌. இவர்‌ ஒரு துறவி.ஐனவரி 1ம்‌ தேதியன்று, கிளாடியேட்டர்ஸின்‌ வீர விளையாட்டு எப்படி இருக்கிறது? என்று அந்த விளையாட்டு நடை பெற்ற ஸ்டேடியத்திற்கு, இவர்‌ சென்று பார்த்தார்‌. அங்கு, இரண்டு கிளாடியேட்டர்ஸ்‌ உயிர்போகும்‌ வரை இரத்தக்களரியாக சண்டை போட்டுக்கொண்டிருந்ததைப்‌ பார்த்து, மனமுருகியபடி, இவர்‌ மைதானத்திற்குள்‌ சென்று, இருவரையும்‌ பிரித்து விட முயற்சித்தார்‌; மேலும்‌, அவர்‌, “இன்று, நமதாண்டவர்‌ பிறந்த 8ம்‌ நாள்‌.விக்கரகங்களை வழிபடுவதை நிறுத்துங்கள்‌! அசுத்த பலிசெலுத்தும்‌ அஞ்ஞான சடங்குகளிலிருந்து விலகியிருங்கள்‌. கொலை செய்யக்கூடாது! என்று சர்வேசுரன்‌ நமக்குக்‌ கட்டளையிட்டிருக்கிறாரல்லவா? குறிப்பாக இந்தக்காட்டுமிரான்டி மக்கள்‌ கூட்டத்தினரை மகிழ்விப்பதற்காகக்‌ கொலை செய்வதையும்‌ சண்டைபோடுவதையும்‌ விலக்கி விடுங்கள்‌!” என்று கூக்குரலிட்டுக்‌ கூறினார்‌. 

இதைக்‌ கண்ட ஸ்டேடியத்தின்‌ பார்வையாளர்கூட்டம்‌, கோப வெறிகொண்டது. அவர்களுடைய விளையாட்டில்‌ தலையிடுகிற இத்‌துறவி யார்‌? என்று கூச்சலிட்டபடி, அவர்‌ அருகில்‌ வந்த மூர்க்கர்களுடைய கூட்டம்‌, அவர்‌ மீதுகற்களை எரிந்து, அவரைக் கொன்று போட்டது! மனிதன்‌ மனிதனைக்‌ கொல்லக்‌ கூடாது! என்று கூறி, மனித கொலையைத்‌ தடுக்க வந்த அர்ச்‌. ஆல்மாகியுஸ்‌, அந்த மூர்க்கர்களால்‌ இறுதியில்‌ கொல்லப்பட்டார்‌.  

இறுதியில்‌, அர்ச்‌.அல்மாகியுஸ்‌, அவரை உபாதித்துக்‌ கொன்றவர்கள்‌ மேலும்‌, அவர்களுடைய தீமையின்‌ மேலும்‌ வெற்றி கொண்டார்‌. ஏனெனில்‌, இந்த துயர செய்தியைப்‌ பற்றி அறிந்த ஹொனோரியுஸ்‌ சக்கரவர்த்தி, அர்ச்சிஷ்டவரின்‌ அறிவுரையை நாட்டு மக்கள்‌ ஏற்று ஜீவிக்க வேண்டும்!‌ என்று கட்டளையிட்டார்‌; அர்ச்‌. ஆல்மாகியுஸ்‌ ஒரு கிறீஸ்துவ வேதசாட்சி என்று சக்கரவர்த்தி கூறி, அர்ச்சிஷ்டவரை மகிமைப்படுத்தினார்‌; 404ம்‌ வருடம்‌, இனி ஒருபோதும்‌ கிளாடியேட்‌டர்ஸ்‌ சண்டை விளையாட்டு ‌ அனுமதிக்கப்படாது என்கிற நித்திய சட்டத்தையும்‌ பிரகடனம்‌ செய்தார்‌. 

வேதசாட்சியான அர்ச்‌.ஆல்மாகியுஸ்‌! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 



Life History of Saints in Tamil - Jan 1