Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 19 மார்ச், 2024

நீதிமானான அர்ச். சூசையப்பர் - St. Joseph - most Justice Man

 நீதிமானான அர்ச். சூசையப்பர் 




அவளுடைய பத்தாவாகிய சூசை நீதிமானாயிருந்தார்' (மத். 1:19) என்று இஸ்பிரீத்து சாந்துவானவர் கூறுகிறார். சூசையப்பர் நீதிமானாக, நேர்மையுள்ள மனிதராக இருந்தார். தமது பரிசுத்த மணவாளி கருத்தரித்திருப்பதை அறிந்ததும், அவர்களைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதிருந்ததால், அவர் நீதிமான் என்று அர்ச் மத்தேயுவால் அழைக்கப்படுகிறார். இது மிகவும் நாகரீகமான செயல். ஆனால் நீதி என்பது வெறும் நாகரீக நடத் தையை விட மிகவும் மேலான ஒரு புண்ணியமாகும். அப்படியானால் சுவிசேஷம் அவரை நீதிமான் என்று அழைப்பதன் காரணமென்ன? பதிலை அதே சுவிசேஷம் தருகிறது: "சூசையப்பர் நித்திரையினின்று எழுந்து, ஆண்டவருடைய தூதன் தமக்குக் கட்டளையிட்டபடி செய்தார்" (1:24). ஆம். சூசையப்பர் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிதல் உள்ளவ ராக இருந்தார். அவர் தம் செயல்கள் யாவையும், கடவுளின் திருச் சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தி, அதன் மூலம், தமது பரிசுத்த மணவாளிக்கு அடுத்ததாக, கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நீதிமானாகிறார்

ஆகவே சூசையப்பரின் நீதி அவரது நாகரீக நடத்தைக்கு மிகவும் மேற்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். அது வெறும் நியாயமான நடத்தைக்கு மிகவும் அப்பாற்பட்டது. பண்டைய தத்துவ ஞானிகள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. ப்ளேட்டோ, "நீதி என்பதென்ன?" என்பது பற்றி ஒரு முழுப் புத்தகத்தையே எழுதினாலும், இறுதியில் அது என்னவென்று தமக்குத் தெரியாது என்று முடிக்கிறார்! சம்மனசுக்கொத்த வேதபாரகரான அர்ச். தாமஸ் அக்குயினாஸ் நீதியை வரையறுக்கும் விதமாக: "ஒவ்வொருவருக்கும் உரியதை நிலையானதும், நிரந்தரமானதுமான சித்தத்துடன் கொடுக்கும் நற்பழக்கமே நீதியாகும்" என்று கூறுகிறார். இது நல்ல விளக்கம்தான், ஆனால் இது இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. நீதியைப் பற்றிய வேதாகமச் சித்தரிப்புக்கு இந்த வரையறையைப் பொருத்திக் காட்டும்படி, நாம் அதை இப்படி வரையறுக்கலாம்: "நீதிமான் என்பவன் தான் செய்ய வேண்டியதைச் செய்பவன். அவன் ஒரு தனி மனிதனாகவும், ஒரு குடும்பத்தின் தலைவனாகவும், கடவுளின் ஒரு குழந்தையாகவும், தான் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்." 

இப்போது, சூசையப்பர் எப்படி நீதிமானாயிருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு தனி மனிதராக, அவர் மகா பரிசுத்தராகவும், தேவ கட்டளைகளை விருப்பத் தோடு நிறைவேற்றுபவராகவும் இருந்தார். திவ்ய கன்னிகைக்கு மணவாளராக யூத குருக்களால் தீர்மானிக்கப்படுமுன்பே அவர் பரிசுத்த விரத்தத்துவத்தைத் தம் வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்து வாழத் தீர்மானித்திருந்தார்

குடும்பத் தலைவர் என்ற முறையில் அவர் நீதிமானாயிருந்தார். கடவுளின் திருச்சித்தத்தின் படியும், தம் சொந்த விருப்பம் மற்றும் தீர்மானத்தின்படியும் அவர் திவ்ய கன்னிகைக்குத் தகுதி யுள்ள கன்னி மணவாளராகவும், அவர்களுக்கும், அவர்களுடைய தெய்வீகத் திருச்சுதனுக்கும் தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருந்தார். குடும்பத் தலைவர் என்ற முறையில் தம் கடமை களை நிறைவேற்றுவதற்காக அவர் கடுமையாக உழைத்தார், சில தனி வெளிப்பாடுகளில் உள்ள படி, சர்வேசுரனுடைய திருச்சுதனுக்கும், அவருடைய திருத்தாயாருக்கும் உணவளிக்கும்படி பிச்சையெடுக்கும் அளவுக்கு அவர் தாழ்ச்சியும், சிநேகமும் மிகுந்தவராக இருந்தார். தமது திருக்குடும்பத்திற்காக, பரதேச வாழ்வு போன்ற கடும் துன்பங்களையும் அன்போடு ஏற்றுக் கொண்டார்

திவ்ய கன்னிகை சர்வேசுரனுக்குத் தாயாயிருக்கும்படி கடவுள் தன்னைத் தேர்ந்தெடுத்து, தன் அனுமதியைக் கேட்டபோது, ஒரு கணமும் தாமதிக்காமல் உடனே தன்னைத் தாழ்த்தி, தன் திருக் குமாரனின் பிதாவானவருக்குத் தன்னை அடிமையாக ஒப்புக் கொடுத்தார்கள். அவ்வாறே, அந்த மகா பாக்கியவதிக்குக் கன்னி மணவாளராகவும், அவர்களது திருக்குமாரனுக்கு வளர்ப்புத் தந்தையாக வும், பாதுகாவலராகவும் இருக்கும்படி கடவுளால் தாம் தேர்ந்து கொள்ளப் பட்டிருப்பதைத் தேவதூதர் வழியாக அறிந்துகொண்டபோது, சூசையப் பரும் தம்மைத் தாழ்த்தி, பிதாவின் அடிமையாகிய திவ்ய கன்னிகைக்கும், அவதரித்த வார்த்தையானவருக்கும் தம்மை ஊழியராக ஒப்புக் கொடுத்தார். இந்த ஒப்புயர்வற்ற மகிமை அவரைப் பெருமை கொள்ளச் செய்யவில்லை. ஒரு விதத்தில் மனித மீட்பிற்குக் கடவுள் தம்மையும் சார்ந்திருக்கத் திருவுளங்கொண்டார் என்பது அவரைப் பெருமை கொள்ளச் செய்யவில்லை. தரித்திரமும், மனிதர்களுக் கெல்லாம் மாபெரும் மகிழச்சியூட்டும் மகா பெரிய தேவ கைங்கரியம் நிகழ்ந்த அந்த முக்கியமான நேரத்தில் மனிதர்களால் கைவிடப்படு தலும், ஓர் அரசனின் கொலை வெறியும், பரதேச வாழ்வும், கடும் உழைப்பின் சோர்வும் எந்த விதத் திலும் தேவ திருச்சித்தத்திற்குக் கீழ்ப்படிவதிலிருந்து அவரைத் தடுத்து விடவில்லை. இவ்வாறு, அவர் கடவுளின் உண்மையான மகனாக, அவருக்குரிய மகிமையையும், கீழ்ப்படிதலையும், நேசத்தையும் அவருக்குத் தந்து, இவ்வாறு அவரால் நீதிமான் என்று அழைக்கப்படத்தகுதி பெற்றார்

உண்மையில், நீதி என்பது எல்லாப் புண்ணியங்களுடையவும் தொகுப்பாக இருக்கிறது. ஒரே ஒரு புண்ணியத்தில் குறைவுள் ளவனும் கூட, முழுமையான நீதிமான் என்று அழைக்கப்பட முடியாது. ஆகையால், திவ்ய கன்னிகைக்குப் பிறகு, அர்ச். சூசையப்பர் சகல புண்ணியங்களுக்கும் நன்மாதிரிகையாக இருக்கிறார் என்பதும் நிரூபிக்கப்படுகிறது. 

"பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா சர்வ நீதிபரராயிருப்பது போல, நீங்களும் நீதிமான்களா யிருங்கள்!" அர்ச். சூசையப்பர் சர்வேசுரனுடைய நீதியில் முழுமையாகப் பங்கடைந்தார். அவருடைய மன்றாட்டின் உதவியோடு, நாமும் நீதியில் சிறந்து விளங்கத் தேவையான வரப் பிரசாதத்தை நமக்குத் தந்தருளும்படி சர்வேசுரனை மன்றாடுவோமாக. 


திருநாள்: மார்ச் 19

Source : Source:

மாதா பரிகார மலர் - March - April 2024




                                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக