“நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்.”
1917, மே 13 அன்று நடந்த பாத்திமா மாதாவின் முதல் காட்சியில், "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்ற லூசியாவின் கேள்விக்கு மாதா, "நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்" என்று பதிலளித்தார்கள். உண்மையில், "நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்" என்று மாதா சொல்லியிருந்தாலும், அது உண்மையாகவே இருந்திருக்கும். ஆனால் ஆழ்ந்த பொருள் இருந்திருக்காது. ஆனால், "நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்” என்ற வார்த்தைகள் ஒரு வகையில், "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே!" என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றன. தேவமாதா, இரக்கங்களின் பிதாவிடமிருந்து தான் பெற்ற ஒரு விசேஷ வரப்பிரசாதத்தால், முழு உண்மையோடு,"நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்” என்று அறிக்கையிடத் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
திவ்ய கன்னிகை, அர்ச். லூயிஸ் த மோன்ட்போர்ட்டின் வார்த்தைகளின் படி, "தெய்வீக" மாமரியாகவும், "கடவுளின் தகுதியுள்ள தாயாராகவும்" இருக்கிறார்கள். சேசுநாதரைப் போலவே தானும் ஆதாமின் மகளாக இவ்வுலகில் தோன்றியிருந்தாலும், மாமரி ஒரு தெய்வீகத் தொடக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பிதாவின் திருக்குமா ரத்தியாகவும், சுதனின் திருத்தாயாராகவும், இஸ்பிரீத்துசாந்துவின் அமல பத்தினியாகவும், தேவாலயமாகவும் இருக்கிறார்கள். விசேஷமாக, தன் அமல உற்பவத்தின் பலனாக, திவ்ய கன்னிகை, சேசுவுக்குப் பிறகு, "பூலோகத்தை, அதாவது மனுக்குலத்தைச் சேர்ந்தவர்களாக" ஆகுமுன்னமே, அவர்கள் "மோட்சத்தைச் சேர்ந்த" முதல் சிருஷ்டியாகவும், ஒரே சிருஷ்டியாகவும் இருந்தார்கள்.
திரியேக சர்வேசுரனுக்கு நேரடிச் சொந்தமானவர்கள் என்ற முறையில், ஆதியிலும், யுகங்களுக்கு முன்பும், திருச்சுதனின் மனிதாவதாரத் திட்டம் தெய்வீக மனதில் தோன்றிய அதே கணத்தில், திவ்ய கன்னிகை தேவ மனிதனுக்குப் பிறகு, அந்தத் திட்டத்தில் பங்குபெற நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆளாக இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே மனித புத்திக் கெட்டாததும், "எல்லா நாவுகளும் மவுனமாயிருக்க வேண்டியதுமான ஒரு பரம இரகசியம் நிச்சயம் இருக்க வேண்டும். பரிசுத்த திருச்சபை தன் வழிபாடுகளில் அமல உற்பவக் கன்னிகைக் குப் பொருத்திக் கூறுகிற சர்வப்பிரசங்கி ஆகம வார்த்தைகள், விசேஷமாக, "நானே சிருஷ்டிகளுக்கெல்லாம் முந்தி சிருஷ்டிக்கப்பட்டேன்... ஆதியிலும், யுகங்களுக்கு முந்தியுஞ் சிருஷ்டிக்கப்பட்டேன்; எக்காலத்துக்கும் இராமலுமிரேன்" (24:5, 14) என்னும் வார்த்தைகள், அவர்களுடைய சிருஷ்டிக்கப்பட்ட நித்திய உற்பவத்தைப் பற்றிப் பேசுகின்றன என்று நாம் துணிந்து கூறலாம். இந்த வார்த்தைகள் நேரடிப் பொருளில் கடவுளின் ஞானத்தால் பேசப்படுகின்றன என்றாலும், அவை "சிருஷ்டிக்கப்பட்டேன்” என்ற வார்த்தையின்படி, தேவ திருச்சுதனைக் குறிப்பவையாக இருக்க முடியாது. ஏனெனில் அவர் "ஆதியிலும், யுகங்களுக்கு முன்னும்" சிருஷ்டிக்கப்பட்டவராயிருந்தால், ஒரு தேவ ஆளாக இருக்க முடியாது. "மேலும், தேவ ஞானம் சர்வேசுரனைப் போலவே நித்தியமானதாக இருக்கிற அவருடைய தேவ இலட்சணம் என்பதால், அது இந்த ஞானத்தையும் குறிக்க முடியாது. ஆகையால் இவ்வார்த்தைகள் திருச்சபை மறைமுகமாகக் குறித்துக் காட்டுகிற படி, நிச்சயமாக, படைக்கப்பட்ட ஓர் ஆளாக இருந்த திவ்ய கன்னிகை யையே குறிக்கின்றன என்பது விளங்குகிறது. "சர்வேசுரனுக்குத் தாயாராக இருக்கிற மாதா, எப்போதுதான் அவருக்குத் தாயாக இல்லாமல் இருந்தார்கள்?” என்ற அர்ச். கிறீசோலோகுஸ் அருளப்பரின் வார்த்தைகளின் காரணத்தையும் இந்த அடிப்படையில் நம்மால் யூகிக்க முடிகிறது.
இவ்வாறு, மாமரியின் வாக்குக்கெட்டாத பரம இரகசியம் முழுவதும், அவர்கள் பிதாவின் நேசத்திற்குரிய ஒரே மகளாகவும், வார்த்தையானவரின் தாயாகவும், இஸ்பிரீத்துவானவரின் தேவாலய மாகவும் இருப்பதும், "நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்” என்ற வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. ஏனெனில் மாமரி மனுக்குலத்தின் திவ்ய இரட்சகருக்குத் திருத்தாயாராகவும், ஒரு புதிய மனுக்குலத்தின் தாயாகிய புதிய ஏவாளாகவும் இருக்க நியமிக்கப் பட்டிருந்தார்கள். இவ்வாறு, "நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்” என்ற வார்த்தைகளில் மாமரியின் ஆள்தன்மை பற்றிய ஒரு மிக அன்னியோன்னியமான இரகசியம் நமக்கு அவர்களாலேயே வெளிப்படுத்தப் படுகிறது.
இவ்வாக்கியம் மசபியேல் கெபியில், "நாமே அமல உற்பவம்!" என்னும் மனித புத்திக்கெட்டாத பரம இரகசியத்தின் அதிகாரபூர்வ பிரகடனத்தையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. நான்கு ஆண்டு களுக்கு முன், அதாவது, 1854-ல், பாப்பரசர் ஒன்பதாம் பத்திநாதரால் விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்யப்பட்ட "அமல உற்பவ சத்தியத்தின்மீது" வைக்கப்பட்ட பரலோக முத்திரையாக இதைப் பலர் காண்கிறார்கள். அது உண்மைதான் என்றாலும், அர்ச். மாக்ஸிமிலியன் கோல்பே இவ்வாக்கியத்தைத் தேவ மாதாவின் தெய்வீகத்தின் வெளிப்பாடாகக் கண்டார். மாசற்ற, நித்திய, அமல உற்பவமாகிய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய திருநாமத்தையே தேவ கன்னிகை தன் சொந்தப் பெயராகக் குறிப்பிட்டதன் மூலம், தன் தெய்வீகத் தாய்மைக்கும், மனுக்குலத் தாய்மைக்கும் முற்றிலும் அவசியமான விதத்தில், அவரோடு தான் ஒருபோதும் பிரிக்க முடியாத படி ஒன்றித்திருப்பதும், அவருடைய தெய்வீகத்தில் முழுமையாகப் பங்குபெற்றிருப்பதுமான பரம இரகசியத்தையே வெளிப்படுத்தினார்கள் என்று அவர் வலியுறுத்திக் கூறுகிறார்.