Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

பரிசுத்த பாப்பரசர் அர்ச். ஐந்தாம் பயஸ் (St. Pius V, Pope)

பரிசுத்த பாப்பரசர் அர்ச். ஐந்தாம் பயஸ் (17 சனவரி 1504 – 1 மே 1572), 1566 முதல் 1572 வரை கத்தோலிக்க திருச்சபையை ஆட்சி செய்த 225வது திருத்தந்தையும் கத்தோலிக்க புனிதரும் ஆவார். இவரது சீரியப் பணியால்,திரெந்து பொதுச்சங்கத்தின் தீர்மானங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு கத்தோலிக்க விசுவாசத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இவரது ஞானஸ்தன பெயர் ஆன்டனியோ கிஸ்லியரி ஆகும்; 1518 முதல் மைக்கேல் கிஸ்லியரி என்று அழைக்கப்பட்டார்.

ஆன்டனியோ கிஸ்லியரி என்ற இயற்பெயர் கொண்ட 5ம் பயஸ், இத்தாலியின் மிலான் நகரில் போஸ்கோ என்ற இடத்தில் 1504 ஜனவரி 17ந்தேதி பிறந்தார். சிறு வயது முதலே கிறிஸ்தவ விசுவாசத்திலும் பக்தியிலும் வளர்ந்தார்.


14 வயதில் டொமினிக்கன் துறவற சபையில் நுழைந்தபோது, மைக்கேல் கிஸ்லியரி என்ற பெயரைப் பெற்றார். 1528ல் ஜெனோவா நகரில் குருப்பட்டம் பெற்றார். அதன்பின், பவியா நகருக்கு சென்று 16 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணி ஆற்றினார். 1550ல் ரோம் திரும்பிய இவர், திருத்தந்தையின் விநியோக அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டார்.


1556 செப்டம்பர் 14ந்தேதி, மைக்கேல் கிஸ்லியரி ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். சிறிது காலத்திலேயே 1557 மார்ச் 15 அன்று, திருத்தந்தை நான்காம் பால் (1555-59) இவரை கர்தினால் நிலைக்கு உயர்த்தினார்.
பரிசுத்த பாப்பரசர்
பரிசுத்த பாப்பரசர் நான்காம் பயஸ் (1559-65) மறைந்ததும் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்ட கர்தினால் மைக்கேல் கிஸ்லியரி, ஐந்தாம் பயஸ் (இத்தாலியன்: Pio V) என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தனது 62வது வயதில், திருச்சபையின் 225வது பரிசுத்த பாப்பரசராக 1566 ஜனவரி 17ந்தேதி பொறுப்பேற்றார்.


திருத்தந்தையர் வெள்ளை அங்கி அணியும் வழக்கத்தை இவரே தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு திருத்தந்தையர் சிவப்பு அங்கியை அணிவதே வழக்கமாய் இருந்தது. அதிக நேரம் செபம் செய்வது இவர் வழக்கமாக இருந்தது. அரசியல் குறுக்கீடுகளால் கத்தோலிக்க திருச்சபையில் நுழைந்திருந்த தவறான வழக்கங்களை ஒழிக்க திருத்தந்தை ஐந்தாம் பயஸ் பெரிதும் விரும்பினார்.
செயல்பாடுகள்


திருத்தந்தை 5ம் பயஸ் திருச்சபையின் பதவிகளை உறவு முறைப்படி பெறுவதையும், ஆன்மீகக் காரியங்களை விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தையும் ஒழிக்கப் பாடுபட்டார். திரெந்து நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற பொதுச்சங்கத்தின் தீர்மானங்களை செயல்படுத்தி திருச்சபையில் சீர்திருத்தம் ஏற்பட வழிவகுத்தார்.


திருச்சபையின் உண்மையான விசுவாசத்தை நிலை நிறுத்தவும், பிரிவினையாளர்களின் தவறான போதனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு ஒன்றைத் தயாரித்தார். திருப்பலியை முறைப்படுத்தும் வகையில் 1570ல் ரோமன் திருப்பலி புத்தகத்தை அறிமுகம் செய்து உலகெங்கும் உள்ளகத்தோலிக்க திருச்சபையின் பொது திவ்ய பலிபூசை நூலாக்கினார்.


இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத், இத்தாலி அரசன் 2ஆம் மேக்சிமிலியன் ஆகியோரின் எதிர்ப்புகளை சந்தித்தார். பிரான்ஸ், ஹாலந்து நாடுகளின் கொந்தளிப்பிற்கு இடையே துருக்கியரின் தாக்குதல்களையும் எதிர்கொண்டார்.


துருக்கிய வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கவும், கிறிஸ்தவ இளவரசர்களுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தவும் உழைத்தார். இதன் விளைவாகவும், கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட தொடர் செபமாலைபக்திமுயற்சியின் பலனாகவும், 1571 அக்டோபர் 7 அன்று லெப்பன்ட்டோ கடற்போரில் துருக்கியருக்கு எதிராக கிறிஸ்தவப் படைகள் வெற்றி பெற்றன. அதே நாளில் இவர் அன்னை மரியாவுக்கு, வெற்றியின் அன்னைவிழாவை ஏற்படுத்தினார். இவ்விழா பின்னாளில் செபமாலை அன்னை விழாவாக பெயர்மாற்றப்பட்டு இன்றும் கொண்டாடப்படுகின்றது.
புனிதர் பட்டம்







புனித ஐந்தாம் பயசின் உடல்.


6 ஆண்டுகள், 3 மாதங்கள், 24 நாட்கள் திருச்சபையை வழிநடத்திய பரிசுத்த பாப்பரசர் ஐந்தாம் பயஸ், இறுதியாக 1572 மே 1ந்தேதி தனது 68வது வயதில் மரணம் அடைந்தார். 1696ல் இவருக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. 1698ஆம் ஆண்டு, இவரது அழியாத உடல் மேரி மேஜர் ஆலயத்தில் அமைக்கப்பட்ட கல்லறைப் பேழையில் வைக்கப்பட்டு, இன்றளவும் பாதுகாப்பாக உள்ளது.


1672 மே 1 அன்று பாப்பரசர் 10ம் கிளமென்ட், பாப்பரசர் ஐந்தாம் பயசுக்கு அருளாளர் பட்டம் வழங்கினார். 1712 மே 24ந்தேதி 11ம் கிளமென்ட் இவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார். 1713ல் இவரது திருவிழா மே 5ந்தேதி கொண்டாடப்படும் வகையில் ரோமன் நாட்காட்டியில் இணைக்கப்பட்டது. 1969ல் இவரது விழா ஏப்ரல் 30ந்தேதிக்கு மாற்றப்பட்டது.

கத்தோலிக்க கிறிஸ்துவக் குடும்பங்களின் மேன்மை


தாய்மார்கள் குழந்தை வளர்ப்பதற்கான கல்வியை நன்கு பெறவேண்டுமானால், அதன்  ஒருபகுதியாக, அவர்கள் இராணுவ மருத்துவமனையின் மனநல மருத்துவப்பிரிவை  சந்திக்க வேண்டும் என்று ஒருவர் வேடிக்கையாகக் கூறினார். அங்கே தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை எப்பொழுதும் தங்களுடைய பிடியிலேயே வைத்ததன் விளைவாக உருவான அநேக மனநோயாளிகளைக் காணலாம். அப்பொழுது, உங்களுடைய குழந்தைகள் சுயாதீனமாக வாழக்கூடிய பிள்ளைகளாக வளர்வதற்கு உதவுவதையே, முதன்மையான நோக்கமாக நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை அங்கு நீங்கள் எளிதில் புரிந்து கொள்வீர்கள்.
குருவானவரும், மனநல மருத்துவரும் பிரச்னைகளை வௌ;வேறு விதங்களில், வித்தியாசமான கோணங்களில் காண்பர். ஆனால், குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தாய்மார்களின் நடத்தையைப் பற்றிச் சுட்டிக்காட்டும்போது, இருவரும் ஸ்திரமாக ஏகோபித்த கருத்தை வெளிப்படுத்துவர். குழந்தைகளை வளர்ப்பதில் தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளைப்பற்றிய அவ்விருவருடைய அறிவுரையின் சாராம்சம் பின்வருமாறு:
உங்களுடைய பிள்ளைகளிடம், நீங்கள், எப்பொழுதும் எல்லாவற்றையும் மிக நன்றாக அறிந்திருக்கும் சர்வாதிகாரிகளைப் போல் செயல்படாதீர்கள். உங்களுடைய குழந்தை தனக்கேற்புடைய வழியிலேயே காரியங்களை செயல்படுத்தலாம். அது திறமையற்றவிதமாகவும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் இருக்கலாம். அப்பொழுது உங்களுடைய குழந்தையிடம் பொறுமையாக இருங்கள். அவன் தன் வழியிலேயே அவற்றை செய்யும்படி விடுங்கள். அப்பொழுது, தான் செய்வதில், எது சரி, எது தவறு என்பதை நடைமுறையில் கண்டறிவதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள் அவனுக்கு அளிக்க ஏதுவாக இருக்கும்.
உங்களுடைய பிள்ளைகளுக்காக நீங்கள் உயிரையே விட வேண்டாம். ஆனால், உங்களுடைய பிள்ளைகளின் நலன்களுக்காக நீங்கள் பரித்தியாகங்கள் செய்ய தான் வேண்டும். உங்களுக்கு மட்டுமே சொந்தமான சில பொருளை, உங்களுடைய மகன் கேட்கும்போது, அவன் குற்றஉணர்வு கொள்ளும்படியாக அவனுக்கு அதை மறுக்காதீர்கள். தன் பிள்ளைக்காக உயிரைப் பரித்தியாகம் செய்த தாய், தன் மகனுடைய கல்லூரி படிப்பின் கட்டணத்தைக் கட்டுவதற்காக இரவு நேரங்களில் துணிசலவை நிலையத்தில் இரவில் பணிபுரிந்துவந்தாள். அவன் கல்லூரியில் படிப்பை முடித்து பட்டமளிக்கும் விழாவிற்கு தன் தாயை வரவேண்டாம் என்றான். அவளுடைய எளிய உடை தான் அதற்கு காரணமாம். அதாவது எளிய தோற்றத்துடன் அங்கு வந்தால், அவனுக்கு அவமானமாக இருக்குமாம்.
உங்களுடைய பிள்ளை எல்லாவற்றிலும் உத்தமமான பிள்ளை என்று கருதாதீர்கள். சில தாய்மார்கள், தங்களுடைய பிள்ளைகள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், தங்களுடைய பிள்ளையினிடத்தில் என்ன குறை உள்ளது என்று அறிந்துகொள்ளாமல், ஆசிரியர்களிடம் என்ன குறை உள்ளது என்று கண்டறிவதற்காக பள்ளிக்கூடத்திற்கு வருவார்கள். கீழ்ப்படியாமைக்காக தன் பிள்ளை தண்டிக்கப்பட்டான் என்று அறியநேரிட்டபோது, அத்தகைய தாய்மார்கள், பள்ளிக்கூட அதிகாரிகளிடம், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்களை நிர்பந்திப்பார்கள். தாய்மார்களின் இத்தகைய செயல்பாடுகளினால், உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களிடம் காட்ட வேண்டிய மரியாதையை, அவர்களுடைய பிள்ளைகளிடம் குறைத்துவிடுவார்கள். இதன் மோசமான பின்விளைவு என்னவென்றால், அவர்களிடமும் அப்பிள்ளைகள் மரியாதையின்றி நடந்துகொள்வர்.
உங்களுடைய பிள்ளைகள் அண்டைவீட்டுப்பிள்ளைகளைப் போல மனித பலவீனங்களுடனும் குறைகளுடனும் இருக்கிறார்கள் என்று நீங்கள் தீர்மானிக்கும்போது, நீங்கள் பாதுகாப்பான மனநிலையில் இருக்கிறீர்கள் என்று உணர்ந்துகொள்ளுங்கள். வியாதியஸ்தரின் படுக்கையை நீங்கள் உங்களுடைய அரியணையாகக் கொள்ளாதீர்கள். சோம்பலில் மந்தமாக இருக்கும் தாய் தன் மேல் தன் பிள்ளைகள் இரக்கப்படுவதற்காகவும், தான் விரும்பும் காரியங்களை, தன்பிள்ளைகளைக்கொண்டு நிறைவேற்றுவதற்காகவும், நோயில் இருப்பதாக நடிப்பாள். இறக்கும் தருவாயில் இருக்கும்   தன் தாயின் விருப்பத்தை யார் தான் நிறைவேற்றாமல் இருப்பார்கள்? இவ்வேடத்திலேயே அவள், தான் விரும்புவதை அடிக்கடி அவள் பெற்றுக்கொள்வாள். ஆனால் இந்நிலைமை அவளுக்கு மிகக் குறைந்த காலம் வரை நீடிக்கும். இந்நிலையிலேயே அவள் தன் பிள்ளைகளிடத்தில் அவள் நடந்துகொள்வாளேயானால், நாளடைவில், அவளுடைய பிள்ளைகளுக்கு, அவள் மேல் இரக்கமும், மரியாதையும் இல்லாமல் போய்விடும்.
எப்பொழுதும் தன்னையே பிறரை கவரும் வகையில் அலங்கரித்துக்  கொண்டிருக்கும் பெண்மணியாக இருக்காதீர்கள். குடும்பத்தின் சாப்பாட்டிற்கு தேவையான சமையலை செய்வது, படுக்கையை சரிப்படுத்துவது, துணிகளை துவைப்பது போன்ற வீட்டுவேலைகளை தன் மதிப்பிற்கு கீழானவை என்று எண்ணும் ஒரு பெண் தாய்மை என்ற அலுவலுக்கு ஏற்புடையவள் அல்ல. அதே சமயம் அனைவரையும் மகிழவைக்கும் தோற்றத்தை, தாய்மார்கள் கொண்டிருக்க முயல வேண்டும். ஆனால், அதே நேரத்தில், தாய்மார்கள் தங்களுடைய உன்னத அந்தஸ்தின் கடமைகளை நிறைவேற்றும்போது, அனைவருடைய கவனத்தையும் அதிகமாக தம் பக்கம் கவர்ந்திழுக்கும் வசீகரத்தைக் கொண்டிருப்பார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். பருவ மங்கையருக்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளவும் அவர்களைப்போல் நடந்துகொள்ளவும் நீங்கள் துணிந்தாலோ, மற்றும் வீட்டு அலுவல்களை மிக இழிவாகக் கருதுவதுபோல உங்களுடைய மனப்பான்மை இருந்தாலோ, அதுவே, உங்களுடைய குழந்தைகளுக்கு தாய்மையும் அதன் பொறுப்புகளும் மதிப்பிற்குரியவை அல்ல என்று நீங்களே கற்பிப்பதுபோலாகிவிடும்.


உங்களுடைய குழந்தைக்கு நீங்கள் தான் மிக முக்கியமான ஆசிரியர் என்பதை அடிக்கடி சொல்லத் தேவையில்லை. வாலிப வயதை அடைந்த உங்களுடைய மகன், நீங்கள் அவனிடம் ஏற்படுத்திய பாதிப்பை, நீங்கள் கற்பனை செய்துபார்க்கக் கூடிய அளவை விட மிக அதிகமாக, அவனுடைய நடத்தையில் பிரதிபலிப்பதைக் காண்பீர்கள். அதாவது, நீங்கள் உங்களுடைய தாய் தந்தையருடைய குணாதிசயத்தைப் பிரதிபலிப்பதைப் போல, உங்களுடைய மகனும் உங்களுடைய குணநலன்களைப் பிரதிபலிப்பான். சர்வேசுரன் உங்களுக்குக் கொடுத்த கடமையின் பிரகாரம் அவனுக்கு வேண்டிய ஞானபயிற்சியை அளிக்க நீங்கள் தவறினாலும், அவனுடைய குணநலன்களில் உங்களுடைய குணநலன்களின் முத்திரையை பதித்துவிடுவீர்கள்.


ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தபசுகால சிந்தனைக்கு:





நமதாண்டவர் அனைத்து புண்ணியங்களையும் தனது ஆத்துமத்தில் கொண்டிருந்தார். அவைகளை விசேஷவிதமாக தமது பாடுகளின் போது வெளிப்படுத்தினார். தமது பரம பிதாவின் மீது அவருக்கிருந்த நேசம், மனுக்குலத்தின் மட்டில் அவர் கொண்டிருந்த அன்பு, பாவத்தின் மீதான வெறுப்பு, தனக்கு எதிராகச் செய்யப்பட்ட அவமான நிந்தைகளை பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுதல், அவற்றிற்கு காரணமானவர்களை முழுமனதோடு மன்னித்தல், சாந்த குணம், தைரியம், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை, கீழ்ப்படிதல், இரக்கக்குணம் இவை அனைத்துமே அவரது கொடிய துக்கம் நிறைந்த பாடுகளின் போது பிரகாசமாய் ஒளிர்ந்தது.
கிறீஸ்துவின் பாடுகளைத் தியானிக்கும்போது, நாம் வாழ வேண்டிய வாழக்கையின் மாதிரிகையை அதில் காண்கிறோம். இம்மாதிரிகை வியக்கத்தக்கவைகளாக மட்டும் அல்லாமல், அதை பின்பற்றக்கூடியதாகவும், நமது சக்திக்கு உட்பட்டதாகவும் இருக்கிறது. கிறீஸ்துவின் ஞான சரீரத்தின் உறுப்புகளாய் இருக்கிற நாம், நம்முடைய சிரசாகிய கிறீஸ்துநாதருக்கு ஒத்தவிதமாய் மாற வேண்டும். அதற்கு அவருடைய பாடுகளின் போது வெளிப்படுகின்ற புண்ணியங்களை நாமும் கடைபிடிக்க கடமைப்பட்டிருக்கிறோம். இதனால்தான் நமதாண்டவர்: “…யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால் தன்னைத் தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை அநுதினமும் சுமந்துகொண்டு என்னைப் பின் செல்லக்கடவான்” (லூக்.9:23) என்று அழைக்கின்றார்.
கிறீஸ்துவின் பாடுகளைத் தியானிப்பதால், நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தின் அளவிற்கு ஏற்ப, அவரின் புண்ணியங்களை நாமும் அனுசரிக்க தேவையான வரப்பிரசாத உதவியை நமக்குத் தருகிறார். இது எங்ஙனம்?
நமதாண்டவர் சேசுநாதர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவரிடமிருந்து வல்லமை புறப்பட்டு போய் மனிதர்களின் சரீர நோய்களைக் குணப்படுத்தியது. அவர்களின் மன அந்தகாரத்தை விரட்டியது. நாம் அவருடன் ஐக்கியப்படும் போது, விசுவாசத்தால் அவரோடு இணையும் போது இதே போன்று திகழ்கிறது. அன்று, அவரை நேசத்தோடு கல்வாரி மலைக்கு பின்சென்றவர்களுக்கு அல்லது சிலுவை உயர்த்தப்பட்டு பலியாக்கப்பட்ட போது, அங்கு இருந்தவர்களுக்கு விசேஷ வரப்பிரசாதங்களை பொழிந்தருளினார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. அன்று அவரிடமிருந்து வல்லமை வெளியேறியது போல, இன்றும் நடக்கத்தான் செய்கிறது. விசுவாச உணர்வால் தூண்டப்பட்டு, சேசுவின் பாடுகளை நினைத்து துக்கிக்கும் போதும், அவரை நினைவால் பின்பற்றி அரசனின் நீதி மண்டபத்திலிருந்து, கல்வாரி வரை செல்லும் போதும், அவருடைய திருச்சிலுவையின் அருகில் வியாகுல மாதாவுடன் நிற்கையில் அன்று வழங்கிய வரப்பிரசாதத்தை இன்னமும் நமக்குத் தருகிறார்.
பாலைவனத்தில் அன்று இஸ்ராயேல் ஜனங்கள் மோயீசனுக்கு எதிராக முணுமுணுப்பு செய்ததற்குத் தண்டனையாக, சர்வேசுரன் சர்ப்பத்தை அனுப்பி கடிக்கச் செய்து சொல்லொண்ணா அவதிபட வைத்தார். ஆனால் அவர்கள் மனஸ்தாபப்பட்டதினால், மோயீசனுக்கு வெண்கலத்தினால் செய்யப்பட்ட சர்ப்பத்தை உயர்த்தும்படியும், அதைக் காண்பவர்கள் காப்பாற்றப்படுவர்கள் என்றும் கட்டளையிட்டார். நமதாண்டவர் வாக்கின்படி, இவ்வெண்கல சர்ப்பம் கிறீஸ்து சிலுவையில் உயர்த்தப்படுவதன் முன் அடையாளமேயன்றி வேறில்லை! அன்றியும் நான் பூமியினின்று உயர்த்தப்படுவேனாகில், எல்லாவற்றையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்என்றார். (அரு.12:32-33) சேசுநாதர் சிலுவைப்பலியின் வழியாக நமக்கு எல்லா வரப்பிரசாதங்களையும் பேறுபலன்களையும் சம்பாதித்தபடியால், நமக்கு ஒளியின் ஊற்றாகவும், வல்லமையின் கருவூலமாகவும் இருக்கிறார். ஆகையால்தான், தாழ்ச்சியுடனும், சிநேகத்துடனும் அவருடைய மனித சுபாவத்தை நோக்கும் போது, அது மிக்கப் பலன் அளிக்கவல்லதாக, வல்லமைமிக்கதாக இருக்கிறது.
ஆண்டவருடைய பாடுகளை விசுவாசத்துடனும், பக்தியுடனும் தியானித்தால், சர்வேசுரனுடைய அன்பும் நீதியும் நமக்கு வெளிப்படுத்தப்படும். அதோடு நமது தாழ்நிலையையும், பலவீனங்களையும், நமது ஒன்றுமில்லாமையையும் அறிந்து கொள்வோம். அதோடு நமது புத்தியறிவினால் நாம் அறிவதைவிட, மேலான விதத்தில் நமது பாவத்தின் கனாகனத்தையும் அதன் அருவருப்பையும் அறிய வருவோம்.
ஆண்டவருடைய பாடுகளைத் தியானிப்பதால் கிடைக்கின்ற பலன்களை சிறிது விளக்கியப் பிறகு, வாசித்து தியானிப்பதற்கு சில சிந்தனைகளை தருவது நல்ல பலனளிக்கும் என்று நம்புகிறோம்.
சேசுவின் பாடுகளின் தியானம்:
                வேதசாட்சிகளுடைய மரணத்தைப் பார்த்து திருச்சபை மிகவும் அக்களிப்புக் கொள்கிறது. ஏனென்றால் அவர்களுடைய மரணம் திருச்சபையினுடைய மகிமையாக, வெற்றியாகத் திகழ்கின்றது. அவர்களின் இரத்தம் திருச்சபையின் வித்தாக மாறுகின்றது. அதனால் திருச்சபை வளர்கிறது. வேதசாட்சிகளுடைய மரணத்திற்கு நாம் காரணமல்ல, அவர்களுடைய இரத்தம் நம்மை கறைப்படுத்துவதில்லை. ஆனால் திருச்சபை தனது மகா பரிசுத்த பத்தாவான சேசு கிறீஸ்துவின் பாடுகளை, மரணத்தைக் குறித்து மிகவும் துக்கிக்கிறது. விசனப்படுகிறது. எதற்கென்றால் அவருடைய பாடுகளுக்கு, இரத்தம் சிந்துதலுக்கு திருச்சபையின் மக்களாகிய நாமும் காரணமாக இருக்கிறோம். மெய்யாகவே சேசுநாதருடைய உயிரைப் பறித்த கொலையாளிகளாக இருக்கிறோம். ஆம், கடவுள் - மனிதனான சேசு 30 வெள்ளிக் காசுகளுக்கு விற்கப்படுவதற்கு - காட்டிக் கொடுப்பதற்கு, கன்னத்தில் அறையப்படுவதற்கு, பழித்து நிந்திக்கப்படுவதற்கு, இரத்தம் சிந்தி அகோரமாக சிலுவை மரணம் அடைவதற்கு நாம் தான் காரணம்! தனது நேசரின் மரணத்திற்கு தன்னுடைய பிள்ளைகளே காரணமாய் இருப்பதைக் கண்டு திருச்சபை மிகவும் துக்கப்படுகிறது. சேசு கிறீஸ்துநாதர் துன்பம் அனுபவிப்பதைக் கண்டும், அவரைத் துன்பப்படுத்துபவர்களுடைய கொடூரத் தன்மையைக் கண்டும் வேதனைப்படுகிறது திருச்சபை. அதனுடைய துக்கத்தோடு நாமும் துக்கித்து திரளான கண்ணீர் சிந்துவோமாக!
சேசுநாதர் ஜெத்சேமனித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்க்கிறார்.                (அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் எழுதிய சேசு கிறீஸ்துவின் பாடுகளும், மரணமும்என்ற நூலிலிருந்து)
I
இதோ நம்முடைய நேச ஆண்டவர் ஜெத்சேமனி என்னும் தோட்டத்தில், தன்னுடைய கசப்பான பாடுகளை அனுபவிப்பதற்கு மனமுவந்து கையளிக்கிறார். அவர் பயப்படவும், சலிப்படையவும்” (மாற்.16:33) “துயரப்படவும், ஆயாசப்படவும்” (மத்.26:37) தொடங்குகிறார்.
முதலில் தாம் அடையவிருக்கும் மரணத்தைக் குறித்தும்;, படப்போகும் பாடுகளைக் குறித்தும், நினைத்து, யோசித்து பயப்படுகிறார். நம் ஆண்டவர், தானாக முன்வந்து தன்னையே இப்பாடுகளுக்குக் கையளிக்கிறார். அப்படியானால் பின் ஏன் பயப்பட வேண்டும்? “அவர் தானே இஷ்டப்பட்டு நிவேதனமாயினார் (பலிப்பொருளானார்)” (இசை.53:7) அவர் தாமே விரும்பி அல்லவா தன்னையே ஒப்புக்கொடுத்தார் என்கிறார். இப்பாடுகளின் நேரத்திற்கு விரும்பி அல்லவா காத்திருந்தார். சற்று முன்னர்தான், இராப்போஜனத்தின் போது, “நான் பாடுபடுவதற்கு முன்னே இந்தப் பாஸ்காவை உங்களோடு கூட உண்ணும்படி ஆசைமேல் ஆசையாயிருந்தேன்…” (லூக்.22:15) என்று சொன்னார் அன்றோ? இப்படிக் கூறியவர் கொடூர மரண பயத்தால் ஆட்கொள்ளப்பட்டு, தன்னுடைய பிதாவை நோக்கி, “என் பிதாவே! கூடுமாகில் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு அகலக்கடவது. ஆகிலும் என் மனதின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்” (மத்.26:39) என்று எப்படி அபயமிடுகிறார்? வந்.பீட் என்பவர் இந்த ஆச்சரியமான கேள்விக்கு பதில் தருகையில் “…இப்படிச் சொல்லியது, தான் மெய்யாகவே மனிதனாக இருக்கிறார் என்பதைக் காண்பிக்கவேஎன்று கூறுகிறார். நமது நேச இரட்சகர் தன்னுடைய மரணத்தினால், நம் மேல் அவர் கொண்டிருந்த நேசத்தைக் காண்பித்தது மட்டுமின்றி, தான் (சில பதிதர்கள் தேவ தூஷணம் சொல்வது போல்) அசாதாரணமான சரீரத்தில்அல்லது தனது தெய்வீகத்தின் உதவியால் எந்த விதமான துன்ப வருத்தமின்றி இறந்தார்என்று எண்ணாதவாறு செய்வதற்காகவே, இந்த அபயக் குரலை தனது பிதாவை நோக்கி எழுப்பினார். இந்தக் கூக்குரல், தனது ஜெபத்தை பிதா கண்டிப்பாய் கேட்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, இதன் மூலம் அவர் மெய்யாகவே மனிதனாய், மரணப்பயத்தால் பீடிக்கப்பட்டு துன்ப வருத்தங்களை அனுபவித்து மரித்தார் என்பதற்காகவே!

II            
                சலிப்படையத் தொடங்கினார்”. சேசுநாதர் தமக்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த வேதனைகளை, கொடூரத்தை நினைத்த மாத்திரத்தில் சலிப்படையலானார். சலிப்படைந்திருக்கிற ஒருவருக்கு கரும்புகூட கசப்பானதாகத்தான் இருக்கும். தன்னுடைய மனக் கண்களுக்கு முன் காண்பிக்கப்பட்ட கொடூரமான காரியங்கள், தனது வாழ்வின் இறுதியின் கொஞ்ச காலத்தில் அவருடைய ஆத்துமத்திலும், சரீரத்திலும், அகத்திலும் புறத்திலும், தாம் அனுபவிக்க இருந்த அனைத்து சித்திரவதைகளும், சேசுநாதரை எவ்வளவு மனச்சலிப்படையச் செய்திருக்கும்!
                அவ்வேளையில் அவர் அனுபவிக்கவிருக்கும் வாதைகள், யூதர்களிடமிருந்தும், உரோமை படை வீரர்களிடமிருந்தும் பெறவிருக்கும் நிந்தை அவமானங்கள், ஏளனப் பேச்சுக்கள், நீதிபதிகளின் அநீதங்கள், அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவராய், மனிதர்களாலும் ஏன், சர்வேசுரனாலும் கைவிடப்பட்டவராக மரணமடையும் காட்சி என இவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அவருடைய மனக் கண்களுக்கு முன்பாக வந்தன. இதனால் சலிப்படைகிறார். அதன் காரணமாகத்தான் அவர் தம் பரம பிதாவை நோக்கி ஆறுதலுக்காக ஜெபித்தார். ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றி அவரைத் தேற்றினார்” (லூக்.22:43) சம்மனசு வந்து பணிவிடை செய்ததன் விளைவாக தெம்பு வந்தது. ஆனால் இத்தெம்பு அவருடைய பாடுகளைக் குறைப்பதற்குப் பதிலாக அவற்றை அதிகரித்தது என்று வந்.பீட் கூறுகிறார். இந்த தெம்பு அவருடைய துக்கத்தை தணிப்பதற்கு பதிலாக அதிகப்படுத்தியது. ஆம். சம்மனசுசானவர், சேசு மனிதர்கள் மேல் கொண்ட அன்பின் காரணமாகவும், பிதாவின் மகிமைக்காகவும் இன்னும் அதிக துன்பப்படும்படியாகவும் அவரைத் தேற்றினார்.
                ஆ! என் நேச ஆண்டவரே! இந்த முதல் போராட்டம் எப்பேர்ப்பட்ட துன்பத்தை உமக்கு வருவித்தது! உம்முடைய சரீர பாடுகளின் போது, சாட்டைகளால் அடிக்கப்படுதல், முள்முடி சூட்டப்படுதல், ஆணிகளால் அறையப்படுதல் போன்றவைகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக வந்தன. ஆனால், ஜெத்சேமனி தோட்டத்திலோ எல்லா பாடுகளும் ஒரே நேரத்தில் வந்து நசுக்கியதே! இவையனைத்தையும் என் மேல் வைத்த நேசத்திற்காக, எனது நலனுக்காக அல்லவோ ஏற்றுக் கொண்டீர் சுவாமி!
                ஓ என் தேவனே! கடந்த காலத்தில் உம்மை நான் நேசியாமல் போனதற்காகவும், உம்முடைய சித்தத்தை செய்வதற்குப் பதிலாக, எனது சொந்த சபிக்கப்பட்ட சுகங்களையும், இன்பங்களையும் நாடினதற்காக மெய்யாகவே மனஸ்தாபப்படுகிறேன். இவைகளை இப்போது என் முழுமனதோடு வெறுக்கிறேன். என்னை மன்னித்தருளும் சுவாமி.

வியாழன், 3 ஏப்ரல், 2014

ஜப்பானில் மிகப் பெரிய புதுமை:

அஞ்ஞான ஜபபான் தேசம் முழுவதையும் மெய்யங்கடவுளாம் சேசு மன்றாடும்படிக் கேட்டுக்கொண்டனர்.அதனால் தெளிவும்,நம்பிக்கையும் பெற்ற அந்த பிரபு தன் இரு ஊழியர்களுடன் சவேரியார் இருக்குமிடத்திற்கு வந்து அவரது பாதங்களிலே விழுந்து அழுது மன்றாடினான்.மகளை இழந்த துயரத்திலேயே தானும் மரித்துப்போய் விடுவதாகக் கூறினான்.அவனது துயரத்தைக்கண்டு மனமிரங்கிய சவேரியார் அம்மனிதனைத் தேற்றி,அவன் கண்களில் ஓடிய கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறினார்.பின்னர் தம்முடைய உதவியாளரான ஜான் பெர்னாண்டஸ் சகோதரரை அழைத்து இருவரும் சற்றுநேரம் உருக்கமாக ஜெபித்தனர்.பின் அவரை அம்மனிதனிடம் அனுப்பி உம்முடைய மகள் உயிரோடு இருக்கிறாள் என்று சொல்லச் சொன்னார்.சகோதரர் கூறியதைக் கேட்ட அந்த மனிதன் அதை நம்பி ஆர்வத்தோடு தன் வீட்டை நோக்கி ஓடினான்.அவன் வீட்டை நெருங்கவும் அவனது ஊழியர்கள் முகமலர்ச்சியோடு அவனை எதிர்கொண்டு ஓடிவந்தார்கள்.ஏனெனில் அவனது மரித்த மகள் உயிர்த்தெழுந்தது மட்டுமல்ல,பூரண சரீர சுகத்தோடும் இருந்தாள்!தன் தந்தையை எதிர்கொண்டாள்.மகளை உயிரோடு கண்ட அந்த மனிதன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.மகிழ்வோடு மகளை அரவணைத்து விசாரித்தான்.அவளும்,தான் மரணமடைந்த உடனே இரண்டு பயங்கர உருவங்கள் அவளைப்பிடித்துச் சென்று அணையாது எரியும் நெருப்புக் கடலில் தள்ளிவிட இருந்த சமயத்தில்,அவள் முன்பின் பார்த்தறியாத மரியாதைக்குரிய இருவர் அங்கே தோன்றி தம்மை அந்த உருவங்களின் பிடியிலிருந்து மீட்டு உயிரளித்து,குணமளித்ததாகக் கூறினாள்.உடனே அவளது தகப்பன்,சாவேரியாருக்கு நன்றி கூறுவதற்காக தன் மகளையும் அழைத்துக்கொண்டு அவரிடம் சென்றான்.சவேரியாரையும்,ஜான் சகோதரரையும் கண்ட மாத்திரத்தில் அந்த பெண் "ஆச்சரியத்தோடு என்னை எரி நெருப்பிலிருந்தும்,சாவிலிருந்தும் காப்பாற்றியவர்கள் இவர்களே "என்று கூறி அவர்கள் முன் முழங்காலிட்டாள்,பின் தகப்பனும்,மகளும் தங்களுக்கு ஞானஸ்நானம் தரும்படி கேட்க,அவர்களும்,அவர்களது உற்றார் உறவினர் அனைவரும் பெருந்திரளாக ஞானோபதேசம் கற்று சவேரியார் கையால் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவர்களானர்கள்.நகரின் புகழ்பெற்ற பிரபுவின் குடும்பம் கிறுஸ்துவர்களான செய்தி காட்டுத்தீயைப்போல எங்கும் பரவியது.கேட்டவர்கள் வியந்து சவேரியாரின் போதனைகளை ஏற்கத் தொடங்கினார்கள்.நாளுக்கு நாள் அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது!அதனைக் கண்டு நரகக் கூளிகள் சகிக்குமா?அவைகளும் சவேரியாருக்கு எதிராக புத்தப்பிச்சுக்களை ஏவிவிட்டன.

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மெலானிக்குக் காட்டப்பட்ட உத்தரிக்கிற ஸ்தலக் காட்சி;


 1846-ல் பிரான்ஸ் நாட்டிலுள்ள சலேத் என்னும் மலையில் மாதாவின் காட்சி பெற்றவள் மெலானி.இவள் சிறந்த காட்சித் தியானியும் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரமாயுமிருந்தாள்.அநேக காட்சிகள் அவளுக்கு அருளப்பட்டன.அவற்றுள் ஒன்று உத்தரிக்கிற ஸ்தலத்திலன் காட்சி.அதை அவளுடைய வார்த்தைகளிலேயே இங்கு தருகிறோம்.ஒரு நாள் நான் நேசித்த எல்லாவற்றுக்கும் மேலான நன்மையின் அளவில்லாத இரக்கத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.நான் சாஷ்டாங்கமாக விழுந்து முகத்தைத் தரையில் பதித்தபடி ஜெபிக்கையில்,அது எப்படி நடந்ததென்று தெரியவில்லை,ஒரு வகையான உறக்க மயக்கத்தை உணர்ந்தேன்.அது ஒரு கனவு போலிருந்தது.என் காவல் சம்மனசைக் கண்டேன்.அவர் என்னை நோக்கி சகோதரி என்னுடன் வா.சர்வேசுரனின் சிநேகிதர்களாயிருக்கிற ஆன்மாக்களை உனக்குக் காண்பிப்பேன்.அவரை அவர்கள் நேசிக்கிறார்கள்.ஆனால் அவரை அடைந்துகொள்ளும் மகிழ்ச்சியைப் பெற முடியாமலிருக்கிறார்கள்.ஏனென்றால் பாவத்தால் அழுக்கடைந்திருக்கிறார்கள்.அவர்கள் சுத்திகரிக்கப்பட வேண்டியிருக்கிறது.ஆயினும் நீ அவர்களுக்காக நித்திய பிதாவுக்கு,சேசு கிறுஸ்துவின் திரு இரத்தத்தையும் பாடுகளையும் ஒப்புக்கொடுக்க மனதாயிருந்தால் அவர்களின் பாவங்கள் கழுவப்பட்டு கடவுளுடன் ஐக்கியமாவார்கள் என்று கூறினார்.திடீரென நாங்கள் இருவரும் உயரே பறந்ததுபோலிருந்தது. பின் அப்படியே கீழிறங்கினோம்.பூமி திறந்தது.நாங்கள் பூமிக்குள் ஒரு இருண்ட குகைக்குள் புகுந்தோம்.அங்கே ஒரு பயங்கரக் காட்சி!எல்லா வகையான துண்பங்களும் வாதைகளும் அங்கே காணப்பட்டன.திரவ நெரிப்பு சுவாலைகளுடன் கலந்து காணப்பட்டது.பசியின் பயங்கர கொடுமையும் தாகத்தின் கொடுமையும் திருப்திப் படுத்தப்படாத ஆசைகளின் கொடுமையும் இருந்தன.இந்த ஆன்மாக்கள் பெரும் கூட்டமாய் மிகவும் கடுமையான வேதனைகளுக்குள் அமிழ்ந்தியிருந்தார்கள்.அவர்களில் ஒரே மாதிரியாக வேதனைப்பட்ட இரண்டு ஆன்மாக்களை நான் காண முடியவில்லை,எல்லாத் தண்டனைகளும் வேறு வேறாகவே இருந்தன.கட்டிக்கொள்ளப்பட்ட பாவங்களின் தீய நோக்கத்திற்குத் தக்கபடியும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.அக்காட்சியை என்னால் பார்க்க சகிக்கவில்லை.நான் ஜெபித்தேன்.தங்களின் தண்டனைகளை ஏற்றுக்கொண்ட அந்த எல்லாப் புனித ஆன்மாக்களுக்காகவும் ஜெபித்து வேண்டிக் கொண்டேன்.சேசுகிறுஸ்துவின் பாடுகளாலும்,மரணத்தாலும் அவ்வான்மாக்களுக்கு சற்று ஆறுதலலிக்க வேண்டுமென்று கேட்டேன்.மானிட இரட்சிப்பின் அலுவலில் உடன் பங்காளியாயிருந்த மரியாயின் அன்பினிமித்தம் மன்றாடினேன். அதே சமயத்தில் ஆண்டவரின் தூதன் அங்கு வரக் கண்டேன்.அவர் உலகத்தின் பாவங்களைப் போக்குகிற செம்மறியின் இரத்தம் நிறைந்த பாத்திரத்தைக் கொண்டு வந்தார்.அதில் சில துளிகளை நெருப்பின் சுவாலைகள்மேல் தெளித்தார்.உடனே அவை அவிந்தன.பின்,விசுவாசிகளின் உதவியை எதிர்பார்த்திருந்த ஆன்மாக்களின் மேல் தெளித்தார்.அவர்கள் விடுதலையடைந்து சர்வேசுரனின் அரவனைப்பிற்குள் பறந்து சென்றார்கள்....ஓ! தேவநீதியின் கோர கொடிய அவஸ்தைகளையும் பயங்கரத்திற்குரிய விழுங்கும் சுவாலைகளையும் பாவிகளும் தேவ ஊழியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களும் கண்டுபிடித்தாலல்லோ தாவிளை!மறுக்கப்படாத ஒவ்வொரு ஆசாபாசமும் அதற்குரிய தண்டனையைக் கொண்டிருக்கிறது.தங்கள் வாய்கள் நிரம்பிய திரவ நெருப்பைப் பருகிய பெருந்தொகையான ஆன்மாக்களை நான் கண்டேன்.அவர்கள் சர்வேசுரனுடைய ஆராதனைக்குரிய நாமத்தையும்,நற்கருணை தேவ திரவிய அனுமானத்தையும்,அமலோற்பவ கன்னி மரியாயையும் தூஷணித்தவர்களே.எல்லா ஆன்மாக்களும் நெருப்பால் சுத்திகரிக்கப்படவில்லை.நீடிக்கிற வாதையால் வேதனைப்படுகிற சில ஆத்துமங்களைப் பார்த்தேன்.எல்லா வகையான வேதனைகளும் அங்கே உள்ளன.எல்லா மாதிரியிலும் எல்லாத் தன்மைகளிலும் உள்ளன.நான் இப்படிச் சிந்தித்தேன்.கடவுள் நீதி என்னும் தம் இலட்சணம் மகிமைப்படுத்தப்பட விரும்புகிறார் என்று.நான் கட்டிக் கொண்ட எல்லாப் பாவங்களின் கறைகளையும் பரிகரிப்பதற்கு நான் இந்த இடத்திற்கு வருவேன் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை. அன்பான சகோதர சகோதரிகளே அன்னையின் காட்சியைப் பெற்ற மெலானியே நான் அந்த இடத்திற்கு போவேன் என்னு சொன்னால் நம் நிலமை என்ன சிந்திப்போம் மனமாற்றம் அடைவோம்.பாம்பை கண்டால் விலகி ஓடுவதைப் போல பாவத்தைக் கண்டால் விலகி ஓடுவோம்.

திங்கள், 31 மார்ச், 2014

வியாகுலப் பிரசங்கங்கள்


(வாசகர்களே! தபசுகாலம்அதிலும் அதன் பரிசுத்த வாரம் என்றாலே தமிழக கத்தோலிக்கர்களாகிய நமக்கு நினைவுக்கு வருவது வியாகுலப் பிரசங்கங்களேகத்தோலிக்க மக்கள் பக்தியார்வத்தோடு ஆலயங்களிலும், அதன் முற்றங்களிலும், தெரு சந்திப்புகளிலும் ஒருவர் உருக்கமாக வாசிக்க மற்றவர்கள் அதை கேட்டு நமதாண்டவரின் கொடிய பாடுகளில் ஒன்றித்து, கண்ணீர் சொரிந்த காட்சிகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்;. 2-ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு திருச்சபையில் காணாமல் போய்விட்ட அல்லது கைவிடப்பட்ட அநேகப் பொக்கிஷங்களில் வியாகுலப் பிரசங்கங்களும் ஒன்று! அண்மையில் அதனைப் பற்றி ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கம் - ஆ.ர்.)
ஜெரோம் கொன்சாலஸ் சுவாமியார் 1676-ம் ஆண்டு ஜூன் மாதம் கோவாவில் பிறந்தார். அவருடைய குடும்பம் இரண்டு அல்லது மூன்று தலைமுறையாகக் கத்தோலிக்கர்களாய் இருந்ததால் நல்லதோர் கத்தோலிக்க சூழ்நிலையில் வளர்ந்தார். வளரும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் சிறுவயதிலே இசை ஞானமும், பாடற் திறனும் கொண்டிருந்தார். பின்னர் கல்லூரியில் பயிலும்போது அக்கல்லூரியின் பாடகர் குழுவில் ஆர்கனிஸ்ட்டாக (ழுசபயnளைவ)இருந்தார். அங்கு தன்னுடைய திறமையை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். அச்சமயம் அவர் தற்செயலாய் வாசித்த ஒரு கத்தோலிக்க இதழில், இலங்கையில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க செயல்பாடுகளைப் பற்றி அறிந்தார். பின்னர் அச்செயலுக்காக தன்னையும் அர்ப்பணிக்க எண்ணி குருமடத்தில் சேர்ந்தார். 1700-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 2-ம் நாள் குருப்பட்டம் பெற்றார். ஆனால் இவருடைய பாதை சுமுகமாய் இல்லை. பெற்றோருடைய எதிர்ப்பை மீறி சர்வேசுரனுடைய பணிக்கு தன்னை பலியாக்கினார். பின்னர் சில ஆண்டுகள் மடத்திலே தங்கி மேற்படிப்பை மேற்கொண்டார். மெய்யியலில் இவருடைய திறனையும், ஆர்வத்தையும் கண்டு இவரை அம்மடத்திலே பேராசிரியராய் நியமித்தனர்.
ஒருநாள் குருமடத்திற்கு ஒரு சிறப்பு விருந்தினர் இலங்கையிலிருந்து வருகை தந்தார். அவரே பின்னாளில் முத்திப்பேறு பட்டம் பெற்ற சங். ஜோசப் வாஸ் என்ற குருவானவர். அவர் ஆற்றிய உரையினால் ஈர்க்கப்பட்டவர்கள் பலர். அவர்களில் ஒருவர் நம் ஜெரோம் கொன்சலஸ் சுவாமியார்.
பின்னர் சில மாதங்களில் இவர் இலங்கைக்கு பயணமானார். கரையேறியதும் அவர் உடனே அந்நாட்டு மொழியை கற்கத் தொடங்கினார். முதலில் தமிழும், பின்னர் சிங்களமும் வெகு விரைவில் கற்றுக்கொண்டார். கண்டி மாகாணத்திற்கு பொறுப்பாயிருந்த அவர், பல வகையில் கத்தோலிக்க மதம் பரவ காரணமாயிருந்தார். தன்னுடைய ஜெபத்தினாலும், தவத்தினாலும், பலருடைய மதமாற்றத்திற்கு காரணமாயிருந்தார். பதிதர்களுடனான வாக்குவாதத்தில் கத்தோலிக்க சத்தியத்தை தெளிவாகக் காண்பித்த அவர், பலருடைய மனதை வென்றார். மிகப்பெரிய மாகாணத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அவர்மேல் சுமத்தபட்டிருந்தாலும் அதனை மிக நேர்த்தியாக செய்தார்.
இத்தனை கடின உழைப்புக்கு மத்தியிலும் பல நூல்களை அவர் இயற்ற தவறவில்லை. சிங்கள மொழியில் 22 புத்தகங்களையும், தமிழில் 15 புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டார். அவைகள் வேதசாஸ்திரம், தேவ அன்னை, தேவ நற்கருணை, திருச்சபை கட்டளைகள் என பல்வேறு தலைப்புகளோடு பிரசுரமாயின. இவை அனைத்திலும் தலைசிறந்ததாய் புகழப்படுவது வியாகுல பிரசங்கங்கள். தன்னுடைய விசுவாசிகளுக்கு மட்டும் எழுதிய இப்படைப்பின் புகழ் தமிழ் உலகம் முழுவதும் பரவியது. அவருடைய நண்பர்கள் உதவியாய் 300 கையெழுத்து பிரதிகள் தயாரிக்கப்பட்டன. பின்பு 1844-ம் ஆண்டு கொழும்பில் மீண்டும் இப்புத்தகங்கள் அச்சிடப்பட்டது. பின்னர் 1871-ல் சென்னையிலும் அதற்குப்பின்; யாழ்பாணத்திலும் பலமுறை அச்சிடப்பட்டது.
வியாகுல பிரசங்கங்கள் அமைப்பு:
                தான் குருமாணவராக இருந்த காலத்தில் பெரிய வாரத்தில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் பாடப்படும் “Tenebrae” இவரை மிகவும் ஈர்த்தது. இன்றும் இத்தகைய பாடல்கள் பாரம்பரிய குருமடங்களில் பாடப்பட்டு வருகிறது. குருக்களின் கட்டளை ஜெபத்தில் முதல் இரண்டு பாகங்களான ‘Matins & Laudes’ என்னும் ஜெபங்கள் பரிசுத்த வாரத்தில் அதற்குரிய சிறப்பு இராகத்துடன் பாடும்போது கேட்போர் இதயங்களை உருக்கிவிடும்.
                பின்னர் தன்னுடைய பங்கில் லத்தீன் வாசிக்கத் தெரியாத மக்களுக்காக இவர் அந்த பாணியில் இயற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயற்றப்பட்டதே வியாகுலப் பிரசங்கங்கள்”. இதில் கீழ்க்கண்ட 9 பிரசங்கங்கள் அடங்கும் :
1. சேசுநாதர் ஜெத்சமெனித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்து அவதிப்பட்டது.
2. சேசுநாதர் ஜெத்சமெனித் தோட்டத்தில் கைது செய்யப்பட்டது.
3. சேசுநாதர் கல்தூணில் கட்டுண்டு அடிப்பட்டது.
4. சேசுநாதர் திருசிரசில் முள்முடி சூட்டப்பட்டது.
5. “இதோ மனிதன்!என்று பிலாத்துவினால் அறிவிக்கப்பட்டது.
6. சேசுநாதர் சிலுவை சுமந்துகொண்டு சென்றது.
7. சேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது.
8. சேசுநாதர் சிலுவையில் மரித்தது.
9. சேசுநாதர் அவரது தாயார்மடியில் வளர்த்தப்பட்டது.
                ஒவ்வொரு பிரசங்கத்தைப் பற்றியும் எழுதுவதாயின் பக்கங்கள் போதாது. ஆயினும் இந்த அழகிய பிரசங்கங்களின் சுவையை வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக ஒரேயொரு பிரசங்கத்தை, அதுவும் கடைசிப் பிரசங்கத்பை; பற்றி மட்டுமே எழுதுகிறேன். காரணம், மாமரி பட்ட வியாகுலங்களையும் இப்பிரசங்கம் அழகாக விவரிக்கிறது.
9-ம் பிரசங்கம் : சேசுநாதர் அவரது தாயார் மடியில் வளர்த்தப்பட்டது.
                இந்தப் பிரசங்கத்தின் தொடக்கப் பகுதியில் சேசுநாதரின் திருவிலா குத்தித் திறக்கப்படுவதும், அதைக் குத்தித் திறந்த போர்வீரனின் குருட்டுத்தன்மைகுணமானதுமாகிய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. திறக்கப்பட்ட திருவிலாவிலிருந்து சிந்திய திரு இரத்தம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை விசேஷமாகக் குறிப்பிடுவதில் இந்தப் பிரசங்கத்தின் ஆசிரியர் விசேஷ கவனம் எடுத்துக் கொள்கிறார். இந்தத் திரவத்தின் ஒரு துளி அந்த வீரனைக் குணப்படுத்தப் போதுமானதாயிருந்தது. இந்தக் குணப்படுத்துதல், சேசுநாதரின் திருமரணத்திற்குப் பிறகும் தொடர்ந்த அவருடைய இரக்கத்தின் வெளிப்பாடாக அடையாளம் காணப்படுகிறது. இந்த இரக்கம் சரீரமும், ஆத்துமமுமான முழு மனிதனுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இந்தக் குத்தி ஊடுருவப்பட்ட செயலை நன்மைத்தனத்தின் ஆதாரத்தையே திறக்கும் சந்தர்ப்பமாக அவர் காண்கிறார்.
                ஆசிரியர் தேவமாதாவின் நெகிழ்ச்சியூட்டுகிற வியாகுலப் புலம்பலை வெளிக் கொணருகிறார். அவர்கள் சர்வேசுரனை நோக்கித் திரும்பி, தனது கைவிடப்பட்ட நிலையையும், முழுமையான தனிமையையும் பற்றி தைரியமாக மனந்திறந்து பேசுகிறார்கள். சர்வேசுரனுடைய பரிசுத்த திருச்சுதனை அடக்கம் செய்யக்கூட தனக்கு எந்த வழியும் இல்லாதிருக்கும் பரிதாப நிலையை எடுத்துரைக்கிறார்கள்.
                அன்பினால் அவர்கள் திருச்சிலுவையிடம் தொடர்ந்து பேசுகிறார்கள். அந்தச் சிலுவைதன்னை நோக்கிக் குனிந்து, தன் ஒளியும், தன் பொக்கிஷமும், தன் உடைமையும், தன் சகலமுமாக இருந்த தன் திருவுதரத்தின் கனியைத் தனக்குத் திருப்பித் தரும்படி கேட்கிறார்கள்.
                தன் திருக்குமாரனிடம் பேசுகிற அவர்கள், அவருடைய பிறப்பின்போது, குளிரில் இருந்து அவரைப் பாதுகாக்கும்படி குறைந்தது ஒரு சில கந்தைகளாவது தன்னிடம் இருந்த நிலையோடு, இப்பொழுது சிலுவையின் மீது உயிரற்றவராக அவர் இருக்கையில், அவருடைய திருச்சரீரத்தை மூட தன்னிடம் எதுவுமில்லாத தன்னுடைய இயலாத நிர்ப்பாக்கிய நிலையை ஒப்பிட்டுப் பார்த்துப் புலம்பியழுகிறார்கள்.
                பரலோகமோ, அல்லது பூலோகமோ, அல்லது பரலோகத்தில் வாசம் செய்யும் யாருமோ தனக்கு ஆறுதல் தரும்படி வர மாட்டார்களா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அவர்கள் தொடர்ந்து புலம்பும்போது, சற்று தூரத்திலிருந்து சிலுவையை நோக்கி வருகிற ஒரு கூட்டத்தைக் காண்கிறார்கள். இதைக் கண்டு, ஏற்கெனவே, இறந்துவிட்ட தன் மகனை இன்னும் அதிகமாக வாதிக்கும்படி வருகிற மனிதர்களாக அவர்கள் இருக்கக்கூடுமோ என்ற தேவமாதா வியக்கிறார்கள்.
                இந்த இடத்தில், அவர்களோடு இருக்கிற அருளப்பர், அந்தக் கூட்டம் தங்களுக்கு உதவி செய்ய வந்து கொண்டிருப்பதைக் கண்டுகொள்கிறார். அந்தக்கூட்டத்தினிடையே, இரகசியமாக என்றாலும் சேசுநாதரில் விசுவாசம் கொண்டிருந்த சூசையையும், நிக்கோதேமுஸையும் அவர் அடையாளம் காண்கிறார். அவர்கள் சேசுநாதரின் திருச்சரீரத்தைச் சிலுவையில் இருந்து இறக்கி, ஒரு கல்லறையில்  அடக்கம் செய்வதற்கு ஆயத்தமாக, ஏணிகள், வாசனைத் திரவியங்கள், அடக்கச் சடங்குகளுக்குரிய துணிகள் ஆகியவை போன்ற பொருட்களோடு வருகிறார்கள்.
                அடக்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு அவர்கள் வியாகுலமாதாவிடம் அனுமதி கேட்டபோது, அவர்கள் நிம்மதிப்பெருமூச்செறிந்து, தன்னை இரக்கத்தோடு கண்ணோக்கிய சர்வேசுரனுக்குத் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
                சூசையும், நிக்கோதேமுஸ_ம் ஏணிகளைப் பயன்படுத்தி திருச்சரீரத்தை இறக்கி, அதை வியாகுல மாமரியின் திருமடிமீது அதை வளர்த்துகிறார்கள். தன் திருக்குமாரனை அனைவரிலும் அதிகப் பிரியத்தோடு நேசித்த மாதாவின் திரு இருதயத்திலிருந்து வெடித்துக் கிளம்புகிற பெரும் வியாகுலமுள்ள கதறலை ஆசிரியர் விவரிக்கிறார். அதன்பின் அவர்கள் அவருடைய ஜீவனற்ற திருச்சரீரத்தை முத்தமிட்டு, அவர் மீது விழுந்து புலம்புகிற விதத்தின் விவரங்களை அவர் தருகிறார். மற்ற காரியங்களுக்கு மத்தியில், சேசுவின் ஜீவிய காலத்தின்போது, அவரால் உதவி பெற்ற எண்ணிலடங்காத மனிதர்களின் நன்மைக்காக பயன்படுத்தப்பட்டு இப்போது உயிரற்றுப் போயிருக்கிற அவருடைய திருக்கரங்களையும், பாதங்களையும், உதடுகளையும் பற்றி அவர்கள் நினைக்கிறார்கள்.
                தன் நேச மகனின் மரணத்தால் உண்டான இத்தகைய தாங்க முடியாத நிர்ப்பாக்கியத்தை எதிர்கொள்ளும்படி தான் இன்னும் உயிரோடு இருப்பதை எண்ணி அவர்கள் வியக்கிறார்கள். அதன் பிறகு, திருச்சரீரத்தை அடக்கத்திற்காக சூசையிடமும், நிக்கோதேமுஸிடமும் தான் தர வேண்டிய நேரம் வரும்போது, தன் மகனோடு தானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அவர்கள் விரும்புவதை ஆசிரியர் காண்கிறார்.
                அடக்கத்திற்கான தயாரிப்பை விவரிக்கும்போது, வாசனைத் திரவியங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி திருச்சரீரம் ஆயத்தம் செய்யப்படுவதையும், புது அடக்கத் துணிகளில் திருச்சரீரம் சுற்றப்படுவதையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் அந்த அடக்கத் துகிலில் சேசுநாதரின் திருச்சரீரத்தின் பதிவு அழிக்கப்பட முடியாத விதத்தில் அதன்மீது பதிக்கப்பட்ட புதுமையை ஆசிரியர் குறித்துக் காட்டுகிறார். அவர் தொடர்ந்து, இந்தப்பரிசுத்த அடக்கத் துகில் இன்று வரை இத்தாலியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று அறிவிக்கிறார்.
                அடக்கப் பவனியை விவரிக்கும்போது, சிலுவையில் அறையுண்ட திருச்சரீரத்திலிருந்து அகற்றப்பட்ட ஆணிகள், முண்முடி போன்ற பரிசுத்த பண்டங்களைச் சுமந்து கொண்டிருந்தவர்களை ஆசிரியர் குறித்துக் காட்டுகிறார். பூலோகத்தை சிருஷ்டித்தவராகிய ஆண்டவர், அதே பூலோகத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார் என்ற வார்த்தைகளோடு அவர் இந்த விவரணத்தை முடிக்கிறார். இந்தக் கடைசி தியானத்தில், சேசுநாதரின் மரணத்தினால் ஆகாயவெளியின் வௌவேறு ஐம்பூதங்கள் அனுபவித்ததும் வெளிப்படுத்தியதுமான பெரும் துயரத்தை கிறீஸ்தவர்களாகிய வாசகர்களுக்கு ஆசிரியர் நினைவுபடுத்துகிறார். இப்பொழுது, சேசுநாதரின் அடக்கத்தின்போது ஆசிரியர் சகல கிறீஸ்தவர்களின் கவனத்தையும் ஈர்த்து, அவர்கள் துக்கப்படுவதற்கு அவர்களுக்கு முழுமையான காரணம் இருக்கிறது என்று கூறுகிறார். நம்முடைய துக்கம் நம் வாழ்வுகளிலிருந்து பாவத்தின் எல்லாச் சுவடுகளையும் அழித்து விடும் அளவுக்கு நாம் மனஸ்தாபப்பட வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
                சுருங்கச் சொல்வதனால், இந்த ஒன்பது பிரசங்கங்களும், சேசுநாதரின் கடைசி நாட்களின் காட்சியை மிக உயிரோட்டமாகவும், மிகக் கவனமாக உருவகிக்கப்பட்ட முறையிலும், நமக்குத் தருகின்றன என்று சொல்லலாம். ஆசிரியர் கிழக்கிந்திய நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும் குடும்ப உறவுகளைப் பிரதிப்பலிக்கிற தம் சொந்த சிந்தனைகளின் அநேக அம்சங்களைத் தம் விருப்பப்படி சுதந்திரமாக எடுத்துப் பயன்படுத்துகிறார். இவற்றில் தரப்படுகிற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உயிரோட்டம் தரும் வகையிலான ஓர் எழுத்து நடை அவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரசங்கங்களை ஒருவன் கவனிக்கும்போது, இவற்றில் எழுத்து நடையும், சித்தரிக்கப்பட்டுள்ள உருவங்களும் அவனுடைய நினைவில் நீடித்து நிலைத்திருக்கும்.

-           சங். திரேஷியன் சேவியர், அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பெப்ருவரி மாதம் 19-ம் தேதி



பெப்ருவரி மாதம் 19-ம் தேதி
அர்ச்.கொன்ராத் - துதியர்
                கொன்ராத் என்பவர் இத்தாலியா தேசத்தில் பிரபு வம்சத்தில் பிறந்து நல்ல கிறீஸ்தவராய் வாழந்து வந்தார்.  இவர் கலியாணம் செய்து கொண்டபின் தன் மனைவியுடன் அந்நியோன்னியமாய் வாழ்ந்து வந்தார்;.  இவர் வேட்டையாடுவதில் மிதமிஞ்சின ஆசைவைத்து அதில் அதிக நேரத்தை செலவழிப்பார்.  ஒரு நாள் இவர் காட்டில் வேட்டையாடும்போது ஒரு மிருகம் புதரில் நுழைந்து கொண்டதினால், அதை வெளியே துரத்த இவர் பட்ட பிரயாசையெல்லாம் வியர்த்தமானதால் கொன்ராத் கோபங்கொண்டு அந்த புதருக்கு நெருப்பு வைத்தார். நெருப்பு பொறி தற்செயலாய்ப் பறந்து விளைச்சல் நிலத்தி;ல் விழுந்ததினால் விளைச்சலுக்கு மிகுந்த நஷ்டம் உண்டானது.  இதை அவர் கண்டு பயந்து அவ்விடத்தைவிட்டு ஓடிப்போனார்.  இவ்வளவு நஷ்டமுண்டாக் கினவன் யாரென்று அந்த ஊரார் கண்டுபிடியாததினால், காட்டில் திரியும்         ஒரு இருளன்  மேல் சந்தேகப்பட்டு அவன்தான் குற்றவாளியென்று அவன் மேல்  குற்றம் சுமத்தினார்கள்.  அவனைச் சேவகர் மிகவும் உபாதித்தபோது வேதனையைப் பொறுக்கமுடியாமல், தானே காட்டுக்கு நெருப்பு வைத்ததாக ஒத்துக்கொண்டதினால், அவனுக்கு தண்டனை விதிக்கப்படும் சமயத்தில், கொன்ராத் நீதிமன்றத்திற்குச் சென்று தன் தவறை வெளிப்படுத்தி இருளனை விடுதலை செய்வித்து தன் சொத்துக்களையெல்;லாம் விற்று நஷ்டப்பட்டவர் களுக்குக் கொடுத்துவிட்டார்.  தன் மனைவி ஒரு கன்னியர் மடத்தில் சேர சம்மதித்ததினால், கொன்;ராத் அர்ச். பிரான்சீஸ்கு மடத்தில் சேர்ந்து தவஞ்செய்து வெள்ளிக்கிழமைதோறும் அங்கு வணங்கப்பட்ட ஒரு பாடுபட்ட சுரூபத்தைச் சந்தித்து மகா துக்கத்துடன் வேண்டிக்கொள்வார். ஒருநாள் வழக்கம்போல் அவர் ஜெபிக்கும்போது திருப்பாடுகளின் மட்டில் அவருக்குண்டான மனஸ்தாப மிகுதியால் அங்கேயே உயிர் விட்டார்.