அர்ச்.பெர்னார்டின் சபையினரை சந்தித்தல்
அதன்பிறகு, அங்கிருந்து மோன்ட்பெல்லியர் நகருக்கு அத்துறவியர் சிலருடன் இருவரும் சென்றனர். அங்கிருந்த அச்சபைமடத்தில் தான், பாப்பரசரால் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவரும் சபையின் அதிபருமான சங்.ஆர்னால்ட் சுவாமியாரும் மற்றும் மற்ற இரு உறுப்பினர்களான சங்.ருடால்ஃப் சங்.பீட்டர் என்ற இரு துறவியரும் இருந்தனர். அந்த மடாதிபதியான சங்.ஆர்னால்ட் சுவாமியார் வந்.டீகோ ஆண்டகையிடம், “பரிசுத்த தந்தை பாப்பரசர் மட்டும் இம்மக்களை மனந்திருப்பும் அலுவலை எங்களுக்குக் கட்டளையிட்டிராவிட்டால், நாங்கள் உடனே சிட்யோக்ஸ் மடத்திற்கு திரும்பி சென்றிருப்போம். இதுபோன்ற இருதயத்தைக் கசக்கிப் பிழியும் அலுவலை இதுவரை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று கூறினார். வந்.டீகோ ஆண்டகையும் அர்ச்.சாமிநாதரும் அத்துறவியர் ஆல்பிஜென்சிய பதிதத்தை ஒழிக்கும் அலுவலில் உற்சாகமிழந்ததற்கான காரணத்தை உணர்ந்தனர். 50 வருடங்களுக்கு முன்பு தான் அச்சபையின் நிறுவனரும் அத்துறவற சபைக்கு மாபெரும் ஒளியாகவும் திகழ்ந்த அர்ச்.பெர்னார்ட் இதுபோன்றகாரணத்தினாலே மனமுடைந்து போனதை அவருடைய சரித்திரத்தில் பார்க்கிறோம்.
காலம் இன்னும் மாறவில்லை. அப்போது கிறீஸ்துவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து மோன்பெல்லியர் நகரில் ஒரு கூட்டத்தை நடத்தினர். அதில் பாப்பரசரால் ஏற்படுத்தப்பட்டதுறவியருடைய தூதுக்குழுவினர், ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் அவற்றின் தோல்விக்கான காரணங்களைப்பற்றியும் தர்க்கித்தனர். அச்சமயம் அந்நகருக்கு புதிதாக வந்திருக்கும் வந்.டீகோ ஆண்டகை மற்றும் அர்ச்.சாமிநாதரைப் பற்றிக் கேள்விபட்ட கூட்டத்தினர், அவர்கள் இதற்கு முன்பு ஒரு சமயம் அங்கு வந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகளையும் அறிந்திருந்ததால் (அத்தியாயம் 4iபார்க்கவும்) அவர்களையும் தங்களுடைய கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தனர்.
அதனை ஏற்று இருவரும் கூட்டத்திற்கு வந்தனர். இதுவரை ஆல்பிஜென்சிய பதிதர்கள் ஏற்படுத்திய நாசகரமான சீரழிவுகள், அப்பதிதத்தை அழிப்பதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள், ஏமாற்றங்கள் தோல்விகள் பற்றியெல்லாம் மிக விரிவாக இவ்விருவருக்கும் எடுத்துரைக்கப்பட்டன. உத்தம கத்தோலிக்கு வேத விசுவாசம் தனிப்பட்ட மனிதரின் துர்மாதிரிகையையோ அல்லது நன்மாதிரிகையையோ மட்டும் சார்ந்திருக்கவில்லை. மாறாக திருச்சபையால் வெளிப்படுத்தப்பட்ட தவறா வரம்பெற்ற சர்வேசுரனுடைய உன்னத வார்த்தையை மட்டும் தான் சார்ந்திருக்கின்றது. வந்.டீகோ ஆண்டகை பதிதர்களை முறியடிக்க முற்பட்ட துறவியரின் ஜீவியமுறையைப்பற்றியும் பதிதர்களின் ஜீவிய முறையைப் பற்றியும் விசேஷமாக விசாரிக்கலானார்.
அவர் உடனே கூட்டத்தினரிடம், “கத்தோலிக்கு வேதபோதகத்தில் ஈடுபட்டிருந்த துறவியா;, சுவிசேஷத்தில் கூறப்பட்ட தரித்திரத்தை அணிந்து கொள்ளாததால், ஆன்ம இரட்சணிய அலுவலுக்கு அதுவே மாபெரும் தடையாக இருந்தது” என்று கூறினார். முத்.ஜோர்டன் சகோதரர் இதைப்பற்றி தன் அர்ச்.சாமிநாதசபை வரலாற்றின் குறிப்பேட்டில், “ வந்.டீகோ ஆண்டகை அக்கூட்டத்தினரிடம், “பதிதர்கள் தங்களுடைய கவர்ச்சியான போதகங்களையும், வெளியரங்கத்தில் மாபெரும் பரிசுத்தமான தோற்றத்தையும் கொண்டு எளிய மனிதரையும் வசிகரித்தனர். ஆனால் நமது கத்தோலிக்க வேதபோதக துறவியர் மாபெரும் பரிசாரகக் கூட்டத்தினருடனும் பல குதிரைவிரர்கள் புடைசுழ்ந்துநிற்கஆடம்பரமான ஆடைகளுடன் அங்கு போதித்து வந்துள்ளனர். எனவே சகோதரரே! இவ்வாறு நிங்கள் செயல்படுவது நன்றல்ல. அப்பதிதர்கள் எளிய ஆத்துமங்களை தரித்திரமும் தபசும் நிறைந்த வெளித்தோற்றத்துடன் தங்கள் பக்கம் இழுக்கின்றனர். அதற்கு மாறான ஆடம்பரமான தோற்றத்தில் இருக்கும் நிங்கள் அவர்களுக்கு எந்த ஞான உபதேசத்தையும் பயனளிக்கும் விதத்தில் போதிக்கமுடியாது. அவர்கள் அதனால் இடறல்பட்டு அழிந்து போவார்கள். ஆனால், உங்களால் அவர்களுடைய இருதயங்களைத் தொட முடியாது” என்று கூறினார்” என்று குறிப்பிடுகின்றார்.
வந்.டீகோ ஆண்டகையின் இவ்வார்த்தைகள் அக்கூட்டத்தினரை ஓரளவிற்கு தேற்றின. ஆனால் அத்தகைய கடினமான ஆலோசனைகளைப் பின்பற்ற யாருக்கும் துணிவு வரவில்லை. அக்கூட்டத்தினர், உடனே அத்தகைய தவக்கோலத்துடன் தங்களை வழிநடத்துபவர் யாரும் இல்லையே என்று உணர்ந்தனர்.“மிக அருமை ஆண்டவரே! நாங்கள் என்ன செய்ய விரும்புகிறிர்கள்?” என்று ஆண்டகையிடம் கேட்டனர். ஆண்டவரின் இஸ்பிரீத்துவானவர் தன் மேல் இறங்கியவராக, வந்.ஆண்டகை “இப்பொழுது நான் செய்வதைச் செய்யுங்கள்” என்றார். பிறகு, தன் பரிசாரகர் அனைவரையும் ஓஸ்மா மேற்றிராசனத்திற்கு அனுப்பிவிட்டார்.
அர்ச்.சாமிநாதரும்,சில திருச்சபை அதிகாரிகளும் மட்டுமே அவருடன் இருந்தனர். வேதசத்தியங்களைக் கொண்டு பதிதர்களிடம் வாதிக்கும்படியாக வேத புத்தகங்களையும், கட்டளை ஜெபம், தேவசங்கீத பாடல்களை ஜெபிப்பதற்கு தேவையான ஜெபபுத்தகங்களை மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்டனர். அக்கூட்டத்தினர் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்கான தங்களுடைய நன்மாதிரிகையுள்ள தலைவராக, வந்.டீகோ ஆண்டகையையே, ஒருமுகமாக பாப்பரசருடைய அனுமதியுடன் தேர்ந்தெடுத்தனர். † (தொடரும்)
அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 8
அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6