8-ம் சங்கீதம்
சர்வேசுரன் தமது சிருஷ்டிப்பில் விசேஷமாய் மனிதனைச் செய்ததில் இன்னமும் அதிகமாய் அவரே மனுஷனானதில் எம்மாத்திரம் ஆச்சரியமுள்ளவராயிருக்கிறார் என்பதின்பேரிற் பாடியிருக்கின்றது.
1. எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூவுலகெங்கும் எம்மாத்திரம் ஆச்சரியத்துக்குரியதாயிருக்கின்றது! ஏனெனில் உம்முடைய மகத்துவம் பரமண்டலங்களுக்கு மேலே உயர்த்தப்பட்டிருக்கின்றது.
2. பகைவனையும், பழிக்காரனையும் அழிக்கத்தக்கதாகத் தேவரீருடைய சத்துருக்களின் நிமித்தம் குழந்தைகளுடைய வாயிலும் பாலர்களுடைய வாயிலும் நின்று உத்தமப் புகழுண்டாகப் பண்ணினீர்.
3. ஏனெனில், தேவரீருடைய கரங்களின் வேலைகளாகிய உமது வான மண்டலங்களையும் நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்குமிடத்தில்,
4. மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் மனுஷப் புத்திரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
5. நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றே தாழ்த்தி மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடி சூட்டினீர்.
6. உமது கரங்களின் செய்கைகளின்மேல் அவனுக்கு அதிகாரங் கொடுத்தருளினீர்.
7-8. சகல ஆடுகள், காட்டு மிருகங்கள், ஆகாயத்துப் பறவைகள், சமுத்திரத்தின் விசாலத்தில் உலாவும் மச்சங்கள் முதலிய சகல ஜெந்துக்களையும் அவனுடைய கால்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
9. எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, பூவுலகெங்கும் உம்முடைய திரு நாமம் எம்மாத்திரம் ஆச்சரியத்துக்குரியதாய் இருக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக