Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

அர்ச். பிரான்ஸிஸ் சலேசியாரின் அஞ்சாநெஞ்சம்!



அது 1594-ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதி ஞாயிறு. பிரான்ஸ் நாட்டின் ஜெனிவா ஏரியின் தெற்குக் கரையில் அமைந்திருக்கும் ஷப்ளே (Chablais) நகரின் புகழ்பெற்ற,

அர்ச். ஹிப்போலித்துஸ் பேராலய வளாகம், அந்நகர் மக்களின் கோபாவேசத்தினாலும், எதிர்ப்புக் கண்டனக் கூச்சல்களாலும் பெரும் பரபரப்பிற்குள்ளாகியிருந்தது. சற்று நேரத்தில் அப்பகுதி முழுவதுமே யுத்தத்திற்கான ஆயத்தகளம் போன்று காட்சியளிக்கத் துவங்கியது! என்ன காரணம்! 60 வருடங்க ளுக்குப் பிறகு முதன்முதலாக கத்தோலிக்கப் பிரசங்கம் அந்த தேவாலயத்தில் நிகழ்த்தப்பட உள்ளது.
தேவாலயத்தில் சில கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களே எஞ்சியிருக்க, மிடுக்கோடும் கம்பீரமாகவும் பீடமேறினார் ஒரு இளம் குரு! திடமான விசுவாசத்தோடும் ஆன்ம தாகம் நிரம்பிய அவரது குரல் கணீரென அந்தப் பேராலயத்தில் ஒலிக்கத் துவங்கியது. கத்தோலிக்கத் திருச்சபையே சத்திய வேதம் - அது போதிக்கும் சத்தியங்கள் கிறிஸ்துவின் போதனைகள் - அதனிடமே போதிக்கும் அதிகாரத்தை கிறீஸ்து வழங்கியுள்ளார். அதுவே இரட்சண்யமடைய ஒரே மார்க்கம்! என்ற கருத்துக்கள் நிறைந்த பிரசங்க வார்த்தைகள் காட்டாற்றின் பெரும் வெள்ள மெனப் பொங்கி அத்தேவாலயத்தையும் வளாகத்தில் கூடியிருந்த மக்களின் செவிகளையும் நிரப்பியது! பதிதர்களின் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. யார் அந்த குரு? அவர்தான் திருச்சபையின் மேற்றிராணியாரும், வேதபாரகருமான
அர்ச். பிரான்ஸிஸ் சலேசியார்!
அர்ச். பிரான்ஸிஸ் சலேசியாரின் அஞ்சாநெஞ்சம்! பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற சவ்வா (Sovoy) பிரபுக்களின் குடும்பத்தில் உதித்த அவர் குருப்பட்டம் பெற்று ஒரு வருடமே நிறைந்த நிலையில் கால்வீனிசப் பதிதத்தால் பீடிக்கப்பட்ட ஷப்ளே பகுதியில் சத்திய வேதத்தை மீண்டும் நிலைநிறுத்த அனுப்பப்பட்டவர். ஜெனிவா மேற்றிராசனத்தைச் சார்ந்த அந்தப்பகுதி பதிதத்தில் மூழ்கியிருந்தது. சத்திய வேதத்தையே அறியாத இரு தலைமுறைகளைக் கொண்ட அப்பகுதியின் மக்கள் தொகை 27000. ஆனால் தேவசிநேகமும், ஆன்மதாகமும் கொண்ட அர்ச். பிரான்ஸிஸ் சலேசியாரின் 4 வருட தளராத ஜெபத்தாலும், அயராத உழைப்பாலும், போதகங்களாலும் அப்பகுதியின் மக்கள் அனைவருமே சத்திய வேதத்திற்குத் திரும்பினர்!அர்ச். பிரான்ஸிஸ் சலேசியார் பதிதர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கும், கடும் குளிர் பனியையும் பொருட்படுத்தாமல், ஏன் உயிராபத்துகளுக்கும் கூட அஞ்சாமல் சத்திய வேதத்தைப் போதித்தார். அவரது அப்போஸ்தலிக்க ஆர்வத்தாலும், ஜெபதவங்களாலும் மகிழ்ந்த சர்வேசுவரனின் வரப்பிரசாதம் அவரோடிருந்தது. அவரது திடமானப் போதனைகள் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. அவர்களது தப்பறையின் வேரை அசைத்தது. எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சிய தமது உறவினரான சங். லூயிஸிடம் “திடமாயிரும் உறவினரே, நாம் அஞ்சாதிருந்தால், நல்ல விளைச்சலைக் காண்போம்” என்று கூறித் திடப்படுத்துவார். சில சமயங்களில், "நாம் திவ்விய பலிபூசையை மீண்டும் நிறுவ வேண்டும். இதன் மூலம் மனிதரின் எதிரியான சாத்தான், தனது தடைகளெல்லாம் நம்மைச் சோர்வடையச் செய்யாமல் ஊக்கம் தருவதைக் காணவேண்டும்” என்று தமது முயற்சிகளை அதிகரிப்பார்.
புனிதரின் போதக யுக்தி! அர்ச். பிரான்ஸிஸ் பதித மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்தார். அவர்களுக்குக் கத்தோலிக்க சத்தியங் களைப் போதித்தார். அப்படிச் சந்திக்கவும், போதிக்கவும் முடியாத வேளைகளில் விசுவாச சத்தியங்களை சிறு, சிறு துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு வீடுவீடாகச் சென்று வழங்கினார். மக்களைச் சந்திக்க முடியாத சமயங்களில் வீட்டின் கதவிடுக்கின் வழியாக தமது துண்டுப் பிரசுரத்தை விட்டுச் செல்வார். இதன் மூலமாக, அவரது வார்த்தைகள் சென்றடையாத இடங்களில் அவரது எழுத்துக்கள் பிரசுரமாகச் சென்றடைந்து, ஆன்ம பலன்களை விளைவித்தன. அதிக மனந்திரும்புதலைக் கொண்டு வந்தன. இதனால் தான் திருச்சபை அவரை ‘கத்தோலிக்கப் பிரசுரங்களுக்குப் பாதுகாவலராக' ஏற்படுத்தி உள்ளது.
நமக்கு நல்ல மாதிரிகை! அன்பான நேயர்களே, இன்று திருச்சபையைப் பீடித்திருக்கும் “பதிதங்களின் மொத்தமாகிய” நவீனத்தை எதிர்த்து, சத்தியக் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றுக்கொள்வதிலும், அனுசரிப்பதிலும், அவற்றை போதிப்பதிலும் அர்ச். பிரான்ஸிஸ் சலேசியார் நமக்கு நல்ல மாதிரிகையாகத் திகழ்கிறார். அவர் நமக்கு இதில் உதவும்படியாக அவரிடம் வேண்டிக்கொள்வோம். அர்ச். பிரான்ஸிஸ் சலேசியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

-- திருநாள்: ஜனவரி 29.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக