Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

வெள்ளி, 31 ஜூலை, 2020

#மரியாயின்_மீது_உண்மைப்_பக்தி



---உத்தம விதமாய் நம்மை முழுவதும் மாதாவுக்கு அர்ப்பணம் செய்தல்--



122. நம்முடைய நற்செயல்கள் என்னும்போது இரண்டு காரியங்களை நாம் அதில் கவனிக்கவேண்டும்.
ஒன்று பரிகரிப்பு, இன்னொன்று பேறுபலன்.
அதாவது, நற்செயல்களின் பரிகரிப்புத் தன்மை அல்லது மன்றாட்டுத் தன்மைகளை நாம் கவனிக்க வேண்டும்.
ஒரு நற்செயலின் பரிகரிப்புத் தன்மை அல்லது மன்றாட்டுத்தன்மை என்பது பாவத்துக்குரிய தண்டனைக்குப் பரிகரிப்பாக அல்லது ஒரு புதிய வரப்பிரசாதத்தைப் பெற்றுத்தர அந்நற்செயல் பயன்படுவதாகும்.
ஒரு நற்செயலால் பேறுபலன் விளைதல் அல்லது அதன் பேறுபலன் என்று கூறப்படுவது என்னவென்றால் அச்செயல் நமக்கு வரப்பிரசாதத்தையும் நித்திய மகிமையையும் அடைந்து தருவதாகும்.
இது இங்ஙனமிருக்க கன்னிமாதாவுக்கு நம்மை அர்ப்பணம் செய்வதால், நம்முடைய எல்லா நற்செயல்களின் மன்றாட்டு பேறுபலன் ஆகியவற்றை , அதாவது, நற்செயல்களால் விளையக்கூடிய எல்லா பலன்களையும் வரப் பிரசாதங்களையும் மற்றவர்களுக்குக் கொடுத்து விடுவதற்காக நாம் அவற்றை மாதாவிடம் ஒப்படைப்பதில்லை (ஏனென்றால் சட்டப்படி பார்த்தால் நம் பேறுபலன்களும் வரப்பிரசாதங்களும் புண்ணியங்களும் பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாதவை. பிதாவுடன் நமக்குப் பிணையாக வந்த சேசு கிறீஸ்து மட்டுமே தம் பேறு பலன்களை நமக்குக் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார்.)
ஆகவே நாம் இனிமேல் விளக்கிக்கூற இருப்பதுபோல், மாதா நமக்காக அவற்றைக் காப்பாற்றி, அதிகரிக்கச் செய்து, அழகு படுத்தும்படியாகவே அவர்களிடம் அவற்றை நாம் ஒப்படைக்கிறோம். (எண் 146, 147 காண்க)
ஆயினும் நம் நற்செயல்களின் பரிகரிப்புப் பலன்களை, மாதா தான் விரும்பியவர்களுக்கு கொடுக்கும் படியாகவும் இறைவனின் அகிமிக தோத்திரத் திற்காகவும் அவர்களிடம் ஒப்படைக்கிறோம்.
123. இதன் பயன் யாதெனில் இப்பக்தி முயற்சியினால், நாம் சேசு கிறீஸ்துவுக்குக் கொடுக்கக்கூடிய அனைத்தையும் மரியாயின் கரங்கள் வழியாகக் கொடுப்பதால், மிக உத்தமமான முறையில் கொடுக்கிறோம்.
நம்முடைய மற்றெல்லாப் பக்தி முயற்சிகளால் கொடுப்பதைவிட அதிகமாகக் கொடுக்கிறோம்.
மற்றப் பக்தி முயற்சிகளில், நம் நேரத்தில் ஒரு பகுதியையும் நம் நற்செயல்களில் ஒரு பாகத்தையும், நாம் செய்யும் பரிகாரங்களில் ஒரு பங்கையும் நம் பரித்தியாகங்களில் சிலவற்றையும்தான் நாம் அவருக்கு அளிக்கிறோம்.
ஆனால் இந்தப் பக்தி முயற்சியால், யாவும் கொடுக்கப்பட்டு விடுகின்றன, யாவும் வசீகரிக்கப்பட்டு விடுகின்றன.
நம் உள்ளரங்க நற்கனிகளையும் நம் அன்றாட நற்செயல்களால் சம்பாதிக்கப்பட்ட பரிகரிப்புப் பலன்களையும் நம் விருப்பப்படி உபயோகிக்கும் உரிமை கூட விட்டுக் கொடுக்கப்படுகிறது.
இது எந்த ஒரு துறவற சபையிலும் கூட செய்யப்படாத ஒன்றாகும். துறவற சபைகளில் தரித்திர வார்த்தைப் பாட்டினால் நம் உலகப் பொருட்களை இறைவனுக்கு அளிக்கிறோம்.
கற்பென்னும் வார்த்தைப் பாட்டினால் நம் சரீர நலன்களைக் கொடுக்கிறோம் .
கீழ்ப்படிதல் என்னும் வார்த்தைப் பாட்டினால் நம் சித்தத்தையும், சில சந்தர்ப்பங்களில் அடைபட்ட வாழ்வு என்னும் வாக்குறுதியால் நம் விருப்பப்படி எங்கும் செல்லும் உரிமையையும் கொடுத்து விடுகிறோம்.
ஆயினும் இந்த வார்த்தைப் பாடுகளால் நம்முடைய நற்செயல்களின் பலன்களை விரும்பியபடி உபயோகிக்கும் உரிமையை அல்லது சுதந்திரத்தை இறைவனுக்கு நாம் கொடுப்பதில்லை.
ஒரு கிறீஸ்தவனுக்கு மிகவும் விலைமதிப்புள்ளதும் மிகப் பிரியமுள்ள சொத்து எனக் கருதப்படுவதுமான நம் பரிகார முயற்சிகளையும் பலன்களையும் நம்மால் முடிந்த மட்டும் - இத்துறவற வார்த்தைப் பாடுகளால்- நாம் துறப்பதுமில்லை.
அர்ச்சியசிஷ்ட மரியாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

புதன், 29 ஜூலை, 2020

மரியாயின்_மீது_உண்மைப்_பக்தி (True Devotion to Mary in Tamil)



----மாதா மீது உத்தமமான பக்தியின் தன்மை அல்லது சேசு கிறீஸ்துவுக்கு உத்தமமான அர்ப்பணம்----



120. நம் எல்லா உத்தமதனமும், சேசுகிறீஸ்துவைப் போல் நாம் ஆகி அவருடன் ஒன்றுபட்டு அவருக்கு அர்ப்பணிக்கப்படுவதில் தான் அடங்கியுள்ளது.
எனவே பக்திகளிலெல்லாம் மிகச் சிறந்தது எதுவாயிருக்குமென்றால், நம்மை சேசுகிறீஸ்துவைப் போல் ஆக்கி அவருடன் நம்மை ஒன்றாக்கி அவருக்கு நம்மை அர்ப்பணம் செய்யும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பது தெளிவு.
இனி, சிருஷ்டிகளிலெல்லாம் மிகச்சிறந்த முறையில் சேசு கிறீஸ்துவைப் போல் இருப்பது பரி.கன்னிமரியாயே.
இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால், கிறீஸ்துவின் அன்னையான மரியாயின் மீது உள்ள பக்தியே மற்றப் பக்திகளையெல்லாம் விட ஒரு ஆன்மாவை அவரைப் போல் ஆக்கி அவருக்கு அதனை அர்ப்பணம் செய்கின்றது.
ஒரு ஆன்மா எவ்வளவுக் கதிகமாய் மாதாவுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறதோ அவ்வளவுக்கதிகமாய் சேசு கிறீஸ்துவுக்கு அர்ப்பபணமாக்கப்படுகிறது.
ஆகவே சேசு கிறீஸ்துவுக்கு உத்தமவிதமாய் அர்ப்பணமாகும் சிறந்த வழி, தன்னை முழுவதும் மாதாவுக்கு அர்ப்பணிப்பதே ஆகும்.
அர்ப்பணிக்கப்படுதல் என்றால் உத்தமவிதமாய் நான் கற்றுத் தரும் பக்தி இதுவே.
வேறு வார்த்தைகளில் கூறினால் அது நம் ஞானஸ்நான வாக்குறுதிகளைப் புதுப்பிப்பதேயாகும்.
அர்ச்சியசிஷ்ட மரியாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

செவ்வாய், 28 ஜூலை, 2020

#மரியாயின்_மீது_உண்மைப்_பக்தி


--நிலையற்ற பக்தர்கள், கள்ளப் பக்தர்கள், சுய நலப் பக்தர்கள்--
--நிலையற்ற பக்தர்கள்--


101. மரியாயின் மீது பக்தி கொள்வதும் விடுவதுமாக இருப்பவர்களே நிலையற்ற பக்தர்கள். இப்பொழுது, உருக்கமான பக்தியிலிருப்பார்கள். அடுத்து உப்பு சப்பற்றுப் போவார்கள்.
ஒரு சமயம் மாதாவுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பார்கள், கொஞ்சம் பிந்தி முழுவதும் மாறிவிடுவார்கள்.
தேவ அன்னை மீதுள்ள எல்லாப் பக்தி முயற்சியையும் செய்வதென ஏற்றுக் கொண்டு ஆரம்பிப்பார்கள். மாகாவின் பக்தி சபைகளில் சேருவார்கள்.
பின் சபை ஒழுங்குகளை சரிவர அனுசரிக்க மாட்டார்கள்.
நிலவைப் போல் நிலைமாறுவார்கள். நிலவைப் போல் அவர்களையும் மாமரி தன் பாதத்தினடியில் போடுகிறார்கள்.
ஏனென்றால், விசுவாசியான இக்கன்னிகையின் பிரமாணிக்கத்தையும் நிலைத்து நிற்கும் தன்மையையும் கைக்கொள்ளுகிற ஊழியருடன் எண்ணப்படத் தகுகியற்றவர்களும் நிலைமாறுகிறவர்களுமாக அத்தகை யோர் இருக்கிறார்கள்.
மிகுதியான செபங்களாலும் பக்தி முயற்சிகளாலும் தனக்குத்தானே சுமை ஏற்றிக் கொள்ளாமலிருப்பதே நல்லது.
சிலவற்றை , அன்புடனும் பிரமாணிக்கத்துடனும். உலகம் பசாசு சரீரம் இம்மூன்றையும் பொருட்படுத்தாமல் நன்கு நிறைவேற்றுவதே மேலானது.

--கள்ளப் பக்தர்கள்--

102. தாங்கள் இருப்பதை விட வேறுவிதமாக மற்றவர்களுக்குக் காணப்படும் பொருட்டு, தங்கள் பாவங்களையும் தீய பழக்கங்களையும் பிரமாணிக்கமுள்ள இக்கன்னிகையின் போர்வைக்குள் மறைத்துக் கொண்டிருப்பவர்களே கள்ளப் பக்தர்கள்.

--சுய நலப் பக்தர்கள்--

103. சுயநலமே நோக்கமாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள் ஏதாவது நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற வேண்டும், ஆபத்திலிருந்து தப்பவேண்டும், நோய் குணமாக வேண்டும், அல்லது இது போன்ற ஒரு தேவை நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக தேவ அன்னையிடம் மன்றாடுவார்கள்:
மற்றப்படி அவர்களை நினைக்கமாட்டார்கள். இவர்களெல்லாம் கடவுளுக்கும் அவர் திரு அன்னைக்கும் ஏற்புடையவர்களல்ல.
இவர்கள் தவறான பக்தியுடையவர்கள்,
104. ஆகவே எதையும் நம்பாமல் எல்லாவற்றையும் குறைகூறும் விமர்சனப் பக்தரோடும்,
ஆண்டவர் மீதுள்ள மரியாதைக்காக மாதா மீது அதிக பக்தி கொள்ள பயப்படும் தடுமாறும் பக்தரோடும்,
தங்கள் பக்தியையெல்லாம் வெளிக் கைங்கரியங்களிலே கொண்டிருக்கும் வெளி ஆசாரப் பக்தரோடும்,
மாதா மீது தாங்கள் காட்டும் தவறான பக்தியின் மறைவில் பாவத்தில் உழலும் துணிந்த பக்தரோடும்,
தங்கள் நிலையற்ற தன்மையால் பக்தி முயற்சிகளை மாற்றிக் கொள்ளும் அல்லது மிகச் சிறிய சோதனை வருமுன்னே பக்தி முயற்சியையெல்லாம் கைவிட்டு விடும் நிலையற்ற பக்தரோடும்
நல்லவர்களெனக் காணப்படும்படி மாதாவின் சபைகளில் சேர்ந்து சபைச் சின்னங்களை அணிந்து கொள்ளும் கள்ளப் பக்தரோடும்,
இறுதியாய் இலௌகீக நன்மை களைப் பெறவும் அல்லது உடல் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்காகவுமே மாதாவிடம் மன்றாடும் சுயநலப் பக்தரோடும்
சேர்ந்துவிடாதபடி நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
அர்ச்சியசிஷ்ட மரியாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

#உத்தரிக்கிற_ஸ்தலத்தின் #ஆன்மாக்களின் நம்மை நோக்கிய கதறல்

by Rev. John Evangelist Zollner, 1884
.
"Friend, lend me three loaves."--Luke, 11: 5
"நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாக கொடு"
- லூக்கா 11:5
.


ஊக்கத்துடன் விடாமல் தொடர்ந்து ஜெபிக்கும் ஜெபத்தின் பலனை காண்பிக்க அன்பின் நமதாண்டவர் மிக ஆறுதலான ஒரு உவமையை காட்டுகிறார்...:
"உங்களுள் ஒருவன் தன் நண்பனிடம் நள்ளிரவில் சென்று, " நண்பா, எனக்கு மூன்று அப்பம் கடன்கொடு. ஏனெனில், பயணம்செய்யும் என் நண்பன் ஒருவன் என்னிடம் வந்திருக்கிறான். அவனுக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை " என்று சொல்லுகிறான் .
நம்மால் இந்த விண்ணப்பத்தை எளிதாக கற்பனை செய்து பார்க்க முடிகிறது,....
நள்ளிரவு .....
உதவி கேட்க பொருத்தமற்ற நேரம்...
மனைவி பிள்ளைகளுடன் படுத்து ஓய்வெடுக்கும் நண்பர்....
நாம் எதிர்பார்த்தபடியே இவ்வாறு விண்ணப்பத்தை நிராகரிக்கிறார்:
" என்னைத் தொந்தரவு செய்யாதே. கதவு பூட்டியாயிற்று. என் குழந்தைகளும் என்னோடு படுக்கையில் உள்ளனர். எழுந்து உனக்குக் கொடுக்க முடியாது " என்று சொல்லுகிறான்.- லூக்கா 11:7
ஆனால் கதவைத் தட்டுபவனோ போகவில்லை. விடாமல் மேலும் உரக்க தட்டுகிறான். அவனுடைய தொடர்ந்த
நச்சரிப்பு தாளாமல் எழுந்து வந்த நண்பர் கதவைத் திறந்து விருப்பமில்லாமலே அவன் கேட்ட அப்பங்களைக் கொடுத்தார்.
நற்செய்தியில் குறிப்பிடப்பட்ட இந்த உதவி கேட்கும் நண்பனைவிட - மிக நிச்சயமாகவே மோசமான சூழ்நிலையில் - நிராதரவாக மிகவும் துயரத்தோடு நம்மால் மட்டுமே செய்யப்படக் கூடிய உதவி கேட்டு ஓலமிடும் ஆன்மாக்களின் குரல்கள் அதே விண்ணப்பத்தோடு, உத்தரிக்கிற ஸ்தலமாகிய சிறைச்சாலையிலிருந்து நம்மை நோக்கி எழுப்பப் படுகிறது:
-
" நண்பா எனக்கு மூன்று அப்பங்கள் கடன் கொடு"
-
"நள்ளிரவில் " அவர்கள் கூக்குரலிடுகிறார்கள்;
ஆம்! அவர்களின் இருண்ட சிறையில் தாங்களாகவே எதுவும் செய்து கொள்ள வழி இல்லாமல் உதவி கேட்டு மன்றாடி தம் நண்பர்களிடம் கதவுகளை திறக்கும்படி உரக்க தட்டுகிறார்கள்.
-
"நண்பா மூன்று அப்பங்கள் கடனாகக் கொடு"
-
அவர்களின் இந்த அழுகையை, ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாக பிரித்து சற்றே தியானிப்போம்;
.
1. நண்பா
2.கடனாக கொடு
3.எனக்கு
4.மூன்று அப்பங்கள்
.
முதலில் "நண்பா"
.
உத்தரிக்கும் சிறையில் இருக்கும் அவ்வான்மாக்கள் நீதிப்படியே சரீர உறவுமுறையிலும் ஞான உறவுமுறையிலும் நம்மை சரியாக "நண்பா" என்று கதறிக் கூப்பிட்டு அழுகிறார்கள்.
அவர்கள் நம்மோடு பிறந்தவர்கள்; ஆகவே சரீரப்படி நம்முடைய உறவினர்கள்.
அதைவிட மும்மடங்கு நம் ஞான நண்பர்கள்.
இவ்வுலகம் முடியும் வரை ஆண்டவரின் ஒரே திருச்சபையில் மூன்று வகையான ஆன்மாக்கள் இருப்பார்கள்.
1.போரிடும் திருச்சபை -
உலகில் உயிருடன் இருப்பவர்கள்.
2.துன்புறும் திருச்சபை - உத்தரிக்கும் சிறையில் இருந்து கடவுளின் நீதிக்கு பரிகாரம் செய்து தங்களை தூய்மைப் படுத்துகிறவர்கள்.
3.வெற்றி பெற்ற திருச்சபை - மோட்சத்தில் கடவுளோடு வாழ்கிறவர்கள்.
மூன்று நிலைகளில் இருந்தாலும் ஒரே திருச்சபை என்பதால் மூவகை ஆன்மாக்களும் ஒருவரோடு ஒருவர் திருச்சபையோர் என்னும் ஞான உறவால் நட்பில் பிணைந்து இருக்கிறோம்.
உலகில் வாழும்போது தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றிருந்தாலும் தகுதியான பரிகாரம் செய்யாமல் மரித்த ஆன்மாக்கள், மோட்சம் செல்லும் முன்பாக உத்தரிக்கும் ஸ்தலத்தில் சிறையிடப்பட்டு கடவுளின் நீதிக்கு தகுதியான முறையில் பரிசுத்தமாகும் வரை துன்புறுகிறார்கள் என்பதை விசுவாச சத்தியமாக திருச்சபை போதிக்கிறது.
நாம் வேதாகமப்படியும் பாரம்பரியப்படியும் பகுத்தறிவைக் கொண்டும் இந்த விசுவாசத்தில் ஊன்றிக் கொள்ளலாம்.
பரிசுத்த வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் நாம் வாசிக்கிறோம்;
ஆதலால், பாவங்களினின்று மீட்கப்படும் படி இறந்தவர்களுக்காக வேண்டிக் கொள்வது புனிதமும் பயனும் உள்ள எண்ணமாய் இருக்கின்றது.
(2 மக்கபேயர் 12:46)
.
புனித சின்னப்பர் (பவுல்) எழுதுகிறார்.,
கட்டிய கட்டடம் நிலைத்திருந்தால் கட்டியவன் கூலி பெறுவான். கட்டியது எரிந்து போனால், அது அவனுக்கு இழப்பாகும்.
அவனோ நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவன்போல் மீட்படைவான்.
(1 கொரிந்தியர் 3:14-15)
இந்த இடத்தில் அப்போஸ்தலர் பேசுவது மறுவுலகத்தின் ஒரு நிகழ்வு பற்றி.
ஆன்மாக்கள், ஆண்டவரின் நெருப்பால் சில காலம் புடமிடப்படுவதை ,
வேறு வார்த்தைகளில் கூறினால்,
அதாவது உத்தரிக்கும் ஸ்தல நெருப்பைப் பற்றியே எழுதுகிறார்.
திருச்சபை தந்தையர்கள் உத்தரிக்கும் ஸ்தலம் இருப்பதைக் குறித்து பல சாட்சியங்களை கூறியிருந்தாலும் நியாசா நகரின் புனித கிரகோரியார் கூறிய ஒன்றை மட்டும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:
"பாவம் மற்றும் புண்ணியம் இவற்றின் விபரம் அறிந்தபின் புண்ணிய வாழ்வு வாழ்ந்து மரித்த ஆன்மாக்கள், பரலோக அன்பின் நெருப்பால் புடமிடப்பட்டு,
தங்கள் ஆன்மாவில் ஒட்டிக் கொண்டுள்ள அற்ப மாசுக்கள் முதலாய் நீங்கி பரிசுத்தமாகும் முன்பாக
பரலோக மகிமைக்குள் நுழையத் துணிவதில்லை."
நமது பகுத்தறிவும் கூட இந்த சத்தியத்தை ஏற்கும்படி செய்கிறது.
கனமான பாவங்களுக்கு முழு மன்னிப்புப் பெற்று ஆனால் அற்ப பாவக்கறைகளுடன் மரிக்கும் ஆன்மா எங்கு செல்லக்கூடும்?...
மோட்சத்திற்கா?
அது இயலாது... ஏனெனில்
மோட்சத்தில் துளிமாசும்கூட நுழையாது... நுழைய முடியாது.
நரகத்திற்கா?
இல்லை...
நரகத்தீர்ப்பு இவ்வான்மாவைப் பொறுத்தவரை தேவ இரக்கத்திற்கும் தேவநீதிக்கும் முரணானது....
ஏனெனில் இந்த ஆன்மா கனமான குற்றங்களை விலக்கி விசுவாசத்தைக் காத்துக் கொண்டு நற்செயல்கள் செய்து வாழ்ந்து ஆனால் சிறுதவறுகளோடு மரித்திருப்பதால் கடவுளின் நீதிப்படி நித்திய நரகத்தீர்ப்பை வழங்க இயலாது...
அப்படியானால் நிச்சயமாக அற்ப குற்றங்களை கடவுளின் தேவநீதிக்குத் தக்கபடி பரிகரித்து(தண்டித்து) அவ்வான்மாவை மோட்சத்திற்கு தகுதியாக்கும் ஒரு ஸ்தலம் , கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இரண்டாவதாக மோட்சம் செல்லும்படி உலகில் 'போராடிக் கொண்டிருக்கும் திருச்சபை'யோராகிய நாம்,
கடவுளின் நீதிக்குப் பணிந்து 'சுத்திகரமாகும்படி துன்புறும்' நம் இந்த சகோதரருக்கு உதவுவதும் கிறிஸ்தவ பிறர்சிநேக கடமையே ஆகும்.
ஏனெனில் நம்மைப் போலவே அவர்களும், மோட்சம் செல்லவேண்டியே அங்கு துன்புறுகிறார்கள்.
அவர்களோடு ஒன்றாக மோட்சத்தில் வாழ விரும்பும் நாம் அதை அடைய அவர்களுக்கு உதவாமலிருப்பது எப்படி கிறிஸ்தவ நேசமாகும்?
மாறாக அவர்களின் துயரத்தை துடைத்து அவர்களின் விடுதலைக்கு நம்மால் இயன்ற அளவில் உதவாமல் இருப்பது என்பது,
மோட்சம் செல்ல அவர்கள் தங்கள் குற்றங்களால் தகுதியற்றவர்கள் என்றும்
போதுமானபடி கடவுளை அவர்கள் நேசிக்கவில்லை என்றும்
அவர்களைத் தீர்ப்பிடுவதற்கு சமமாகும்.
இவ்விதமாக தீர்ப்பிடுவது கிறிஸ்தவ பிறர்சிநேகத்திற்கு எதிரான கனமான பாவம் ஆகும். அது நம்மை மோட்சத்திற்கு அல்ல, நரகிற்கே கூட்டிச் செல்லும்.
.
மூன்றாவதாக,
நாம் உண்மையான கிறிஸ்தவ பிறர்சிநேகத்துடன் துன்புறும் நம் நண்பர்களாகிய உத்தரிக்கும் புனித ஆன்மாக்களுக்கு அவர்களின் இச்சிறைத் துன்பத்தை துடைக்க நம்மால் இயன்ற எல்லாவற்றையும் செய்து அவர்களின் விடுதலைக்கு உதவ வேண்டும்.
அதாவது எவ்வாறு உடலின் உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவுவதில் முந்துகின்றனவோ அப்படி...
உதாரணமாக, ஒரு கரத்தில் காயம் ஏற்பட்டால் கண் அதை கவனமாக பார்த்துக் கொள்ள, வாயோ உதவி கேட்டுக் கூப்பிட, கால்கள் உதவி கிடைக்கும் இடம் தேடி ஓட, மற்றொரு கரமோ காயத்திற்கு மருந்து பூசுகிறது.
அப்படியே கத்தோலிக்கத் திருச்சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 1.பூமியில் வாழ்பவரோ,
2.மரித்து உத்தரிப்பவரோ அல்லது
3.வெற்றி மகுடத்துடன் மோட்சத்தில் வாழ்பவரோ
எல்லோருமே ஒரே கிறிஸ்துவின் ஞான சரீரத்தின் உறுப்புக்களே... ஆகவே அவர்கள் ஊனுடலின் உறுப்புகளை விட உத்தம நேச இணக்கத்துடன் ஒருவருக்கொருவர் உதவ விரும்புவது மிகவும் சரியே அன்றோ?
ஆகவே கடும் துயரப்படும் நம் உத்தரிக்கும் ஸ்தல நண்பர்களுக்கு உதவ தாமதிப்பதும் மறப்பதும் கிறிஸ்தவ பிறர்சிநேக புண்ணியத்தை அவமதிப்பதாகாதா?
அதைவிட, அது நம் நண்பர்களை அவர்களின் மிக அவசரத் தேவையில் கைவிடுதலாகும்.
சரீர முறையிலும் அவர்கள் நம் உறவினர்கள் இல்லையா? ஆதிப் பெற்றோராகிய ஆதாம் ஏவாளின் பிள்ளைகள் தானே நாம் அனைவரும்? நம் வீட்டில் நம் பெற்றோரையோ, பிள்ளைகளையோ, கணவனையோ, மனைவியையோ, நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ மரணத்தால் இழக்காதவர்கள் நம்மிடையே யாரும் உண்டோ?
இவ்வாறு இழக்கப்பட்ட நம் நண்பர்கள், கடவுளின் மகிமையுள்ள தேவதரிசனம் மறுக்கப்பட்டு தேவநீதிக்குக் கடனைச் செலுத்தும்படி இச்சிறையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்க எல்லாவகையிலும் வாய்ப்பு உண்டு.
ஒருவேளை அவர்கள் நம் பொருட்டு செய்த தவறுகளுக்காக இன்று தண்டனை பெற்று சிறைப்பட்டிருக்கக் கூடும். இவ்வுலகில்
அவர்கள் நமக்குக் காண்பித்த உண்மையான நேசத்தையும் நமக்காக செலவிட்ட அன்பின் நேரங்களையும் நமக்காக செய்த தியாகங்களையும் மறந்து அவர்களின் இந்த ஆழ்ந்த துயரத்தில் ஆறுதல் அளிக்காத, உதவி செய்யாத நாம் நன்றி கெட்டவர்கள் அல்லது சுயநலமிகள் அன்றோ? அவர்களுக்கு உதவ எல்லா வகையிலும் நமக்கு கடமையுண்டு.
ஆ! எத்தகைய உணர்வின் கண்களோடு இறந்த நம் நேசர்கள் நம்மை நோக்கிப் பார்ப்பார்கள்?
ஒவ்வொரு நாளும் அவர்களின் விடுதலைக்காக, அவர்கள் மிகமிக விரும்பும் மோட்சத்தை அவர்கள் அடையும்படி ஒரு சிறுஜெபம் அல்லது சிறு அன்பின் ஒறுத்தல் செய்ய நமக்கு மனமில்லாமல் போகுமென்றால் நித்தியமாக நம் நேசர்களின் கண்களை எவ்வாறு நோக்குவோம்?
2.கடனாகக் கொடு"
.
ஓ! இந்த துயரம் மிகுந்த ஆன்மாக்கள் எழுப்பும் குரல் "எனக்குத் தா" என்று அல்ல; மாறாக "எனக்குக் கடனாகக் கொடு" என்றே ஒலிக்கிறது...
எத்தகைய ஆறுதலும் நம்பிக்கையும் கூடிய குரல் இது...
ஆம்!, அவர்களுக்கு நீ செய்யும் எதுவும் பலனற்றுப் போவதில்லை; மாறாக அது உன் மோட்ச செல்வத்தின் ஒரு முதலீடு மட்டுமே. அதன் பலன் வட்டியுடன் உன்னிடம் திரும்பி வரும்.
தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ள இயலாத , இந்த மிகமிக 'ஏழைகளுக்கு இரங்குகிறவர்கள் கடவுளுக்கே கடன் கொடுக்கிறார்கள் '
அவரே இந்தக் கடனை வட்டியுடன் திருப்பித் தருகிறார்....
ஓ! அவை எப்படிப்பட்ட ஆசீர்வாதங்களால் நிரம்பியிருக்கும்?
அவ்வான்மாக்களும் கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்கள்.
பழைய ஏற்பாட்டில் யோசேப்பு தன்னுடன் சிறைப்பட்டிருந்த பாரவோனின் சமையல்காரனிடம் அவனுடைய விடுதலையையும் இழந்த மகிமையை அடைவதையும் முன்னறிவித்தபோது
"உன் காரியம் இப்படி நன்மைக்கு வந்த பின்போ, நீ என்னை மறவாமல் தயவுகாட்டிப் பாரவோன் என்னை இச் சிறையிலிருந்து விடுதலையாக்கும்படி பரிந்து பேச வேண்டும்."
(ஆதியாகமம் 40:14)
என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த சமையல்காரனோ தான் விடுதலை பெற்ற பின்பு தன் உபகாரியை இரண்டு வருடங்களாக மறந்து போனான். ஒருவேளை அவரை நினைவு படுத்தக் கூடிய அந்த விசித்திர நிகழ்வுகள் நிகழாமல் போயிருந்தால் வாழ்நாள் முழுவதும் மறந்து போயிருக்கக் கூடும்.
நன்றியற்ற அந்த சமையல்காரனைப் போல் அல்ல; மாறாக நம் உத்தரிக்கும் ஸ்தல நண்பர்கள், தாங்கள் மோட்ச மகிமையை அடைந்தவுடன் தங்களுக்கு சிறையில் அன்போடு உதவியவர்களை மேலான உத்தம அன்புடன் எப்போதும் நன்றியுடன் நினைவில் கொண்டு தங்கள் நேசர்களின் ஆன்ம, சரீர அவசரத்தேவைகளில் உதவும்படியும் கடவுளின் அன்பிலிருந்து தம்நேசர்கள் பிரிந்து விடாமல் நிலைத்து இருக்கும்படியும் குறித்த காலத்தில் நல்ல மரணமடைந்து மோட்சத்தில் தங்களோடு வந்து சேரும்படியும் கடவுளிடம் இடைவிடாமல் பரிந்து பேசுகிறார்கள்.
இன்னும் அவர்கள் மோட்சம் வந்து சேரும் முன்பே தங்களின் உத்தரிக்கும் ஸ்தல சிறையிலிருக்கும் போதேகூட தங்கள் உபகாரிகளுக்காக கடவுளிடம் உதவி பெற்றுத்தர வல்லவர்களாயிருக்கிறார்கள்.
அது அவர்களின் சிறைத் துயரத்தில் 'தங்களுக்குத் தாங்களே உதவி செய்ய மட்டுமே இயலாதவர்களே' அன்றி தங்கள் உபகாரிகளுக்கு நன்மை செய்ய வல்லவர்களாகவே இருக்கிறார்கள்.
அவர்களை தம் நேசமுள்ள நீதியுடன் சிறையிலிட்ட கடவுள், மிக்க அன்போடு அவர்களை நேசிப்பதால் அவர்களின் பரிந்துரை ஜெபங்களை தயவுடன் ஏற்கிறார் என்பதில் ஐயமில்லை.
பொலோஞனோ நகர புனித கேத்தரின், 'மோட்சத்திலுள்ள புனிதர்களிடம் மன்றாடி பெற்றுக் கொண்டதை விட அதிக வரங்களையும் உதவிகளையும் உத்தரிக்கும் ஸ்தல ஆன்மாக்களின் பரிந்துரையால் பெற்றுக் கொண்டதாக' சாட்சி கூறுகிறாள்.
மோட்சமும் கூட இந்த ஆன்மாக்களுக்கு நாம் உதவும்போது நன்றியுடன் அக்களிக்கிறது. புனிதர்களும் சம்மனசுக்களும் விசேஷ கருணையோடும் அன்போடும் இந்த ஆன்மாக்களின் உபகாரிகளை நோக்கிப் பார்க்கிறார்கள்.
ஏனெனில் இந்த ஆன்மாக்களை ஊத்தரிப்பு ஸ்தல சிறையிலிருந்து நாம் விடுவிக்கையில் மோட்சத்தின் எண்ணிக்கையையும் மகிழ்ச்சியையும் நாம் கூட்டுகிறோம்.
நம் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வார்த்தைகளில் கூறினால், மனந்திரும்பும் ஒரு பாவியின் பொருட்டு (மீண்டும் அவன் பாவம் செய்து மீட்பை இழக்கும் வாய்ப்பு இருந்தபோதும்) மோட்சவாசிகளின் சந்தோஷம் அதிகரிக்கும் போது,
தங்கள் மீட்பு உறுதி செய்யப்பட்ட இந்த ஆன்மாக்கள் விடுதலை பெற்று மோட்சத்தில் நுழையும்போது,
மோட்சவாசிகள் மேலும் அதிக மகிழ்ச்சி அடைவது இயல்பேயன்றோ!
மேலும் இந்த துயரமுள்ள ஆன்மாக்களுக்கு நம்முடைய நற்செயல்களால் உதவும் போது நம் நேச ஆண்டவருக்கே ஒருவகையில் உதவுகிறோம்.
ஏனெனில் அவர்களை அதிகம் நேசித்து அவர்களின் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்த்து அவர்கள் தன்னோடு மோட்சத்தில் ஒன்றித்திருப்பதையே அவர் விரும்புகிறார்.
இறுதியாக கடவுளின் நேசமுள்ள நண்பர்களுக்கு இரக்கத்துடன் உதவுவதன் மூலம் திரியேக கடவுளின் சிநேகத்தையும் சம்பாதித்துக் கொள்கிறோம்.
ஏனெனில் இவ்வான்மாக்கள் பிதாவாகிய சர்வேசுரனின் சொந்த பிள்ளைகளாகவும் சுதனாகிய சர்வேசுரனின் சகோதரராகவும் இஸ்பிரீத்துசாந்துவானவரின் ஞானமணவாட்டியராகவும் இருப்பதால் திரியேக தேவனின் மகிமையுள்ள காட்சியைத் தங்களின் சிறுகறைப்பட்ட ஆன்மாவினால் இழந்து நிற்கும்போது நட்புடன் நாம் அவர்களின் கடனைத் தீர்த்து இழந்த காட்சியை அவர்களுக்குப் பெற்றுத் தருவதால் திரியேக கடவுளின் நட்பையும் நாம் பெற்றுக் கொள்கிறோம்.
.
3."எனக்கு"
.
அடுத்தது நாம் தியானிக்கும் வார்த்தை "எனக்கு" .
ஓ! அவர்களின் வேதனை அளப்பரியது! அதில் தலையாய துயரம்
'கடவுளின் பிரசன்னம் மறுக்கப்படுதல்'
உதாரணமாக கடும் தாகத்திலும் பசியிலும் நீங்கள் இருக்கும்போது உங்களுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருக்கும் உணவு மேசையைக் காட்டி அதே நேரம் அதைத் தொடும் அனுமதி உங்களுக்கு மறுக்கப்படும் துயரத்துடன் இதனை ஒப்பிடலாம்.
இப்படியே ஒரு ஆன்மாவுக்கு கடவுளின் பிரசன்னம் மறுக்கப்படுகையில் நிகழ்கிறது. ஆன்மாவின் சுமையான சரீரத்திலிருந்தும் திசைதிருப்பும் புலன் இச்சைகளிலிருந்தும் உலகப்பற்றுகளில் இருந்தும் மரணம் ஆன்மாவை விடுவிக்கிறது.
அப்போது தன் கடைசிக்கதியாகிய கடவுளின் பூரணத்தையும் தன்னுடைய வெறுமையையும் அவரை நோக்கி தன்னை கவர்ந்திழுக்கும் நேசத்தின் வலிமையுள்ள ஈர்ப்பையும் கடவுளின் மீது கூர்மையான பசியையும் கடூர தாகத்தையும் மிகத்தெளிவாக நொடிக்கும் குறைவான நேரத்திலேயே ஆன்மா அறிந்து கொள்கிறது.
ஆகவே தன் முழுவலிமையுடனும் தடுக்க முடியாத நேசத்தின் தாகத்துடனும் கடவுளை நோக்கித் தாவுகிறது.
அந்தோ! என்ன பரிதாபம் அது தன்மீதுள்ள கறைகளின் நாற்றத்தையும் அது கழுவப்படுவதன் அவசியத்தையும் மிகச்சரியாக கண்டுபிடிக்கிறது.
ஆ! அதன் தாகம் மிகக் கொடூரமானது. கடவுளின் பிரசன்னம் மட்டுமே அதைத் தணிக்க இயலும். அவர்களின் குரல் கண்ணீரில் கரைந்து தோய்கிறது.
'இறைவன் மீது,
உயிருள்ள இறைவன் மீது
என் உள்ளம் தாகங்கொண்டது. என்று சொல்வேன்! இறைவனின் முகத்தை என்று காண்பேன்?
உன் இறைவன் எங்கே?" என்று அவர்கள் நாளும் என்னிடம் சொல்லும் போது, என் கண்ணீரே எனக்கு இரவும் பகலும் உணவாயிற்று.'
(சங்கீதங்கள் 41:2,3)
என்று அவ்வான்மாக்கள் இரவும் பகலும் அலறி அழுகிறார்கள்.
2.அவர்கள் அனுபவிக்கும் புலன்களின் வலிகளைப் பற்றி நாம் என்ன சொல்வது?
அவை மிகவும் உண்மையானவை.
திருச்சபை தந்தையர்கள் ஒரே குரலில் போதிப்பது போல அவர்கள் அனுபவிக்கும் புலன்களின் வலி மிக மிக கடுமையானவை. பூமியில் அவற்றோடு ஒப்பிடத் தக்க துயரங்கள் எதுவும் இல்லை.
புனித அகுஸ்தினார் கூறுவது, " நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவன்போல் , நாம் மீட்படைந்தாலும் (1 கொரிந்தியர் 3:14-15) அந்நெருப்பு இவ்வுலகில் எந்த மனிதனும் அனுபவிக்கும் எத்துன்பத்தையும் விட கொடூரமானது.
புனித பெரிய கிரகோரியார் கூறுவது, "சுத்திகரிக்கும் நெருப்பின் வலி, உலகின் வலிகளுடன் ஒப்பிடவே முடியாதது".
"இவ்வுலகில் வேதசாட்சிகள் அனுபவித்த எத்தகைய கொடூர வாதனைகளும் சுத்திகர வேதனையுடன் ஒப்பிட்டால் ஒன்றுமேயில்லை" என்கிறார் வணக்கத்திற்குரிய பேடெ.(Bede).
இன்னும் இவ்வாறு மேலும் பல புனிதர்களின் கூற்றுக்களும் உத்தரிக்கும் ஸ்தலத்தில் நம் புனித நண்பர்கள் அடையும் வேதனைகளை ஓரளவு நாம் அறியும்படி செய்கின்றன.
வேதசாட்சிகளின் கொடூர வாதனையான மரணங்களைப் பற்றி வாசிக்கையில் நம் உடல் நடுங்குகிறது!
.இவ்வுலகின் நிர்ப்பாக்கியங்கள் எத்துணை வேதனையானவை!
நோய்களின் வாதைகள் எப்படிப் பட்டவை!
ஆயினும் இவை யாவும் உத்தரிக்கும் ஸ்தலத்தின் வேதனையுடன் ஒப்பிட்டால் ஒன்றுமேயில்லை என்று வேதபாரகர்கள் கூறுவதை கவனியுங்கள்.
உண்மையில் நரக வேதனையும் உத்தரிக்கும் ஸ்தலத்தின் வேதனையும் ஒன்று போலத்தான். முந்தையது முடிவின்றி நித்திய காலத்துக்கும் நீடிப்பது. மாறாக பிந்தியது மகிமையில் முடிவடையும் என்பதே ஆறுதல்.
சபிக்கப்பட்ட ஆத்துமங்கள் அவநம்பிக்கையுடன் நித்தியமாக நரகில் வேகின்றன. மாறாக உத்தரிக்கும் ஸ்தல ஆன்மாக்களோ சிநேக நம்பிக்கையோடும் சம்மனசுக்களால் தேற்றப்பட்டும் சுத்திகர நெருப்பில் குறித்த காலம் வரை வேகிறார்கள்.
ஆகவே பரிதாபமாக இவ்வான்மாக்கள் தங்கள் கரங்களை விரித்து நம்மை நோக்கி "கவனி, என்மேல் இரக்கப்படு, என் நண்பா! நீயாவது எனக்கு உதவி செய்! எனக்குக் கடன் கொடுத்து உதவு! கடவுளின் நீதியின் கரம் என்மேல் பாரத்துடன் விழுந்துள்ளது! ஆ! என் நண்பர்களே! எனக்கு செவி கொடுத்து உதவுங்கள், என் கொடூர , அளவற்ற, இடைவிடாத வேதனையில் எனக்கு நானே உதவிக்கொள்ள முடியா திருக்கிறேன்! என்மேல் இரங்கு ! என் நண்பனே! நீ உதவினால் மட்டுமே நான் இவ்வேதனைகளிலிருந்து விடுபட்டு மோட்சத்தின் நித்திய சமாதானத்திற்குள் பிரவேசித்து இளைப்பாற அனுமதிக்கப் படுவேன்!" என்று இரவும் பகலும் கதறுவதில் வியப்பென்ன இருக்க முடியும்?
பகுதி - 4
'மூன்று அப்பங்கள்'.
இந்தப் பரிதாப ஆன்மாக்கள் கேட்கும் 'மூன்று அப்பங்கள்' யாவை?
1.வெண்ணிற அப்பமாகிய திவ்விய திருப்பலி.
நாம் , யூதாஸ் மக்கபேயர் இறந்தோரின் பாவங்கள் மன்னிக்கப்படும்படி பலிகளை ஒப்புக் கொடுத்ததை வேதாகமத்தில் எழுதியுள்ளபடி அறிந்துள்ளோம். பழைய ஏற்பாட்டின் சட்டங்களின் படி மிருகங்களும் நிலத்தின் கனிகளும் அடங்கிய அப்பலிகள் இறந்தோர் மன்னிக்கப்பட்டு மீட்கப் பட போதுமானதாக இருந்தது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. அவ்வாறெனில் கடவுளும் மனிதனுமான வார்த்தையான சர்வேசுரன் தன்னைத் தானே கல்வாரி சிலுவையில்
பலியிடும் ஆராதனைக்குரிய திவ்விய திருப்பலி , இத்துன்புறும் ஆன்மாக்களுக்கு விளைவிக்கும் ஐசுவரிய ஆசீர்வாத பலன்களும் வருவிக்கும் ஆறுதலும் நம்மால் சொல்லவும் கூடுமோ?
ஆகவே தான் திருச்சபையின் மிகத் தொடக்க காலங்களிலிருந்தே இறந்தோருக்காக திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு வந்தது. அதை இரண்டாம் நூற்றாண்டில் தெர்த்துல்லியன் , இறந்த கணவருக்காக அவர் இறந்த நாளில் திருப்பலி கண்டு ஒப்புக் கொடுப்பது மனைவியின் கடமையென குறிப்பிடுவதிலிருந்து அறிகிறோம்.
இறந்த நம் சகோதரர்களுக்காக ஜெபிப்பதும் பலி ஒப்புக் கொடுப்பதும் அப்போஸ்தலிக்க வழிமுறை என்பதை, "
இறந்தோர் ஆன்மாக்கள் அமைதியில் இளைப்பாறும் படி பலி ஒப்புக் கொடுப்பதும் ஜெபங்கள் ஏறெடுப்பதும் அப்போஸ்தல மரபு என்பதை உலகம் முழுவதும் கத்தோலிக்கத் திருச்சபை இவ்வழக்கத்தை பின்பற்றுவதைக் கொண்டு ஊர்ஜிதப் படுத்துகிறேன்" என்று புனித அகுஸ்தினார் எழுதியுள்ளதிலிருந்து அறியலாம்.
நமக்கு காணக்கிடைத்த மிகப்பழமையான திருவழிபாட்டு முறைகளில் இருந்து நாம் அறிவது ஏதெனில் தொடக்க காலங்களிலிருந்தே இறந்தோரை நினைவுகூர்தல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மிகவும் குறிப்பாக திருப்பலிப் பலன்களில் அவர்களுக்கு பங்களிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆகவேதான் திரிதெந்தீன் பொதுச்சங்கம், "உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களுக்கு, விசுவாசிகளின் செபங்கள் மிகவும் குறிப்பாக திருப்பலி ஒப்புக்கொடுத்தல் மிகுந்த ஆறுதலும் பலனும் அளிக்கின்றது" என்று போதிக்கிறது.
.
2.வீட்டில் தயார் செய்யப்படும் அன்றாட அப்பங்கள்.
அதாவது நமது அன்றாட வாழ்வில், மரித்த ஆன்மாக்களை நினைவுகூர்ந்து செய்யப்படும் எளிய ஜெபங்கள்.
உதாரணமாக பரலோக மந்திரம்,ஜெபமாலை, சிலுவைப் பாதை தியானம், மற்றும் 'நித்திய இளைப்பாற்றியை இவர்களுக்கு தந்தருளும் ஆண்டவரே! முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக!' போன்ற சில சிறிய ஜெபங்கள். இவையே வீட்டில் செய்யப்படும் அன்றாட அப்பங்கள்.
நம்முடைய இந்த எளிய ஜெபங்களும் உத்தரிக்கும் ஸ்தலத்தில் உள்ள நம் நண்பர்களுக்கு மிகுந்த ஆறுதலும் பலனும் அளிக்கின்றது என்பதை பின்வரும் வேதாகம வார்த்தைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்:
2 மக்கபே 12:46
" ஆதலால், பாவங்களினின்று மீட்கப்படும் படி இறந்தவர்களுக்காக வேண்டிக் கொள்வது புனிதமும் பயனுமுள்ள எண்ணமுமாய் இருக்கின்றது."
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் வழக்கம் தொடக்கத் திருச்சபையில் இருந்த வழக்கமே.
இதை புனித கிறிஸ்சோஸ்தம் , அப்போஸ்தலர்கள் திருநிலைப்படுத்தி ஏற்படுத்திய முறைப்படி மரித்தோரை திருப்பலியில் நினைவுகூர்வது அவசியம் என்று எழுதியிருப்பதிலிருந்து அறியலாம்.
புனித. எப்ரேம் எழுதிய கடைசி கடிதத்தில்(உயில்) தான் மரித்த பின் தனக்காக ஜெபங்கள் ஒப்புக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பேரரசர் கான்ஸ்டன்டைன் தம்முடைய மரித்த சரீரம் விசுவாசிகளுடைய ஜெபங்களில் பங்கடையும்படி ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட விருப்பம் கொண்டிருந்தார்.
புனித மோனிக்கம்மாள் தன்னுடைய புனித மகனாகிய அகுஸ்தினாரிடம் "என்னுடைய இந்த உடலை எங்கு வேண்டுமானாலும் அடக்கம் செய்து கொள்ளும். அது குறித்து கவலைப் பட வேண்டாம். ஆனால் உம்மிடம் நான் கேட்டு க்கொள்ளும் ஒரே காரியம் எதுவெனில் ஆண்டவரின் பீடத்தில் நீர் நிறைவேற்றும் ஒவ்வொரு பலியிலும் எனக்காக ஜெபிப்பதை மட்டுமே" என்று கேட்டுக் கொண்டார்.
புனித அகுஸ்தினாரும் தம் தாயின் புனித விருப்பத்தை மிகவும் சரியாக நிறைவேற்றி வந்தார். அவளுக்காக தாம் ஜெபித்து வந்தது மட்டுமின்றி தமது வாசகர்களையும் அவளுக்காக ஜெபிக்கும் படி தமது நூலில் எழுதி வைத்திருந்தார்.
3. மூன்றாவதாக கறுப்பு ரொட்டி.
இது வழக்கமாக ஏழைகளுக்கு தானம் செய்யும்படி தயாரிக்கப் படுகிறது.
திருச்சபை உறுதியாக விசுவசிக்கிறபடி உத்தரிக்கும் ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்கள் அவர்களை நினைவுகூர்ந்து செய்யப்படும் இரக்கச் செயல்களாகிய தர்மகாரியங்களால் ஆறுதலும் உதவியும் அடைகிறார்கள்.
புனித அகுஸ்தினார் கூறுகிறார்: " சந்தேகமின்றி நம்முடைய இரக்கச் செயல்கள் மரித்தோருக்கு கடவுளின் இரக்கத்தைப் பெற்றுத் தருகின்றன.
தங்கள் வாழ்நாட்களை இரக்கச் செயல்களால் நிரப்பியவர்கள் தாங்கள் மரித்த பிறகு அவற்றின் பெருமதிப்பை கண்டு வியப்படைவார்கள்."
அவர் மேலும் கூறுகையில், " மரித்த ஆன்மாக்களுக்காக திருச்சபை ஒப்புக் கொடுக்கும் திருப்பலிகளும் தான தர்ம இரக்கச் செயல்களும் கடவுளின் திருமுன்னிலையில் மனுப்பேசி மரித்தோரின் பாவகனத்தின்படி அன்றி
மாறாக
கடவுளின் இரக்கத்தின் ஆழத்தின் படி நடத்தப்பட கடவுளை தூண்டுகிறது என்பதில் சந்தேகமில்லை..."
அவர் மேலும் கூறி முடிக்கிறார்: " முழுத் திருச்சபையும் திருச்சபை தந்தையர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தன் பாரம்பரியப் படியே இவ்வாறு நடந்து வருகிறது."
அப்படியானால் நீங்கள் செய்யும் தான தர்ம இரக்கச் செயல்களும் ஒப்புக் கொடுக்கும் ஜெபங்களும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூர்ந்து செய்யப் படுமானால் அவர்களுக்கு இவற்றின் பலன்கள் உதவுகின்றன. குறிப்பாக திருச்சபை வழங்கும் பொதுப்பலன்கள் மற்றும் பரிபூரண பலன்கள் ஆகிய வற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. உத்தரிக்கும் ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்கு இப்பலன்களை பெற்றுத் தருவதும் ஞானமுறையிலான இரக்கச் செயலே.
முடிவுரை:
ஆகவே உத்தரிக்கும் ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களின்மீது இரக்கப்பட்டு கருணை காட்டுவோம்.
அவர்களின் கதறலாகிய
" நண்பா!"
"மூன்று அப்பங்கள்'"
"கடனாகக் கொடு"
சரீரத்தாலும் ஞான முறையிலும் நமது 'நண்பர்களாகி' நமது அன்பிற்கும் நன்றிக்கும் இரக்கத்திற்கும் உரிமையுள்ளவர்கள்.
"கடன் கொடு" , ஏனெனில் அவர்கள் தங்களுக்கு தாங்களே உதவிக் கொள்ள முடியாதவர்கள். நம்முடைய கடனை முழு பரலோகத்துடன் சேர்ந்து வட்டியுடன் நமக்கு திரும்பச் செலுத்துவார்கள்.
"எனக்குக் கொடு" - ஏனெனில் என்தேவை மிக அவசரமானது மற்றும் எடுத்துரைக்க முடியாத அளவு அவசியமானது. நமது கருணையையும் இரக்கத்தையும் இரந்து கேட்கும் பரிதாபத்திற்குரியது.
"மூன்று அப்பங்கள்" - என்று அழுது கேட்கிறார்கள். 1.திருப்பலி
2.ஜெபங்கள்
3.இரக்கச் செயல்கள் என்னும் மூன்று அப்பங்களை கெஞ்சிக் கேட்கிறார்கள். அவர்களின் அழுகுரலுக்கு இரங்கி அவர்கள் கேட்கும் மூன்று அப்பங்களை கடன் கொடுப்போம். இன்று மட்டும் அல்ல..
இந்த வாரம் மட்டுமல்ல...
நம் வாழ்நாள் முழுவதும் இரக்கம் காட்டுவோம். அவர்களை சிறையிலிருந்து விடுவிக்க நம்மாலான எல்லா உதவிகளையும் தருவோம். அவர்களுக்கு தேவகாட்சியைப் பெற்றுத்தர நாம் காட்டும் இரக்கம் முடிவில் நமக்கே உதவுவதாகும். இவ்வாறு கிறிஸ்துநாதரின் வார்த்தைகள் நம்மில் நிறைவேறும்.
" இரக்கமுடையோர் பேறு பெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்"
(மத்தேயு 5:7)
ஆமென்.