"இடைவிடா சகாய மாதா”
அற்புதப்படத்தின் சரித்திரம்
By.
Rev.Fr.W.Raemers, C.SS.R
(Courtesy
"Catholic”
April 2001)
"என்னுடைய அனுக்கிரகம் இப்படத்தில் எப்பொழுதும் தங்கியிருக்கும்" என்று மிகவும் பரிசுத்த தேவமாதா அர்ச்.லூக்காஸிடம் கூறினார்கள்.
Click Here to Download as PDF
- Booklet
- A5 Book
- With Page number
பரிசுத்த மரியாயே! பரிதவிப்போருக்கு சகாயமாக வாரும்! பலவீனமான இருதயமுடையோருக்கு உதவியருளும் ! அழுபவரைத் தேற்றி மகிழப் பண்ணியருளும். மக்களுக்காக வேண்டிக்கொள்ளும். குருக்களுக்காக பரிந்து பேசியருளும்: Magnificat
Antiphon B.V.M
மனித மனமானது, உன்னதமானதும் அழகானதுமான சிந்தனைகளை உருவாக்கக் கூடியதிறமை வாய்ந்தது. கவிதை, இசை, ஓவியம் போன்றவற்றின் மூலம் இவ்வுயரிய சிந்தனைகளை வெளிப்படுத்துவது கலைத்துறையாகும். நமதாண்டவர் மோட்சத்திற்கு எழுந்தருளிப்போன பிறகு, இப்பூமியில் அந்நாள்வரை ஆண்டவரைக் கண்டும் அறிந்தும், நேசித்தும் பக்திபற்றுதலுடன் அவரைப் பின்தொடர்ந்தும் வந்த அவருடைய சீடர்கள், ஆண்டவரைப் பற்றிய அனைத்தையும், தங்களுடைய இருதயங்களில் தெளிவாக வைத்திருக்க ஆசித்தனர். நம் நேச ஆண்டவருடைய போதகத்தை மட்டுமல்லாமல், அவருடைய சயிக்கினைகள், ஆண்டவருடைய குரலொலியின் தொனி , உணர்வுகளை வெளிப்படுத்திய ஆண்டவருடைய திருக்கண்களின் தோற்றம், ஆண்டவருடைய ஆளுமையின் தோற்றம், அனைத்தையும் மீண்டும் நேசமுடன் ஞாபகப்படுத்திக்கொண்டனர். சேசுநாதர் சுவாமியுடைய தோற்றத்தைப் பற்றி சீடர்கள் கொண்டிருந்த ஞாபகமே, பலவிதமாக ஆண்டவரைப் பற்றிய வாய்வழி வர்ணனை வார்த்தைப் படங்கள் ஏற்படுவதற்கு வழிவகுத்தது. எனவே தான், ஆதித்திருச்சபைக் காலத்தில் ஆண்டவருடைய திருவுருவத்திற்கேற்ப அமையப்பெற்ற பல ஓவியங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். சுரங்கக்கல்லறைகளிலும், ஆதித்திருச்சபைக்காலத்தில் கட்டப்பட்ட தேவாலயங்களின் சுவர்களிலும் ஆண்டவருடைய உருவம் வரையப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆண்டவர் பரலோகத்திற்கு எழுந்தருளிப் போனபிறகு , தேவமாதா இவ்வுலகில் 12 வருடங்கள் ஜீவித்தார்கள். அப்பொழுது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் தேவமாதாவுடன் தங்கியிருந்தனர். அர்ச். அருளப்பருடைய சீடர்களான அர்ச். மாற்குவும் அர்ச். லூக்காஸும் அவர்களுடன் தங்கியிருந்தனர். அர்ச். அருளப்பருடன் அர்ச்.லூக்காஸும் தேவமாதாவைப் பற்றிய விசேஷ குணாதிசயங்களைப் பற்றி அறிந்து மகிழும் பாக்கியம் பெற்றவர். கிழக்கத்திய பாரம்பரியத்தின்படி, ஓவியரும் சுவிசேஷகருமான அர்ச். லூக்காஸ், தேவமாதாவையும் குழந்தை சேசுவையும் ஓவியமாக வரைந்தார். இதைக் கண்ட தேவமாதா மிகவும் சந்தோஷப்பட்டார்கள். எவ்வளவுக்கு மகிழ்ச்சியடைந்தார்கள் என்றால், இந்தப் படம் எங்கெல்லாம் செல்கின்றதோ அங்கெல்லாம் அவர்களுடைய ஆசீர்வாதமும் செல்லும்படியாக ஆசித்து, அதற்கான விசேஷ ஆசீர்வாதத்தையும் அப்படத்திற்கு அளித்தார்கள். தியோ பிலுஸ் என்ற தம் நண்பருக்கு அர்ச்.லுக்காஸ் இந்த ஓவியத்தை அனுப்பிவைத்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாம் தியோடிசியுஸ் என்பவனுடைய மனைவியான யுடோசியாவின் கைவசத்தில் இப்படம் இருந்தது. அவள் இப்படத்தை, கி.பி.453ம் வருடம் வரை வாழ்ந்து வந்த தியோடிசியுஸின் சகோதிரியான அர்ச். புல்கேரியாவிற்கு அன்பளிப்பாக அளித்தாள். பரிசுத்த கன்னிகையான இந்த அர்ச்சிஷ்டவள் கான்ஸ்டான்டினோபிள் நகரில், தேவமாதாவுக்குத் தோத்திரமாக மூன்று தேவாலயங்களைக் கட்டுவித்தாள். அதில் ஒரு தேவாலயத்தில் அர்ச். லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் படத்தை ஆடம்பரமாக பொதுமக்களுடைய வணக்கத்திற்காக ஸ்தாபிப்பதற்கு ஏற்பாடு செய்தாள். "வழிகாட்டிகளின் வாசஸ்தலம்" என்ற அர்த்தம் கொடுக்கும் "Hodegium'' என்ற கிரேக்க பெயருடன் திகழ்ந்த தேவாலயத்தில், இந்தப்படம் ஸ்தாபிக்கப்பட்டது. எனவே தான், அர்ச். லுக்காஸ் வரைந்த பிரசித்திபெற்ற தேவமாதாவின் படம் , ஹோடே கெத்ரியா (Hodegetria) என்று நாளடைவில் அழைக்கப்பட்டது. அந்நகரமெங்கும் மக்கள் மாபெரும் சங்கை மேரையுடன் தேவமாதாவின் படத்தை வணங்கி வந்தனர். இவ்வற்புத படத்தினால் அநேக புதுமைகள் நிகழ்ந்தன. அநேக பிரச்னைகள், பஞ்சம், கொள்ளை நோய்களின்றும், எதிரிகளின் படைத்தாக்குதல்களிலிருந்தும் அந்நகர மக்களை தேவமாதாவின் இந்த அற்புதப்படம் புதுமையாக பாதுகாத்துவந்தது. தேவமாதாவின் மேல் அத்தியந்த பக்திபற்றுதல் கொண்டிருந்த அந்நகர மக்களை தேவமாதாவும் விசேஷ பாதுகாவலினால் காத்து வந்தார்கள். 1000 ஆண்டுகள் தேவமாதாவின் படத்தை அந்நகர மக்கள் பக்தி பற்றுதலுடன் வணங்கி கொண்டாடி வந்தனர்.
1453ம் வருடம் கான்ஸ்டான்டிநோபிள் நகரை துருக்கியர் கைப்பற்றினர். மகம்மதியரான இக்காட்டுமிராண்டிகள், பரிசுத்தமான இவ்வற்புதப்படத்தை அழித்தனர். இவ்வாறு கீழைத்திருச்சபை, அது வரைக்கும் பாதுகாத்துவந்த அதிமிகு விலை மதியாத பொக்கிஷத்தை இழந்தது. ஆனால், தேவபராமரிப்பினால், ஹோடே கெத்ரியா படத்திலிருந்து எடுக்கப்பட்ட பல நகல்கள், இந்நாள்வரை காப்பாற்றப்பட்டுள்ளன. அதில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு படம், ஸ்மோலென்ஸ்க் என்ற ரஷ்ய நகரில் உள்ளது. இது, அர்ச்.லூக்காஸ் வரைந்த படத்தின் நகலாகும். இப்படத்தில், தேவமாதாவின் வலது தோளின் மேல், ஹோடே கெத்ரியா என்ற பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். கிழக்கத்திய நாடுகளில் உள்ள பல தேவாலயங்களில், தேவமாதாவின் இந்த அற்புதப்படத்தைக் காண்கிறோம். அர்ச்.லூக்காஸ் வரைந்த மூலப்படத்திலிருந்து, அவை வெகு சொற்ப வித்தியாசத்தினால் மட்டுமே வேறுபட்டிருப்பதையும் பார்க்கின்றோம். இந்தப் படத்தில் சில சிறு மாற்றங்களைச் சேர்த்து, கைதேர்ந்த பக்தியுள்ள ஓவியர்கள், வியாகுல மாதாவின் படங்களை வரைந்தனர்.
அப்படங்களில் ஒன்று தான் இடைவிடா சகாய மாதாவின் படம். ரோமாபுரியிலும் அகில உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இவ்வற்புதப் படத்தை விசுவாசிகள் வணங்கி, மகிமை செலுத்தி வருகின்றனர். கிழக்கு நாடுகளில், சுரூபவணக்க விரோதிகள், சுரூபங்களை உடைத்து, கிறிஸ்துவ மக்களை கொடுமைப்படுத்தி வந்த காலத்தில், தலைசிறந்த ஓவியரும் வேதசாட்சியுமான அர்ச். லாசர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தேவமாதாவின் மேல் ஆழ்ந்த பக்தி பூண்டவர். அர்ச். லூக்காஸின் தேவமாதா படத்தைப் பார்த்து, நமதாண்டவளின் படத்தைப் பக்திபற்றுதலுடன் வரைந்தார். அதற்குக் கைம்மாறாக, கொடூர அரசாங்கத்தினால், அவருடைய இரு கைகளும் சுடப்பட்டன. ஆனால், தேவமாதா , அற்புதமாக தம்முடைய தாசனாகிய லாசருடைய கரங்களைக் குணப்படுத்தினார்கள். அர்ச்.லூக்காசின் படத்தில் இல்லாத இரண்டு சம்மனசுகளை இவர் தமது படத்தில் சேர்த்து சித்தரித்திருந்தார். பாப்பரசர் இப்படத்தைக் கேட்டதன் பேரில், அர்ச். லாசர், தான் வரைந்த தேவமாதாவின் அற்புதப்படத்தை எடுத்துக்கொண்டு, உரோமாபுரிக்கு பயணம் செய்யும் போது, வழயில் கிரீட் தீவில் இறந்துவிட்டார்.
அதன்பிறகு, தேவமாதாவின் இவ்வற்புதப்படம் கிரீட் தீவில் வசித்து வந்த கிறிஸ்துவர்களால் 3 நூற்றாண்டு காலமாக மிகுந்த பக்தியுடன் ஸ்துதிக்கப்பட்டு வந்தது. துருக்கியர்கள், 1669ம் வருடம், மத்திய தரைக்கடலிலுள்ள கிரீட் தீவைக் கைப்பற்றியபோது, அங்கிருந்த அர்ச். தீத்துவின் தேவாலயத்தில் இருந்த தேவமாதாவின் அற்புதப்படத்தை வெனிஸ் நகரவாசிகள் பாதுகாப்பாக தங்களுடன் எடுத்துச் சென்றனர். அடுத்த வருடம் , வெனிஸ் நாட்டின் குடியரசின் ஆணையின்படி, அந்நகரிலுள்ள டெல்லா சாலுதே என்ற தேவாலயத்தில் அற்புதப்படத்தை ஸ்தாபித்தனர். 1922ம் ஆண்டில், அதாவது, கிரீட்டிலிருந்து தேவமாதாவின் படம், வெனிஸ் நகரத்திற்குக் கொண்டுவரப்பட்டு, ஏறக்குறைய 3நூற்றாண்டுகள் நிறைவுபெற்றதன் ஞாபகார்த்தமாக, தேவமாதாவுக்குத் மகிமை செலுத்தும்படியாக, அவர்களுடைய இந்த அற்புதப்படத்திற்கு ஆடம்பரமாக திருச்சபை உயர் அதிகாரிகள் முடிசூட்டினர்.
13ம் நூற்றாண்டைச் சேர்ந்த, இப்படத்தின் நகல் ஒன்று ஜெர்மனியிலுள்ள ட்ரையர் என்ற இடத்திலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. ஹோடே கெத்ரியா மூலப்படத்தை மிகவும் ஒத்திருக்கும் தேவமாதாவின் அற்புதப்படத்தின் நகல், வத்திக்கானிலும் போலந்திலும் உள்ளது. அதனால், இவ்வற்புதப் படத்தின் பல பிரதிகள் இன்றுவரை உலகெங்கும் இருப்பதற்கு வழிவகுத்துள்ளது.
திருச்சபையின் வேதவல்லுநர்களின் கணிப்பின்படி, 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த, இடைவிடா சகாய மாதாவின் படத்தைப் பற்றிய மற்றொரு சரித்திரத்தின்படி, மத்தியதரைக்கடலிலுள்ள கிரீட் தீவில் பல நூற்றாண்டுகள் தேவமாதாவின் இவ்வற்புதப்படத்தை மக்கள் வெகுவிமரிசையாக வணங்கி வந்தனர். அச்சமயத்தில், ஒரு வியாபாரி இடைவிடா சகாய மாதாவின் அற்புதப்படத்தைத் திருடிக்கொண்டு, உரோமாபுரிக்கு எடுத்துச் சென்றான். ஆனால், உரோமையை அடைந்ததும் கடும் வியாதியானான். அவன் சாகும் தருவாயிலிருந்தபோது, தான் கட்டிக்கொண்ட தேவதுரோகத்திற்குப் பரிகாரம் செய்யும் பொருட்டு, அற்புதப்படத்தை, திருச்சபையின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்று, தன்னைப் பாதுகாத்திருந்த சிநேகிதனிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டு அவனிடத்திலேயே கொடுத்து விட்டான். இச்சமயத்தில் தான், சாகக்கிடந்தவனின் வேண்டுகோள் நிறைவேறும்படி, தேவமாதா பல தடவை, ஓர் சிறுமிக்கு உரோமை நகரில் காட்சி கொடுத்தார்கள். தம்முடைய அற்புத ஓவியத்தை தேவமாதாவின் (னிழிrதீ னிழிளூலிr) பேராலயத்திற்கும், அர்ச். லாத்தரன் அருளப்பர் தேவாலயத்திற்கும் இடையே ஸ்தாபிக்க வேண்டும் என்று அறிவித்தார்கள்.
அதன்படியே, 1499ம் வருடம், மார்ச் 27ம் தேதியன்று, இவ்விரு தேவாலயங்களுக்கும் இடையே , எஸ்கிலேனில் உள்ள அர்ச். மத்தேயு தேவாலயத்தின் நடுப்பீடத்தில், அதிசயத்துக்குரிய இப்படம் வெகு ஆடம்பரமாக ஸ்தாபிக்கப்பட்டது. அர்ச் அகுஸ்தீனார் சபைக் குருக்களால் கண்காணிக்கப்பட்டு வந்தது. மூன்று நூற்றாண்டுகளாக (கி.பி. 1499 -1798) இவ்வற்புதப்படம் "இடைவிடா சகாய மாதா" என்ற பெயரில், உரோமையில் உள்ள அர்ச். மத்தேயு தேவாலயத்தில் வணங்கப்பட்டு வந்தது. ஏனெனில், தேவமாதா , அந்த சிறுமிக்கு அளித்த காட்சியில், தம்முடைய படம் மக்களுடைய வணக்கத்துக்கும் ஸ்துதிக்கும் உரியதாக்கப்பட வேண்டும் என்று அறிவித்தபோது, "நாமே இடைவிடா சகாய மாதா" என்று தெரிவித்தார்கள். அன்றிலிருந்து "இடைவிடா சகாய மாதா' என்ற பெயரும் உலகெங்கிலும் பிரசித்தமானது .
1798ம் ஆண்டு, அர்ச். மத்தேயுவின் தேவாலயம் பிரெஞ்சுக்காரரின் படையெடுப்பால் அழிக்கப்பட்டது. அப்பொழுது, அர்ச். அகுஸ்தீன் சபைக்குருக்கள் இடைவிடா சகாய மாதாவின் படத்தை மற்றொரு துறவற மடத்திற்கு பாதுகாப்பாக மாற்றினார்கள். பின்னர், போஸ்தெருலா என்னும் நகரில் உள்ள தேவமாதாவின் ஜெபக்கூடத்தில் அற்புதப்படத்தை ஸ்தாபித்தனர். அங்கு, இடைவிடா சகாய மாதாவின் படம் 1866ம் வருடம் வரைக்கும் மறைந்திருந்தது. 1866ம் ஆண்டில், தேவபராமரிப்பின் உதவியினால், அது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படம், சகல மனிதர்களின் ஸ்துதிக்கும் வணக்கத்திற்குமாக, தேவமாதா தாமே குறிப்பிட்ட இடத்தில், ஒன்பதாம் பத்திநாதர் பாப்பரசரின் கட்டளையின்படி வெகு ஆடம்பரத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது. அர்ச். அல்போன்சின் குமாரர்களினால், அதாவது, இரட்சகர் சபை குருக்களால், 12 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
இடைவிடா சகாய மாதாவின் படம், 2" அங்குல நீளமும் 16 அங்குல அகலமும் கொண்ட ஒரு மரப்பலகையில் வரையப்பட்ட படம். அதில் தேவமாதா செந்நிற ஆடையணிந்து, தமது இடது கரத்தில் குழந்தை சேசுவை ஏந்தினவர்களாய் தங்க மயமான வானத்தில் தோன்றுகிறார்கள். ஓர் நட்சத்திரத்தினால் பிரகாசிக்கப்பட்ட கருநீல முக்காட்டுச் சீலையொன்று அவர்களுடைய சிரசை மூடியிருக்கின்றது. இந்த சீலையின் வசீகரமானதும் விறைப்பானதுமான மடிப்புகள் தங்கத்தினாலானவையாக பொன்னிறத்தில் திகழ்கின்றன. மாதா அணிந்திருக்கிற ஆடை செந்நிறத்தில் உள்ளது. மாதா அணிந்திருக்கின்ற கருநீல முக்காட்டுச் சீலைக்குக் கீழே அவர்களுடைய முடியையும் நெற்றியையும் மறைத்துச் சுற்றும் கச்சை வெளிறிய பச்சை நிறத்தில் உள்ளது. மாதாவின் கழுத்திலும் கரங்களின் மணிக்கட்டுகளிலும் எளிய ஆபரணங்கள் காணப்படுகின்றன. திவ்ய குழந்தை சேசு பச்சை நிற ஆடை அணிந்திருக்கின்றார். அவருடைய இடைக்கச்சை செந்நிறத்தில் உள்ளது. அவருடைய மேலங்கி பழுப்பு நிறத்தில் இருக்கிறது. ஆண்டவருடைய பாடுகளுக்கான கருவிகளை தங்களுடைய கரங்களில் ஏந்தியபடி, சம்மனசுகள் தோன்றுகின்றனர். மனுக்குல இரட்சணியத்திற்கான கருவிகளுடன் தோன்றும் சம்மனசுகள், ஒரே மூலப்படத்திலிருந்து தான், இப்படங்கள் எல்லாம் நகல்களாக , உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு அத்தாட்சியாக விளங்குகின்றன. தேவநற்கருணை ஆசீர்வாதத்தின் போது, குருவானவர் கதிர்பாத்திரத்தை உயர்த்திக் காண்பிக்கும்போது, அவருடைய கரங்கள் துணியால் மூடப்பட்டிருப்பதுபோல, இவ்விரு சம்மனசுகளும் ஆண்டவருடைய திவ்யபாடுகளின் கருவிகளைத் தங்களுடைய கரங்களில் ஏந்தியிருக்கும்போது, அவர்களுடைய கரங்களும் திரைச் சீலையால் மூடப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து, திருச்சபையின் துவக்கக் காலங்களிலிருந்தே, பரிசுத்த பொருட்கள் கையாளப்படும் போது, அவற்றிற்குரிய சங்கை மரியாதையை இவ்வாறு காண்பிப்பது வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிகின்றோம். மத்திய நுற்றாண்டுகளின் முடிவில், விசுவாசிகள் ஆண்டவருடைய பாடுகளின் மேலும், தேவமாதாவின் வியாகுலங்களின் மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். சிலுவைப்போர்கள் (கி.பி. 1095-1291) இக்காலத்தில் தான் நடைபெற்றன. அர்ச். பிரான்சிஸ் அசிசியாருடைய சபைத் துறவிகளும் இக்காலத்தில் தான் ஆண்டவருடைய பாடுகள் மற்றும் தேவமாதாவின் வியாகுலங்கள் மீது உத்தமமான பக்திமுயற்சியை திருச்சபையெங்கும் பரப்பி வந்தனர். இதன் அடிப்படையிலேயே, இந்த அற்புத படத்தை வரைந்த ஓவியரும், தேவமாதாவின் வியாகுலத்தை விவரிக்கும் இக்காட்சியே "என் துயரம் எந்நேரமும் என் முன்பாக நிற்கின்றது" என்ற தாவீதரசரின் தீர்க்கதரிசனத்தின் நிறைவாக இருக்கின்றது என்பதை தம்முடைய படத்தின் மூலம் வெளிப்படுத்தினார். மேலும், வியாகுலமாதாவின் மேல் உத்தமமான பக்தியை மக்களுடைய இருதயங்களில் துண்டி பரப்பும் விதமாகவும், இவ்வுன்னத அலுவலில் அவர் ஆவலுடன் ஈடுபட்டிருந்தார். துக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட திவ்யபாலனான குழந்தை சேசு, அவருடைய பரிசுத்த தாயாருடைய கரங்களில் ஏந்தப்பட்டிருப்பதுபோல சித்தரித்து, இந்த ஓவியர் வியாகுலமாதாமேலுள்ள பக்தியை, இப்படத்தைக் காணும் மனிதருடைய இருதயங்களில் தூண்டும்படி செய்திருக்கின்றார். திவ்ய சேசுபாலன், தம் முன்பாக இருக்கும் அர்ச். மிக்கேல் சம்மனசானவரைக் காண்கின்றார். மிக்கேல் சம்மனசானவர், ஓர் ஈட்டியையும், நுனியில் கடற்காளான் கட்டியிருக்கிற ஒரு நாணலையும் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார். அக்காட்சியினால் திவ்ய குழந்தை பயப்பட்டவராக , அடுத்தப் பக்கம் விரைவாக திரும்புகின்றார். அவ்வாறு திரும்பும்போது, திடீரென்று ஏற்பட்ட அசைவினால், அவருடைய மிதியடிகளில் ஒன்றின் வார் கழன்று அவருடைய வலது பாதத்தில் தொங்குவது போல் காணப்படுகின்றது. ஆனால், இந்தப்பக்கத்தில், அவர் மற்றொரு காட்சியைக் காண்கின்றார். அர்ச். கபிரியேல் சம்மனசானவர், சிலுவையுடனும் ஆணிகளுடனும் தோன்றுகின்றார். திவ்ய குழந்தை சேசு எப்பக்கம் திரும்பினாலும், அவருடைய துயரம் எந்நேரமும் அவர் கண் முன்பாக இருக்கின்றது. எல்லா குழந்தைகளைப் போலவே, திவ்ய குழந்தை சேசுவும், பயப்படும்போது, அவருடைய தாயாரிடம் திரும்புகின்றார். மாதாவின் வலது கரத்தை தம்முடைய இருசிறு கரங்களினால் இறுக்கமாகப் பிடித்துக்கொள்கின்றார். அவருக்கு ஆதரவாக மாதா தம்முடைய இடது கரத்தினால் அவரை தாங்கி, அவருக்குப் பாதுகாப்பை நிச்சயிக்கும்படியாக, தமது பக்கமாக திவ்ய குழந்தையை அரவணைத்துக் கொள்கின்றார்கள்...
திவ்ய குழந்தை சேசுவை அவருடைய பரிசுத்த தாயார் தம்முடைய கரங்களில் ஏந்தியபடியும், இருபுறமும் ஆண்டவருடைய திருப்பாடுகளின் கருவிகளை ஏந்தியபடி தோன்றும் இரு சம்மனசுகளுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கும் இத்தகைய படங்கள், சம்மனசுகளின் கன்னிகை அல்லது பாடுகளின் திவ்ய கன்னிகை என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பைசன்டின் முறைப்படி, படங்கள் வரையப்படும்போது, அவற்றில் உள்ள உருவங்களுக்குரிய பெயர்களையும் சுருக்கமாக அருகில் எழுதுவது வழக்கமாக இருந்தது. இடைவிடா சகாய மாதாவின் படத்தில் "சர்வேசுரனுடைய" என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையின் முதல் இறுதி எழுத்துக்களைச் சேர்த்து, "OV'' என்றும், "மாதா" என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையின் முதல் மற்றும் இறுதி எழுத்துக்களைச் சேர்த்து "M'' என்றும் தேவமாதாவைக் குறிக்கும் வகையில் தேவமாதாவின் படத்தில் மேற்புறத்தில் இருபக்கத்திலும் குறிக்கப்பட்டிருக்கின்றன. திவ்ய குழந்தை சேசுவின் அருகில், சேசு கிறிஸ்து என்று பொருள்படும் இரு கிரேக்க வார்த்தைகளின் முதல் இறுதி எழுத்துக்களைச் சேர்த்து ICXC என்று எழுதப்பட்டிருக்கின்றது. அதேபோல், "0
AP M", "O AP ('' என்ற எழுத்துக்கள், முறையே, அர்ச். மிக்கேல் அதிதூதரையும் அர்ச். கபிரியேல் அதி தூதரையும் குறிக்கும் விதமாக இருசம்மனசுகளின் அருகில் எழுதப்பட்டிருக்கின்றன .
சகாயமாதாவின் படம் வரையப்பட்டதற்கான உட்கருத்து, உன்னதமானது. அது சர்வேசுரனுடைய எதிர்கால நிகழ்வுகளைப்பற்றிய அறிவையும், அவருடைய பரிசுத்த தாயாருடைய வல்லமையையும் வெளிப்படுத்துவதாக விளங்குகின்றது. இவ்வுன்னத படத்திற்கான அர்த்தம் பின்வருமாறு விவரிக்கப்படுகின்றது.
1. சேசுகிறிஸ்துநாதர் சுவாமி, இவ்வுலக ஜீவியம் துவங்கிய முதல் மணித்துளி நேரம் முதற்கொண்டு, இவ்வுலகின் பாவங்கள் அனைத்தையும் அறிந்திருந்தார். அப்பாவங்களுக்காக அவர் அனுபவிக்க வேண்டிய பாடுகளைப் பற்றியும் அறிந்திருந்தார். இதைப்பற்றி, "என் துயரம் எந்நேரமும் என் முன்பாக நிற்கின்றது" என்று தீர்க்கதரிசனமாக, தாவீதரசர் கூறுகின்றார். "அவர் மனிதரில் அருவருக்கப்பட்டவராகவும், கடைத்தரமானவராகவும், துன்புற்ற மனிதனாகவும், பலவீனம் உடையவராகவும் காணப்பட்டார்" (இசை 53:3) என்று இசையாஸ் தீர்க்கதரிசி ஆகமத்தில் நாம் வாசிக்கின்றோம். தம்முடைய பாடுகளின் கருவிகளைக் கண்டதும், திகிலடைந்த திவ்ய குழந்தை சேசுவின் அச்சமுற்ற பாவனையை வரைந்ததன் மூலம், ஆண்டவர், குழந்தைப் பருவத்திலேயே தம்முடைய பாடுகளைப்பற்றிக் கொண்டிருந்த அறிவைப்பற்றி மிகத் தெளிவாக இப்படம் வெளிப்படுத்துகின்றது.
2. இப்படமானது, அர்ச். கன்னிமரியம்மாள், தம்முடைய திவ்யகுமாரனுடைய பாடுகளில், தாய் என்ற முறையில் பங்கேற்றபடியால், வியாகுலங்களின் மாதாவாக இருக்கிறார்கள் என்பதை நமக்கு ஞாபகப்படுத்துகின்றது. அர்ச். பெர்னார்டு, மற்றும் அர்ச் அல்போன்ஸ் போன்ற வேதபாரகர்கள் கூறுவதுபோல, தேவமாதா , தாம் பெற்றிருந்த வேதாகம அறிவினால், தம்முடைய திருக்குமாரனுக்கு நேரிடப்போகும் சகல காரியங்களைப் பற்றியும் முன்னதாகவே அறிந்திருந்தார்கள். அதில் குறிப்பாக, "உம்முடைய ஆத்துமத்தையும் ஓர் வாள் ஊடுருவும் ' இதினாலே, அநேகருடைய இருதயசிந்தனைகள் வெளிப்படும்படியாகும்" (லூக். 2:35) என்ற சிமியோன் தீர்க்கதரிசியின் வார்த்தைகளின் அர்த்தத்தை , நிச்சயமாக, முழுமையாக அறிந்திருந்தார்கள்.
3. சிலுவை, ஆணிகள், ஈட்டி, கடற்காளானுடைய நாணல் என்ற தம்முடைய பாடுகளின் கருவிகளைப் பார்த்தபோது, திவ்ய குழந்தை சேசு அடைந்த பயத்திற்கு மற்றொரு ஆழ்ந்த அர்த்தம் ஒன்று உண்டு. அதாவது, மனுக்குலத்தின் பாவங்களைப் பரிகரிப்பதற்காக, தம்முடைய உயிரையேக் கையளித்தாலும், திவ்ய இரட்சணியப்பலனைப் பெறாமல், மனிதர்கள் தங்களுடைய பாவங்களிலே தொடர்ந்து நிலைத்திருப்பர் என்பதைப் பற்றிய அறிவினால் தான், திவ்ய குழந்தை சேசு அதிகமாக பயப்படுகின்றார். இதைப் பற்றி, " அவர்கள் சர்வேசுரனுடைய குமாரனை மறுபடியும் தங்களாலான மட்டும் சிலுவையில் அறைந்து அவமான கோலமாக்குகிறார்கள்" (எபி 6:6) என்று அர்ச். சின்னப்பர் குறிப்பிடுகின்றார். தம்முடைய திவ்யகுமாரன், அவருடைய பாடுகளைப்பற்றிப் பெற்றிருந்த இந்த முன்னறிவில், தேவமாதாவும் பங்கேற்றிருப்பதையும் இந்தப் படம் அருமையாக காண்பிக்கின்றது. தம்மை நோக்கித் தாவிவரும் தம்முடைய திவ்ய குழந்தையை நோக்கிப் பார்ப்பதற்கு பதிலாக, தேவமாதாவின் கண்கள், நம்மை நோக்கிப் பார்க்கின்றன. அதன் காரணம் என்னவெனில் : வியாகுலம் நிறைந்தவர்களாகக் காணப்படும் தேவமாதா, துயரம் முழுவதும் நிரம்பியுள்ள தம்முடைய கண்களால், "பாவிகளே! என்னுடைய திவ்ய குழந்தையும் உங்களுடைய இரட்சகருமானவரை விட்டு விடுங்கள். மறுபடியும் சிலுவையில் அறைவதற்காக அவரைத் தேடாமலிருங்கள்" என்று நம்மிடம் கூறுவதுபோல் நம்மை உற்று நோக்குகின்றார்கள்.
4. பரிசுத்தமான காரியங்கள் அனைத்திற்கும், நாம் சங்கைமேரை செய்ய வேண்டும் என்று நமக்குக் கற்பிக்கும்படியாக, தங்களுடைய கரங்களைத் துணியால் மூடியபடி, அதிதூதரான சம்மனசுகள், ஆண்டவருடைய திவ்யபாடுகளின் கருவிகளை ஏந்திக் காண்பிப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. படத்தில், உருவங்களுக்குப் பின்னால் எங்கும் தங்கமயமாக வியாபித்திருப்பதுபோல் வரையப்பட்டிருக்கின்றது. இது, சுத்த தங்கத்தினாலான பரலோக ஜெருசலேமை அடையாளமாக சுட்டிக் காண்பிக்கின்றது. அர்ச். அருளப்பர், காட்சியாகமத்தில், பூமியில் சேசுவையும் மாதாவையும் காண்பதற்காக சம்மனசுகள் இறங்கி வந்தபோது, அது சுத்த தங்கத்தினாலான பரலோக ஜெருசலேமாக இருந்தது என்று விவரித்தார். இப்படத்தின் பின்னணி அந்த பரலோக ஜெருசலேமைக் காண்பிப்பதுபோல் வரையப்பட்டிருக்கின்றது.... இங்கு, பொன், என்பது நம்முடைய திவ்ய இரட்சகர் தமது விலையுயர்ந்த திவ்யதிரு இரத்தத்தினால் நமக்குப் பெற்றுத் தந்த மோட்சத்தைக் குறிக்கின்றது.
மேலும், " பரலோகத்தின் வாசலான" தேவமாதாவின் வழியாகத் தான், நாம் மோட்சத்திற்குள் நுழைய முடியும் என்ற உண்மையையும் இப்படம் நமக்குக் கற்பிக்கின்றது. இரட்சகர் சபையின் முன்னாள் பொது அதிபரான சங். பேட்ரிக் முர்ரே சுவாமியார், சகாயமாதா படத்தில் காணப்படும் ஆண்டவருடைய பாடுகளின் கருவிகளான, கடற்காளான், ஈட்டி மற்றும் சிலுவை , துறவிகளுக்கு அவர்கள் கொடுத்த வார்த்தைப்பாட்டை அவர்களுக்கு நினைவுபடுத்துகின்றன என்று கூறுவார். "நான் தாகமாயிருக்கிறேன்" என்று சிலுவையில் தொங்கியபடி கூறியபோது, நம்முடைய திவ்ய இரட்சகருக்கு , கடற்காளானை நாணலின் நுனியில் கட்டியபடி, கொடுத்தார்கள். இது, துறவிகள் கொடுத்த தரித்திர வார்த்தைப் பாட்டின்படி, அவர்கள் அனுசரிக்கும் தரித்திரத்துடன் வறுமையும் சேர்ந்திருக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கின்றது. நம் நேச ஆண்டவருடைய மகா பரிசுத்த திரு இருதயத்தை ஊடுருவிய ஈட்டியானது, நிறைகற்பு என்னும் வார்த்தைப்பாட்டை உத்தமமாக அனுசரிப்பதற்காக, உணர்வுகளை ஒறுத்தல் மற்றும் பரித்தியாகங்களினால் ஒடுக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கின்றது. சிலுவையானது, தமது மரணம் மட்டும், அதுவும், சிலுவை மரணம் மட்டும் கீழ்ப்படிந்திருந்த, தங்களுடைய தேவ அதிபரான, நேச ஆண்டவரைக் கண்டுபாவித்து, துறவிகள் தங்களையே தாழ்த்த வேண்டும் என்று அவர்களுக்குக் கற்பிக்கின்றது நம் அனைவருக்குமே சிலுவையானது, தாழ்ச்சி என்ற புண்ணியத்தைக் படிப்பிக்கின்றது.
5. தேவமாதாவின் பாதுகாப்பையும், வல்லமையையும் வெளிப்படுத்தும்படியாக பார்ப்பவர் கவனத்தை ஈர்க்கும்படியாக உயர்வான இடத்தில் தேவமாதாவின் வலதுகரம் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. இதுவே படத்தின் வசீகரமான அம்சமாக இருக்கிறது. தேவமாதாவின் வலது கரத்தை, தேவகுழந்தையான திவ்யபாலன், தம்முடைய இரண்டு சிறுகரங்களினாலும் பற்றிக் கொண்டிருக்கின்றார். கிரேக்க விசுவாசிகள், இதில், சர்வேசுரனுடைய திருச்சித்தத்துடன், மாதாவின் சித்தம் உத்தமமாக ஒன்றிணைந்திருப்பதைக் கண்டனர். நமதாண்டவர் தேவவரப்பிரசாதங்களையெல்லாம், தம்முடைய பரிசுத்த தாயாரின் திருக்கரங்களின் வழியாகத் தான் நமக்கு அருளுகின்றார் என்று அர்ச்சிஷ்டவர்கள் நமக்கு போதிக்கின்றனர். தேவமாதா ஆண்டவரிடம் எதைக் கேட்டாலும், அதை அவர், அவர்களுக்கு அருளுகின்றார். ஏனெனில், மாதா, சர்வேசுரன் ஆசிப்பதையும், அவருடைய விலைமதியாத திவ்ய இரத்தத்தினால், வாங்கப்பட்ட ஆத்துமங்களின் இரட்சணியத்தையுமே கேட்பார்கள் என்று ஆண்டவர் அறிவார். தேவமாதாவின் வல்லமையைப் பற்றி, அர்ச். பெர்னார்டு, "மகா பரிசுத்த தேவமாதாவே! நீர் ஆசிக்கின்றீர். உடனே சகலமும் நிறைவேறுகின்றது'' என்று எழுதுகின்றார். அப்படியென்றால், நாம் எவ்வளவு உறுதியான நம்பிக்கையுடன், நாம் இடைவிடா சகாய மாதாவை நோக்கி ஜெபிக்க வேண்டும் என்று சிந்தியுங்கள் ! தேவமாதாவைப்பற்றிய சகலமும், நமக்கு அவர்கள் மேல் நாம் கொள்ள வேண்டிய திடமான நம்பிக்கையைப் பற்றிதான் நமக்கு அறிவுறுத்துகின்றது. "பொக்கிஷங்களுக்கெல்லாம் பொக்கிஷமான" கடவுள் - மனிதனையே, மாதா தம்முடைய கரங்களில் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தம்முடைய திவ்ய குமாரனுடைய மகா பரிசுத்த திரு இருதயத்தின் பரம இரகசியங்களையும் தேவமாதா அறிந்திருக்கின்றார்கள். மாதாவின் திருக்கண்களும் மன்றாட்டுகளினால் நிரம்பியிருக்கின்றன. "நிரந்தர சகாயத்தின் பரிசுத்த மாமரி" என்று மாதாவே நமக்கு வெளிப்படுத்திய அவர்களுடைய பரிசுத்த நாமமே, தேவமாதா நம்மை இடைவிடாமல் பாதுகாப்பவர்களாக இருக்கின்றார்கள் என்பதைப் பற்றிய வெளிப்படுத்துதல்கள் எல்லாவற்றிலும் அதிக நிச்சயமானதொன்றாக திகழ்கின்றது. அது தேவமாதா நமக்கு வெளிப்படுத்திய அவர்களுடைய பெயர் மட்டுமல்ல. நாம் தேவமாதாவை, நோக்கி அபயமிட்டு அழைக்கும் போது, உடனே நமக்கு உதவிடுவார்கள் என்பதற்கான வாக்குறுதியாகவும் விளங்குகின்றது. இக்காரியத்திலும், மற்றெல்லா விஷயங்களிலும், திவ்ய குழந்தை சேசு நமக்கு முன்மாதிரிகையாக விளங்குவாராக ! பயத்தினாலும், கஷ்டத்தினாலும் சஞ்சலப்படும்போது, உடனே தாமதியாமல் அவர் தம்முடைய பரிசுத்த தாயாரை நோக்கித் திரும்புகின்றார். மாதாவின் கரத்தை அவர் உறுதியாகப் பற்றிக்கொள்கின்றார். அதேபோல், சோதனை வரும் முதல் க்ஷணத்திலேயே, நாமும் தேவமாதாவை நோக்கித் திரும்ப வேண்டும். சிலுவை பாரம் நம்மை அதிக கனமாக அழுத்தும்போதும், நாம் தேவமாதாவை உறுதியுடன் பற்றிக்கொண்டால், யாதொரு சந்தேகமுமின்றி, தேவமாதாவின் பாதுகாப்பையும், வல்லமையையும் நாம் அனுபவிக்கலாம்.
6. தேவமாதாவின் திரைச் சீலை முக்காட்டில், ஓர் நட்சத்திரம் இருக்கின்றது' மரி என்னும் அவர்களுடைய பரிசுத்த நாமத்திற்கு, "விடியற்காலை நட்சத்திரம்" என்று அர்த்தம். திருச்சபை, தேவமாதாவை "சமுத்திரத்தின் நட்சத்திரம்" என்றும் அழைக்கின்றது. இதைப் பற்றிப் பிரசங்கிக்கும் போது, வேதசாஸ்திரியான அர்ச். தாமஸ் அக்வீனாஸ், "கப்பல் மாலுமிகள் நட்சத்திரத்தினால், துறைமுகத்திற்கு வழிநடத்தப்படுவதுபோல, கிறிஸ்துவர்களும், தேவமாதாவின் உதவியினால் வழிநடத்தப்பட்டு, பாதுகாப்பாக மோட்சகரையை அடைந்துகொள்கின்றனர்" என்று விவரிக்கின்றார். தேவமாதாவின் சக்தி வாய்ந்த பாதுகாப்பின் மேல் ஸ்திரமான நம்பிக்கையை, பாவிகளுடைய இருதயங்களில் ஏற்படுத்தும் விதமாக, மற்றொரு வேதசாஸ்திரியான அர்ச். பொனவெந்துர், அவர்கள் முன்பாக புயலினால் கொந்தளிக்கும் ஓர் சமுத்திரத்தின் காட்சியின் படத்தைக் காண்பித்தார். தேவவரப்பிரசாதம் என்னும் கப்பலிலிருந்து அந்த சமுத்திரத்தில் விழுந்துவிட்டிருந்த பாவிகளிடம், தம்முடைய பரிசுத்த தாயாரைக் காண்பித்து, நமதாண்டவர், "இதோ சமுத்திரத்தின் நட்சத்திரம்' என்று கூறுவதாகக் குறிப்பிடுகின்றார். பிறகு, அர்ச்சிஷ்டவர், சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் பாவிகளை நோக்கி, "ஓ காணமல் போன நிர்பாக்கிய ஏழைப் பாவியே! தேவவரப்பிரசாதத்தைத் தொலைத்தவனே ! அதைரியப்படாதே! உன்னுடைய கண்களை உயர்த்து. அதோ அந்த அழகிய நட்சத்திரத்தைப் பார். அது உன்னை, உன்னுடைய இரட்சணியத்தின் துறைமுகத்திற்கு வழிநடத்திச் செல்லும் " என்று கூறுவார்.
7. " மகனே ! இதோ உன் தாய்!'' என்று நம் நேச ஆண்டவர் நம்மிடம் கூறுகின்றார். ஆம். நாம், நம்முடைய தாயாராக ஏற்றுக்கொண்டு, தேவமாதாவை நோக்கினால், மாதா நம்முடைய பாதுகாப்பான அடைக்கல தஞ்சஸ்தலமாக இருப்பார்கள். நம்முடைய சகல துன்பங்களிலும், நமக்கு சகாயமாக வரும்படியாக உதவிக்கு அழைத்தபடி, நாம் மாதாவையே நாடிச் செல்லவேண்டும் என்று நம்மை மிகவும் கெஞ்சுவதுபோல் தேவமாதவின் கண்கள் நம்மை நோக்கிப் பார்ப்பதாகக் காணப்படுவதையும் இப்படத்தில் காண்கின்றோம். ஏனெனில், நாம் தேவமாதாவை நோக்கி அடிக்கடி, "ஆதலால், எங்களுக்காக வேண்டி மன்றாகின்ற தாயே , உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் மேல் திருப்பியருளும் " என்று கிருபைதயாபத்து மந்திரத்தில் வேண்டிக்கொண்ட ஜெபத்திற்கு, தேவமாதாவின் திருக்கண்கள், இவ்வாறு நமக்கு பதில் அளிக்கின்றன. தேவமாதாவை, பெரிய திறந்த கண்களுடனும், சிறிய அழகிய வாயுடனும் சித்தரிக்கும் பைசான்டின் முறைப்படி அமையப்பெற்ற வரைபடங்கள், தேவமாதாவின் உன்னதமான குணநலனை நமக்குப் பறைசாற்றுகின்றன : அதாவது, தேவமாதா பார்த்தார்கள். பார்த்தவற்றையெல்லாம் தம்முடைய இருதயத்தில் ஆழ்ந்து சிந்தித்தார்கள். அதே சமயம் மிகச் சிறிதளவே பேசினார்கள். ஆனால் எப்பொழுதும் ஞானத்துடன் மட்டுமே பேசினார்கள் என்ற கருத்தை இப்படங்கள் வெளிப்படுத்துவதாக வேதவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இடைவிடா சகாய மாதாவின் படம், நடைமுறையில், நீதிமான்களுக்கும் பாவிகளுக்கும் பொதுவாக கற்பிக்கும் ஒரே பாடம் ஏதெனில் : உதவி தேவைப்படும் அவசர நேரத்தில், தேவமாதா எப்பொழுதும் நமக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதேயாம்..