*St. John Bosco, C.*
*அர்ச். ஜான் போஸ்கோ*
*துதியர் - (கி.பி.1888).
1815-ம் வருடம், ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி இத்தாலியில் பெக்கி என்னும் சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில் ஜான் போஸ்கோ பிறந்தார். இவருக்கு இரண்டு வயது ஆகுமுன்னே இவர் தமது தந்தையை இழந்தார். பிற்காலத்தில் லட்சக்கணக்கான அனாதைப் பிள்ளைகளுக்குத் தந்தையாக இருப்பதற்காக, ஜான் போஸ்கோ தாமே இளம் வயதில் அனாதையாக வேண்டுமென்று கடவுள் சித்தங்கொண்டார். புண்ணியவதியான இவருடைய தாய் மார்கரீத் மரியம்மாள் இவரைத் தெய்வப் பக்தியிலும், கிறீஸ்தவ ஒழுக்கத்திலும் நன்றாக வளர்த்தாள்.
ஜான் போஸ்கோ சிறுவயதிலே அன்பான வார்த்தைகளினாலும், இனிய பாடல்களினாலும், நல்ல விளையாட்டுகளினாலும் தனது தோழர்களைத் தன் வசப்படுத்தி, அவர்கள் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட விளையாட்டுக்களையும் விலக்கும்படி செய்தார். திடீரென்று விளையாட்டை நிறுத்தி, எல்லோரும் தன்னோடு சேர்ந்து ஜெபமாலை ஜெபிக்கும்படி செய்வார். இவருடைய குடும்பத்தின் வறுமையினால் இவர் அநேக கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தாலும், தான் ஒரு குருவானவர் ஆகி ஏழைப் பிள்ளைகளுக்காகவும் அனாதைகளுக்காகவும் உழைக்க வேண்டுமென்கிற ஒரே எண்ணம் இவர் மனதில் எப்போதும் குடிகொண்டிருந்தது.
குருப்பட்டம் பெற்ற பிறகு தூரின் பட்டணத்திற்குச் சென்று, அங்கு தேவ ஏவுதலால் கிறீஸ்தவ ஜீவியத்தின் அடிப்படையான சத்தியங்களையும் ஒழுங்குகளையும் வாலிபர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்து, “ஆரட்டரி” என்று சொல்லப்படும் சலேசியன் ஸ்தாபனத்திற்கு அஸ்திவாரமிட்டார். சிறிது காலத்திற்குப்பின், வரப்போகிற நிகழ்வுகளை இவருக்குச் சிறு வயதிலே கனவுகளின் வழியாக முன்னறிவித்த பரிசுத்த கன்னிமரியாயின் சகாயத்தினால், ஆண்களுக்காக சலேசியன் சபையையும், பெண்களுக்காக கிறீஸ்தவர்களின் சகாயியான அர்ச். மரியாயின் கன்னியர் சபையையும் ஸ்தாபித்தார். சலேசியருடைய பற்பல பணிகளுக்கு ஜெபத்தினாலும் பொருளினாலும் உதவி புரிவதற்காகப் “பரோபகாரிகளின் சபை” ஒன்றையும் ஏற்படுத்தினார். ஜான் போஸ்கோ ஆத்துமங்களின் இரட்சணியத்தின் மீது தணியாத தாகங்கொண்டிருந்தார். ஏழைப் பிள்ளைகளுக்காக அநாதை மடங்களையும், பள்ளிக்கூடங்களையும், தொழிற்சாலைகளையும், தேவ வழிபாட்டிற்காக தேவாலயங்களையும் உலகமெத்திசையிலும் கட்ட முயற்சி செய்தார். விசுவாச வாழ்வில் ஓங்கி வளரவும், கிறீஸ்தவர்கள் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நன்மை வாங்கவும் கடினமாக உழைத்தார். பிறமதத்தினரை மனந்திருப்பத் தமது சபை குருக்களைப் பலமுறை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தார். இவர் எதார்த்தமும் நேர்மையுமுள்ள தேவ மனிதனாக விளங்கினார். கற்பு என்னும் புண்ணியத்தை அதிகமாய் நேசித்தார்.
இடைவிடாமல் கடவுளோடு மனதால் ஒன்றித்திருந்து, ஏராளமான தேவ வரங்களை நிரம்பப் பெற்றார். அநேக புதுமைகளைச் செய்து, தேவ பராமரிப்பில் மட்டற்ற நம்பிக்கை வைத்திருந்தார். தமது மக்களுக்கு மூன்று வித பக்தியை ஊட்டினார். அதாவது அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து, தேவ நற்கருணை உட்கொள்ளவும், கிறீஸ்தவர்களின் சகாயியான அர்ச். மரியாயை அதிகமாய் நேசிக்கவும், பரிசுத்த பாப்பானவருக்குப் பிள்ளைக்குரிய பாசத்துடன் பணிந்து நடக்கவும் கற்றுக்கொடுத்தார். அர்ச்.ஜான் போஸ்கோ “சிறுவரின் அப்போஸ்தலர், அனாதைகளின் தந்தை, பாவசங்கீர்த்தனத்தின் அப்போஸ்தலர், திருச்சபையின் காவலர்” என்ற அழியாத பெயர் பெற்றார். கடின உழைப்பினால் பலம் குன்றி வியாதியுற்ற இவர், 1888-ம் வருடம் பெப்ருவரி மாதம் 7-ம் தேதி தமது 73-வது வயதில் பாக்கியமாய் மரித்து, மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
*யோசனை*
அர்ச். ஜான் போஸ்கோவின் படிப்பினையையும், முன்மாதிரிகையையும் பின்பற்றி, தேவநற்கருணையையும், தேவதாயையும், பரிசுத்த தந்தையையும் உள்ளன்புடன் நேசிப்போமாக.