Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 20 செப்டம்பர், 2018

உங்கள் காவல்தூதரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்



ஒரு குழந்தை பிறக்கும்போது கடவுள் மகிமை மிக்க தமது அரூபிகளில் ஒருவரை அழைத்து, புதிதாய்ப் பிறந்துள்ள இக்குழந்தையை அவரது தனிப்பட்ட பாதுகாவலில் ஒப்படைக்கிறார் என்று வேதவல்லுனரான அர்ச். அக்குயினாஸ் தோமையார் கூறுகிறார். ஆன்மா படைக்கப் பட்டு, நம் உடலோடு ஒன்றிக்கப்படும் வேளை யில் காவல் தூதரின் நியமனம் நிகழ்வதில்லை . ஏனெனில் அப்போது குழந்தை தன் தாயின் வயிற்றில் இன்னும் இருப்பதால், அது தாயின் காவல் தூதரது பராமரிப்புக்கு உட்பட்டிருக் கிறது. ஆனால் நாம் உலகில் வந்து பிறக்கும் போது, நம் ஞானஸ்நானத்திற்கு முன்பாகவே, நம் தூதர் நம்மைத் தம் பொறுப்பில் ஏற்றுக் கொள்வது நடக்கிறது.

பதிதனோ, அஞ்ஞானியோ, கத்தோலிக்கனோ, யாராக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும், மிகக் கொடியவனும், தனக்கென ஒரு காவல் தூதரைக் கொண்டிருக்கிறான்.

ஆயிரம் ஆன்மாக்களைப் பாதுகாக்க ஒரே தூதரால் முடியும் என்றாலும், கடவுள் தமது அளவற்ற நன்மைத்தனத்தில் நம் ஒவ்வொரு வருக்கும் ஒரு தனித் தூதரைத் தந்திருக்கிறார். எனவே நம் பிறப்பு முதல் ஒவ்வொரு வினாடி யும் நம்மைப் பாதுகாப்பது நம் தூதரின் கடமையாக இருக்கிறது. ஒரு வினாடி கூட அவர் நம்மைக் கைவிடுவதில்லை . நம் ஒவ்வொரு அசைவையும் பார்க்கிறார், எப்போதும் நம் அருகில் இருக்கிறார்.
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதர் தரப்பட்டிருக்கிறார் என்பதற்கு சங்.90:11, மத். 18:10; அப். நட 12:15: சங். 33:7 ஆகிய திருவசனங்களைத் தரலாம்.
நம் தூதர் நமக்காக என்ன செய்கிறார்?

ஒரு தூதர் ஓர் ஆன்மாவைப் பொறுப் பேற்றுக் கொள்ளும்போது, அந்த மனிதனை எல்லா வழிகளிலும் ஆதரித்துப் பாதுகாத்து, அவனுக்கு உதவுமாறு, தாம் கடவுளிடமிருந்து பெற்ற பூரண அறிவு, புத்தி, வல்லமை, அக்கறை இவற்றை அவனுக்காக அர்ப்பணிக்கிறார். மேலும், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தத் தமது பிள்ளை யின்மீது மிக ஆழமான, தந்தைக்குரிய அன்பை அவர் உணர்கிறார்.

நம் காவல் தூதர் தம் மகிழ்ச்சியையும், அன்பையும், புனிதத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். ஒவ்வொரு வினாடியும் நம்மை இன்னும் அதிக நல்லவர்களாகவும், பரிசுத்தர்களாகவும், மகிழ்ச்சியானவர்களாகவும் ஆக்கும்படி அவர் உழைக்கிறார். மேலும் இடைவிடாமலும், பேரன்பின் ஆர்வத்தோடும் நமக்காகக் கடவுளிடம் பரிந்து பேசி ஜெபிக்கிறார். இந்த ஜெபங்களைக் கடவுள் மறுப்பதில்லை. ஏனெனில் நமக்காக ஜெபிக்க அவரைத் தூண்டுபவரே நம் ஆண்டவர்தான்!

"ஜெபிக்க வாய்ப்பில்லாத சூழ்நிலையில், உன் காவல்தூதரின் பின்னால் ஒளிந்து கொண்டு, உன் இடத்திலிருந்து ஜெபிக்கும் பொறுப்பை அவரிடம் விட்டுவிடு” என்கிறார் அர்ச். மரிய வியான்னி அருளப்பர்!
இன்னும் மேலாக, நீ தினமும் பூசை காண முடியாதபோது, உன் காவல் சம்மனசானவ ரிடம் பூசை நடக்கும் கோவில் ஒன்றுக்குச் சென்று, உன் சார்பாக அங்கே பீடத்தில் பலி யாகும் கடவுளை ஆராதிக்கும்படி கேட்டுக் கொள். இதைவிட அவருக்கு அதிக மகிழ்ச்சி யளிக்கும் காரியம் வேறில்லை. உன்னைப் போலவே அவரும் இதே தேவ ஆராதனைக் காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்!


மேலும், நாம் பக்தியோடு ஜெபிப்பதைக் காண்பது நம் தூதருக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தினமும் காலை ஜெபத்தில் தவறாமல் அவரிடம் மன்றாடுவது அவரை மகிழ்வித்து, நமக்குப் பெரும் பலன் தருகிறது.
நம் காவல் தூதர் இடைவிடாமல் அன்பும், ஞானமும் மிக்க ஆலோசனைகளை நம் செவிகளில் கிசுகிசுத்துக் கொண்டே இருக்கிறார். அடிக்கடி தேவ அன்பின் ஆழத்தைப் பல வழிகளில் நமக்கு நினைவுபடுத்தி, நம் பாவங்களின்மீது உத்தம மனஸ்தாபத்தைத் தூண்டுபவரும் நம் காவல் தூதரே.
நம் சிந்தனையின் மீதும், நம் புத்தியின் மீதும் அவர் இரக்கத்தோடு செயல்பட்டு, நம் பலவீனங்களைத் திருத்திக் கொள்ளவும், தீய நாட்டங்களுக்கு எதிராகப் போராடவும் நம்மை வற்புறுத்துகிறார். தவறான எதையும் நாம் செய்யும்போது, அவர் வருத்தமுற்று, நம்மைத் திருத்த முடிந்த வரை முயற்சி செய்கிறார்.
பசாசுக்களின் கொடிய தாக்குதல்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதில் நம் காவல் தூதர் எப்போதும் விழிப்பாக இருக்கிறார். “பசாசால் சோதிக்கப்படும்போது உன் காவல் தூதரிடம் மன்றாடு. பசாசை அலட்சியம் செய், பயப்படாதே. ஏனெனில் உன் காவல் தூதரைக் காணும்போது பசாசு அஞ்சி நடுங்கி, அலறியபடி ஓடிப் போகிறது” என்கிறார் அர்ச். ஜான் போஸ்கோ.
தினமும், நாம் சற்றும் அறியாதிருக்கிற வேறு பல ஆபத்துக்களிலும், தீமைகளிலும் இருந்தும் நம் தூதர் நம்மைப் பாதுகாக்கிறார்.
ஆனால் இதில் ஆச்சரியத்திற்குரியது என்ன வென்றால், இந்தத் தெய்வீக உதவியை நாம் மதிப்பதோ, போதுமான அளவுக்கு புரிந்து கொள்வதோ இல்லை என்பதுதான். அளவற்ற விதமாக நமக்கு மிகுந்த நன்மைத்தனம்

காட்டும் இந்த தேவதூதரை நாம் மதித்துப் போற்றுவதோ, அவரை நேசிப்பதோ, இன்னும் நன்றாக அறிய முயல்வதோ கிடையாது. நம் பிரிய தூதரிடம் நாம் காட்டும் அலட்சியம் திகைப்பூட்டுவதாக இருக்கிறது.
அர்ச். பியோ தமது அந்தரங்கச் செயலாளராகவும், சிறு வயது விளையாட்டுத் தோழராகவும், தந்தி முதலியவற்றை அனுப்பும் தகவல் தொடர்பாளராகவும், கார் ஓட்டுனராகவும், அந்நிய மொழிகளை மொழிபெயர்ப்பவராகவும், மிகச் சாதாரணமான, சிறு காரியங்களுக்கும் கூட பயன்படுத்தி வந்தார் என்பதைப் பற்றி நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை . இதே முறையில் நமக்கு உதவ நம் சொந்தக் காவல்தூதரும் தயாராகவே இருக்கிறார். உண்மையில் நாம்தான் அவரைப் பயன் படுத்திக் கொள்வதேயில்லை!

ஆகவே முதலில் நமக்கு ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து, அதை உறுதியாக விசுவசித்து, அவரை நமக்குத் தந்ததற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவோம். அதன் பின் நம் காவல் தூதரை நம் நண்பராக்கிக் கொள்வோம். அவர் அருவருப்புக் கொள்ளாத படி சாவான பாவங்களை மட்டுமல்ல, அற்பப் பாவங்களையும் தவிர்த்து விடக் கவனமாகயிருப்போம். வீட்டு வேலை செய்யும் சிறுவனைப் போல, நாம் சொல்லும் எல்லா நன்மையான வேலைகளையும் செய்ய நம் தூதர் எப்போதும் ஆயத்தமாயிருக்கிறார் என்பது உண்மை . நம் ஆன்ம, சரீர நன்மைகளுக்காக அவரைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள எப்போதும் கவனமாயிருப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பத்திரமாக மோட்சக் கரை சேர்க்குமாறு தினமும் அவரிடம் மன்றாட மறவாதிருப்போமாக! காவல் தூதர்கள் திருநாள்: அக்டோபர் 2.
மரியாயே வாழ்க!

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

அர்ச். பிரான்ஸிஸ் சலேசியாரின் அஞ்சாநெஞ்சம்!



அது 1594-ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதி ஞாயிறு. பிரான்ஸ் நாட்டின் ஜெனிவா ஏரியின் தெற்குக் கரையில் அமைந்திருக்கும் ஷப்ளே (Chablais) நகரின் புகழ்பெற்ற,

அர்ச். ஹிப்போலித்துஸ் பேராலய வளாகம், அந்நகர் மக்களின் கோபாவேசத்தினாலும், எதிர்ப்புக் கண்டனக் கூச்சல்களாலும் பெரும் பரபரப்பிற்குள்ளாகியிருந்தது. சற்று நேரத்தில் அப்பகுதி முழுவதுமே யுத்தத்திற்கான ஆயத்தகளம் போன்று காட்சியளிக்கத் துவங்கியது! என்ன காரணம்! 60 வருடங்க ளுக்குப் பிறகு முதன்முதலாக கத்தோலிக்கப் பிரசங்கம் அந்த தேவாலயத்தில் நிகழ்த்தப்பட உள்ளது.
தேவாலயத்தில் சில கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களே எஞ்சியிருக்க, மிடுக்கோடும் கம்பீரமாகவும் பீடமேறினார் ஒரு இளம் குரு! திடமான விசுவாசத்தோடும் ஆன்ம தாகம் நிரம்பிய அவரது குரல் கணீரென அந்தப் பேராலயத்தில் ஒலிக்கத் துவங்கியது. கத்தோலிக்கத் திருச்சபையே சத்திய வேதம் - அது போதிக்கும் சத்தியங்கள் கிறிஸ்துவின் போதனைகள் - அதனிடமே போதிக்கும் அதிகாரத்தை கிறீஸ்து வழங்கியுள்ளார். அதுவே இரட்சண்யமடைய ஒரே மார்க்கம்! என்ற கருத்துக்கள் நிறைந்த பிரசங்க வார்த்தைகள் காட்டாற்றின் பெரும் வெள்ள மெனப் பொங்கி அத்தேவாலயத்தையும் வளாகத்தில் கூடியிருந்த மக்களின் செவிகளையும் நிரப்பியது! பதிதர்களின் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. யார் அந்த குரு? அவர்தான் திருச்சபையின் மேற்றிராணியாரும், வேதபாரகருமான
அர்ச். பிரான்ஸிஸ் சலேசியார்!
அர்ச். பிரான்ஸிஸ் சலேசியாரின் அஞ்சாநெஞ்சம்! பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற சவ்வா (Sovoy) பிரபுக்களின் குடும்பத்தில் உதித்த அவர் குருப்பட்டம் பெற்று ஒரு வருடமே நிறைந்த நிலையில் கால்வீனிசப் பதிதத்தால் பீடிக்கப்பட்ட ஷப்ளே பகுதியில் சத்திய வேதத்தை மீண்டும் நிலைநிறுத்த அனுப்பப்பட்டவர். ஜெனிவா மேற்றிராசனத்தைச் சார்ந்த அந்தப்பகுதி பதிதத்தில் மூழ்கியிருந்தது. சத்திய வேதத்தையே அறியாத இரு தலைமுறைகளைக் கொண்ட அப்பகுதியின் மக்கள் தொகை 27000. ஆனால் தேவசிநேகமும், ஆன்மதாகமும் கொண்ட அர்ச். பிரான்ஸிஸ் சலேசியாரின் 4 வருட தளராத ஜெபத்தாலும், அயராத உழைப்பாலும், போதகங்களாலும் அப்பகுதியின் மக்கள் அனைவருமே சத்திய வேதத்திற்குத் திரும்பினர்!அர்ச். பிரான்ஸிஸ் சலேசியார் பதிதர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கும், கடும் குளிர் பனியையும் பொருட்படுத்தாமல், ஏன் உயிராபத்துகளுக்கும் கூட அஞ்சாமல் சத்திய வேதத்தைப் போதித்தார். அவரது அப்போஸ்தலிக்க ஆர்வத்தாலும், ஜெபதவங்களாலும் மகிழ்ந்த சர்வேசுவரனின் வரப்பிரசாதம் அவரோடிருந்தது. அவரது திடமானப் போதனைகள் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. அவர்களது தப்பறையின் வேரை அசைத்தது. எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சிய தமது உறவினரான சங். லூயிஸிடம் “திடமாயிரும் உறவினரே, நாம் அஞ்சாதிருந்தால், நல்ல விளைச்சலைக் காண்போம்” என்று கூறித் திடப்படுத்துவார். சில சமயங்களில், "நாம் திவ்விய பலிபூசையை மீண்டும் நிறுவ வேண்டும். இதன் மூலம் மனிதரின் எதிரியான சாத்தான், தனது தடைகளெல்லாம் நம்மைச் சோர்வடையச் செய்யாமல் ஊக்கம் தருவதைக் காணவேண்டும்” என்று தமது முயற்சிகளை அதிகரிப்பார்.
புனிதரின் போதக யுக்தி! அர்ச். பிரான்ஸிஸ் பதித மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்தார். அவர்களுக்குக் கத்தோலிக்க சத்தியங் களைப் போதித்தார். அப்படிச் சந்திக்கவும், போதிக்கவும் முடியாத வேளைகளில் விசுவாச சத்தியங்களை சிறு, சிறு துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு வீடுவீடாகச் சென்று வழங்கினார். மக்களைச் சந்திக்க முடியாத சமயங்களில் வீட்டின் கதவிடுக்கின் வழியாக தமது துண்டுப் பிரசுரத்தை விட்டுச் செல்வார். இதன் மூலமாக, அவரது வார்த்தைகள் சென்றடையாத இடங்களில் அவரது எழுத்துக்கள் பிரசுரமாகச் சென்றடைந்து, ஆன்ம பலன்களை விளைவித்தன. அதிக மனந்திரும்புதலைக் கொண்டு வந்தன. இதனால் தான் திருச்சபை அவரை ‘கத்தோலிக்கப் பிரசுரங்களுக்குப் பாதுகாவலராக' ஏற்படுத்தி உள்ளது.
நமக்கு நல்ல மாதிரிகை! அன்பான நேயர்களே, இன்று திருச்சபையைப் பீடித்திருக்கும் “பதிதங்களின் மொத்தமாகிய” நவீனத்தை எதிர்த்து, சத்தியக் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றுக்கொள்வதிலும், அனுசரிப்பதிலும், அவற்றை போதிப்பதிலும் அர்ச். பிரான்ஸிஸ் சலேசியார் நமக்கு நல்ல மாதிரிகையாகத் திகழ்கிறார். அவர் நமக்கு இதில் உதவும்படியாக அவரிடம் வேண்டிக்கொள்வோம். அர்ச். பிரான்ஸிஸ் சலேசியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

-- திருநாள்: ஜனவரி 29.

நமது அர்ச்சிப்பில் தேவமாதாவின் பங்கு!


மாதாவின் பிள்ளைகளே, நேயர்களே!
நமது மீட்பு - அர்ச்சியசிஷ்டதனம் உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமான சேசு கிறீஸ்துவை அடைவதிலே - அவரோடு கொள்ளும் ஐக்கியத்திலேதான் அடங்கியுள்ளது. ஏனெனில் அவரே “ஆல்பாவும், ஒமேகாவுமாக - எல்லாவற்றின் துவக்கமும் முடிவுமாயிருக்கிறார். அவரே புனிதத்தின் ஊற்று! தெய்வீகத்தின் முழுமையும், மற்றெல்லா வரப்பிரசாதங்கள், புண்ணியங்கள், உத்தமதனங்கள் இவற்றின் நிறைவும் அவரிடம் மட்டுமே குடிகொண்டுள்ளன. இதனால் அர்ச். சின்னப்பர், எல்லா மானிடரையும் சேசுகிறீஸ்துவில் உத்தமராக்குவதற் கன்றி வேறு எதற்காகவும் தாம் உழைக்கவில்லை என்கிறார்.
மாதா வழியாக சேசுவிடம்! நாலாயிரம் ஆண்டுகளாக மீட்பருக்காகக் காத்துக் கிடந்த உலகிற்குப் பிதாவாகிய சர்வேசுரன் தம் ஏக திருக்குமாரனை மாதா வழியாகவே கொடுத்தார். எத்தனையோ தீர்க்கதரிசிகளும், பழைய ஏற்பாட்டின் அர்ச்சியசிஷ்டவர்களும் அந்தத் திரவியத்தைப் (மீட்பரை) பெற எவ்வளவோ மன்றாட்டுக்களைச் செய்திருக்கலாம். ஆனால் மகா பரிசுத்த கன்னிமாமரி மட்டுமே தன் வேண்டுகோள்களின் வலிமையாலும், தன் புண்ணியங் களின் உயர்வாலும் அதைப் பெறக் கூடிய தகுதியையும், தேவ வரப்பிரசாதத்தையும் பெற்றிருந் தார்கள். அர்ச். அகுஸ்தினார், "சர்வேசுரன் தம் குமாரனை மரியாயிடம் கொடுத்து, அவர்கள் வழி யாகவே உலகம் அவரைப் பெற்றுக் கொள்ளச் செய்தார்” என்று உரைக்கிறார். தேவ-மனித சேசுகிறீஸ்து என்னும் தமது உன்னத சிருஷ்டியை திவ்ய இஸ்பிரீத்துசாந்துவானவர் மரியாயிடத்தில் உருவாக்கினார். இதனால் வார்த்தையான சர்வேசுரன் "மாம்சமாகி, இஷ்டப் பிரசாதமும், சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார்" (அரு.1:14). அவர்
யாருக்குள்ளே வாசமாயிருந்தார்? மகா பரிசுத்த கன்னிமரியாயிடமே! இதனாலேயே அவர்கள் கடவுளின் தாயானார்கள் (Theotokos). கடவுள் தமது பிறப்பிக்கும் வல்லமையைப் பரிசுத்த கன்னித்தாயாருக்குத் தந்தார். சிருஷ்டி என்ற வகையில் மாமரி எந்த அளவுக்கு அதைப் பெற்றுக் கொள்ள முடியுமோ, அந்த அளவுக்குத் தந்தார். தம் திருக்குமாரனைக் கருத்தாங்கி தேவ-மனிதனாக அவரைப் பெற்றெடுக்கவும், அவருடைய ஞான சரீரத்தின் (திருச்சபையின்) * உறுப்பினர்கள் (ஞானஸ்நானம் பெற்ற கத்தோலிக்கர்கள்) அனைவரையும் வரப்பிரசாத ஜீவியத் திற்குப் பிறப்பிக்கவும் தேவையான வல்லமையைப் பெறுவதில் அவர்களுக்கு உதவும்படியாக அப்படிச் செய்தார். இதன்படி கன்னி மாமரி சகல மனிதர்களுக்கும் வரப்பிரசாத ரீதியில் தாயானார்கள். இதனால்தான் கல்வாரியில் சேசுநாதர் தமது தாயாரை, "இதோ உன் தாய்'' (அரு.20:27) என்று தமது பிரிய சீடர் வழியாக மனுக்குலம் முழுவதற்கும் தாயாகக் கொடுத்தார்.

ஆக. நாம் இரட்சகரைப் பெற்றுக்கொள்ள மாமரியிடம்தான் செல்ல வேண்டும். இதற்கு, தேவ தாயாரான பரிசுத்த கன்னிகையை நாம் நமது தாயாகக் கொண்டிருக்க வேண்டும்.
இதனைத்தான பாசுத்த தாயத் திருச்சபை "Ad Jesus per Mariam" என்று சுருங்கக் கூறுகிறது. “மரியாயின் வழியாக சேசுவிடம்” செல்ல நம்மைத் தூண்டுகிறது. இதுவே சர்வேசுரனுடைய திருச்சித்தம்!
தேவமாதா மீதான பக்தி நமது இரட்சணயத்துக்கு அவசியம் அர்ச். தமாஸின் அருளப்பர்: "ஓ ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையே! சர்வேசுரன் யார் யாரை இரட்சிக்க விரும்புகிறாரோ, அவர்களுக்குக் கொடுக்கும் மீட்பின் படைக்கலமே உம் மீது கொள்ளும் பக்தி!” என்று வியந்து போற்றுகிறார். மாதா மீது அன்பு பாராட்டுவது நமது மீட்பை உறுதி செய்வதாக இருக்கிறது. மனிதர்கள் தங்களது இறுதிக் கதியை - நித்திய இரட்சணியத்தை - அடைய மாதா தேவைப்படுகிறார்கள். திருச்சபையின் வேதபாரகர்களும் இதனையேதான் போதிக்கிறார்கள். இதில், அர்ச். அகுஸ்தீனார், அர்ச். எப்ரேம், அர்ச். ஆன்செல்ம், அர்ச். பெர்னார்டு, அர்ச். பெர்னார்டீன், அர்ச். தாமஸ் அக்வினாஸ் முதலியோரைக் குறிப்பிடலாம். மாதா மீது மரியாதையும், அன்பும் இல்லாதிருப்பது தண்டனைத் தீர்ப்பிடப்படுவதன் நிச்சயமான அடையாளமென்றும், மாதா மீது உண்மையாகவும், முழுமையாகவும் பக்தி கொண்டிருப்பது முன்குறிக்கப்படுவதன் நிச்சயமான அடையாளம் என்றும் இந்த அர்ச்சியசிஷ்ட வர்கள் ஒருவாய்ப்பட அறிவிக்கிறார்கள். இதன் தாற்பரியம் என்னவென்றால் தேவமாதாவின் மீது பக்தி நேசம் கொண்டிருப்பவர்களை இந்தத் தாய் பராமரிக்கிறார்கள்; அவர்களுக்குக் கடவுளிடமிருந்து கிருபையைப் பெற்றுத் தருகிறார்கள்; தனது திருக்குமாரன் சம்பாதித்த இரட்சணியப் பேறுபலன்களையும், வரப்பிரசாதங்களையும் தான் விரும்புகிறபோது அவர் களுக்கு வழங்கி, புண்ணியத்தில் வளரச் செய்கிறார்கள் என்பதே!
அர்ச்சிப்பின் உயர்ந்த நிலையில் தான் விரும்பும் எவரையும் மேம்படச் செய்யவும், தான் விரும்பும் யாரையும் பரலோகத்திற்குச் செல்லும் ஒடுக்கமான பாதையில் வைக்கவும், தன் விருப்பப்படி எவரையும் அந்த ஒடுக்கமான ஜீவிய வாசல் வழியாகக் கொண்டு வந்து அரச சிம்மாசனத்தையும் மகுடத்தையும், செங்கோலையும் அவர்களுக்குக் கொடுக்கவும் சர்வேசுரன் தேவமாதாவை நியமித்தார். சேசுநாதர் எங்கும், எப்பொழுதும் மரியாயின் குமாரனும், கனியுமாகவே இருக்கிறார். அதே போல மாமரியும், ஜீவியக் கனியைத் தரும் உண்மையான மரமாகவும், அக்கனியை உற்பத்தி செய்யும் உண்மையான அன்னையாகவும் இருக்கிறார்கள். ஆகவேதான் மாமரியின் மீது பக்தி கொண்டவர்களுக்கு அர்ச்சிப்பு எளிதாகிறது. சுருக்கமாகச் சொல்வோமானால், சர்வேசுரன் தேவ அன்பின் (மீட்பின் கனிகளின்) பொக்கிஷ சாலையின் திறவுகோலை மாதாவிடமே கொடுத்துள்ளார். ஆகையால் மாதா தான் விரும்புகிறவர்களுக்கு, விரும்பும்போது, விரும்பும் அளவுக்கு தேவ வரப்பிரசாதத்தை வழங்கி, அவர்களை அர்ச்சிய சிஷ்டவர்களாக்குகிறார்கள். அநேகர் இத்தாயின் பரிந்துரையால் தங்கள் வாழ்நாளிலேயே மோட்சம் வாக்களிக்கப்பட்டு அர்ச்சியசிஷ்டவர்கள் ஆனார்கள். எடுத்துக்காட்டாக, அர்ச். அசிசியார் மற்றும் சமீபகாலத்தில் அர்ச். மாக்ஸிமிலியன்கோல்பே போன்றோரைக் குறிப்பிடலாம்.
தேவமாதா பக்தி சேசுவை அடைவதற்கான மிகச் சிறந்த வழி | "கிறீஸ்தவ உத்தமதனம் நமதாண்டவருடன் ஐக்கியமாவதில் அடங்கியுள்ளது. மாதாவின் மீதான பக்தியானது அதனை அடையும் இலகுவான வழி, கிட்டத்து வழி, உத்தம் வழி, பாதுகாப்பான வழி” என்று அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் கூறுகிறார்.
தேவமாதா தனது பிள்ளைகளை மிக இலகுவாக சேசுகிறீஸ்துவிடம் அழைத்துச் செல்கிறார்கள். மற்ற வழிகளிலும் சென்று கடவுளுடன் ஐக்கியம் கொள்ள முடியும் என்பது உண்மையே. ஆனால் இந்த வழிகளிலும் கூட, மாமரியை அறிந்தும் நேசியாதவன், அல்லது அவர்களை வெறுப்பவன் ஒருபோதும் கடவுளுடன் ஐக்கியம் கொள்ள சாத்தியமேயில்லை ஏனெனில் மனிதர்களை வரப்பிரசாத ஜீவியத்திற்குப் பெற்றெடுப்பவர்களும், சகல வரப்பிரசாதங் களின் மத்தியஸ்தியுமான மாமரியின் வழியாக அன்றி எவனும் தன் இரட்சணிய வரப்பிரசாதத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது. மேலும் மற்ற வழிகளில் இனம் புரியாத மரணங்களும், பல சிலுவைகளும், எளிதில் வெல்ல முடியாத பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகே அது கைகூடும். ஆனால் மாதா என்ற பாதையின் வழியாக நாம் எளிதாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கடந்து செல்கிறோம். இந்தப் பாதையிலும் கடும் போராட்டங்களும், பெரிய கஷ்டங்களும், துன்பங்களும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அச்சமயங்களில் இந்த அன்புத் தாய் தனது மக்களைப் பாதுகாக்கிறார்கள், கைதூக்கி விடுகிறார்கள். திடப்படுத்திப் பிரகாசிப்பிக்கிறார்கள். ஆகையால் இப்பாதையில் பயணம் இலகுவாகிறது, எளிதில் கடவுளை அடைய முடிகிறது.
இதனை அர்ச். பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி மூலம் விளக்கலாம். ஒரு சமயம் அர்ச். பிரான்சிஸ் ஒரு பரவச நிலையின் போது மோட்சத்தை எட்டும் அளவுக்கு உயரமாயிருந்த இரு ஏணிகளைக் கண்டார். அவற்றில் ஒன்று செந்நிறமாகவும், மற்றொன்று வெண்ணிறமாகவும் இருந்தன. செந்நிற ஏணியின் மேலே கிறீஸ்து அரசரும், அருகில் உள்ள வெண்ணிற ஏணியின் உச்சியில் மாமரியும் வீற்றிருந்தார்கள். அர்ச். பிரான்சிஸம், அவரது சக துறவிகளும் செந்நிற ஏணியில் ஏறுகிறார்கள். அர்ச். பிரான்சிஸால் அதில் எளிதில் ஏற முடிந்தாலும், அவரது துறவிகளால் அதில் ஏற முடியாமல், பாதியிலே தவறிக் கீழே விழுந்து துயரப்படுகிறார்கள். அதனைக் கண்ட அர்ச். பிரான்சிஸ் ஒரு கணம் சிந்தித்தவராக செந்நிற ஏணியிலிருந்து இறங்கி, அருகிலிருந்த வெள்ளை நிற ஏணியில் மளமளவென ஏறி, தமது சகோதர துறவிகளிடம், “இந்த இரக்கத்தின் ஏணியில் ஏறி வாருங்கள்” என்று அழைக்க, அதில் அனைவரும் இலகுவாக, சிரமம் இல்லாமல் ஏறி மாதாவிடம் செல்கிறார்கள். மாதா சேசுகிறீஸ்து அரசரிடம் அவர்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.
ஆம்! மாமரி என்னும் பாதை சேசு கிறீஸ்துவை அடைய இலகுவான, பாதுகாப்பான, கிட்டத்து வழியாக இருக்கிறது.
கரிசனை உள்ள அன்புத் தாய்! தேவதாய் உலக மக்களுக்கெல்லாம் வரப்பிரசாத ரீதியில் தாயாக இருக்கிறார்கள் என்பதை முன்பு கண்டோம். உலகம் மற்றும் திருச்சபையின் வரலாற்றில் தனது பிள்ளைகளுக்கு ஆபத்தும் தீங்கும் நேரிடும் காலங்களிலெல்லாம் மாமரி மோட்சத்திலிருந்து இறங்கி வந்து, காட்சி தந்து, எச்சரித்து, சர்வேசுரனுடைய திட்டங்களைக் கூறி, அவர்களை மோட்ச பாதைக்கு அழைத்துச் செல்லத் தவறுவதில்லை என்பதை இங்கே நினைவுகூருவோம். இந்தப் பிந்திய காலங்களில் ஆன்ம கேடுகள் அதிகம் நேரிடும்போதெல்லாம் காட்சி தந்து எச்சரிப்பது அதிகரித்துள்ளதையும் நாம்
அறிவோம். இவற்றில் மெக்ஸிகோகுவாடலூப்பே மாதா காட்சி, அற்புத சுரூபக் காட்சி, சலேத், லூர்துபதி, பாத்திமா காட்சிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் கேந்திரமாக பாத்திமாவில் திவ்விய கன்னிகை தனது மாசற்ற இருதயப் பரிகார முதல் சனி பக்தியை வெளிப்படுத்தி, அதனை பக்தியோடு அனுசரிப்பவர்களுக்கு இரட்சணிய உதவியை வழங்கி வருவதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இது தவிர, பல்வேறு கால கட்டங்களில் பல அர்ச்சியசிஷ்டவர்களுக்குத் தோன்றி, தனது விசேஷ பாதுகாப்பையும், வல்லமையையும் வழங்கும் வரப்பிரசாதக் கருவிகளையும் அவர்களுக்குக் கொடுத்து, தனது மக்களின் ஆன்மாக்களைப் பசாசின் தந்திரங்களிலிருந்து காத்து அர்ச்சிப்பதையும் திருச்சபையின் வரலாற்றில் நாம் காண்கிறோம். அர்ச். சாமிநாதர் வழியாக ஜெபமாலை பக்தியையும், அர்ச். சைமன் ஸ்டாக் மூலமாக கார்மெல் உத்தரியத்தையும், அர்ச். காத்தரீன் லாபோரே வழியாக அற்புதச் சுரூபத்தையும் மாமரி நமக்கு வழங்கியுள்ளதை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

நமது கடமை
மது கடமை கத்தோலிக்க விசுவாசிகளுக்கு அர்ச்சியசிஷ்டதனம் ஒன்றும் எட்டாக் கனியல்ல. ஏனெனில் - அவர்களே மெய்யங்கடவுளின் சுவீகார மக்களாக இருக்கிறார்கள். அவர்களை மீட்டு இரட்சிக்க சேசுநாதர் சம்பாதித்த மீட்பின் பேறுபலன்களை அடைந்து அர்ச்சியசிஷ்டவர்களாகி இரட்சணியம் அடைய உரிமை பெற்றவர்கள். மற்ற மக்களையும் தேவ இரக்கம், உதவி வரப்பிரசாதங்களைக் கொண்டு பரிசுத்த சத்திய விசுவாசத்திற்குக் கொண்டு வந்து இரட்சிக்கிறது என்பதும் சரியே! அதே போல், தேவதாய் சகல
மனிதர்களுக்கும் தாயாக இருப்பதால் அவர்களையும் விசுவாசத்துக்கு மனந்திருப்பிக் காக்கிறார்கள். எனவே மாமரியின் மீதான பக்தியைக் கைக்கொண்டு, அவர்களை நேசித்து, அவர்களிடம் தங்களை அர்ப்பணித்து, அவர்கள் காட்டும் பாதையில் நடப்போமானால், வெகு இலகுவாகவும், சீக்கிரமாகவும், பாதுகாப்பாகவும், தேவ ஞானமாகிய சேசுகிறீஸ்துவை அடைந்து அர்ச்சிக்கப்படுவோம். அதனால் அவர் வழங்கும் இரட்சணியத்தை மாமரித் தாய் வழியாகப் பெற்றுக் கொள்வோமாக!

சகல அர்ச்சியசிஷ்டவர்களின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திங்கள், 17 செப்டம்பர், 2018

2-ம் சங்கீதம்


பொல்லாதவர்கள் கிறீஸ்துநாதருக்கும் அவர் திருச்சபைக்கும் விரோதமாயெழும்பி எண்ணங்குலைந்து போவதின்பேரிற் பாடியிருக்கின்றது. 1. சனங்கள் ஏன் சினங்கொண்டு துடித்தார்கள்? ஏன் பிரசைகள் வியர்த்தங்களைச் சிந்தித்தார்கள்? 2. இவ்வுலக அரசர்களும் அதிகாரிகளுந் தேவனுக்கும் அவருடைய அபிஷேகருக்கும் விரோதமாயெழும்பி ஒன்றுகூடினார்கள்.

3. நாம் அ வ ர் க ளு ன ட ய க ட் டு க் க ளை அ று த் து அ வ ர் க ள் சுமையை ந ம் ம ம . விட்டெறிந்து போடுவோம் (என்றார்கள்.) 4. *பரமண்டலங்களிலே வாசம்பண்ணுகிறவர் அவர்களை நகைப்பார்; ஆண்டவர் அவர்களை நிந்திப்பார். 5. அப்போது தமது கோபத்தில் அவர்களோடு பேசி, தமது கோபாக்கினியில் அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.
6. நாமோவென்றால் அவரது கற்பனையைப் போதிக்க அவருடைய பரிசுத்தப் பர்வதமாகிய சீயோனில் அவரால் இராசாவாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறோம்.
7. ஆண்டவர் நமக்குத் திருவுளம்பற்றினதாவது: நீர் நம்முடைய சுதன், இன்று நாம் உம்மைச் சனிப்பித்தோம்.
8. நீர் நம்மிடத்தில் கேளும்; உமக்குச் சுதந்தரமாகச் சனங்களையும், உமக்குச் சொந்தமாகப் பூமியின் எல்லைகளையுங் கொடுப்போம்.
9. நீர் இருப்புக் கோலினால் அவர்களை ஆளுவீர்; மண்பாண்டத்தைப் போல் அவர்களை நொறுக்கிப்போடுவீர். 10. இராசாக்களே! இப்போதே கண்டுணருங்கள், பூமியில் நியாயந்தீர்ப்பவர்களே! படித்தறியுங்கள்.
11. பயங்கொண்டு ஆ ண் ட வ ரு க் கு ப் ப ணி  செய்து நடுநடுக்கத்துடனே அவரில்) களிகூருங்கள்.
12. ஆண்டவருக்குக் கோபம் வராதபடிக்கும் நீங்கள் நீதிநெறியைவிட்டுச் சிதறுண்டு போகாதபடிக்கும் தேவ பிரமாணத்தை அனுஷ்டித்துக்கொள்ளுங்கள்.
13. கொஞ்சத்தில் அவர் கோபம் பற்றிக்கொள்ளும்போது *அவர்பேரில் நம்பிக்கை கொண்டிருக்கிறவர்கள் எவர்களோ, அவர்களே பாக்கியவான்கள்.
* தீர்வை நாளாம்.


முதல் சங்கீதம்

முதற் சங்கீதம்

1. துர்மார்க்கரின் ஆலோசனையின்படி நடவாமலும் பாவிகளுடைய வழியில் நில்லாமலும் துர்(ப்போதனையின்) பிரசங்காசனத்தில் உட்காராமலும்,
2. ஆண்டவருடைய பிரமாணத்தில் மனதை இருத்தி இரவும் பகலும் அவர் கற்பனையைத் தியானிக்கிறவனே பாக்கியவான்.
3. அவன் நீர் வாய்க்கால் ஓரத்தில் நாட்டப்பட்டுத் தன் காலத்தில் கனி கொடுத்து இலை உதிராமலிருக்கும் மரத்துக்கொப்பாயிருப்பான். அது தக்க காலத்தில் கனி கொடுத்தது போலவும், தன் இலை உதிராமலிருக்கிறது போலவும் அவன் செய்த தெல்லாம் அநுகூலமாம்.
4. ஆனால் துர்மார்க்கர்களோ! அப்படியல்லவே! புசலால் அடிக்கப்பட்ட தூசி போல இவ்வுலகில் சிதறடிக்கப்படுவார்கள் 5. * ஆதலால் துர்மார்க்கர் ஞாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் கூட்டத்திலும் எழுந்து நிற்பதில்லை. 6. ஏனெனில் ஆண்டவர் நீதிமான்களுடைய வழியை அறிந்திருக்கிறார். துர்மார்க்கருடைய வழி அழிந்துபோம்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

தேவமாதாவுக்கு ஓர் புகழ்மாலை -2

(2) சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ர்ச். கன்னிமரியம்மாள் சர்வேசுரனுடைய மாதா! இது எத்தகைய பாக்கியம்! மகிமை!! மாதாவின் எல்லா மகிமைப் பெருமைகளிலெல்லாம் “இரத்தினமாக” பிரகாசிக்கும் இது ஒரு வேத சத்தியம்!
ஆம்! மகா பரிசுத்தவதியான கன்னிமரியாய் “கடவுளின் தாய்” என்பது பரம இரகசியம் - மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனின் மனிதாவதார பரம இரகசியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விசுவாச சத்தியம்! சேசுகிறீஸ்து மனுவுருவெடுத்த சுதனாகிய சர்வேசுரன்; எனவே அவளை ஈன்றெடுத்தவள் “சர்வேசுரனின் தாய்” என்றழைக்கப் படுவது முற்றிலும் சரியே. அதற்கு மாறானவைகள் தப்பறையென்று திருச்சபை கண்டித்து ஒதுக்குகிறது. எபேசியுஸ் பொதுச்சங்கம் கி.பி.431-ல் கூடி, இந்தச் சத்தியத்திற்கு விரோதமான போதனைகளைச் சபித்து “மகா பரிசுத்த கன்னிமரியம்மாள் சர்வேசுரனின் தாய்” என்று பிரகடனம் செய்துள்ளது.
வேதாகமச் சான்றுகள்:
பரிசுத்த கன்னிமரியம்மாள் சர்வேசுரனுடைய தாயாக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வேதாகம வசனங்கள் அநேகமுள்ளன. அவற்றில்: (1) “... இஸ்பிரீத்துசாந்து உமது மேல் எழுந்தருளி வருவார்; உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும்; ஆகையால் உம்மிடத்தில் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் என்னப்படுவார்” (லூக். 1:35). (2) “... என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக்குக் கிடைத்ததெப்படி...” (லூக். 1:43). (3) “... காலம் நிறைவேறியபோது ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும்... தம்முடைய சுதனை சர்வேசுரன் அனுப்பினார்...” (கலாத்தி. 4:5).
புனிதர்களின் போதனைகள்:
பரிசுத்த கன்னிமரியாய் சர்வேசுரனின் தாயார் என திருச்சபையின் பிதாப்பிதாக்களும், புனிதர்களும் ஏற்றுப் போதித்து வந்துள்ளனர். “தேவதாய்” - “Theotokos” என்ற வார்த்தையை திருச்சபையின் பிதாப்பிதாவான ஒரிஜன் என்பவர் முதன் முதலில் பயன்படுத்தி மாதாவை அழைத்தார்.
அர்ச். இரேணிமுஸ் “சர்வேசுரன் மரியன்னையால் நமக்கு கொடுக்கப்பட்டார்” என்கிறார். அர்ச். நாஸியான் கிரகோரியாரோ “மரியம்மாள் கடவுளின் தாய் என்று ஏற்றுக்கொள்ளாத எவனும் சர்வேசுரனிடமிருந்து புறம்பாக்கக் கடவான்” என்று கூறுகிறார். கத்தோலிக்கத் திருச்சபையும் மாதாவை மன்றாடும் ‘அருள்நிறைந்த மந்திரத்தில் “அர்ச். மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்” என்று மன்றாடுகிறது.
தொன்றுதொட்டு கத்தோலிக்கக் கிறீஸ்தவனின் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் தேவதாயைப் போற்றுவது என்பது கூடாத ஒன்றா? இல்லை! ஆகவே பரிசுத்த கன்னிகையை “சேசுவின் தாய் - தேவதாய், என்னுடைய தாய்” என்று தமது வாழ்நாளில் எப்போதும் அழைத்து வந்த அர்ச். ஸ்தனிஸ்லாஸ் கோஸ்காவோடு சேர்ந்து நாமும் மரியன்னையை “சர்வேசுரனுடைய தாய், என்னுடைய தாய்” என்று கூறி மகிழ்வோமாக. அதுவே நமது நாவில் என்றும் ஒலிப்பதாக!
சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!