ஜுலை-3ம் தேதி
பாப்பரசர் 2ம் சிங்கராயர் திருநாள்
இவர் சிசிலியில் பிறந்தார்; இவர் வாழ்ந்த 7ம் நூற்றாண்டின் காலத்தில் மகமதியர்களின் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அநேக குருக்கள் உரோமைக்குச் சென்றதைப்போலவே இவரும் உரோமைக்குக் குடிபெயர்ந்திருக்க வேண்டும்;
கதீட்ரலில் கட்டளை ஜெபத்தை ஜெபிப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருந்த இவர், மேற்றிராணியாரின் அரண்மனையில் தங்கியிருக்கும் கதிட்ரல் அதிபர்குழுவின் உறுப்பினராக இருந்தார்.
இவர், பாப்பரசர் அர்ச்.ஆகத்தோ இறந்தபிறகு, புதிய பாப்பரசராக 681ம் வருடம் ஜனவரி 10ம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும், பைசாண்டின் சக்கரவர்த்தியான 4ம் கான்ஸ்டன்டைனால் அங்கீகரிக்கப்படுகிற வரை, 1 வருடம் 7 மாத காலம் வரை காத்திருக்க நேரிட்டது. 682ம் வருடம் ஆகஸ்டு 17ம் தேதியன்று புதிய பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாப்பரசரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசனுடைய அதிகாரத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை நடந்து வந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டது. பாப்பரசர் ஆகத்தோ காலத்திலிருந்து, 4ம் கான்ஸ்டன்டைனுடன் இக்காரியத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை நடந்தது. இவர் பாப்பரசராக 10 மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார்; ஆனால், இவருடைய ஆட்சிகாலம் மிக பயனுள்ளதாயிருந்தது. இந்த பத்து மாதங்களில் இவர் நிறைவேற்றிய நல்ல அலுவல்கள் இவருடைய பெயரை வரவிருந்த தலைமுறைகள், ஆசீர்வதிக்கும்படியான உன்னத அலுவல்களாயிருந்தன!
இவர் பாப்பரசராக இருந்த காலத்தில்,பைசாண்டின் சக்கரவர்த்திகளுக்கும் பாப்பரசருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட மிகக் கனமான கஷ்டங்கள் தோன்றின! பைசாண்டின் சாம்ராஜ்ஜிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், ராவென்னாவிலிருந்த பாப்பரசருடைய நேரடி ஆளுமைக்குக் கீழிருந்த மேற்றிராணியார்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்தனர்; ஆனால் இம்மேற்றிராணியார்கள் சுயாட்சியுடையவர்களாக மாறுவதற்கு பெரும் முயற்சி செய்து வந்தனர்.
ஆகவே, இனி வருங்காலத்தில், ராவென்னாவைச் சேர்ந்த எந்த மேற்றிராணியாரும், உரோமையில் பாப்பரசரால் அவரை மேற்றிராணியாராக அபிஷேகம் செய்வதற்கு முன்பாக, மேற்றிராணியாராக செயல்படக் கூடாது, என்று, 2ம் சிங்கராயர் பாப்பரசர், கட்டளையிட்டார். மேலும், திருச்சபையில் பிரிவினை வராமல் தடுப்பதற்காக, பாப்பரசர் மட்டில் இருப்பதை விட சக்கரவர்த்திக்கு, அதிக பிரமாணிக்கமாயிருந்த அநேக மேற்றிராணியார்களை, 2ம் சிங்கராயர் பாப்பரசர், மனந்திருப்பி, அர்ச்.இராயப்பரின் பத்திராசனமாகிய திருச்சபைக்குப் பிரமாணிக்கமாயிருக்கும்படி செய்தார்.
2ம் சிங்கராயர், கான்ஸ்டான்டிநோபிளில் 680-681ம் வருடம் நிகழ்ந்த 3ம் எக்குமெனிகல் சங்கத்தின் தீர்மானங்களை ஏற்று உறுதிப்படுத்தி அங்கீகரித்தார். இந்த சங்கம், மோனோதேயிசம் என்ற பதிதத் தப்பறையை கண்டித்துக் கண்டனம் செய்தது. இந்த சங்கத்தில் முதலாம் ஹொனோரியுஸ் பாப்பரசர், திருச்சபைக்குப் புறம்பாக்கப்பட்டார்! ஹொனோரியுஸ் பாப்பரசரை திருச்சபை கண்டனம் செய்ததற்கான காரணத்தை தெளிவுடன் வெளிப்படுத்துவதில் 2ம் சிங்கராயர் பாப்பரசர் பெரும் முயற்சி எடுத்து அறிவித்தார்: அதாவது, பாப்பரசர் ஹொனோரியுஸ், மோனோதேயிச தப்பறையை எதிர்ப்பதற்கு போதுமான அளவில் செயல்படவில்லை என்பதற்காகவே , திருச்சபை விலக்கம் அளிக்கப்பட்டார், என்பதை 2ம் சிங்கராயர் பாப்பரசர் அறிவித்தார்.
2ம் சிங்கராயர் பாப்பசரசர் 683ம் வருடம் ஜுலை 3ம் தேதியன்று மரித்தார்.
அர்ச்.ஆகத்தோ பாப்பரசரும், அர்ச்.2ம் சிங்கராயர் பாப்பரசரும், அவர்களுக்கு முன்பு இருந்த பாப்பரசரான ஹொனோரியுஸை(6250638), மோனோதேயிச தப்பறையை வளரும்படி அனுமதித்ததற்காகக் கண்டனம் செய்தனர்.
மோனோஃபிசைட் பதிதத் தப்பறை, நமதாண்டவருடைய முழுமையான மனித சுபாவத்தை மறுத்தது; மோனோதேயிச பதிதத் தப்பறையாளர்களும், அதன் முன்னணியாளரான கான்ஸ்டான்டிநோபிளின் முதலாம் செர்ஜியுஸ் என்ற பிதாப்பிதாவும், நமதாண்டவர் மனித அறிவைக் கொண்டிருந்தார் என்று விசுவசித்தனர்; ஆனால், ஆண்டவர் மனித மனதைக் கொண்டிருந்தார் என்பதை, மறுத்தனர்.
அர்ச்.2ம் சிங்கராயரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக