*St. Lucian, P.M.*
*அர்ச். லூசியான் - குரு,வேதசாட்சி*
*(கி.பி. 312).*
இவர் சிரியா தேசத்தில் பிறந்தார். இவர் வாலிபனாயிருந்தபோதே இவருடைய தாயும் தந்தையும் இறந்துபோனபடியால், தனக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு, புண்ணியவாளரான மக்காரியுஸ் என்பவருக்கு சீஷனாகி, வேதாகமங்களை வாசிப்பதிலும் புண்ணியச் செயல்களைச் செய்வதிலும் காலத்தைச் செலவிட்டார். இவர் சாஸ்திரங்களைப் படித்தபின், குருப்பட்டம் பெற்று வேதம் போதித்துவந்தார். அக்காலத்தில் எழுந்த வேத கலகத்தில் அர்ச். லூசியான் பிடிபட்டு, சிறைப்படுத்தப்பட்டு, வெகு கொடூரமாய் உபாதிக்கப்பட்டார். அநேக நாட்களாய் இவருக்கு உணவு கொடுக்கப்படாததால், இவர் இளைத்து, களைத்துக் குற்றுயிராய் இருந்தார். அந்நேரத்தில், பசாசுக்குப் படைக்கப்பட்ட பண்டங்களை இவருக்குக் கொடுக்க, இவர் அவைகளை உண்ணாமல் ஒதுக்கிவைத்தார். மேலும் இவர் சங்கிலியால் கட்டப்பட்டு சிறையில் இருந்தபடியால், கிறீஸ்தவர்கள் கொண்டுவந்த அப்பத்தையும் இரசத்தையும் தமது நெஞ்சின்மேல் வைத்து தேவ வசீகரம் செய்து கிறீஸ்தவர்களுக்கு கொடுத்துவந்தார். மறுபடியும் இவர் நடுவனுக்குமுன் நிறுத்தப்பட்டு, வேதத்தை மறுதலிக்கும்படி பயமுறுத்தி உபாதிக்கப்பட்டபோது இவர் எதற்கும் அஞ்சாமல் தாம் கிறீஸ்தவன் என்று தைரியமாக சாட்சி கூறினார். இவரை சித்திரவதை செய்துக் கொலைசெய்யும்படி நடுவன் தீர்ப்பிட்டான். அதன்படியே சேவகர் இவரை வதைத்துக் கொல்லும்போது, தான் கிறீஸ்தவன் என்று சொல்லிக்கொண்டே உயிர்விட்டு வேதசாட்சி முடி பெற்றார்.
*யோசனை*
நமது சத்திய வேதத்தை சாக்குபோக்குச் சொல்லி ஒருபோதும் மறுதலிக்காதிருப்போமாக.