*St. Porphyrius, B.*
*அர்ச். போர்பீரியுஸ்*
*ஆயர் - (கி.பி. 420)*
பெரும் செல்வந்தரான இவருக்கு 21 வயதானபோது உலகத்தைத் துறந்து காட்டிற்குச் சென்று தவம் புரிந்தார். சிரேஷ்டருடைய உத்தரவின்படி இவர் ஜெருசலேமுக்குச் சென்று, திருத்தலங்களைச் சந்தித்து, கர்த்தருடைய பாடுகளைப்பற்றி தியானித்து புண்ணிய வழியில் வாழ்ந்துவந்தார். இவர் வியாதியுற்ற சமயத்தில் மெல்ல மெல்ல நகர்ந்து திருத்தலங்களில் வேண்டிக்கொள்கையில், கர்த்தர் நல்ல கள்வனுடன் இவருக்குத் தரிசனையாகி, கர்த்தருடைய கட்டளைப்படி நல்லக் கள்வன் இவரைக் குணப்படுத்தினார். சூரியன் அஸ்தமித்தபின் கொஞ்சம் உணவு அருந்துவார். தம்மிடமிருந்த பெரும் ஆஸ்தியை விற்றுத் தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு, கடுந்தபம் செய்து ஆண்டவருக்கு ஊழியஞ் செய்தார். இவர் காசா பட்டணத்திற்கு ஆயராக நியமிக்கப்பட்டபோது முன்னிலும் அதிக ஜெப தபங்களைப் புரிந்து, இடைவிடா பிரசங்கத்தாலும், புதுமைகளாலும் அஞ்ஞானத்தில் மூழ்கியிருந்த அப்பட்டணத்தாரை கிறீஸ்தவர்களாக்கினார். அங்கிருந்த அநேக பசாசின் கோவில்களை இடித்து, ஆண்டவர் பேரால் தேவாலயங்களைக் கட்டிவைத்தார். இவர் 43 வயது வரை மிகவும் கடினமாக உழைத்து, மோட்சம் பிரவேசித்தார்.
*யோசனை*
நமது கர்த்தரின் திருப்பாடுகள் மட்டில் அதிக பக்தி வைப்போமாக.