ஏழாம் சங்கீதம்
அநியாயமாய் எதிர்க்கும் சத்துருக்களுக்கு விரோதமாய்த் தேவன் சகாயத்தைக் கேட்டு மன்றாடுவதின் பேரில் பாடியிருக்கின்றது.
1. என்னை விடுவித்துக் காக்கிறவன் இல்லாமையால் சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமத்தைப் பிடிக்காதபடிக்கு.
2. என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மை நம்பியிருக்கிறேனே; என்னைத் துன்பப்படுத்துகிற எல்லோரிடத்திலும் நின்று என்னைப் பாதுகாத்து இரட்சியும்.
3. என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என்கைகளில் தோஷமிருக்கிறதும்,*
4. தின்மை செய்வோரைப் பழிவாங்கினதும் உண்டாயிருந்தால், உள்ள படியே என் சத்துருக்கள் முன்பாக நான் வெறுமையாய்ப் போவேனாகவும்.
5. பகைஞனும் என் ஆத்துமத்தைத் தொடர்ந்து பிடித்து என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து என் மகிமையைத்தூசியோடு தூசியாய் ஆக்கக் கடவான்.
6. ஆண்டவரே, நீர் உமது கோபத்தில் எழுந்திருந்து என் சத்துருக்களுடைய எல்லைகளில் உமது வல்லபத்தைக் காட்டும், என் சர்வேசுரனாகிய கர்த்தாவே, தேவரீர் நிரூபித்த கற்பனையின் நிமித்தம் எழுந்தருளும்.
7. ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும்; அதற்காகவே உன்னதத்தில் எழுந்தருளும்.
8. ஜனங்களுக்கு ஆண்டவர் நியாயந்தீர்க்கிறார்; ஆண்டவரே, என் நீதியின்படியும், என் மாசற்றதனத்தின்படியும் எனக்கு நியாயந் தீர்த்தருளும்.
9. இருதயங்களையும், உள்ளிந்திரியங்களையும் சோதித்து அறிகிறவர் சர்வேசுரன்; துர்மார்க்கருடைய தீங்கொழியும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீர்.
10. செவ்வையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் எனக்கு ஞாயமான நம்பிக்கையுண்டு.
11. சர்வேசுரன் நீதியுள்ள நியாயாதிபதியும், வல்லவரும் பொறுமையுள்ள வருமாயிருக்கிறார்; தினந்தோறுங் கோபங்கொள்ளுவாரா?
12. நீங்கள் மனந்திரும்பாதேபோனால் அவர் தமது பட்டயத்தைக் கருக் காக்குவார்; வில்லையும் நாணேற்றி அதை ஆயத்தப்படுத்தினார்.
13. அதற்காக மரண ஆயுதங்களை முஸ்திப்பு செய்து தம்முடைய அம்பு களை அக்கினி அம்புகளாக்கினார்.
14. இதோ அவன் அக்கிரமத்தை விரும்பித் தீயக் கருத்தைக் கர்ப்பங்கொண்டு பாவத்தைப் பெற்றான்.
15. குழியை வெட்டி அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியிலேதானே விழுந்தான்.
16. அவன் நினைத்த தின்மை அவன் தலையிலேயே விழும்; அதனுடைய அக்கிரமம் அவன் உச்சந்தலையில் இறங்கும்.
17. நான் ஆண்டவருக்கு நீதியின்படி துதி செலுத்துவேன்; உன்னதமான ஆண்டவருடைய திருநாமத்தைக் கொண்டாடிப்பாடுவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக