Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 20 செப்டம்பர், 2018

உங்கள் காவல்தூதரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்



ஒரு குழந்தை பிறக்கும்போது கடவுள் மகிமை மிக்க தமது அரூபிகளில் ஒருவரை அழைத்து, புதிதாய்ப் பிறந்துள்ள இக்குழந்தையை அவரது தனிப்பட்ட பாதுகாவலில் ஒப்படைக்கிறார் என்று வேதவல்லுனரான அர்ச். அக்குயினாஸ் தோமையார் கூறுகிறார். ஆன்மா படைக்கப் பட்டு, நம் உடலோடு ஒன்றிக்கப்படும் வேளை யில் காவல் தூதரின் நியமனம் நிகழ்வதில்லை . ஏனெனில் அப்போது குழந்தை தன் தாயின் வயிற்றில் இன்னும் இருப்பதால், அது தாயின் காவல் தூதரது பராமரிப்புக்கு உட்பட்டிருக் கிறது. ஆனால் நாம் உலகில் வந்து பிறக்கும் போது, நம் ஞானஸ்நானத்திற்கு முன்பாகவே, நம் தூதர் நம்மைத் தம் பொறுப்பில் ஏற்றுக் கொள்வது நடக்கிறது.

பதிதனோ, அஞ்ஞானியோ, கத்தோலிக்கனோ, யாராக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும், மிகக் கொடியவனும், தனக்கென ஒரு காவல் தூதரைக் கொண்டிருக்கிறான்.

ஆயிரம் ஆன்மாக்களைப் பாதுகாக்க ஒரே தூதரால் முடியும் என்றாலும், கடவுள் தமது அளவற்ற நன்மைத்தனத்தில் நம் ஒவ்வொரு வருக்கும் ஒரு தனித் தூதரைத் தந்திருக்கிறார். எனவே நம் பிறப்பு முதல் ஒவ்வொரு வினாடி யும் நம்மைப் பாதுகாப்பது நம் தூதரின் கடமையாக இருக்கிறது. ஒரு வினாடி கூட அவர் நம்மைக் கைவிடுவதில்லை . நம் ஒவ்வொரு அசைவையும் பார்க்கிறார், எப்போதும் நம் அருகில் இருக்கிறார்.
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதர் தரப்பட்டிருக்கிறார் என்பதற்கு சங்.90:11, மத். 18:10; அப். நட 12:15: சங். 33:7 ஆகிய திருவசனங்களைத் தரலாம்.
நம் தூதர் நமக்காக என்ன செய்கிறார்?

ஒரு தூதர் ஓர் ஆன்மாவைப் பொறுப் பேற்றுக் கொள்ளும்போது, அந்த மனிதனை எல்லா வழிகளிலும் ஆதரித்துப் பாதுகாத்து, அவனுக்கு உதவுமாறு, தாம் கடவுளிடமிருந்து பெற்ற பூரண அறிவு, புத்தி, வல்லமை, அக்கறை இவற்றை அவனுக்காக அர்ப்பணிக்கிறார். மேலும், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தத் தமது பிள்ளை யின்மீது மிக ஆழமான, தந்தைக்குரிய அன்பை அவர் உணர்கிறார்.

நம் காவல் தூதர் தம் மகிழ்ச்சியையும், அன்பையும், புனிதத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். ஒவ்வொரு வினாடியும் நம்மை இன்னும் அதிக நல்லவர்களாகவும், பரிசுத்தர்களாகவும், மகிழ்ச்சியானவர்களாகவும் ஆக்கும்படி அவர் உழைக்கிறார். மேலும் இடைவிடாமலும், பேரன்பின் ஆர்வத்தோடும் நமக்காகக் கடவுளிடம் பரிந்து பேசி ஜெபிக்கிறார். இந்த ஜெபங்களைக் கடவுள் மறுப்பதில்லை. ஏனெனில் நமக்காக ஜெபிக்க அவரைத் தூண்டுபவரே நம் ஆண்டவர்தான்!

"ஜெபிக்க வாய்ப்பில்லாத சூழ்நிலையில், உன் காவல்தூதரின் பின்னால் ஒளிந்து கொண்டு, உன் இடத்திலிருந்து ஜெபிக்கும் பொறுப்பை அவரிடம் விட்டுவிடு” என்கிறார் அர்ச். மரிய வியான்னி அருளப்பர்!
இன்னும் மேலாக, நீ தினமும் பூசை காண முடியாதபோது, உன் காவல் சம்மனசானவ ரிடம் பூசை நடக்கும் கோவில் ஒன்றுக்குச் சென்று, உன் சார்பாக அங்கே பீடத்தில் பலி யாகும் கடவுளை ஆராதிக்கும்படி கேட்டுக் கொள். இதைவிட அவருக்கு அதிக மகிழ்ச்சி யளிக்கும் காரியம் வேறில்லை. உன்னைப் போலவே அவரும் இதே தேவ ஆராதனைக் காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்!


மேலும், நாம் பக்தியோடு ஜெபிப்பதைக் காண்பது நம் தூதருக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தினமும் காலை ஜெபத்தில் தவறாமல் அவரிடம் மன்றாடுவது அவரை மகிழ்வித்து, நமக்குப் பெரும் பலன் தருகிறது.
நம் காவல் தூதர் இடைவிடாமல் அன்பும், ஞானமும் மிக்க ஆலோசனைகளை நம் செவிகளில் கிசுகிசுத்துக் கொண்டே இருக்கிறார். அடிக்கடி தேவ அன்பின் ஆழத்தைப் பல வழிகளில் நமக்கு நினைவுபடுத்தி, நம் பாவங்களின்மீது உத்தம மனஸ்தாபத்தைத் தூண்டுபவரும் நம் காவல் தூதரே.
நம் சிந்தனையின் மீதும், நம் புத்தியின் மீதும் அவர் இரக்கத்தோடு செயல்பட்டு, நம் பலவீனங்களைத் திருத்திக் கொள்ளவும், தீய நாட்டங்களுக்கு எதிராகப் போராடவும் நம்மை வற்புறுத்துகிறார். தவறான எதையும் நாம் செய்யும்போது, அவர் வருத்தமுற்று, நம்மைத் திருத்த முடிந்த வரை முயற்சி செய்கிறார்.
பசாசுக்களின் கொடிய தாக்குதல்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதில் நம் காவல் தூதர் எப்போதும் விழிப்பாக இருக்கிறார். “பசாசால் சோதிக்கப்படும்போது உன் காவல் தூதரிடம் மன்றாடு. பசாசை அலட்சியம் செய், பயப்படாதே. ஏனெனில் உன் காவல் தூதரைக் காணும்போது பசாசு அஞ்சி நடுங்கி, அலறியபடி ஓடிப் போகிறது” என்கிறார் அர்ச். ஜான் போஸ்கோ.
தினமும், நாம் சற்றும் அறியாதிருக்கிற வேறு பல ஆபத்துக்களிலும், தீமைகளிலும் இருந்தும் நம் தூதர் நம்மைப் பாதுகாக்கிறார்.
ஆனால் இதில் ஆச்சரியத்திற்குரியது என்ன வென்றால், இந்தத் தெய்வீக உதவியை நாம் மதிப்பதோ, போதுமான அளவுக்கு புரிந்து கொள்வதோ இல்லை என்பதுதான். அளவற்ற விதமாக நமக்கு மிகுந்த நன்மைத்தனம்

காட்டும் இந்த தேவதூதரை நாம் மதித்துப் போற்றுவதோ, அவரை நேசிப்பதோ, இன்னும் நன்றாக அறிய முயல்வதோ கிடையாது. நம் பிரிய தூதரிடம் நாம் காட்டும் அலட்சியம் திகைப்பூட்டுவதாக இருக்கிறது.
அர்ச். பியோ தமது அந்தரங்கச் செயலாளராகவும், சிறு வயது விளையாட்டுத் தோழராகவும், தந்தி முதலியவற்றை அனுப்பும் தகவல் தொடர்பாளராகவும், கார் ஓட்டுனராகவும், அந்நிய மொழிகளை மொழிபெயர்ப்பவராகவும், மிகச் சாதாரணமான, சிறு காரியங்களுக்கும் கூட பயன்படுத்தி வந்தார் என்பதைப் பற்றி நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை . இதே முறையில் நமக்கு உதவ நம் சொந்தக் காவல்தூதரும் தயாராகவே இருக்கிறார். உண்மையில் நாம்தான் அவரைப் பயன் படுத்திக் கொள்வதேயில்லை!

ஆகவே முதலில் நமக்கு ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து, அதை உறுதியாக விசுவசித்து, அவரை நமக்குத் தந்ததற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவோம். அதன் பின் நம் காவல் தூதரை நம் நண்பராக்கிக் கொள்வோம். அவர் அருவருப்புக் கொள்ளாத படி சாவான பாவங்களை மட்டுமல்ல, அற்பப் பாவங்களையும் தவிர்த்து விடக் கவனமாகயிருப்போம். வீட்டு வேலை செய்யும் சிறுவனைப் போல, நாம் சொல்லும் எல்லா நன்மையான வேலைகளையும் செய்ய நம் தூதர் எப்போதும் ஆயத்தமாயிருக்கிறார் என்பது உண்மை . நம் ஆன்ம, சரீர நன்மைகளுக்காக அவரைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள எப்போதும் கவனமாயிருப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பத்திரமாக மோட்சக் கரை சேர்க்குமாறு தினமும் அவரிடம் மன்றாட மறவாதிருப்போமாக! காவல் தூதர்கள் திருநாள்: அக்டோபர் 2.
மரியாயே வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக