Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 3 மே, 2018

மே மாதம் 3-ம் தேதி - திருச்சிலுவை கண்டெடுக்கப்பட்ட திருநாள் (Invention of the Holy Cross)

*மே மாதம் 3-ம் தேதி*
*Invention of the Holy Cross*           
*திருச்சிலுவை கண்டெடுக்கப்பட்ட*
*திருநாள் - (கி.பி. 326).*



உரோமை இராச்சியங்களை பிற மதத்தைச் சார்ந்த அரசர்கள் சில நூற்றாண்டுகளாக அரசாண்டு வந்தபோது அவர்களுக்குள் கான்ஸ்டான்டைன் என்னும் தைரியமுள்ள இராயர் திருச்சிலுவையால் அதிசயமான ஜெயங்கொண்டபின், அவர் சத்திய வேதத்தில் சேர்ந்து தமது பிரஜைகளும் அதே வேதத்தை அனுசரிக்கும்படி உத்தரவளித்தார். அவர் திருச்சிலுவையின் பேரால் ஓர் அழகிய தேவாலயத்தைக் கட்டத் தீர்மானித்தார். அவருடைய தாயாரான  அர்ச். ஹெலனம்மாள் ஜெருசலேம் நகருக்குச் சென்று திருச்சிலுவையைக் கண்டெடுக்க முயற்சித்தாள். பிற மதத்தினர் நமது கர்த்தர் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையின்மேல் கற்களையும் மண்ணையும் போட்டு, பெரிய மேடாக்கி அதன்மேல் ஒரு பொய்த் தேவதையின் கோவிலையும் கட்டியிருந்தார்கள். அர்ச்.ஹெலனம்மாள் மிகுதியான பணத்தைச் செலவுசெய்து, அக்கோயிலை இடித்து, மேட்டை வெட்டியெடுத்தபோது, மூன்று சிலுவைகளும், ஆணி, முள் முடி முதலியவைகளும் காணப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் நமது கர்த்தர் மரணமடைந்த சிலுவை எதுவென்று அறியமுடியாததால், மக்காரியுஸ் ஆயருடைய ஆலோசனைப்படி அவ்வூரில் சாகக்கிடந்த ஒரு ஸ்திரீயின்மேல் அந்த மூன்று சிலுவைகளும் ஒன்றன்பின் ஒன்றாய் வைக்கப்பட்டன. மூன்றாவது சிலுவை அவள்மேல் வைக்கப்படவே, அவள் பூரண சுகமடைந்ததால், அதுவே நமது கர்த்தர் அறையப்பட்ட சிலுவையென்று நிச்சயிக்கப்பட்டது. பிறகு அந்தப் புண்ணிய அரசியால் அவ்விடத்தில் ஒரு சிறந்த அழகான தேவாலயம் கட்டப்பட்டு, அதில் பரிசுத்த சிலுவை மிகுந்த வணக்கத்துடனும் பயபக்தியுடனும் ஸ்தாபிக்கப்பட்டது. இன்றுவரையிலும் கிறீஸ்தவர்கள் அதை வணங்கி வருவதுமட்டுமன்றி அங்கு அநேக புதுமைகளும் நடந்து வருகின்றன. 

*யோசனை*

அவமானத்திற்குரிய சிலுவை மரத்தை நமது கர்த்தர் பொறுமையுடன் அங்கீகரித்ததினால், அது மகிமைப்படுத்தப்பட்டது போல, நமது சிலுவையாகிய துன்பதுரிதம், வியாதி முதலியவைகளை நாம் பொறுமையுடன் சகிப்போமாகில் அவை நமக்கு நித்திய மகிமைக்குக் காரணமாகும்.

St. Therese Daily Thoughts 8 (in Tamil)

ஓ இந்த உலக பொருள்களோடு ஒப்பிடும் பொது என் இதயம் எவ்வளவு பெரியதாக தோன்றுகிறது.  ஏனென்றால் அவை எல்லாம் சேர்ந்தும் கூட என்னை திருப்திப்படுத்த முடியாதவையாக இருக்கின்றன.  ஆனால் என் இதயத்தை சேசுவோடு நான் ஒப்பிடும் பொது அது எவ்வளவு சிறியதாக தோன்றுகிறது.


Download Tamil Catholic Songs

புதன், 2 மே, 2018

மே மாதம் 2-ம் தேதி - அர்ச். அத்தனாசியுஸ் (St. Athanasius)

*மே மாதம் 2-ம் தேதி*
*St. Athanasius, Pat.*          
*அர்ச். அத்தனாசியுஸ்*
*பிதா - (கி.பி. 373).*


கீர்த்தி பெற்ற சாஸ்திரியான அத்தனாசியுஸ் கல்வி சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து குருப்பட்டம் பெற்றார். இவருடைய ஞானத்தாலும்          புண்ணியங்களாலும் அலெக்சாந்திரியா நகருக்குப் பிதாப் பிதாவாக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் ஆரியுஸ் என்பவனாலும் அவனைச் சேர்ந்த கூட்டத்தாராலும் திருச்சபைக்கும் தேசத்திற்கும் வெகு துன்பங்களும் நஷ்டங்களுமுண்டாயின. தங்கள் நோக்கத்தில் வெற்றிபெற இத்துஷ்டப் பதிதர் எத்தகைய பாவ அக்கிரமங்களுக்கும் பயப்படாமல், தங்கள் அபத்த மதத்தைத் தேசமெங்கும் பரப்ப சகல முயற்சியையும் செய்தபடியால், புண்ணியவாளரான அத்தனாசியுஸ் ஜெப தபத்தாலும், பிரசங்கத்தாலும், வேதத் தர்க்கத்தாலும் திருச்சங்கத்தாலும், அப்பதித மதத்தை அடக்கித் தடுத்து வந்தார். இதனால் அந்தப் பதிதர் கோப வெறிகொண்டு பரிசுத்த பாப்பரசரிடம் இவருக்கு விரோதமாய்க் கூறிய அவதூறு எல்லாம் வீணாகப்போனதினால், பதிதர் அத்தனாசியுஸ் மாய வித்தைக்காரன் என்றும், விபசாரியென்றும், கொலை பாதகனென்றும் இராயனிடம் முறையிடவே, இக்குற்றங்களை விசாரிக்கும்படி இராயன் உத்தரவிட்டான். அத்தனாசியுஸால் கெடுக்கப்பட்டாள் என்று கூறப்பட்ட ஸ்திரீயே, அவர் அப்படிச் செய்யவில்லை என்று சாட்சி கூறினாள். இவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டவனோ நீதிஸ்தலத்தில் தெய்வாதீனமாய் வந்து நின்றபடியால், அத்தனாசியுஸ் மாசற்றவரென்று தெரியவந்தது. ஆயினும் ஆரியப் பதிதனான இராயனுடைய அநியாய உத்தரவால், ஆரியர் அத்தனாசியுசுடைய கோவிலைக் கைப்பற்றிக்கொள்ளச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அத்தனாசியுஸ் ஜெப தபத்தாலும் ஒருசந்தியாலும் ஆண்டவரைப் பார்த்து, இந்த தேவ துரோகத்தை தடுக்கும்படி மன்றாடினார்.  குறித்த நாளில் ஆரியுஸ் தன் பெருங் கூட்டத்தாரோடு மேள தாளத்துடன் ஆரவாரமாக தேவாலயத்திற்குப் போகும்போது, திடீரென்று அவனுக்கு வியாதியுண்டாகி, வயிறு வெடித்து வழியில் மாண்டான். இதனால் கிறீஸ்தவர்களுக்குச் சந்தோஷமும் பதிதருக்கு வெட்கமும் உண்டாயிற்று. அத்தனாசியுஸ் நான்கு இராயர் கீழ் தமது மறைமாவட்டத்தை ஆண்டு ஐந்து தடவை நாடுகடத்தப்பட்டு, சகலவித கஷ்டம் துன்பங்களை அனுபவித்த போதிலும் தளராது தைரியத்துடன் சத்தியத்தைப் போதித்து, சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கி, தமது முதிர்ந்த வயதில் மோட்ச முடி பெற்றார்.

*யோசனை*

நமது ஞானப் போதகருக்கு மனவருத்தம் உண்டாக்காமல் அவர்களை மதித்து, அவர்களுக்குக் கீழ்ப்படிவோமாக.

மே மாதம் 1-ம் தேதி - அர்ச். பிலிப்பும் ஜேம்சும் (SS. Philip & James)

*மே மாதம் 1-ம் தேதி*
*SS. Philip & James, Ap.*        
*அர்ச். பிலிப்பும் ஜேம்சும்*
*அப்போஸ்தலர்கள்*


நமது கர்த்தர் பெத்சாயிதா என்னும் ஊரில் பிலிப் என்பவரை தம்மைப் பின்செல்லும்படி அழைத்தார். அதற்கு அவர் நான் என் வீட்டுக்குப் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன் என்றார். மரித்தவர்கள் மரித்தவர்களைப் புதைக்கட்டும், நீ நம்மைப் பின்செல் என்ற மாத்திரத்தில் பிலிப் கர்த்தரைப் பின்சென்றார். பிறகு பிலிப், நத்தானியேல் என்பவரை சேசுநாதரிடம் அழைத்துக்கொண்டு வந்தார். இவர் கர்த்தருடைய பிரசங்கங்களைக் கேட்கவும் புதுமைகளைப் பார்க்கவும் பாக்கியம் பெற்றார். இராப்போசனத்திற்குப்பின் சேசுநாதர் தமது பிதாவைப்பற்றி பிரசங்கித்தபோது, சுவாமி பிதாவை எங்களுக்குக் காட்டும். அதுவே போதுமென்று பிலிப் சொன்னதை நமது கர்த்தர் கேட்டு, பிதாவோடு நானும் என்னோடு பிதாவும் இருக்கிறாரென்று அறிவாயாக என்றார். அர்ச். பிலிப் தரிஜியா தேசத்தில் வேதம் போதித்து முதிர்ந்த வயதில் மரித்து நித்திய சம்பாவனையைப் பெற்றார்.

ஜேம்ஸ் அல்லது சின்ன இயாகப்பர் என்பவர் 12 அப்போஸ்தலர்களில் ஒருவர். கர்த்தர் மோட்சத்திற்கு ஆரோகணமானபின் ஜேம்ஸ் ஜெருசலேம் நகருக்கு மேற்றிராணியாரானார். இவர் ஒருசந்தி உபவாசமிருந்து பெருந் தபசியாய் இருந்தார். இவர் இடைவிடாமல் சாஷ்டாங்கமாய் விழுந்து ஜெபம் செய்தமையால், இவருடைய இரு முழங்கால்களும் நெற்றியும் ஒட்டகத்தின் குளம்பு போல உறுதியாய் காய்த்துப் போயின. மழையின்மையால் பஞ்சமுண்டான போது, ஜேம்ஸ் தமது கைகளை விரித்து ஜெபித்த மாத்திரத்தில் பெரும் மழை பெய்தது. இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்ட யுதர்கூட இவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைப் பக்தியுடன் தொடுவார்கள்.  இவர் ஒரு பொது நிருபம் எழுதினார். இவருடைய ஜெபத்தையும் தபத்தையும் கண்ட யூதர் இவரை நீதிமான் என்பார்கள். அர்ச்.சின்னப்பர் யூதர் கையினின்று தப்பித்துக்கொண்ட போது, துஷ்ட யூதர் தங்கள் கோபத்தை ஜேம்ஸ் மேல் காட்டி அவரைக் கல்லாலெறிந்து கொன்றார்கள்.

*யோசனை*

யாதொருவனுக்கு தேவ அழைத்தல் உண்டாகும்போது இரத்தப் பாசத்தையும் முகத்தாட்சண்யத்தையும் பாராமல் தேவ அழைப்புக்குக் காது கொடுக்க வேண்டும்.

Daily thoughts of St. Therese 7 (in tamil)

என் இருதயம் உமக்காக பெரு மூச்சி விடுகிறது.  ஓ சேசுவே, என் ஒரே ஆசை, உம்மை சொந்தமாகக் கொண்டிருப்பதுதான் என் ஆண்டவரே.

Daily thoughts of St. Therese 6 (in tamil)

என் அன்புள்ள அன்னை மாமரியே நான் உங்களை விட அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறன்.  நான் உங்களை என் தாயாக கொண்டிருக்கிறேன்.  அனால் நீங்கள் அன்பு காட்ட எனக்கு இருப்பது போல ஆசிர்வதிக்கப்பட்ட கன்னிகை உங்களுக்கு இல்லை.

திங்கள், 30 ஏப்ரல், 2018

*St. Catharine of Sienna, V. *அர்ச். சியென்னா கத்தரீனம்மாள்* *கன்னிகை - (கி.பி. 1380).*

*ஏப்ரல் மாதம் 30-ம் தேதி*

*St. Catharine of Sienna, V.*           
*அர்ச். சியென்னா கத்தரீனம்மாள்*
*கன்னிகை - (கி.பி. 1380).*   

சீயென்னாவில் பிறந்த கத்தரீனம்மாள் சிறு வயதில் மிகவும் பக்தியுள்ளவளாய், ஜெபத்தியானத்திலும் ஞானப் புத்தகங்களை வாசிப்பதிலும் வெகு நேரம் செலவழித்து, தன் கன்னிமையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தாள். இவளுக்கு வயது வந்தபின், இவள் மணமுடித்துக்கொள்ள சம்மதியாததினால், இவள் பெற்றோர் இவள்மட்டில் கோபங்கொண்டு கடின வேலை செய்யும்படி கட்டளையிட, இவள் மனம் சோர்ந்துபோகாமல் சந்தோஷமாய் அவைகளைச் செய்துவந்தாள். ஜெபத் தியானங்களையும் தவச்செயல்களையும் நடத்தி அடிக்கடி தேவதிரவிய அனுமானங்களைப் பெற்றுவந்தாள். பசாசால் கடினமாகச் சோதிக்கப்பட்ட போதிலும், ஜெபத்தால் அவைகளை ஜெயித்தாள். ஒரு தடவை இவள் இருதயத்தில் உண்டான அசுசியான தந்திரச் சோதனைகளைத் தவிர்த்த பிறகு கர்த்தர் தரிசனமாகவே, சுவாமி! அசுசியான நினைவுகள் எனக்கு உண்டான சமயத்தில் நீர் எங்கே இருந்தீர் என்று வினவிய போது, நீ அதை வெறுத்து தள்ளினதால் உன்னிடமே இருந்தோம் என்றார். அநேக மாத காலம் யாதொரு உணவுமின்றி தேவநற்கருணையால் மாத்திரம் பிழைத்து வந்தாள். கர்த்தருடைய பாடுகளின் மட்டில் இவள் அதிக பக்தி வைத்திருந்தமையால் இவள் தலையில் முள்முடியையும், இரு பாதங்களிலும், விலாவிலும் திருக்காயங்களையும் பெற பாக்கியம் பெற்றாள். பின்பு இவள் அர்ச். தோமினிக் 3-ம் சபையில் சேர்ந்து வீட்டிலிருந்துகொண்டே மகத்தான காரியங்களை செய்துவந்தாள். தன் பக்தியுள்ள ஜெபத்தால் கணக்கற்ற பெரும் பாவிகளை மனந்திருப்பினாள். ஒருவருக்கொருவர் கோப வைராக்கியமாயிருந்த பிரபுக்களையும் அரசரையும் சமாதானப்படுத்தினாள். பாப்பரசருக்குக் கீழ்ப்படியாமல் குழப்பம் செய்தவர்கள் இவள் புத்திமதியால் பாப்பாண்டவருடைய பொறுத்தலைக் கேட்டார்கள்.  திருச்சபையின் நன்மைக்காக இப்புண்ணியவதி நெடும் பிரயாணஞ் செய்து, பாவிகளைத் மனந்திருப்பி, சண்டையிடுபவரைச் சமாதானப்படுத்தி, அநேகப் புதுமைகளைச் செய்து, 33-ம் வயதில் பாக்கியமான மரணமடைந்து நித்திய சம்பாவனைக்குள்ளானாள்.         

*யோசனை*

நமது இருதயத்தில் எவ்வளவு அசுசியான நினைவுகள் உண்டான போதிலும், அதை உடனே வெறுத்து அகற்றிவிடப் பழகுவோமாக.

St. Therese Daily Thoughts 5

ஒரே ஒரு காரியத்துக்குத்தான் நான் பயப்படுகிறேன்.  என் சொந்த சித்தத்தைத் தொடர்ந்து செய்வது தான் அது.  அதை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளும்.  என் ஆண்டவரே! ஏனென்றால் நீர் எதையெல்லாம் தேர்ந்து கொள்கிறீரோ, அதை எல்லாம் நானும் தேர்ந்து கொள்கிறேன்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

*St. Peter, M.* *அர்ச். இராயப்பர்* *வேதசாட்சி - (கி.பி. 1252).

*ஏப்ரல் மாதம் 29-ம் தேதி*

*St. Peter, M.*              
*அர்ச். இராயப்பர்*
*வேதசாட்சி - (கி.பி. 1252).*   

இராயப்பர், இத்தாலி தேசத்தில் கத்தாரியென்னும் பதித மதத்தைத் தழுவிய பெற்றோரிடமிருந்து பிறந்தார். இவரை இவர் தந்தை கல்வி கற்கும்படி ஒரு கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைத்தார். ஒரு நாள் இராயப்பருடைய உறவினர்களில் ஒருவன், நீ பள்ளியில் படித்ததை சொல்லென்ற போது, இராயப்பர் விசுவாச மந்திரத்தைச் சொன்னார். அந்த மந்திரத்தை படிக்காதபடி அவரை அவரது வீட்டார் தடுத்தார்கள். இராயப்பர் பெரியதோர் நகருக்குச் சென்று கல்வி கற்று ஞானஸ்நானம் பெற்று, அர்ச். தோமினிக் சபையில் சேர்ந்து உத்தம துறவியாய் விளங்கினார். இவர்  அடிக்கடி பக்தியுடன் ஜெபித்தார். கடின தவமுயற்சிகளைச் செய்தார்.  மடத்திலுள்ள தாழ்ந்த வேலைகளைச் செய்தார். இவர் அநியாயமாய்க் குற்றஞ் சாட்டப்பட்டு சிரேஷ்டரால் தண்டிக்கப்பட்டபோது, அதை மகா பொறுமையுடன் சகித்துக்கொண்டார். இராயப்பர் குருப்பட்டம் பெற்று பதிதர் மனந்திரும்பும்படி இடைவிடாமல் பிரயாசைப்பட்டு வந்ததினால், கணக்கில்லாத பதிதர் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள். இவர் வீதியில் பிரசங்கிக்கும்போது, எவ்வளவு திரளான ஜனங்கள் இவர் பிரசங்கத்தைக் கேட்க வருவார்களென்றால், இவர் ஜனநெரிசலில் அகப்பட்டு துன்புறாதபடிக்கு இவர் அவ்விடத்தினின்று தூக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுவார். இவர் ஒவ்வொரு ஊருக்கும் போகும்போதும்,  அவ்வூரார் இவரை வாத்திய இசையுடன் எதிர்கொண்டு, சுற்றுப்பிரகாரமாய் இவரை அழைத்துப்போவார்கள். பதிதரோ இவர் மட்டில் பகைமை கொண்டு, ஒருநாள் இவர் தனியாகப் போகும்போது இவரைத் தாக்கிக் கொலை செய்தார்கள். இராயப்பர் வேதசாட்சி முடி பெற்றபின் இவரால் நடந்த அற்புதங்களைக் கண்ட பதிதர் கூட்டங் கூட்டமாய்ச் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள்.         

*யோசனை*

பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திற்கு  அனுப்பி அவர்கள் ஞானோபதேசம் கற்க முயற்சி செய்வார்களாக.

St. Therese Daily Thought 4

பூமியின் மீதுள்ளவர்களுக்கு நன்மை செய்வதில் என் விண்ணக வாழ்வை நான் செலவிடுவேன்.  இது சாத்தியம் இல்லாதது அல்ல.  ஏணென்றால் வான தூதர்கள் கடவுளின் காட்சியை எப்போதும் கண்டு அனுபவித்து கொண்டிருந்தாலும், அவர்கள் நம்மை கண்காணிக்கிறார்கள்.  இல்லை, உலக முடிவு வரையிலும் என்னால் ஓய்வெடுக்க முடியாது.  





Download Tamil Catholic Songs

சனி, 28 ஏப்ரல், 2018

*SS. Didymus & Theodora, MM.* *அர்ச். திதிமுசும்* *தெயதோரம்மாளும்*

*ஏப்ரல் மாதம் 28-ம் தேதி*

*SS. Didymus & Theodora, MM.*              
*அர்ச். திதிமுசும்*
*தெயதோரம்மாளும்*
*வேதசாட்சி - (கி.பி. 304).*   

தெயதோரா கிறீஸ்தவளாயிருந்ததினால் பிடிபட்டு அதிகாரிக்குமுன் கொண்டுவந்து விடப்பட்டபோது, அவன் இவளுக்கு நயபயத்தைக் காட்டி வேதத்தை மறுதலிக்கும்படி கட்டளையிட்டும், இவள் அதற்கு சம்மதிக்க வில்லை. அதிபதி இவளுடைய சிறந்த வம்சத்தையும், இவளுடைய அழகையும் இவளுக்கு எடுத்துக் கூறி, கிறீஸ்தவ வேதத்தை விடும்படி கட்டாயப்படுத்தினான். அப்படியிருந்தும் இவள் வேதத்தில் உறுதியாயிருப்பதைக் கண்டு இவளைச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான். சிறையில் துஷ்டரால் தன்னுடைய கற்புக்குப் பழுது உண்டாகாதபடி ஆண்டவரை இவள் உருக்கத்துடன் மன்றாடினாள். அச்சமயத்தில், ஒரு சேவகன் சிறையில் பிரவேசிப்பதைக் கண்டு இவள் கலங்கினாள். அப்போது சேவகனுடைய உடையை அணிந்து வந்த திதிமுஸ் இவளுக்குத் தைரியமளித்து, தன் உடுப்பை அணிந்துகொண்டு தப்பித்துக்கொள்ளும்படி கூறவே, இவளும் அவ்வாறே வெளியே தப்பிச் சென்றாள். சிறையில் நடந்த சம்பவத்தை அதிபதி கேள்விப்பட்டு, திதிமுஸின் தலையை வெட்டும்படி கட்டளையிட்டான். திதிமுஸ் கொலைக்களத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிரச்சேதம் செய்யப்படும் தருவாயில், தெயதோரா அங்கு சென்று, நான்தான் சிறையினின்று என் கற்புக்கு பழுதுண்டாகாதபடி ஓடிப்போனவள். என்னைச் சிறையிலிருந்து காப்பாற்றிய இந்தப் புண்ணியவானுடன் வேதசாட்சி முடி பெற ஆசையாயிருக்கிறேன் என்று கூறி, அன்றே அவளும் தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றாள்.          

*யோசனை*
நமது கற்புக்குப் பழுதுண்டாகக்கூடிய மனிதர், இடம் முதலியவற்றைக் கண்ணிமைக்கும் நேரத்தில் விட்டு விரைந்தோடுவாமாக.

St. Zita, V *அர்ச். ஜீத்தம்மாள்*

*ஏப்ரல் மாதம் 27-ம் தேதி*

*St. Zita, V.*              
*அர்ச். ஜீத்தம்மாள்*
*கன்னிகை - (கி.பி. 1272).*   

ஜீத்தம்மாள் தேவ பயமும் பக்தியுமுள்ள தன் தாயாரால்              வளர்க்கப்பட்டதால், சிறுவயதிலேயே புண்ணிய வழியில் சிறந்து வளர்ந்தாள். வெகு நேரம் ஜெபத்தியானத்தில் செலவழிப்பாள். இவளுடைய தாயார் ஏழையானதால், ஜீத்தம்மாளுக்கு 12 வயது நடக்கும்போது இவள் ஒரு செல்வந்தர் வீட்டில் வேலைக்காரியாக விடப்பட்டாள். இச்சிறுமி முனங்காமல் தனக்கு அளித்த வேலையை சுறுசுறுப்புடன் செய்வாள். தன் எஜமானர்களால் அநியாயமாய்க் கோபித்துத் தண்டிக்கப்படும்போதும், அவ்வீட்டில் வேலை செய்யும் உடன் வேலைக்காரர்களால் தூஷிக்கப்படும்போதும், ஜீத்தம்மாள் அவை எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்து, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்பாள். அதிகாலையில் எழுந்து ஜெபங்களை முடித்துக்கொண்டு திவ்விய பலிபூசை கண்டு தன் வேலையைத் தொடங்குவாள். வாரத்தில் சில நாட்கள் ஒருசந்தி பிடிப்பாள். அடிக்கடி நன்மை வாங்குவாள். இடைவிடாமல் மனவல்ய ஜெபங்களை ஜெபித்து ஒறுத்தல் முயற்சி செய்வாள். தன் சம்பளத்தை ஏழைகளுக்கு கொடுப்பாள். பொய், திருட்டு முதலியவற்றை அறியாதவள். இவளுடைய புண்ணியத்தையறிந்து இவள் எஜமானி அதிசயித்து, இவள் மூலமாய்த் தன் வீடு ஆசீர்வதிக்கப்பட்டதென்று கண்டு, இவளை உயர்வாக எண்ணி, தன் பிள்ளைகளையும் குடும்பப் பொறுப்புகளையும் இவள் கையில் ஒப்புவித்தாள். ஒருநாள் இவள் கோவிலுக்குப் போய்விட்டு சற்று தாமதமாக வீட்டுக்கு வந்தபோது, இவள் சுட வேண்டிய அப்பங்கள் சம்மனசுகளால் சுடப்பட்டிருப்பதைக் கண்டு அதிசயித்தாள். இப்புண்ணியவதி 60 வயது வரை ஊழியம் செய்து அர்ச்சியசிஷ்டவளாகக் காலஞ் சென்றாள்.  இவள் மரித்தபின் இவள் மூலமாய் 150 புதுமைகள் நடந்தன.  இவள் இறந்த 300 வருஷங்களுக்குப்பின் இவள் கல்லறையைத் திறந்து பார்த்தபோது இவள் சரீரம் அழியாமலிருந்தது.         

*யோசனை*

நாமும் இந்தப் புண்ணியவதியைக் கண்டுபாவித்து எதார்த்தம், பிரமாணிக்கம், சுறுசுறுப்பு முதலிய புண்ணியங்களை அனுசரித்து, எவ்வித வேலையிலிருந்த போதிலும் வேதக் கடமைகளை ஒருபோதும் அசட்டை செய்யாமலிருப்போமாக.

St. Therese Daily Thought 3

துன்பத்தை தவிர வேறு எதையும் நாம் எதிர்பார்க்காமல் இருக்கும் பொது மிக சிறிய சந்தோசம் வந்தாலும் நாம் அதைக் கண்டு வியப்படைகிறோம்.  ஆனால் அந்நேரத்தில், துன்பத்தை விலை மதிப்பு மிக்க ஒரு பொக்கிஷமாக நாம் தேடும்போது, அந்த துன்பமே நமக்கு எல்லாவற்றிலும் பெரிய மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.


Download Tamil Catholic Songs

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

Daily Thoughts of St. Therese 2

ஓ என் அன்பரே, உமது பரிசுத்த திட்டங்களை என்னில் முழுமையாக நிறைவேற்றுமாறு, நான் என்னை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.  அவற்றின் பாதையில் படைக்கப்பட்ட எதுவும் தடையாக இருக்க அனுமதிக்க மாட்டேன்.

வியாழன், 26 ஏப்ரல், 2018

Daily thoughts of St. Therese

ஓ என் ஆண்டவரே, கெட்ட மனிதர்களின் நன்றியற்ற தனத்திற்கு எதிராக நான் உமக்கு ஆறுதல் தர விரும்புகிறேன்.  உம்மை மனம் நோகச் செய்யும் சுதந்திரத்தை என்னிடம் இருந்து எடுத்தருளும் என்று உம்மை இறந்து மன்றாடுகிறேன்.

















ஏப்ரல் 26, 2018