9-ம் சங்கீதம்
கிறீஸ்துநாதர் திருச்சபையின் சத்துருக்களை
அடக்கி அதைப் பாதுகாப்பதின் பேரில் பாடியிருக்கின்றது.
1. ஆண்டவரே, என் முழு இருதயத்தோடு நான் உம்மைத் துதிப்பேன்; உமது அதிசயங்களையெல்லாம் விவரித்துக் கூறுவேன்.
2. நான் உம்மில் மகிழ்ந்து களிகூர்வேன்; மகா உந்நதமான தேவரீரே, உமது திருநாமத்தைக் குறித்து நான் கீர்த்தனம் பண்ணுவேன்.
3. என் சத்துரு பின்னாகத் திரும்பும்படி செய்தீர்; அவர்கள் உமது சமுகத்தில் பலமற்று அழிந்து போவார்கள்.
4. ஏனெனில் தேவரீர் என் நியாயத்தையும் வழக்கையும் தாபரித்தீர். நீதியைத் தீர்க்கிற நியாயாதிபதியே, சிங்காசனத்தில் எழுந்தருளினீர்.
5. தேவரீர் உலகத்தாரைக் கடிந்து கொண்டீர்; துர்மார்க்கன் அழிந்து போனான்; நீர் அவர்களுடைய நாமம் என்றென்றைக்கும் சதாகாலமும் இல்லாதபடி அழித்துப் போட்டீர்.
6. சத்துருக்களுடைய பட்டயங்கள் என்றென்றைக்கும் பலமற்றுப்போயின; அவர்கள் பட்டணங்களையும் நிர்மூலமாக்கினீர். அவர்கள் கீர்த்தி அமளியோடு அழிந்துபோயிற்று.
7, ஆண்டவரோ என்றைக்கும் இருக்கிறார்; தமது சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார்.
8. அவர் பூச்சக்கரத்திற்குச் சரி நியாயந்தீர்த்து, பிரஜைகளுக்கு நீதியோடு தீர்ப்பு செய்வார்.
9. சிறுமைப்பட்டவனுக்கு ஆண்டவரே அடைக்கலமானார்; துன்பத்தின் தகுந்த காலத்தில் அவரே (அவனுக்குத்) தஞ்சமானவர்.
10. உமது திரு நாமத்தை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைக்கக் கடவார்கள். ஏனென்றால், ஆண்டவரே உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடு கிறதில்லை .
11. சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணி அவருடைய வழிகளைச் ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.
12. அவர்கள் சிந்தின இரத்தத்தைக் கணக்குக் கேட்க வேண்டுமென்று அவர் ஞாபகப்படுத்திக்கொண்டார்; எளியவர்களின் அபய சப்தத்தை அவர் மறந்ததில்லை .
13. ஆண்டவரே, என்பேரில் இரக்கமாயிரும்; என் சத்துருக்களாலே எனக்கு வந்த தாழ்வைப் பாரும்.
14. நான் உமது துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விபரிக்கும்படி மரண வாசல்களில் நின்று நீர் என்னைத் தூக்கிவிடுகிறீர்.
15. உமது இரட்சிப்பில் நான் அகமகிழ்வேன்; ஜனங்கள் தாங்கள் வெட்டின குழிகளிலேயே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த கண்ணியிலே அவர்கள் கால் அகப்பட்டுக்கொண்டது.
16. ஆண்டவர் தீர்வையிடுகிறாரென்று அறியப்பட்டும் பாவிதன்கைகளின் செய்கைகளில் பிடிபட்டிருக்கிறான்.
17. பாவிகளும், சுவாமியை மறக்கிற சகல ஜனங்களும் நரகத்தில் தள்ளப்படக் கடவார்கள்.*
18. ஏனெனில் எளியவன் எப்போதைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப் பட்டவர்களுடைய பொறுமை கடைசியில் அழிவதில்லை .
19. ஆண்டவரே, எழுந்தருளும்; மனிதன் பலங்கொள்ளாதபடியிருக்கட்டும்; ஜனங்கள் உமது சமுகத்தில் நியாயம் தீர்க்கப்படட்டும்.
20. ஆண்டவரே, ஜாதிகள் தாங்கள் நரர்களென்று அறியும்படிக்கு அவர்கள் மேல் அதிகாரியை ஏற்படுத்தும்.*
* கிறீஸ்தவ அரசர்களை
21. ஆண்டவரே, ஏன் தூர அகன்று போனீர்? துன்பங்களிலும் என் அவசரங்களிலும் ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்?
22. துன்மார்க்கன் கர்வங்கொள்கையில் தரித்திரன் நெருப்பாய் எரியப் படுகிறான்; அவர்கள் பண்ணுகிற சதி ஆலோசனைகளிலே அவர்களே பிடிபட்டு இருக்கின்றார்கள்.
23. ஏனென்றால் பாவி தன் ஆத்துமம் இச்சித்தவைகளில் புகழ்பெற்று இருக்கின்றான்; அநியாயமுள்ள மனிதன் வாழ்த்தப்பட்டிருக்கிறான்.
24. பாவி ஆண்டவருக்குக் கோபமூட்டினான்; அவன் மூர்க்கத்தனம் மிஞ்சிப் போனதால் அவரைத் தேடமாட்டான்.
25. அவன் தெய்வத்தைச் சிந்திக்கிறதில்லை; எக்காலத்திலும் அவனுடைய வழிகள் அசுத்தமானவைகளே; உம்முடைய நியாயத் தீர்ப்புகள் அவன் பார்வைக்கு அகன்று இருக்கின்றன; அவன் தன் எதிரிகள் எல்லோரையுங் கொடுமையாய் ஆள்வான்.
26. ஏனெனில் தலைமுறை தலைமுறையாய்த் தான் அசைக்கப்படுவதில்லை யென்றும், தனக்குப் பொல்லாப்பு வருவதில்லையென்றும் அவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டான்.
27. அவன் வாய் சாபத்தினாலும், கொடுமையினாலும், கபடத்தினாலும் நிறைந்திருக்கின்றது; அவன் நாவின்கீழ் தீவினையும் கஸ்தியும் இருக்கின்றன.
28. மாசற்றவனைக் கொல்லும் பொருட்டு மறைவிடங்களில் ஐசுவரியவான் களோடு கண்ணி வைத்துகொண்டிருக்கிறான்.
29. ஏ ைழ யி ன் ேபரி லே ேய அ வ ன் க ண் க ள் ; த ன் ெக பி யி லி ரு க் கி ற சி ங் க த் ைத ப் போல அவன் மறைவில் பதிவிருக்கிறான்.
30. தன் கண்ணியில் அவனை மடக்கி விழத்தாட்டி, ஏழைகளின்பேரில் அதிகாரங்கொண்டபின் அவர்கள்மேல் குனிந்து விழுவான்.
31. ஏனெனில் அவன் இருதயத்தில் அவன் சொல்லிக்கொண்டதாவது: சுவாமி மறந்துவிட்டார்; முடிவுபரியந்தம் பாராதபடி தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
32. தேவனாகிய ஆண்டவரே, எழுந்தருளும்; உமது கரம் உயர்த்தப் படட்டும்; எளியவர்களை மறந்துவிடாதேயும்.
33. என்னத்திற்காக துர்மார்க்கன் கடவுளுக்குக் கோபமூட்டினான்? ஏனெனில், அவன் தன் இருதயத்தில் அவர் இதைச் சட்டை பண்ணமாட்டாரென்று சொல்லிக்கொண்டான்.
34. தேவரீர் இதைப் பார்க்கிறீர்; தேவரீர் உமது கரங்களில் அவர்களை மடக்கும்படி அவன் தீவினையையுங் கஸ்தியையுங் கண்டு யோசிக்கிறீர்; ஏழைக்கு நீர்தான் அடைக்கலம்; திக்கற்றவனுக்கு நீர்தான் சகாயம் பண்ணுவீர்.
35. பாவியினுடைய கையையுங் கெட்டவனுடைய கையையும் முறியும்; அவன் பாவங்கள் தேடப்படும், அகப்படாது.*
36. ஆண்டவர் நித்திய காலத்திலும் ஆளுவார்; ஆம். சதா நித்திய காலத்திலும் ஆளுவார்; அக்கியானிகளே நீங்கள் அவர் பூமிக்கப்பால் நின்று கெடுவீர்கள்.
37. பூமியின் பேரில் மனிதன் தன்னைப் புகழ்ந்து கொள்ள நினையாத படிக்கும், யாருமற்றவனுக்கும், துன்பப்படுகிறவனுக்கும் நீதி செலுத்தும்படிக்கும் ஆண்டவர் எளியவர்களுடைய ஆசையைக் கேட்டருளினார்; உமது செவி அவர்கள் இருதயம் இச்சித்தவைகளைக் கேட்டருளினது.