மூன்றாம் சங்கீதம்
சத்துருக்களால் துன்பம் வந்திடுகையில் சுவாமியை நாடிப் போகிறவர்கள்
காக்கப்படுவதின் பேரில் பாடியிருக்கின்றது.
1. ஆண்டவரே, என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் ஏன் மிகுந்து போனார்கள்? அநேகர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.
2. அவன் தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று என் ஆத்துமத்துக்கு அநேகர் சொல்கிறார்கள்.
3. ஆண்டவரே! என்னை ஆதரிக்கிறவர் நீரே! என் மகிமை நீரே! என் சிரசை உயர்த்துகிறவர் நீரே!
4. நான் ஆண்டவரை நோக்கி அபயமிட்டேன்; அவர் தமது பரிசுத்தப் பர்வதத்தில் நின்று என் மன்றாட்டைக் கேட்டருளினார்.
5. நான் படுத்து நித்திரை செய்தேன். ஆண்டவர் என்னை ஆதரித்தபடியால் (விழித்து) எழுந்திருக்கிறேன்.
6. என்னை வளைந்து கொண்டிருக்கும் ஆயிரமாயிரஞ் ஜனங்களுக்கும் பயப்படேன். ஆண்டவரே, எழுந்தருளும், என் சர்வேசுரா என்னை இரட்சித்தருளும்.*
7. ஏனெனில் நியாயமின்றி என்பேரில் எதிர்த்த யாவரையுஞ் சிதறடித்துப் போட்டீர். பாவிகளுடைய பற்களையுந் தகர்த்துப் போட்டீர்.
8. இரட்சிப்பு கர்த்தருடையது; உமது ஆசீர்வாதம் உமது பிரஜைகள்மேல் இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக