*சேசுக்கிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளின்பேரில் தியானங்கள்*.
*சாம்பல் புதன்*.
*முதல் தியானம்*
*தபசு காலத்தில் அவசியமாய் அநுசரிக்கவேண்டிய விசேஷங்கள்*:
*1-ம் ஆயத்த சிந்தனை*
- தேவ கட்டளையை மீறி நடந்த நமது ஆதித் தகப்பனைப் பிதாவாகிய சர்வேசுரன் பார்த்து “நீ உற்பத்தியான மண்ணுக்குத் திரும்பிப் போகுமட்டும் உன் நெற்றியின் வேர்வையால் உனது ஆகாரம் புசித்துத் தூசியாய் இருக்கிற நீ திரும்பவும் தூசியாய்ப் போகக்கடவாய்” என்று சொல்லும் பயங்கரமான வாக்கியத்தை நீ கேட்பதாகப் பாவித்துக்கொள்.
*2-ம் ஆயத்த சிந்தனை*
- உனது ஒன்றுமில்லாமையை உணர்ந்து எப்பொழுதும் உன்னைத் தாழ்த்தி அடிக்கடி மரணத்தைத் தியானித்து தவத்தால் சரீரத்தைத் தண்டித்து ஒறுத்துத் தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமாய் நடப்பதற்கான இஷ்டப்பிரசாதத்தை கட்டளையிட சேசுநாதரை மன்றாடுவாயாக.
முதற்பிரிவு யோசனை -
"ஓ! மனிதா! தூசியாயிருக்கிற நீ திரும்பவும் தூசியாய்ப் போவாய்" என்பதை நினைத்துக்கொள். முற்காலத்தில் சீவித்த பிதாப் பிதாக்களும் தீர்க்கதரிசிகளும், இன்னும் மற்றப் புண்ணிய ஆன்மாக்களும் தங்களுக்கு யாதோர் கஸ்தி நிர்ப்பந்தம், அல்லது தேவ கோபம் வரவிருக்கிறதை அறிந்தால் தங்கள் வஸ்திரங்களை உரிந்து போட்டுத் தவத்தின் அடையாளமாகப் பெரும்படியான வஸ்திரங்களை அணிந்து கொண்டும், தலைமேல் சாம்பலைத் தூவிக்கொண்டும், ஒருசந்தியால் சரீரத்தைத் தண்டித்துக் கண்ணீர் விட்டழுது சர்வேசுரன் தங்கள் பாவங்களைப் பொறுத்துத் தங்கள் மேல் இரக்கமாயிருக்கும்படி மகா பக்தி வணக்கத்துடன் வேண்டிக் கொண்டு வருவார்கள். அதே பிரகாரம் நமது தாயாகிய திருச்சபை, தன் பிள்ளைகளாகிய நமது பேரில் கவலைகொண்டு நாம் நமது
பாவங்களை நினைத்து மனஸ்தாபப்பட்டு அழுது அவைகளுக்குத் தகுந்த பரிகாரம் செய்யும் பொருட்டு, நம்மை எப்போதும் தூண்டி வருவதுடன் இந்தத் தபசுகாலத்தில் விசேஷ விதமாய் நமது சரீரத்தையும் அதன் இச்சைகளையும் அடக்கி ஒறுக்கும்படி இந்த நாற்பது நாட்களையும் நியமித்திருக்கின்றது.
ஆனால் இந்தப் பரிசுத்த காலத்தில் சுத்த போசனமாயிருந்து சில நாட்களில் ஒருசந்தி பிடிப்பதினால் திருச்சபையின் கோரிக்கையை நிறைவேற்றி விடுகிறோமென்று நிச்சயம் நினைக்கலாகாது, உபவாசம் பிடித்துச் சுத்த போசனமாய் இருப்பதுடன் நாம் அடிக்கடி கட்டிக்கொள்ளும் பாவங்களை ஒழித்து, அவைகளுக்கு சம்பந்தமான மனிதர்களையும் இடத்தையும் சமயத்தையும் விட்டு விலகி, அந்தந்த துர்க்குணங்களை ஜெயிக்கப் பிரயாசைப்பட்டு நமது துர் ஆசைகளையும் நினைவையும் தள்ளி நமது சரீரத்தை ஒறுத்துக் கண் பார்வை முதலியவைகளை அடக்கி, நாவை கட்டுப்படுத்தி நடப்போமாகில் அதுவே மெய்யான தபசின் அடையாளம். இவ்விதம் செய்கிறவர்கள்தான் திருச்சபையின் கோரிக்கைப் பிரகாரம் நடக்கிறவர்கள். இப்படிப்பட்டவர்கள்தான் தங்கள் பாவங்களை எளிதாய்த் தள்ளிப் புண்ணிய வழியில் நாளுக்கு நாள் வளர்ச்சியடைவதற்கான தேவ உதவியை ஏராளமாய்ப் பெறுகிறவர்கள்.
ஆகையால் பிரிய சகோதரனே, நீ இந்தப் பரிசுத்த காலத்தில் எந்தெந்த துர்க்குணங்களை விட வேண்டுமென்றும் எந்தெந்தப் புண்ணியங்களைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் தபசு காலத்திற்கு ஆரம்ப நாளாகிய இன்றைய தினம் தீர்மானித்துக் கொண்டு இந்த நாற்பது நாளும் நீ செய்யும் ஒறுத்தல் முயற்சியால் உன் சரீரத்தையும் அதன் தீய இச்சைகளையும் அடக்கிக் கீழ்ப்படுத்துவதற்கு இஷ்டப் பிரசாதத்தைச் சர்வேசுரன் உனக்கு அளிக்கும்படி மன்றாடுவாயாக,
*ஜெபம்*
ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துவே, உமது கசப்பான திருப்பாடுகளின் நேரத்தில் வியாகுல வாளால் தன் மகா பரிசுத்த ஆத்துமத்தில் ஊடுருவப்பட்ட உமது திருத்தாயாராகிய மகா பரிசுத்த கன்னிமாமரி, உமது கிருபாசனத்திற்கு முன்பாக, இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காகப் பரிந்து பேச வரமருளும்படி உம்மை மன்றாடுகிறோம். பிதாவோடும், இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் ஜீவிக்கிறவரும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமான உலக இரட்சகருமாகிய உம் வழியாக இந்த வரத்தை மன்றாடிக் கேட்கிறோம். ஆமென்.
*பரிசுத்த திருக்குடும்பமே எங்களை புண்ணிய வாழ்வு வாழ வழிநடத்துங்கள்*
*ஆமென்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக