அர்ச்.சிலுவை அருளப்பர்
(கி.பி.1591)
ஜான் என்று அழைக்கப்படும் அருளப்பர் குழந்தையாயிருந்து பால் குடிக்கும் வயதிலேயே, தேவதாயார் மட்டில் பக்தியும் அவரிடத்தில் உண்டாயிற்று. இவர் கல்விச்சாலையில் படிக்கும்போது மருத்துவமனைக்குப் போய் அவர்களுக்கு வேண்டிய உதவி புரிவார். இவர் சிறுவராயிருக்கும்போது ஐம்புலன்களை அடக்கி ஒறுத்தல் முயற்சி செய்வார். உலகத்தின் மீது வெறுப்புற்று தேவமாதாவின் சபையாகிய கார்மேல் மடத்தில் சேர்ந்து, தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலிய புண்ணியங்களைச் சகலரும் அதிசயிக்க, உத்தமமாய் அனுசரித்து வந்தார். கர்த்தருடைய பாடுகளின் மட்டில் இவருக்குள்ள பக்தியால் சிலுவை அருளப்பர் என்னும் பெயரைப் பூண்டுக்கொண்டார். இவர் குருப்பட்டம் பெற்ற பின், ஒரு மடத்திற்கு சிரேஷ்டராகி அந்த மடத்திலுள்ள குறைகளைச் சீர்ப்படுத்த முயன்றதனால், அநேகர் இவர் மட்டில் பிரியமும் சிலர் வெறுப்புங் கொண்டார்கள். இதனிமித்தம் அவர் மேல் அநியாயமாய்க் குற்றஞ் சாட்டி மடத்தின் சிறையில் வைத்தார்கள். ஆனால் அருளப்பர் சற்றும் குறை கூறாமல் சர்வேசுவரனை ஸ்துதித்தார். சீக்கிரத்தில் அவர் அதினின்று விடுதலையாக்கப்பட்டு புண்ணியங்களையும் தவக்கிருத்தியங்களையும் புரிந்து வந்தார். இவருடைய தபக்கருவிகளையும் காண்போர் பயப்படுவார்கள். கர்த்தர் இவருக்குக் காணப்பட்டு: நீ நம்மைப்பற்றி அனுபவித்த நிந்தை அவமானத்திற்குக் கைம்மாறாக உனக்கு என்ன சம்பாவனை வேண்டுமென்று கேட்டதற்கு, ஆண்டவரே! இன்னும் அதிக நிந்தை அவமானம் வேண்டுமென்றார். சிலுவையைப் பார்க்கும்போது பரவசமாவார். பூசை நேரத்திலும் பாவசங்கீர்த்தன நேரத்திலும் அவர் மேல் அதிசய பிரகாசம் ஜொலிப்பதை ஜனங்கள் கண்டு பிரமிப்பார்கள். இவர் வியாதியாய் விழுந்தபோது மற்றவர்களால் உண்டான கஸ்தி சிலுவைகளைப் பொறுமையுடன் சகித்து, சிலுவையைக் கையிலேந்தி உயிர் துறந்து மோட்ச சம்பாவனையைச் சுகித்தார்.
யோசனை
நமது சிலுவையாகிய துன்பதுரிதம், வியாதி, தரித்திரம், இக்கட்டுகளைப் பொறுமையுடன் சகிப்போமாக.