Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 10 டிசம்பர், 2024

டிசம்பர் 10 - மகா பரிசுத்த லொரேத்தோ மாதா


டிசம்பர் 10ம் தேதி
மகா பரிசுத்த லொரேத்தோ மாதா திருநாள்

மகா பரிசுத்த திருக்குடும்பத்தின் பரிசுத்த இல்லம் புதுமையாக நாசரேத்திலிருந்து இத்தாலியிலுள்ள லொரேட் நகருக்கு சம்மனசுகளால் கொண்டு வரப்பட்ட திருநாள்.

அகில உலகத்தில், மகா பரிசுத்த தேவமாதாவின் திருயாத்திரை ஷேத்திரங்களிலேயே,  மகா விலையுயர்ந்த பொக்கிஷ திரவியமாகப் பேணி பாதுகாக்கப்படுவதும், மகா சங்கை மேரையுடன் வணங்கப்பட்டுவருவதுமான மகா பரிசுத்த தேவமாதாவின் திருயாத்திரை ஷேத்திரமாக,  இத்தாலியின் லொரேட் நகரிலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவின் பசிலிக்கா விளங்குகிறது!  இந்த பசிலிக்காவினுள், மகா பரிசுத்த திருக்குடும்பம் வசித்த நாசரேத்தின் பரிசுத்த இல்லம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! மிக நீதியுடன், பாரம்பரிய குறிப்பிற்கேற்ப, பாப்பரசர்கள் மற்றும் அநேக அர்ச்சிஷ்டவர்கள் அளித்த சாட்சியங்களின் பிரகாரம், இப்பரிசுத்த இல்லத்தில் தான் , உன்னதமான மறு சிருஷ்டிப்பும்- நம் இரட்சணியமும்- துவங்கின!!

இப்பரிசுத்த இல்லத்தில் தான், மகா பரிசுத்த தேவமாதா ஜீவித்தார்கள்; இங்கு தான், அதிதூதரான அர்ச்.கபிரியேல் சமமனசானவர், மகா பரிசுத்த தேவமாதாவை நோக்கி,  “பிரியதத்தத்தினாலே பூரண மரியாயே! வாழ்க!” என்கிற மங்கள வாழ்த்தைக் கூறினார்; இப்பரிசுத்த இல்லத்தில் தான், மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன்,மகா பரிசுத்த திவ்ய கன்னி மாமரியின் திருவுதரத்தில் மாமிசமாகி, பரிசுத்த மனிதவதாரத்தை எடுத்தார்! பின், இங்கு தான், ஆண்டவர், தமது 30வது வயது வரை, மகா பரிசுத்த பிதாப்பிதாவான அர்ச்.சூசையப்பருக்குக் கீழ்ப்படிந்து, தச்சுத் தொழில் செய்து வந்தார். 

“சேசு , மரி, சூசை”  என்கிற மகா பரிசுத்த திருக்குடும்பம் தங்கி வாசம் செய்த இப்பரிசுத்த இல்லம் தான், உண்மையில் பூமியிலேயே மகா பரிசுத்த இல்லமாகத் திகழ்கிறது! உரோமையிலுள்ள அர்ச்.இராயப்பர்  பசிலிக்காவை விட, மற்ற எந்த கதீட்ரல் தேவாலயங்களையும் விட, கூடுதல் அதிக பரிசுத்தமான இல்லமாகத் திகழ்கிறது! நாசரேத்தின் இப்பரிசுத்த இல்லத்தினுடைய சரித்திரம், அப்போஸ்தலர் காலம் வரை பின்னோக்கிச் செல்கிறது; ஆதிக் கிறீஸ்துவர்களின் காலத்திலிருந்து, இப்பரிசுத்த இல்லம், ஆதித்திருச்சபையின் திருவழிபாட்டினுடையவும், திருயாத்திரை யினுடையவும் பரிசுத்த ஸ்தலமாகத் திகழ்கிறது!

313ம் வருடத்திற்கு சிறிது காலத்திற்குப் பிறகு, முதல் கத்தோலிக்க உரோம சக்கரவர்த்தியான மகா கான்ஸ்டன்டைன் பேரரசர், நாசரேத்தில் இப்பரிசுத்த இல்லத்தை, பரிசுத்த சன்னிதியாகக் கொண்டு, மாபெரும் பசிலிக்கா தேவாலயத்தைக் கட்டுவித்தார். 
1291ம் வருடம், மகமதியர்கள், நாசரேத்தைக் கைப்பற்றினர்.  இச்சமயத்தில், மகா பரிசுத்த திருக்குடும்பத்தின் இப்பரிசுத்த இல்லம்,  கொடூர மகமதியரால் ஏற்படக்கூடிய   அவசங்கையிலிருந்து, காப்பாற்றப்படும்படியாக, அஸ்திவாரத்துடன்  பெயர்த்தெடுக்கப்பட்டு, 1291ம் வருடம் மே 10ம் தேதியன்று, பாலஸ்தீனத்திலிருந்து ஆகாய மார்க்கமாக, மத்தியதரைக் கடலைக் கடந்து, டால்மேஷியா (குரோஷியா) விலுள்ள டெர்சட்டோ என்ற சிறிய நகரத்திற்கு , சம்மனசுகளால், தூக்கிச் செல்லப்பட்டு, இடமாற்றம செய்யப்பட்டது!

அல்பேனியா நாட்டை மகமதியர் ஊடுருவியதால், 1294ம் வருடம், டிசம்பர் 10ம் தேதியன்று, இப்பரிசுத்த இல்லம், சம்மனசுகளால், மறுபடியும், முதலில், இத்தாலியிலுள்ள ரிகான்டி என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது; பின் சிறிது காலத்திற்குள், இப்போதிருக்கிற லொரேட் நகருக்கு சம்மனசுகளால் கொண்டு வரப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டது!கட்டிடக் கலை நிபுணர்களுடைய ஒரு குழு, லொரேட்டிலுள்ள இப்பரிசுத்த இல்லம், உண்மையாகவே, நாசரேத்திலிருந்து இடம் பெயர்ந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது! என்ற முடிவிற்கு வந்தனர். 

இப்பரிசுத்த இல்லம், சாதாரணமான கட்டிடத்தினுடைய அஸ்திவார அமைப்புகள் இல்லாமலிருக்கிறதைச் சுட்டிக் காண்டிபித்தனர். இப்பரிசுத்த இல்லத்தைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கற்கள், “ஜெபெஸ்” என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகைக் கற்கள், கலிலேயா பிரதேசத்திலுள்ள மலைகளில் காணப்படுகின்றன. இத்தாலியிலும், மற்ற எந்த இடங்களிலும் இவ்வகைக் கற்கள் கிடைக்காது.
நாசரேத்தின் பரிசுத்த இல்லம், மிகச் சிறிய கற்கட்டிடம்; இதன் அளவு: 9.52மீ  நீளம், 4.1 மீ அகலம், 4.3 மீ உயரம்.இதன் உள்சுவர்களில், மத்திய நூற்றாண்டு கால சித்திரங்கள் காணப்படுகின்றன! இதன் கிழக்கு சுவரில் (பின்னாளில் சேர்க்கப்பட்ட பகுதி), “இங்கு தான் வார்த்தையானவர் மாமிசமானார்”. என்று இலத்தீனில் ("Hic Verbum Caro Factum Est!") பொறிக்கப்பட்ட ஒரு பரிசுத்த பீடம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! இப்பீடத்தின் மேல், மகா பரிசுத்த தேவமாதாவின் சுரூபம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது!

1469ம் வருடம், லொரேட் நகரிலிருந்த இப்பரிசுத்த இல்லத்தை பரிசுத்த சந்நிதானமாகக் கொண்டு, ஒரு மாபெரும் பசிலிக்கா தேவாலயம் கட்டப்பட்டது! இன்று வரை  இருக்கிறது! 1507ம் வருடம், ஒரு அழகிய சலவைக்கல்லினாலான அடைப்பு, பசிலிக்கா தேவாலயத்தினுள்ளே, இப்பரிசுத்த இல்லத்தைச் சுற்றிலும் கட்டி எழுப்பப்பட்டது!1510ம் வருடம், திருயாத்திரை ஸ்தலமாக அதிகாரபூர்வமாக ஏற்று அறிவிக்கப்பட்டது!
பல நூற்றாண்டு காலமாக, பல பாப்பரசர்கள், இப்பரிசுத்த இல்லம், நாசரேத்திலிருந்து , சம்மனசுகளால், இங்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது, என்றும், இங்கு நிகழும் அநேக புதுமைகளும் உண்மையானவை என்றும் சாட்சியளித்திருக்கின்றனர். பாப்பரசர்கள், இப்பரிசுத்த இல்லத்தின் மீது கொண்டிருந்த பக்திபற்றுதல், மேரை மரியாதையை, இப்பரிசுத்த இல்லத்திற்குத் திருயாத்திரை செல்வதற்காக அளித்த அவர்களுடைய அநேக ஞானப் பலன்கள் மூலம் எண்பிக்கப்படுகிறது! முதலில் 12ம் ஆசிர்வாதப்பர் பாப்பரசரும், அவருக்கு அடுத்தபடியாக, 6ம் உர்பன் பாப்பரசரும், மகா பரிசுத்த தேவமாதா பிறந்த திருநாளுக்காக அளித்த ஞானப்பலன்கள், இப்பரிசுத்த இல்லத்தின் மீது, அவர்கள் கொண்டிருந்த பக்திபற்றுதல் வெளிப்படுகின்றது! இந்த ஞான பலன்களை, 9ம் போனிஃபேஸ், மற்றும், 5ம் மார்டின் பாப்பரசர்கள் உறுதிப்படுத்தினர்.
உண்மையில், லொரேட் பரிசுத்த இல்லத்தினால், மூன்று பாப்பரசர்கள் வியாதியிலிருந்து புதுமையாகக் குணமடைந்தனர். திருச்சபையால் அர்ச்சிஷ்டவர்கள் என்றும், வணக்க்திற்குரியவர்கள் என்றும்,  பிரகடனம் செய்யப்பட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான பேர்கள், இப்பரிசுத்த தேவாலயத்திற்கு திருயாத்திரையாக வந்து ஜெபித்திருக்கின்றனர்! அர்ச்.லிசியே குழந்தை சேசுவின் தெரசம்மாள், கார்மல் மடத்திற்கு செல்வதற்கு முன்பாக, திடீரென்று அவளுடைய மனதில் ஏற்பட்ட ஞான ஏவுதலினால், இப்பரிசுத்த இல்லத்திற்கு திருயாத்திரை சென்றதாக, தனது ஜீவிய சரிதையில் குறிப்பிடுகிறாள்; இப்பரிசுத்த இல்லத்தை திருயாத்திரையாக வந்து சந்தித்தவர்களில், அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார், அர்ச்.கப்ரீனி பிரான்செஸ், கர்தினால் நியூமன்,அர்ச்.ஜான் நியூமன்,அர்ச்.பிரான்சிஸ் சலேசியார், ஆகியோர், சில குறிப்பிடத்தக்க அர்ச்சிஷ்டவர்கள் ஆவர்.

13ம் நூற்றாண்டின் துவக்கத்தில், அர்ச்.பிரான்சிஸ் அசிசியார், ரிகேனாட்டியின் வடக்கிலுள்ள சிரோலோ என்ற இடத்தில், ஒரு துறவற மடத்தைக் கட்டினார். இங்கு ஏன் கட்டவேண்டும், என்று  இதைப் பற்றிய திகைப்பிலிருந்த தன் சிடர்களின் கூட்டத்திடம், அர்ச்.பிரான்சிஸ் அசிசியார்,  இந்நூற்றாண்டு முடிவதற்குள், இங்கு அருகில் ஒரு பரிசுத்த ஷேத்திரம் கட்டப்படும் என்றும், இது, உரோமை மற்றும் ஜெருசலேம் பசிலிக்கா தேவாலயங்களை விட  அதிகமான திருயாத்ரீகர்கள், உலகம் முழுவதிலிருந்தும், இப்பரிசுத்த சன்னிதானத்திற்கு வருவார்கள், என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார். அர்ச்.பிரான்சிஸின் இத்தீ்ர்க்கதரிசனம், 1294ம் வருடம், டிசம்பர் 10ம் தேதி, இப்பரிசுத்த இல்லம் லொரேட் நகரில் ஸ்தாபிக்கப்பட்டபோது, நிறைவேறியது!
1910ம் வருடம், மகா பரிசுத்த லொரேத்தோ மாதா, விமான ஓட்டிகளின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார்கள்! ஏனெனில், பரிசுத்த பாரம்பரிய குறிப்பின்படி, பரிசுத்த இல்லம், நாசரேத்திலிருந்து ஆகாய மார்க்கமாக, பாலஸ்தீனத்திலிருந்து சம்மனசுகளால் தூக்கி வரப்பட்டது.செப்டம்பர் 8ம் தேதியன்று,  மகா பரிசுத்த தேவமாதாவின் பிறந்த திருநாளன்று, விமான ஓட்டிகள், லொரேட்டிலுள்ள இப்பரிசுத்த சந்நிதானத்திற்கு, திருயாத்திரையாக வந்து, ஆடம்பரமான வண்ண நிற சுற்றுப்பிரகாரத்தில் கலந்துகொண்டு, மகா பரிசுத்த தேவமாதாவிடம் பக்திபற்றுதலுடன் ஜெபித்து வேண்டிக் கொள்வார்கள். கடந்த பல நூற்றாண்டுகளால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து மகா பரிசுத்த தேவமாதாவின் சகாய உதவியை நாடி திரளான மக்கள் திருயாத்திரையாக இங்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர்; அபரிமிதமான புதுமைகள் நிகழ்கின்றன! தேவ சலுகைகளையும், தேவ வரப்பிரசாதங்களையும் பெற்று, மக்கள் மனந்திரும்பி உத்தம கத்தோலிக்க ஜீவியம் ஜீவிக்கின்றனர்.

மகா பரிசுத்த லொரேத்தோ மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

திங்கள், 9 டிசம்பர், 2024

Dec. 9 அர்ச்‌.பீட்டர்‌ ஃபூரியர்‌ (St. Peter Fourier)


 டிசம்பர்‌ 09ம்‌ தேதி 
ஸ்துதியரும்‌, தேவமாதா துறவற சபையின்‌ ஸ்தாபகருமான அர்ச்‌.பீட்டர்‌ ஃபூரியர்‌ 

 பிரான்சிலுள்ள லொரேயின் பகுதியைச் சேர்ந்த மைர்கோர்ட்‌ என்ற இடத்தில்‌, இவர்‌,1563ம்‌ வருடம்‌ பிறந்தார்‌. அர்ச்‌.அகுஸ்தீனாரின்‌ துறவற சபையில்‌ சேர்ந்து, 1585ம்‌ வருடம்‌ குருப்பட்டம்‌ பெற்றார்‌.
 பிரான்சிலேயே மிகுந்த வறுமை நிலையிலிருந்ததும்‌, ஒழுக்கக்கேடு நிறைந்ததுமான நகரத்தைக்‌ தேர்ந்தெடுத்து, அங்கே தனது குருத்துவப்‌ பணியை ஆற்றினார்‌; மட்டெயின்கோர்ட்‌ என்ற அந்நகரம்‌ கால்வினிஸ்ட்‌ பதிதர்களுடைய அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்தது. 
அங்கு சென்று இரண்டு வருட காலத்திற்குள்‌, இவருடைய அர்ச்சிஷ்டதனத்தினுடைய முன்மாதிரிகையாலும்‌, தப பரித்தியாகங்களுடன்‌ கூடிய இவருடைய அத்தியந்த ஜெபங்களாலும்‌, இனிமையான ஞான உபதேச வகுப்புகளாலும்‌, அந்நகரம்‌ முழுவதும்‌ மனந்திரும்பியது. இவர்‌ தமது பங்கு மக்களுடைய நலனுக்காக, பரஸ்பர வங்கியை ஏற்படுத்தினார்‌; மேலும்‌, மக்களிடையே ஏற்படும்‌ சண்டை சச்சரவு, தகராறுகளை நிவர்த்தி செய்வதற்காக, நட்புறவை ஏற்‌ படுத்தி, அவற்றைத்‌ தீர்த்து வைப்பதற்கான ஒரு நீதிமன்றத்தையும்‌ ஏற்படுத்தினார்‌. 
அதே சமயம்‌, அவருடைய பங்கிலிருந்த ஏழை பிள்ளைகள்‌ தான், அவருடைய முக்கிய முதன்மையான அக்கறைக்குப்‌ பாத்திரவான்களாயிருந்தனர்‌; ஏழைப்‌ பெண்பிள்ளைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை கன்னியர்களால்‌ நடத்தும்படியாக 1598ம்‌ ஆண்டு, திறந்து வைத்தார்‌.முத்‌.அலெக்ஸ்‌ டே கிளர்க்‌ என்பவர்களுடைய வழிநடத்துதலின்‌ கீழ்‌, கன்னியர்கள்‌, இப்பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தனர்‌. இது பின்னாளில்‌, தேவமாதா சபை என்ற துறவற சபையாக, அர்ச்‌.பீட்டர்‌ ஃபூரியரால்‌ ஸ்தாபிக்கப்பட்டது. இந்த சபையைச்‌ சேர்ந்த கன்னியர்களுடைய எண்ணிக்கை விரைவிலேயே மிகக் கூடுதலாக அதிகரித்தது. பிரஞ்சுப்புரட்சியின்‌ காலத்தில்‌, இந்த துறவற சபைக்‌ கன்னியர்கள்‌, 4000 பேர்‌ இருந்தனர்‌. அர்ச்‌.பீட்டர்‌ ஃபூரியர்‌, ஆச்சரியத்திற்குரிய ஆன்ம ஈடேற்ற ஆவலுடன்‌ விளங்கினார்‌. அநேக புராட்டஸ்டன்டு பதிதர்களை மனந்திருப்பி திருச்சபையில்‌ சேர்ப்பதில்‌ மாபெரும்‌ வெற்றியடைந்தார்‌. 6 மாத கால இடைவெளிக்குள்‌, இளவரசருக்குரிய பிராந்தியமான சால்ம்‌ என்ற இடத்திலிருந்த எல்லா பரிதாபத்திற்குரிய புதியவர்களான (அவர்‌ பதிதர்களை அவ்வாறு தான் அழைப்பார்!) புராட்டஸ்டன்டு பதிதர்களையும்‌, பீட்டர்‌ மனந்திருப்பி சத்திய திருச்சபையில்‌ சேர்த்தார்‌. அர்ச்‌.பீட்டர்‌ ஃபூரியர்‌ 1640ம்‌ வருடம்‌ பாக்கியமாக மரித்தார்‌. 1897ம்‌ வருடம்‌, 13ம்‌ சிங்கராயர்‌ பாப்பரசர்‌ அவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்‌ அளித்தார்‌. பின்னாளில்‌, இவர்‌ கன்னியர்களுக்காக ஸ்தாபித்த தேவமாதா சபை,முத்‌. மார்கிரட்‌ பொர்கொய்ஸ்‌ என்ற கன்னியாஸ்திரியால்‌, கனடா நாட்டில்‌ அறிமுகப்‌படுத்தப்பட்டது. 

ஸ்துதியரான அர்ச்‌.பீட்டர்‌ ஃபூரியரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


வெள்ளி, 29 நவம்பர், 2024

November 28 - St. Catherine Laboure

 நவம்பர் 2️8️ம் தேதி

அர்ச்.கத்தரீன் லபூரே

 

கத்தரீன், பிரான்சின் பர்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஃபெயின் லே மோ ஷியர் என்ற ஊரில், பியர்ரே லபூரே என்ற விவசாயியின் மகளாகப் பிறந்தார். இவருடைய தாயார் பெயர் லூயிஸ் லபூரே. இவருடைய பெற்றோர்களுக்குப் பிறந்த 11 குழந்தைகளில் 9வது குழந்தையாக, 1806ம் வருடம், மே 2ம்தேதியன்றுப் பிறந்தார். சிறு வயதிலேயே, தன்னை சர்வேசுரன் அழைப்பதை , துறவற அந்தஸ்திற்கான தேவ அழைத்தலை, உணர்ந்தார்.

அர்ச்சிஷ்டதனத்தில் கத்தரீனை வளர்த்த அவருடைய தாயார், லூயிஸ் லபூரே, கத்தரீனுக்கு 9 வயதானபோது, 1815ம் வருடம், அக்டோபர் 9ம் தேதி மரித்தார்கள். தாயாரை அடக்கம் செய்தபிறகு, தன் அறைக்குத் திரும்பிய கத்தரீனம்மாள், ஒரு நாற்காலியின் மேல் ஏறி, சுவற்றில் ஒரு பீடத்தில் வைக்கப்பட்டிருந்த மகா பரிசுத்த தேவமாதாவின் சுரூபத்தைப் பக்தி பற்றுதலுடன் எடுத்து, சுரூபத்தைப் பக்தி பற்றுதலுடன் முத்தி செய்தபடியே, முழங்காலிலிருந்து, “! மகா பரிசுத்த தேவமாதாவே! என் இனிய சிநேகமுள்ள தேவமாதாவே! இனி மேல், நீங்கள் தான் என் தாயாராக இருக்கவேண்டும்!” என்று கூறினார்.

 1818ம் வருடம், கத்தரீன் புதுநன்மை வாங்கினார். அச்சமயம் ஒருநாள், கத்தரீனுக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு குருவானவர், “என் மகளே! நீ இப்போது, என்னை விட்டு ஓடிப்போகலாம்.ஆனால், ஒரு நாள், நீ என்னிடம் வருவாய்! சர்வேசுரன் உனக்காக திட்டங்களைக் கொண்டிருக்கிறார், என்பதை மறவாதே! என்று கூறி மறைந்தார்.

 சிறிது காலம் கழித்து, சாடிலோன் சுர் சீன் என்ற இடத்திலிருந்த பிறர் சிநேகக்கன்னியரின் மருத்துவமனைக்குக் கத்தரீன் சென்றபோது, அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்த குருவானவருடைய படத்தைப் பார்த்தவுடன் திடுக்கிட்டார்; அதே குருவானவரை கத்தரீன் தன் கனவில் பார்த்திருந்தார். அந்த குருவானவர் தான், பிறா்சிநேகக் கன்னியர் துறவற சபையை ஸ்தாபித்த அர்ச். வின்சென்ட் தே பவுல் என்பதை அங்கு கத்தரீனம்மாள் அறிந்துகொண்டார்.

 1830ம் வருடம் ஜனவரி மாதம், சாடிலோனிலுள்ள பிறா்சிநேகக் கன்னியா் மடத்தில் , கத்தரீனம்மாள், போஸ்டுலன்ட் என்கிற விருப்பநிலை உறுப்பினராக சேர்ந்தார். அதே வருடம், ஏப்ரல்,21ம் தேதியன்று, பாரீஸிலிருந்த ரூ டூ பாக்கிலுள்ள பிறா்சிநேகக் கன்னியர் சபையின் தாய் மடத்தில், நவசந்நியாசியாகச் சேர்ந்தார். அந்த வருடம், ஜூலை 19ம் தேதி, அவர்களுடைய சபையின் ஸ்தாபகரான அர்ச்.வின்சென்ட் தே பவுலின் திருநாளுக்கு முந்தின நாளன்று, மடத்தின் தாயார், நவசந்நியாசிகளுடைய கூட்டத்தில், அர்ச்.வின்செந்தியாரின் புண்ணியங்களைப் பற்றி விளக்கிக்கூறி, அவற்றைக் கண்டு பாவிக்கும்படி அறிவுறுத்தினார். ஒவ்வொரு நவசந்நியாசிக்கும், அர்ச்சிஷ்டவருடைய அருளிக்கமாக பூசிக்கப்பட்டிருந்த அர்ச்சிஷ்டவருடைய சர்ப்ளீஸிருந்து ஒரு சிறு துண்டை கொடுத்தார். அர்ச்.வின்சென்ட் தே பவுலின மீது கொண்ட அளவு கடந்த சிநேகத்தின் காரணமாக, கத்தரீன், அந்த அருளிக்கத்துண்டை இரு துண்டுகளாக வெட்டி, ஒன்றை வாயில் போட்டு, விழுங்கி விட்டு, மற்றதை, தன் ஜெபப்புத்தகத்தில் வைத்துக் கொண்டார். “மகா பரிசுத்த தேவமாதாவை தன்னுடைய கண்களால் நேரடியாகக் காண்பதற்கு உதவி செய்ய வேண்டும்!” என்று, கத்தரீன், அர்ச்.வின்செந்தியாரிடம், தினமும் வேண்டிக்கொண்டிருந்தார். அர்ச்.கத்தரீன் லபூரேவிற்கு தேவமாதா காட்சியளிக்கத் துவங்கியபோது தான், மகா பரிசுத்த தேவமாதாவின் யுகம் துவங்கியது. அநேகக் காட்சிகளை மகா பரிசுத்த தேவமாதா, கத்தரீனம்மாளுக்கு அளிப்பதற்குத் திருவுளம் கொண்டார்கள்.

முதல் காட்சி: 1830ம் வருடம் ஜூலை 18ம் தேதி இரவு தான், உலக சரித்திரத்தையே மாற்றி அமைத்தது.அந்த இரவில் தான், மகா பரிசுத்த தேவமாதா, நவீன காலத்தினுடைய தேவமாதாவின் யுகத்தைத் துவக்கினார்கள்.

1531ம் வருடம், குவாடலூப்பில் காட்சியளித்ததற்குப் பிறகு 300 வருட காலம் சென்றபிறகு, 1830ம் வருடம் , மகா பரிசுத்த தேவமாதா மறுபடியும் காட்சியளிக்கிறார்கள். 1830ம் வருடம், ஜூலை 18ம் தேதியன்று தான் மகா பரிசுத்த தேவமாதா உலகத்திற்கும் திருச்சபைக்கும் வெகு நீண்ட காலமாக அளிக்கவிருந்த தொடர்காட்சிகள் மற்றும் அறிவுப்புகளுக்கான முதல் காட்சி நிகழ்ந்தது.

24 வயதான இளம் நவசந்நியாசியான அர்ச்.கத்தரீன் லபூரேவைக் கொண்டு, மகா பரிசுத்த தேவமாதா தமது திட்டங்களைத் துவக்கினார்கள். அன்று இரவு கக்தரீனை உறக்கத்திலிருந்து, அவருடைய காவல் சம்மனசானவர், பல முறை மிக மென்மையாக அழைத்து, எழுப்பி விட்டார். கத்தரீன் எழுந்தபோது, தன் காவல் சம்மனசானவரை மகா அழகிய 8 வயது குழந்தையாகப் பார்த்தார். காவல் சம்மனசானவர் அணிந்திருந்த உடை மகா பிரகாசமுள்ள ஒளியுடன் விளங்கியது. காவல் சம்மனசானவர், கத்தரீனிடம், “உடனே, சிற்றாலயத்திற்கு வா! மகா பரிசுத்த தேவமாதா, அங்கே உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!” என்று கூறினார்.

 காவல் சம்மனசானவரைப் பின்தொடர்ந்து, சிற்றாலயத்திற்குச் சென்ற கத்தரீன், நடுச்சாம கிறீஸ்துமஸ் திவ்ய பலிபூசைக்கு ஆயத்தம் செய்யப்பட்டி ருப்பதுபோல், சிற்றாலயத்தின் எல்லா விளக்குகளும் எரிந்துகொண்டு, எங்கும் பிரகாசமான ஒளிமயமாக இருந்தது! பீடத்தின் பரிசுத்த சந்நிதானத்தில், ஆன்ம இயக்குனர் பிரசங்கங்கள் நிகழ்த்தப் பயன்படுத்தும் நாற்காலியின் அருகில் கத்தரீன் முழங்காலிலிருந்தார்.

 திடீரென்று பட்டாடைகளின் சலசலப்பின் சத்தம் கேட்டது; அப்போது மகா பரிசுத்த தேவமாதா மாபெரும் ஒளியுடன் கத்தரீனம்மாளை நோக்கி நடந்து வருவதைப் பார்த்தார். அந்த நாற்காலியில் மகா பரிசுத்த தேவமாதா அமர்ந்தார்கள். காவல் சம்மனசானவர், “இவர்கள் தான் மகா பரிசுத்த தேவ மாதா!” என்று கத்தரீனிடம் கூறினார் . உடனே, கத்தரீனம்மாள், தன் கரங்களால், மகா பரிசுத்த தேவமாதாவின் மேல் ஊன்றி சாய்ந்தபடி, தேவமாதாவி னுடைய கனிவுமிக்க திவ்ய திருக்கண்களை நோக்கிப் பார்த்தார்.

  அர்ச்.கத்தரீன் லபூரேவிடம், மகா பரிசுத்த தேவமாதா அற்புதப்பதக்கத்தைக் காண்பித்தார்கள்; இதன் விவரத்தை நாம் நேற்றைய திருநாளில் பார்த்தோம். அற்புதப் பதக்க சுரூபத்தை அணியும் பழக்கம் உலகம் முழுவதும் பரவியது. ஆயிரக்கணக்கான புதுமைகள் உலகம் முமுவதும், அன்றிலிருந்து இன்று  வரை தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. “தீமை நிறைந்த உலகப் பற்றுதல்களை நம்மிடமிருந்து துளைத்து அகற்றக்கூடிய பரிசுத்தக் துப்பாக்கிக் குண்டு!” என்று அர்ச். மாக்ஸ்மிலியன் கோல்பே, இந்த அற்புதப்பதக்கத்தை, அழைப்பார். வெகு அநேக யூதர்கள் இவ்வற்புதப்பதக்கத்தை, அணிந்ததால் புதுமையாக மனந்திரும்பினர்! அல்ஃபோன்ஸ் ராட்டிஸ்போன், இந்த அற்புதப்பதக்கத்தை அணிந்ததால், விசேஷ தேவ சலுகையை மகா பரிசுத்த தேவமாதாவின் அனுக்கிரகத்தால் பெற்று மனந்திரும்பி, தன் மூத்த சகோதரரான தியோடோர் சுவாமியாருடன் சேர்ந்து, யூதர்களை மனந்திருப்பும் வேதபோகக அலுவலை மேற்கொண்டு அதில் பெரும் வெற்றியும் அடைந்தார்; அநேக பசாசின் இரகசிய சபையினர், கம்யூனிஸ்டுகள், அஞ்ஞானிகள், பிற மதங்களைச் சேர்ந்த அநேகர் மனந்திரும்பினர்

அர்ச்.கத்தரீன் லபூரே 1876ம் வருடம் டிசம்பர் 31ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்தார். 1947ம் வருடம் அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது .இவருடைய பரிசுத்த சரீரம் புதுமையாக இந்நாள் வரை அழியாத சரீரமாக இருக்கிறது!

அர்ச். கத்தரீன் லபூரேவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!