நரகம்: மறுக்க முடியாத ஒரு நித்திய உண்மை !
கத்தோலிக்கத் திருச்சபை போதித்து வரும் விசுவாச சத்தியங்களில் மிக முக்கியமானதும், ஒரு வகையில் மற்ற அநேக சத்தியங்களுக்கு அடிப்படையானது மாகிய ஒரு சத்தியம் இன்று மறுக்கப் படுவதை நாம் காணமுடிகிறது. அது மறுக்கப்படுவது மட்டுமல்ல, அதை விட அதிகமாக, மறைக்கவும் படுகிறது. நரகம் என்ற ஒன்று இருக்கிறது, இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தன் பாவத் திற்குத் தண்டனையாக அங்கு செல்லக்கூடிய ஆபத்து இருக்கிறது என்ற நித்திய சத்தியம்தான் அது!
1908-ல் பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதரால் வெளியிடப்பட்ட "ஞான உபதேசம், ” நரகத் தைப் பின்வருமாறு வரையறுத்தது: “நரகம் என்பது தீயவர்கள் தண்டிக்கப்படும் ஓர் இடமாகும். அங்கு அவர்களுக்கு நித்தியத்திற்கும் கடவுளின் காட்சி மறுக்கப்படுகிறது, அங்கு அவர்கள் பயங்கரமான வாதைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்” (Lesson 37th: on the Four Last Things, Question 1379).
ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானப் பரிணாம சிந்தனைகள், இந்த விசுவாச சத்தியத்தை அகற்றி விட்டு, அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. எனவே, நரகம் என்ற ஒன்று உண்மையாகவே இருக்கிறது என்பதை நிரூபிப்பதும், அதைப் பற்றி மக்களை எச்சரிப்பதும், மோட்சம் செல்ல அவர்களுக்கு உதவுவதும்தான் இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது.
நரகத்தைப் பற்றிய தியானம் எப்படிப்பட்ட அச்சம் தருகிற, பயங்கரமான தியானமாக இருக்கிறது! ஆன்மாக்களுக்கு இந்த சத்தியத்தைப் பற்றி மேலிருந்து ஞான வெளிச்சம் தரப்பட வேண்டும், அவர்களது மனங்களில் இந்த சத்தியம் உறுதிப்பட வேண்டும் என்ற ஏக்கம்தான் இந்தக் கட்டுரை வெளிவரக் காரணம். இது பாவத்தையும், நரகத்தையும் பற்றி மேலோட்ட மாகப் பேசுபவர்களின் கற்பனையான கனவுகளிலிருந்து இருதயத்தையும், மனதையும் விடுவிக் கிறது. தொன் போஸ்கோவின் நரகக் கனவில் வரும் வழிகாட்டி, ஓர் எல்லைக் கோட்டை சுட்டிக் காட்டுகிறார். இந்தக் கோட்டிற்கு அப்பால், இனி அன்பு இல்லை, நண்பர்கள் இல்லை, எந்த விதமான ஆறுதலும், தேறுதலும், சுகமும் இல்லை. ஒழுக்கங்கெட்ட உலகத்தைப் பின்செல்பவர்களுக்காக அங்கே கடும் அச்சமும், நம்பிக்கையின்மையும் மட்டுமே காத்திருக்கிறது.
நரகத்தைப் பற்றிப் பேசி மக்களை அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மை நிலை இதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது. இவர்கள் முதலில் ஒரு காரியத்தை ஆழமாக சிந்திக்க வேண்டும்.
தேவ சுதனானவர் எதற்காக மனிதனானார்? "அவர் தேவரூபமாயிருக்கையில்... தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலாகி, மனித ரூபமாகக் காணப் பட்டார், தம்மைத்தாமே தாழ்த்தி, மரணமட்டும் அதாவது சிலுவை மரணமட்டும் கீழ்ப்படித் லுள்ளவரானார்” (பிலிப்.2:6-8) என்றால், அதற்குக் காரணம் என்ன? மனிதனைப் பாவத்தின் அடிமைத்தனத்தினின்றும், அதன் பயங்கர விளைவாகிய நரகத்திலிருந்தும் இரட்சிப்பதற்காகவே அவர் மனிதனானார். கிறிஸ்துவின் மனிதாவதாரத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று இது.
ஆனால் இந்த மிக அத்தியாவசியமான, இன்றியமையாத போதனை இன்று போதிக்கப் படுகிறதா? இல்லை! இல்லவேயில்லை! கிறீஸ்துநாதர் மனிதர் கண்டு பால் முன்னுதாரண மனிதராக, உத்தமமான மனிதராக (The Ideal Man) மக்களுக்குக் காட்டப் படுகிறார். மிகச் சிறந்த “மனித மதிப்பீடுகளை நமக்குத் தரவே அவர் வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு வகையில் மனுக்குலத்தை இரட்சிக்க அவர் வந்த தாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆனால் எதிலிருந்து இரட் சிக்க வந்தார் என்பதில்தான் கத்தோலிக்க போதனையில் இருந்து பலர் வேறுபடுகிறார்கள். "சமுதாய சீர்கேடுகள், செல்வந்தர்களாலும், அதிகாரமுள்ளவர்களாலும் ஏழைகள் ஒடுக்கப்படுதல், அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் தீமைகள், அநீதிகள், பெண்களுக்கு எதிரான வன்முறை” போன்ற தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க உலகில் பிறந்த ஒரு வீரநாயகராக, வெறும் உலகத் தீமைகளிலிருந்து மட்டும் மனிதனை மீட்க வந்த ஒரு போராளியாக அவர் இன்று முன்னிறுத்தப் படுகிறார். ஆனால் இது உண்மையா?
"இம்மைக்காக (இவ்வுலக நல்வாழ்வுக்காக) மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனிதர்களிலும் நாம் அதிகப் பரிதாபத்துக்குரியவர் களாயிருப்போம்” (1கொரி.15:19) என்று நம்மை எச்சரிக்கிறார் அப்போஸ்தலர்.
பரிசுத்த வேதாகமம் முழுவதும், நேரடியாகவும், மறைமுகமாகவும் நரகத்தைப் பற்றிக் கூறி நம்மை எச்சரிக்கிறது. அதில் ஒரு சில தேவ வாக்கியங்களைப் பார்ப்போம்:
"கோழைகளும், அவிசுவாசிகளும், அருவருப்புக்குரியவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரக ஆராதனைக்காரர், பொய்யர் அனைவரும் அக்கினியும், கெந்தகமும் எரிகிற தடாகத்திலே பங்கடைவார்கள். இரண்டாம் மரணம் இதுவே” (காட்சி .21:8).
"பாவத்தைச் செய்கிறவன் பசாசின் மகனாயிருக்கிறான். ஏனெனில் பசாசானது ஆதிமுதல் பாவஞ்செய்கின்றது. ஆனால் பசாசின் கிரியைகளை அழிக்க வேண்டுமென்றே தேவசுதன் தோன்றினார்” (1 அரு.3:8).
தமது மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்தும், நரகத்திலிருந்தும் இரட்சிப்பதற் காகவே கிறீஸ்துநாதர் உலகில் தோன்றினார் (மத்.2:21 காண்).
"சர்வேசுரன் நம்மைத் தமது கோபமுனிவுக்கென்றல்ல, நம்முடைய ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துவின் வழியாய் இரட்சணியம் அடைவதற்கென்றே நியமித்திருக்கிறார்” (1 தெச. 5:9).
"ஆண்டவர் தம் அர்ச்சியசிஷ்டவர்களிடத்தில் மகிமைப்படத்தக்கவரும், அவரை விசுவசித்த சகலரிடமும் ஆச்சரியப்படத்தக்கவருமாய் வரும்போது பொல்லாதவர்கள் ஆண்டவருடைய சன்னிதானத்திலும், அவரது வல்லமையின் மகிமையிலும் நின்று தள்ளப்பட்டு, கேட்டுக் குள்ளாகி நித்திய தண்டனையை அடைவார்கள்” (2 தெச. 1:9).
இந்த வேதாகம வாக்கியங்களும், ஏன் வேதாகமம் முழுவதுமே நரக சத்தியத்திற்கு சாட்சி யாக இருக்கின்றன. மனிதனைப் பாவத்தினின்றும், நரகத்தினின்றும் மீட்டு இரட்சிப்பதற் காகவே சேசுநாதர் உலகிற்கு வந்தார் என்பது, ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன் வரை சகல கத்தோலிக்கர்களும் எந்தக் கேள்வியுமின்றி உறுதியாக விசுவசித்து வந்த சத்தியமாக இருந்தது. ஆனால் இன்று இந்த போதனை மறைக்கப்படுகிறது என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத அவலமான, வேதனையளிக்கிற உண்மையாக இருக்கிறது.
இனி, “நீங்கள் விசுவாசத்தில் நிற்கிறீர்களோ என்று நீங்களே உங்களைச் சோதித்தறியுங்கள். நீங்களே உங்களைப் பரீட்சித்துக் கொள்ளுங்கள்” (2கொரி.13:5). இச்சத்தியத்தை விசுவசித்து, நரகத்தினின்று தப்பித்து, மோட்சத்தை அடைவது, உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமையாகும். - அடுத்து, “நரகம் இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை . ஆனால் ஞான உபதேசம் (மறைக் கல்வி) என்ற பெயரில் அதைப் பற்றி எடுத்துக்கூறி குழந்தைகளை அச்சுறுத்துவது அவசியமற்றது. நல்லவர்களாக வாழும்படி அவர்களிடம் கூறுவது போதுமானது” என்று சிலர் வாதிடுகிறார்கள்.
“மறைக்கப்படும் சத்தியம், மறுக்கப்படுகிற சத்தியமாகும்” என்பதை இவர்கள் உணரவில்லையா? மகன் பள்ளிக்குச் செல்லும் வழியில் திறந்திருக்கிற பெரிய சாக்கடைக் குழியைப் பற்றி ஒரு தாய் அவனை எச்சரித்து அனுப்புவது தவறா? அப்படி எச்சரித்தால் குழந்தை பயந்து விடுவான் என்று இவர்கள் வாதிடுவார்களா? கொள்ளை நோய் பரவும் நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று பிற நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை செய்வதில்லையா? தீவிரவாதம் தலைவிரித் தாடுவதும், எந்த விதத்திலும் மனித உயிருக்கு உத்தரவாதம் இல்லாதிருப்பதுமான நாட்டிற்குத் தன் மகனை வேலைக்கு அனுப்ப எந்தத் தகப்பன்தான் விரும்புவான்? மகனே விரும்பினாலும் கூட அங்கு செல்லாதபடி தடுக்க, தந்தை தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுக்க மாட்டானா?
இந்த உதாரணங்கள் எல்லாம் வெறுமனே மனித உயிரை மட்டும் சார்ந்தவை. ஆனால் நரகத்தைப் பற்றிய சத்தியத் திருச்சபையின் போதனை மனித ஆத்துமங்களை அந்த நரகத் திலிருந்து காப்பாற்றி இரட்சிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதால், அது முன்கூறிய வைகளை விட எவ்வளவோ உந்நதமானதும், அத்தியாவசியமுமான போதனையாக இருக்கிறது. கிறீஸ்துநாதர் திருச்சபையை ஸ்தாபித்ததின் நோக்கம் இது மட்டுமே. இதை விட்டு விட்டு வேறு ஒரு நோக்கத்திற்காகத் திருச்சபை உழைக்குமென்றால், அது ஒன்றில் உண்மையான திருச்சபை யாக இருக்க முடியாது, அல்லது அது கிறீஸ்துநாதருக்கு விரோதமான ஒரு புதிய பாதையில் பயணிக்கிற ஒரு சபையாக மட்டுமே இருக்கும் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்!
அர்ச். அந்தோனி மரிய கிளாரெட் சொல்வதாவது: “நெருப்பால் நிறைந்திருக்கிற ஒரு குழிக்குள் விழவிருக்கும் ஒரு மனிதனை நான் கண்டால், ஓடிப் போய் அவனை எச்சரிக்க அவன் அதில் விழாதிருக்க உதவும்படி என் சக்திக்கு உட்பட்ட எல்லாவற்றையும் செய்ய மாட்டேனா? அப்படியிருக்க, நரக நெருப்பின் படுகுழிக்குள் விழுவதிலிருந்து பாவிகளைக் காப்பாற்ற நான் ஏன் இன்னும் அதிகமாக முயலக் கூடாது? நான் விசுவசிக்கிற அதே சத்தியங்களை விசுவசிக்கிற மற்ற குருக்கள், தங்கள் மந்தையைச் சேர்ந்த விசுவாசிகள் நரகத்தின் இந்த தாங்க முடியாத நித்தியத்தைத் தவிர்க்கும்படி, நரகத்தைப் பற்றி அவர்களுக்கு ஏன் போதிப் பதில்லை, அவர்களை ஏன் எச்சரிப்பதில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தேவ விசுவாசம் என்னும் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ள ஆண்களும், பெண்களுமாகிய பொது நிலையினர், தேவைப்படுகிறவர்களுக்கு இந்த எச்சரிக்கையை ஏன் தருவதில்லை என்பது எனக்கு இன்னும் வியப்புக்குரிய காரியமாகவே இருக்கிறது. இரவின் நடுவில் ஒரு வீடு தீப்பற்றிக் கொள்கிறது, அதில் வசிப்போரும், அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்களும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், முதலில் அந்த விபத்தைக் காணும் எவனும், தெரு நெடுக ஓடி, “நெருப்பு! நெருப்பு! அந்த வீடு தீப்பிடித்து எரிகிறது!'' என்று கூச்சலிட மாட்டானா? அப்படி யிருக்க, பாவத்தில் உறங்கிக் கொண்டிருப்பவர்கள் கண்விழிக்கிறபோது, தாங்கள் நரகத்தின் நித்திய தீச்சுவாலைகளில் இருக்கக் காண்பதைத் தடுக்கும்படி ஏன் யாருமே அவர்களை எச்சரிப்பதில்லை?” புனிதரின் இந்த வார்த்தைகள் இந்நாட்களில் இன்னும் எவ்வளவு அதிகப் பொருத்தமானவையாக இருக்கின்றன!
அர்ச். போர்ட் மவுரீஸின் லியோனார்ட் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார்: “பாரிஸில் ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் அநேக ஆயர்களும், ஆத்தும் மேய்ப்பர்களும் பங்குபெற்றார்கள். ஒரு புகழ் பெற்ற கத்தோலிக்க போதகர் பிரசங்கம் செய்ய அழைக்கப்பட்டிருந்தார். அவர் தம் பிரசங்கத்தை தயார் செய்துகொண்டிருந்தபோது, ஒரு பசாசு பயங்கரத் தோற்றத்தோடு தோன்றி, அவரிடம்: “உம் புத்தகங்களை மூடி வையும். இந்த ஆயர்கள், ஆத்தும மேய்ப்பர்களுக்கு உண்மையாகவே பயனுள்ள ஒரு பிரசங்கம் செய்ய விரும்புகிறீர் என்றால், எங்கள் சார்பாக இந்த வார்த்தைகளைச் சொல்லும்: “ஆயர்கள், ஆத்தும மேய்ப்பர்களின் அசட்டைத்தனத்தால் ஏராளமான விசுவாசிகள் நித்தியத்திற்கும் சபிக்கப்படுகிறார்கள் என்பதற்காக இந்த ஆயர்களுக்கும், ஆத்தும் மேய்ப்பர்களுக்கும் இருளின் அரசர்களாகிய நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நீங்கள் எங்களுக்குச் செய்யும் இந்த உபகாரத்திற்காக, நீங்கள் நரகத்தில் எங்களோடு இருக்கும்போது, நாங்கள் உங்களுக்கு ஒரு சன்மானம் தருவோம்!” என்றது.''
உலகம் மிக வேகமாகத் தன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆன்ம மேய்ப் பர்கள் உலகின் பின்னால் ஓடிக் கொண்டிருக்க, ஆன்மாக்களோ உறங்கிக் கொண்டிருக்கின்றன! நோவேயின் நாட்களில் எப்படியிருந்ததோ, அப்படியே மனுமகனின் வருகையிலும் இருக்கும். எவ்வாறெனில் பெருவெள்ளத்திற்கு முந்தின நாட்களிலே, நோவா என்பவர் பேழையில் பிரவேசிக்கும் நாள் வரையில் ஜனங்கள் உண்டும், குடித்தும், பெண் கொண்டும், கொடுத்து மிருந்து, பெருவெள்ளம் வந்து சகலரையும் வாரிக்கொண்டு போகும்வரைக்கும் உணரா திருந்தார்கள். அவ்விதமே மனுமகனுடைய வருகையிலும் இருக்கும்” என்ற நம் ஆண்டவரின் தீர்க்கதரிசனம் எழுத்துப் பிசகாமல் நிறைவேற்றிக் கொண்டிருப்பதை எங்கும் காண்கிறோமே! ஐயோ! ஆத்துமங்களை இந்த பயங்கரத்திலிருந்து காப்பாற்ற யார் முன்வருவார்கள்!
“நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது பரலோகத் தினின்று வருகிற தேவதூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவான்” (கலாத். 1:8) என்று அப்போஸ்தலர் எச்சரிப்பதை ஆன்ம மேய்ப்பர்கள் கவனத்தில் கொள்ளட்டும்!
பாத்திமாவில் 1917 ஜூலை 13 அன்று பரிசுத்த ஜெபமாலை மாதா தன் மூன்று குழந்தைகளுக்கு நரகத்தைத் திறந்து காட்டி னார்கள். இந்தக் குழந்தைகளில் இளையவளான ஜஸிந்தாவுக்கு அப்போது ஆறு வயதுதான் ஆகியிருந்தது. இந்தக் காட்சி எந்த அளவுக்கு அவர்களை நடுங்கச் செய்தது என்றால், லூஸியா தனது மூன்றாம் நினைவுக் குறிப்பேட்டில் "இக்காட்சி ஒரு கண நேரம்தான் நீடித்தது. நமது மோட்ச அன்னைக்கு நன்றி. நாங்கள் மோட்சம் செல்வோம் என்று முதல் காட்சியிலேயே அவர்கள் கூறியிருந்தார்கள். இல்லாவிட்டால் திகிலாலும், பயத்தாலும் நாங்கள் இறந்தே போயிருப்போம்” என்று எழுதுகிறாள். ஆம். உள்ளபடியே சில வினாடிகள் மட்டும் காண்பிக்கப்பட்ட அந்த நரகக் காட்சியும் கூட, அவர்களுடைய உயிரைப் பறிக்கும் அளவுக்கு மிக பயங்கரமானதாக இருந்தது. கொடிய பசாசுக்களும்,
சபிக்கப்பட்ட ஆத்துமங்களும் அந்த மகா பயங்கரமுள்ள நெருப்புக் கடலில் சொல்லிலடங்காத கொடூர வேதனைகளுக்கு உள்ளாகியிருந்ததைக் கண்டு அந்தக் குழந்தைகள் நடுங்கிப் போனார்கள். ஆயினும் ஞானத்துக்கு இருப்பிடமாகிய திவ்ய கன்னிகை, நரகத்தை அக்குழந்தைகளுக்குத் திறந்து காட்ட சற்றும் தயங்கவில்லை. நரகத்தைப் பற்றிய போதனை எந்த அளவுக்கு அனைத்திலும் மிக முக்கியமானது என்பதை நிரூபிக்க இந்த ஒரு சாட்சியமே போதுமானது.
எனவே, ஒரு போலியான காரணத்தைக் கூறி, நரகப் பசாசைப் போல, தேவ அன்னையை விடத் தங்களை அதிக ஞானமுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ள யாரும் இனி துணிய வேண்டாம்!
வேதபோதகர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் புதிய வேதபோதகக் களங் களைத் தேடி ஆத்தும் தாகத்தோடு செல்லக் காரணமாயிருப்பது இந்த நரக சத்தியமே. பாரிஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராயிருந்த நம் ஞானத் தகப்பன் அர்ச். சவேரியாரை, இந்த இந்திய நாட்டிற்கு இழுத்து வந்து, எந்த வசதியும் இல்லாத இந்நாட்டில் கால்நடையாகவே
ரியச் செய்ததும் இந்த நரக சத்தியமே. கிறீஸ்துநாதர் ஏற்படுத்திய தேவத் திரவிய அநுமானங்கள், அவற்றின் மூலமாகவும், ஜெபம் முதலிய வேறு வழிகளின் மூலமாகவும் மனிதர் மீது வெகு தாராளமாக சர்வேசுரனால் பொழியப்படும் வரப்பிரசாதம் ஆகியவற்றின் நோக்கம் ஆன்மாக்களை நரகத்திலிருந்து மீட்டு இரட்சிப்பதே தவிர வேறு எதுவுமில்லை.
நரகம் இருக்கிறது! உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் அதில் விழும் ஆபத்து இருக்கிறது. அதிலிருந்து தன் ஆன்மாவைக் காத்துக்கொள்வது ஒன்றே மனித வாழ்வின் ஏக இலட்சியமாக இருக்கிறது. இதற்கு மாறான போதனையெல்லாம் பசாசிடமிருந்தே வருகிறது. - இந்தக் கட்டுரை முழுவதிலும் நரக தண்டனைகளும், இந்த நரகத்திலிருந்து ஆன்மாக்கள் காப்பாற்றப்படுவதற்கான வழிமுறைகளும் தரப்பட்டுள்ளன.
எனவே ஆண்டவரே வெளிப்படுத்திய இந்த சத்தியத்தை விசுவசித்து, முழு மனதோடு அதை ஏற்றுக்கொண்டு, அநுதினமும் அதைப் பற்றி சிந்தித்து, முடிந்த வரை அதைப் பிறருக்கு போதித்து, உங்களுடையவும், பிறருடையவும் இரட்சணியத்தை அடைந்து கொள்ள முன்வருவீர்களாக!