Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 29 ஜனவரி, 2024

அர்ச். கிலிமாக் அருளப்பர் திருநாள்.(ST. JEAN CLIMAQUE.)

மார்ச் மாதம் 30-ந் தேதி. ம.

அர்ச். கிலிமாக் அருளப்பர் திருநாள்.

ST. JEAN CLIMAQUE.

Born          c. 579
                   சிரியா

Died           March 649 (aged 69–70)
                   Mount சினை

Venerated in Catholic Church

Feast
30 March, Fourth Sunday of Great Lent



பலெஸ்தீன் நாட்டில் அர்ச். கிலிமாக் அருளப்பர் பிறந்தார். அவர் புத்திக் கூர்மையுள்ளவராய் ஆசையோடே உலக சாஸ்திரங்களைப் படித்ததினால் அவருக் குப் பதிநான்கு வயது நடக்கிறபோது மற்றவர்கள் அவரைச் சாஸ்திரியென்று அழைப்பார்கள். ஆனால் அவர் விசேஷமாய் ஞான சாஸ்திரங்களைப் படித்ததினால் ஞானியாகி வாலிப வயதாய் இருக்கிற போதே உலகத்தை வெறுத்துத் தபம் பண்ணச் சீனாய் மலை மடத்திற்குப் போனார். நான்கு வருஷம் அதில் கடின தபம் பண்ணின பிறகு சந்நியாசியானார், ஜெபம் பண்ணுவதிலேயும் ஒருசந்தி பிடிப்பதிலேயும், தாழ்ச்சியாய் இருப்பதிலேயும், தியானஞ் செய்வதிலேயும் அவர் மற்றச் சந்தியாசிகளுக்குப் படிப்பினையாயிருந்தார். அவர் நாற்பது வருடம் தர்ம வழியிலே ஒரு சம்மனசைப்போல் நடந்ததினாலே சம்மனசு என்னப்படுவதற்குப் பாத்திரமானார். பசாசு இதைக் கண்டு அவர் பேரிலே மிகவும் பகை வைத்து அவரை மிகவும் தொந்தரவு பண்ணத் துவக்கிற்று. பொல்லாத சோதனைகளும் பொல்லாத நினைப்புகளும் ஓர் படைபோல அவர் பேரில் வந்தன. அர்ச், அருளப்பர் இதைக் கண்டு அவைகளுக்குள்ளே தாம் அகப்படாதபடிக்கு நல்ல ஆயத்தத்தோடே அடிக்கடி தேவநற்கருணை வாங்கினார், அதன் வழியாக அவர் அடைந்த ஞான பலத்தைக் கொண்டு பசாசின் சோதனைகளை வென்றார்.
தியானம் பண்ணுவதிலே அவர் மிகுந்த ஞான ஆனந்தத்தை அனுபவித்ததினால் அதிலே வெகு நேரம் செலவழித்தார். சில முறை தியானம் பண்ணுகிற போது அவருடைய சரீரம் புதுமையாகப் பூமியை விட்டு ஆகாயத்திலே நின்றது. தியானத்தினால் அவர் அடைந்த ஞானம் அவராலே உண்டாக்கப்பட்ட 'பரகதியின் ஏணி' என்னும் வெகு நேர்த்தியான புத்தகத் தில் காணப்படுகிறது. அவருடைய சீஷனாகிய மோயீசென்பவன் ஒரு சமயத்திலே கடின வேலை செய்து ஒரு குகைக்குள்ளே நித்திரை பண்ணுகிறபோது சற்று நேரத்தில் அந்தக் குகை இடிந்து விழப்போகிற தென்று ஆண்டவராலே அர்ச். அருளப்பர் அறிந்து அவனை காப்பாற்ற மன்றாடினார். ஆதலால் தேவ கிருபையால் அர்ச். அருளப்பர் அவனைக் கூப்பிடுகிற குரற் சத்தம் உண்டாயிற்று. அதினால் அந்தச் சீஷன் விழித்து அந்தக்கணமே குகையைவிட்டு வெளியே போனான். வெளியில் வந்தவுடனே அந்தக் குகையி லிருந்த பெருங் கற்பாறை பிளந்து இடிந்து விழுந்தது. அந்தச் சீஷன் அப்போது அந்தக் குகைக்குள்ளே இருந்தால் செத்திருப்பான். அர்ச். அருளப்பருடைய மன்றாட்டினாலே பிழைத்தான். அவரிடமிருந்த ஆச்சரியமான புண்ணியங்களின் பொருட்டு அவர் சீனாய் மலையில் மற்றச் சந்நியாசிகளுக்குச்  சிரேஷ்டராக ஏற்படுத்தப்பட்டார். அந்தச் சமயத்தில் அவ்விடத்திலே அறுநூறு சந்நியாசிகள் கூடியிருக்கையில் ஆச்சரியத் திற்குரிய ஓர் மனிதன் வந்து அவர்கள் எல்லாருக்கும் உணவு பரிமாறி மறைந்து போனான். அவன் ஓர் சம்மனசுதான் என்று நினைத்தார்கள்.

அர்ச், அருளப்பர் தமது ஆளுகையிலிருந்த சந்நியாசிகள் எல்லாருக்குந் தாழ்ச்சியும் தயைப் பட்சமும் காண்பித்ததினாலே எல்லாரும் அவரைத் தங்கள் தகப்பனைப் போல் சிநேகித்தார்கள். அவர் தம்முடைய புத்தகத்திலே எழுதினதாவது: நாம் இருக்கிற மடத்தின் அருகில் சிறையென்னும் ஓர் மடமுண்டு. தாங்கள் செய்த பாவங்களுக்குத் தபம் பண்ணுகிறவர்கள் அத்தகைய மடத்திலே இருக்கிறார்கள் என்றார். அவர்கள் பண்ணின பலவகைத் தபங்களை அவர் தம்முடைய புத்தகத்தில் எழுதிவைத்தார். அந்த நானா வகைத் தபசுகள் மிகக்கடினமாய் இருக்கிறதினாலே அவை களை வாசிக்கிறவன் கண்ணீர் சிந்தாமல் வாசிக்கமாட்டான். அர்ச் அருளப்பர் எண்பது வயதுமட்டுந் தரும வழியிலே சுறுசுறுப்போடே நடந்த பிறகு  வியாதியாய் விழுந்து அவஸ்தைப்படுகிறபோது தீர்க்கதரிசி போல் வருங்காரியங்களை வெளிப்படுத்திக் கர்த்தர் பிறந்த அறுநூற்றைந்தாம் வருஷத்தில் மரணமடைந்தார்.
கிறிஸ்துவர்களே! கல்வி சாஸ்திரம் கற்றவன் புகழப்படுகிறதற்குப் பாத்திரமாயிருக்கிறதை விடத் தரும வழியிலே சுறுசுறுப்போடே நடந்த அர்ச். அருளப்பர் புகழப்படுவதற்குப் பாத்திரமாயிருக்கிறார். அவர் பசாசு தமக்கு வருவித்த எண்ணப்படாத சோதனையினாலே தமக்குத் தோல்வி வராதபடிக்கு தேவ நற்கருணையின் அடைக்கலமாய்ப் போனார். வழியிலே இருக்கிற ஓர் சின்ன குழந்தை தன்னிடம் ஒரு துஷ்ட மிருகம் வருவதைக் கண்டவுடனே பயந்து வீட்டுக்குள்ளே இருக்கிற தன்னுடைய தாய் மடியிலே அடைக்கலமாய்ப் போகுமல்லவோ ? அவ்வாறே நரகத்தின் துஷ்ட மிருகமாகிய பசாசின் சோதனையை நாம் கண்டவுடனே, கோயிலிலேயிருக்கிற திவ்விய நற்கருணையில் நாம் அடைக்கலம் நாடவேண்டும். இதற்கு அர்த்தமேதென்றால், நல்ல ஆயத்தத்தோடே
திவ்வியநற்கருணை வாங்கித் திவ்விய நற்கருணை வழியாக தன் நெஞ்சுக்குள்ளே வருகிற சேசுநாதரைப் பார்த்து, அந்தச் சோதனையை  வெல்வதற்கு வேண்டிய பலனை தாழ்ச்சியோடே கேட்கவேண்டும்.

அடிக்கடி  திவ்விய நற்கருணையைக் கோவிலிலே சந்தித்து மன்றாடத்தகும். சரீரத்திற்கு வியாதி வருவது போல் ஆத்துமத்திற்கு பாவமாகிய 
வியாதி வருகிறதிண்டு. வியாதியுள்ள சரீரம் பிழைக்க வழக்கமாய் கடின பத்தியம் காக்கவுங் கசப்பான மருந்து சாப்பிடவும் வேண்டும். இவைகளைச் செய்யாதிருந்தால் சரீரம் பிழைக்காது என்பதைப்பற்றி இவைகளிலே எவ்வளவு வருத்தமுண்டாயிருந்தாலும் உயிர் பிழைக்க இவைகளுக்கு உள்ளாவார்கள். அவ்வாறே ஆத்துமம் பிழைக்க பாவத்தையும் பாவத்திற்குக் காரணமான சகலத்தையும் விட்டுவிட வேண்டியதுமன்றிச் செய்த பாவங்களுக்குத் தபம் பண்ணவேண்டும். இன்றேல் ஆத்துமம் பிழைக்கவும் மோட்சத்திலே சேரவுமாட்டாது. அர்ச். அருளப்பர் தியானம் பண்ணுவதிலே வெகு நரஞ் செலவழிப்பார். நாங்கள் குடியானவர்கள், சேவகர், வர்த்தகர், எளியோர்கள்; ஆதலால் தியானம் பண்ணுவதற்கும் செபம் பண்ணுவதற்கும் எங்களுக்குத் தெரியாதென்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் பயிருக்குச் சேதம் வராதபடிக்குக் குடியானவன் தானே நல்ல யோசனை பண்ணுவான். சண்டையிலே தோல்வியடையாதபடிக்குச் சேவகன் வழி தேடுவான். சந்தையிலே நஷ்டம் வராதபடிக்கு வியாபாரி உபாயந் தேடுவான். நூல் நூற்று எப்படி ஆதாயம் வருமோவென்று புத்தியுள்ளவளான பெண் யோசனை பண்ணுவாள். பிச்சைக்காரன் தன் பேரில் இரக்கம் வர ஆஸ்திக்காரனிடம் தாழ்ச்சியோடேயும் நல்ல வகையோடேயுங் கெஞ்சிப் பிச்சைக் கேட்டால் கிடைக்குமென்று யோசித்து அப்படி இரந்து பிழைப்பான். ஆகையால் அவரவர் சரீரம் பிழைக்க தங்களுக்கிருக்கிற புத்தியைக் கொண்டு நல்ல யோசனை செய்திருக்க, ஆத்துமம் பிழைக்கத்தக்க வகை தேடி அதற்குத் தக்க யோசனையாகிய தியானம் பண்ணத் தனக்குத் தெரியாதென்று சொல்ல இடமில்லை. பிச்சைக்காரன் ஆஸ்திக்காரனிடத்தில் தாழ்ச்சியோடே பிச்சைக் கேட்பதுபோல் ஆத்துமம் பிழைப்பதற்கு வேண்டியதெல்லாந் தாழ்ச்சியோடே சர்வேசுரனிடத்திலே கேட்பது உத்தமமான செபமென்றும் அப்படி செபம் பண்ண எவனாலும் கூடுமென்றும் உணர்வோமாக.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக